மேகம் கொட்டட்டும்: மழைக் காட்சிகளும் மணி ரத்னமும்!

மழையோடு நமக்கிருக்கும் உணர்வுகளைக் கண்முன் கொண்டுவந்த முதல் இயக்குநர் மணிரத்னம் தான்...
மேகம் கொட்டட்டும்: மழைக் காட்சிகளும் மணி ரத்னமும்!

சினிமாவில் மட்டுமல்ல நம் வாழ்விலும் மழைப் பருவம் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும். நம் மனநிலை, உணர்வுகள் மட்டுமல்லாமல் நம்மால் செய்யக்கூடியவை, இயலாதவை போன்றவற்றைக் கூட முன்கூட்டியே அது அறிவிக்கும். முதல்முறையாக தமிழ் சினிமாவில் மழை சித்தரிக்கப்பட்டதை, மணிரத்னம் படத்தில் தான் கவனித்தேன். வெளிச்சம், நிழல், ஒளிரும் சூரியக் கதிர்கள், குளிர்ந்த இதமான இருட்டு (இதை உணர மெளன ராகம் படத்தின் நிலாவே வா பாடலைப் பாருங்கள்) ஆகியவற்றையும் முதல்முறையாக அப்போதுதான் நான் கவனித்தேன். மழைக்குத் திரும்ப வருவோம் - சினிமாவில் மழை வந்தால் ஏதோ பயங்கரமானது நடக்கப் போகிறது அல்லது வயதுக்கு வந்தவர்களுக்கான காட்சி வரப் போகிறது என்றுதான் எண்ணி வந்தேன். குழந்தைப் பருவத்தில் எங்களைச் சுற்றி நிறையவே இருந்த தணிக்கை நபர்கள், இம்மாதிரியான காட்சிகளைப் பார்க்க அனுமதித்ததில்லை. அதனாலேயே மழை, இருட்டு என்றாலே நான் பார்க்க அனுமதியில்லை. மணிரத்னம் அனைத்தையும் மாற்றினார்.

மௌன ராகத்தில், மாலை நேரத்து மழையில், ஓஹோ மேகம் வந்ததோ பாடல் எடுக்கப்பட்டிருந்தாலும், பாகங்கள் தெரியும் வெள்ளைப் புடவை அணியாமல் தலை முதல் கால் வரை மூடியிருந்த சல்வார் கமீஸ் அணிந்து ஆடிப்பாடினார் கதாநாயகி ரேவதி. மழை அவருடைய எதிரியாக இல்லாமல் உற்றத்தோழியாக இருந்தது. என் பதின்பருவத்தில், முதல்முறையாக ஒரு பெண்ணால் மற்றவர்கள் தன்னைத் தடுத்து நிறுத்தி, கண்டித்து, தடை செய்வார்கள் என்கிற பயமின்றி, சுதந்திரமாக மழையில் ஆடிப்பாடி, அவள் நினைத்ததை செய்ய முடிவதைப் பார்த்தேன் (அப்பாடலின் "கால்கள் எங்கேயும் ஓடலாம்" என்கிற வரியைப் போல).


சிறுவயதில் மழை என்றாலே, காகிதக் கப்பல் விடுவதற்கும், மழைத் தண்ணீரை எல்லாப் பக்கமும் தெளித்து, முழுதாக நனைவதும் தான். விசித்திரமாக, மணிரத்னத்துக்கு முன்பு வெளியான படங்களில் மழை என்பது இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. என் அபிப்ராயப்படி, மௌன ராகம் பாடல் காட்சியின் மூலம், மழையோடு நமக்கிருக்கும் உணர்வுகளைக் கண்முன் கொண்டுவந்த முதல் இயக்குநர் மணிரத்னம் தான். இந்தப் படத்தில் மழை, குழந்தை போல குதூகலித்தால், இன்னொன்றில் நாயகனின் புத்திசாலித்தனத்தை அசத்தலாகக் காட்டியது.

தளபதி படத்தில் ரஜினி கதாபாத்திரத்தை முதல்முறையாக நாம் பார்த்ததைக் கூறுகிறேன். அந்தப் படம் முழுவதிலும் சூரியனே மையப்படுத்தப்பட்டிருக்கும். கதாநாயகனின் வாழ்வில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் குறிக்க சூரிய உதயமோ, அஸ்தமனமோ காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், கொட்டும் மழையில், ஓவர் தி ஷோல்டர் ஷாட் என்கிற முன்னிருபவரின் தோள்களில் இருந்து முகம் தெரியும்படியான கேமரா கோணத்தில் ரஜினியை அறிமுகம் செய்திருப்பார்கள். இங்கு மழையை விளையாட்டுத்தனமாக இல்லாமல், சக்திவாய்ந்த நண்பனாகக் காண்பித்திருப்பார். அதுவரை நான் மழையை ஆடல், பாடல் காட்சிகளுக்குத்தான் பயன்படுத்த முடியும் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் மணிரத்னம் இந்தக் கருத்தை மாற்றி, தன் பாணியில் மழையைப் பயன்படுத்தி இருந்தார். மழைக் காட்சிகளை இன்னும் மெருகூட்டி, ஒரு சண்டைக்காட்சியை எவ்வாறு கொட்டும் மழையில் படமாக்க முடியும் என நிரூபித்திருந்தார்.

நாம் எப்போதாவது நிறங்களைச் சித்தரிக்கும் பாடல் காட்சிகளை மழையில் படமாக்க முடியும் என்று, பார்த்தோ, கேட்டோ இருக்கிறோமா? ( அல்லது நினைத்திருக்கிறோமா?)

நாயகன் படத்தில் வரும் அந்தி மழை மேகம் பாடலில், தாராவியின் தாதாவான வேலு நாயக்கர் (கமல் ஹாசன்) தன் மக்களோடு கலந்து ஆடிப்பாடும் காட்சி, நிறங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையைப் பின்னணியில் கொண்டு அமைந்திருக்கும். அந்த மழையிலும் அவர் முகம் முழுவதும் வண்ணம் பூசப்பட்டிருக்கும். பாடலின் ஆரம்பத்தில் சிறுவன் அவர் முகத்தில் சிவப்பு வண்ணத்தைப் பூசுவது, இரத்தம் தோய்ந்த வேலு நாயக்கரின் வாழ்க்கைப் பாதையை உருவகப்படுத்தியிருக்கும்.

மணி ரத்னத்தின் மற்றொரு படமான உயிரேவில் ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலாவின் முதல் சந்திப்பு, ஒரு வித்தியாசமான மழைக் காட்சியில் அமைந்திருக்கும். மலைவாசஸ்தலத்தில் காற்றின் போக்கில் பெய்யும் மழையில் அக்காட்சி அமைந்திருக்கும். கொட்டும் மழையல்ல அது, ஆனால் அந்தப் பெண்ணால், கதாநாயகனின் வாழ்வில் நடக்கப் போவதை, அவன் வாழ்வில் ஏற்படும் தாக்கத்தை முன்கூட்டியே உணர்த்தும் மழையாக அது இருந்தது. 

மழையைப் பற்றி பெரிதாக வியந்த இன்னொரு காட்சி, மணிரத்னம் படத்தில் அல்ல, சலங்கை ஒலிப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞராகியிருக்கவேண்டிய பாலு (கமல் ஹாசன்), நோய்வாய்ப்பட்டு, அவரது மாணவி பரதம் ஆடுவதை சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பார். பாடலின் கடைசியில் தான் நாற்காலியிலேயே உறைந்து போய் கமல் இறந்திருப்பது அவருடைய நண்பர் சரத் பாபுவுக்குத் தெரிய வரும். உடனடியாக அந்த அரங்கை விட்டு சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வெளியே வரும்போது மழை பெய்யத் துவங்கும். இறந்து போயிருந்த கமலை மழையில் நனையாமல் தடுக்க சரத்பாபு குனிவார். அப்போது ஒரு குடை திறக்கும். அது கமலின் காதலி மாதவியுடையது (ஜெயப்பிரதா). கமல் - ஜெயப்பிரதாவின் காதல் தனித்துவமானது. ஒருதலைக் காதல். ஏனென்றால் அங்கு மேடையில் ஆடிக்கொண்டிருப்பவர், ஜெயப்பிரதாவுக்கு இன்னொருவருடன் திருமணமாகி பிறந்த மகள். நண்பரும் காதலியுமாக இருவரும் சேர்ந்து தாங்கள் நேசித்தவரைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு சென்ற பிறகு (கிரேன் வழியாக கேமரா பின்னாலிருந்து இக்காட்சியைக் காட்டும்), அக்காட்சியில் மழை மட்டுமே மிஞ்சியிருக்கும்.

தமிழில்: வினுலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com