‘96’ சர்ச்சை முதல் ‘சைக்கோ’ பாடல் வரை: 2019-ல் இளையராஜா என்ன செய்தார்?

2019-ம் ஆண்டில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள், அவர் தொடர்பான செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு...
‘96’ சர்ச்சை முதல் ‘சைக்கோ’ பாடல் வரை: 2019-ல் இளையராஜா என்ன செய்தார்?

2019-ம் ஆண்டில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள், அவர் தொடர்பான செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு:

ஜனவரி 05: சர்ச்சை ஏற்படுத்திய பேச்சு! 

இசையமைப்பாளர்களே இன்று கிடையாது என்று இளையராஜா பேசியது தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவொன்றில் இளையராஜா கலந்துகொண்டார். அப்போது அவர், இன்று கம்போஸர்களே கிடையாது என்று பேசியது தொடர்பாக சர்ச்சையும் குழப்பமும் எழுந்துள்ளன. மற்ற இசையமைப்பாளர்கள் குறித்து இளையராஜா இப்படிப் பேசலாமா என்று ஒருதரப்பும் இளையராஜா அதுபோல பேசவில்லை. திரித்துக் கூறுகிறார்கள் என்று இன்னொரு தரப்பும் இளையராஜா பேசியது குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதித்துவருகிறார்கள். இளையராஜாவின் இந்தப் பேச்சுக்கு அவரது சகோதரர் கங்கை அமரன் ட்விட்டரில் கூறியதாவது: மன்னிக்கவும். நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வரமுடியாது என்று கிண்டலுடன் பதில் அளித்துள்ளார்.

சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரி விழாவில் இளையராஜா பேசியது இதுதான்: 

அப்போதெல்லாம் எப்படி கம்போஸிங் நடக்கும் என்றால் இப்போது போல இல்லை. மாணவிகளே, இப்போது வருகின்ற கம்போஸர்கள் எல்லாம் கம்போஸர்கள் இல்லை. இன்னைக்கு கம்போஸர்களே கிடையாதுங்கிறதை ஞாபகம் வைச்சுக்குங்க. இப்போது எல்லாம் சிடியோடு வருவாங்க. அங்க இருந்து இங்க இருந்து ஒண்ணை எடுத்து, இயக்குநருக்குப் போட்டு காட்டி, சார் இதுமாதிரி இருக்கலாமா எனக் கேட்பார்கள். இது மாதிரி இருக்கலாம். இது மாதிரி போடறேன்னு சொல்லிட்டு அதையே போட்டுருவாங்க. ஆனால் அந்தக் காலத்தில் நாங்கள் கம்போஸ் செய்யவேண்டும். பெர்பார்ம் பண்ணனும். நாங்க வாசிக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் அமைச்சு அதை இயக்குநர் ஓகே செய்து அதற்குப் பிறகுதான் கவிஞரைக் கூப்பிட்டுப் பாட்டு எழுதவைப்போம் என்று கூறியுள்ளார்.

ஜனவரி 20: மாணவிகளுக்கு வாய்ப்பு அளிக்கவுள்ள இளையராஜா

இளையராஜாவின் 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாக பல்வேறு கல்லூரிகளில் விழா கொண்டாடி வருகின்றனர். இவற்றில் அவரும் கலந்துகொண்டு, தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார் இளையராஜா.

கடந்த வருடம் முழுவதும் தமிழக அளவில் பல கல்லூரிகளுக்குச் சென்றார். மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.  இந்த விழாக்களில், அவர்முன்பு பாடல்கள் பாடிய மாணவிகள், அவரது இசையில் பாட  விரும்புவதாகவும் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். இதையடுத்து, இசை நாட்டம் கொண்ட சில மாணவிகளை அழைத்து, குரல் சோதனை நடத்தியுள்ளார். அதில் நன்றாகப் பாடும் 9 மாணவிகளை தேர்வு செய்துள்ளார். இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பின்னணிப் பாடகிகளாக அவர்களை அறிமுகம் செய்ய உள்ளார். 

ஜனவரி 23: விரைவில் இசைக் கல்லூரி தொடங்குவேன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை சார்பில், இளையராஜாவின் 75-ஆவது பிறந்த நாள் விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. பல்கலை. நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:

அண்ணாமலைப் பல்கலை. சாஸ்திரி அரங்குக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். இதற்கு முன்பு கெளரவ டாக்டர் பட்டம் பெற வந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு கோயிலாகும். இது, புனிதமான இடம். பாடல்கள், இசையின் மூலம் மனிதனுக்கு சுத்தமான ஆற்றல் கிடைக்கிறது. இசையின் மூலம் பல்வேறு அதிசய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது இசையின் மகத்துவம் என்றார் இளையராஜா. தொடர்ந்து, மாணவர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா பதிலளித்தார். 

அப்போது, மாணவர் ஒருவர், நீங்கள் இசையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு, இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இசைதான் என்னைத் தேர்த்தெடுத்தது என்றார்.

வெளிநாடுகளில் இசைக் கச்சேரிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து மற்றொரு மாணவர் கேட்ட போது, அங்கே நடைபெறும் இசை நிகழ்ச்சியின்போது அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு காணப்பட்டது என்றார். இசைக் கல்லூரி தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளேன். விரைவில் இசைக் கல்லூரி தொடங்கப்படும் என்றார். 

முன்னதாக, பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன் தலைமை வகித்துப் பேசியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு 90-ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவாக இளையராஜாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அவரது இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதியளித்தால், அதில் வரும் தொகையை வைத்து பல்கலை. இசைக் கல்லூரியில், இளையராஜா பெயரில் இருக்கை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் இசை வல்லுநர்கள் கெளரவிக்கப்படுவார்கள் என்றார் அவர். இந்த வேண்டுகோளை ஏற்ற இளையராஜா, பல்கலை. 90-ஆவது ஆண்டு விழாவில் இசை நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல் அளித்தார்.

ஜனவரி 29: இளையராஜா விழாவில் ஆளுநர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும்  'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், "இளையராஜா -75' என்ற விழா மலரை  வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஜனவரி 29: இளையராஜா 75 - பாராட்டு விழாவுக்கான செலவு விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள "இளையராஜா 75' பாராட்டு விழாவுக்கான செலவுத் தொகை, விழா தொடர்பான ஒப்பந்தம் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா தயாரிப்பாளரான ஜே.எஸ்.சதீஸ்குமார் தாக்கல் செய்த மனுவில், "சென்னையில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற முடிவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் முன்னாள் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சங்கத்துக்கு ஏற்கெனவே ரூ.7.73 கோடிக்கு முறையான கணக்குகளைக் காட்டவில்லை. இந்த நிலையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டால் அந்த விழாவிலும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் மற்றும் பொதுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கூட்ட உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவுக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நடிகர் விஷால் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், வெளிப்படையாக கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்படுவதில்லை. மேலும் "இளையராஜா 75' இசை நிகழ்ச்சிக்காக பலரிடம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "இந்த விவகாரத்தில் தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், நிகழ்ச்சியை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தால் என்ன என கேள்வி எழுப்பினார். அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. எனவே நிகழ்ச்சியை ஒத்திவைக்க முடியாது' என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ள தொகை, நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

பிப்ரவரி 01: 'இளையராஜா 75'  நிகழ்ச்சிக்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3-ஆம் தேதிகளில்  நடைபெறவுள்ள "இளையராஜா 75' பாராட்டு விழாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு கடைசி நேரத்தில் தொடரப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, "இளையராஜா 75'  நிகழ்ச்சிக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார்.

பிப்ரவரி 02: ஹிந்தி பட ரசிகர்களை தனது இசையால் தமிழ்ப் பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில்  நடைபெறவுள்ள "இளையராஜா 75' பாராட்டு விழாவின் வரவு- செலவு கணக்கு விவரங்களைக் கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தமிழ் சமூகத்தின் பெருமை இளையராஜா எனக் கருத்து தெரிவித்துள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.சதீஷ்குமார் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இளையராஜா-75 பாராட்டு நிகழ்ச்சிக்கான வரவு -செலவு கணக்கு விவரங்களை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழ்ச் சமூகத்தின் பெருமை இசையமைப்பாளர் இளையராஜா. ஹிந்தி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை தனது இசையால் தமிழ் பாடல்களைக் கேட்க வைத்தவர் இளையராஜா. ஹிந்தி திரைப்படங்களுக்கான இசையை தமிழில் இருந்து எடுக்க வைத்தவரும் அவர் தான். இந்தியாவே கவனித்து வரும் அந்த மிகப்பெரிய இசை கலைஞனின் பாராட்டு விழாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு அவரை அவமதித்ததாகவே கருத முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து வரவு -செலவு கணக்கு விவரங்களை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள்,  தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பான விவரங்களை இரண்டு வார காலத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

பிப்ரவரி 03: ராஜாவின் பாடலுக்கு கீபோர்டில் வாசித்த ஏ.ஆர். ரஹ்மான்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய 'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், 'இளையராஜா -75' என்ற விழா மலர் வெளியிடப்பட்டது. ரஜினி, கமல், ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பால்கி உள்ளிட்ட பிரபலங்களும் திரையுலகினரும் ராஜா ரசிகர்களும் பெரும்திரளாக இந்த இருநாள் விழாவில் கலந்துகொண்டார்கள்.

ஏ.ஆர். ரஹ்மானும் இளையராஜாவும் பங்கேற்ற நிகழ்ச்சி ரசிகர்களின் அதிகப் பாராட்டைப் பெற்றது. ராஜாவின் மன்றம் வந்த தென்றலுக்குப் பாடலை ராஜா பாட, அப்பாடலை கீபோர்டில் வாசித்துக் காண்பித்தார் ரஹ்மான். அப்போது இசையில் ஏதோ விட்டுவிட்டார் ரஹ்மான். அவரிடம் ராஜா, ஏன் இப்படி வாசிக்கிறே, உனக்குத்தான் டியூன் தெரியுமே என்றார். மூன்றாம் பிறை படத்திலிருந்து என்னிடம் 500 படங்களுக்குப் பணியாற்றியுள்ளார் ரஹ்மான் என்று கூறினார் ராஜா. உங்களிடம் ஒரு படத்துக்கு வேலை பார்ப்பதே பெரிய விஷயம் சார் என்றார் ரஹ்மான். ரசிகர்களால் மறக்கமுடியாத தருணம் இது. 

பிப்ரவரி 03: என்னை விடவும் கமலுக்கு நல்ல பாடல்களை அளித்துள்ளீர்கள்: ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில்!

இளையராஜா -75 விழாவில் இளையராஜாவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் 15, 16 படங்கள் வெளியாகும். அதில் 12 படங்களுக்கு ராஜா தான் இசையமைத்திருப்பார். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்குப் பணம் வாங்காமல் இசையமைத்துள்ளார். இப்போது ஒரு படத்தின் பின்னணி இசைக்கு 30 நாள்கள் ஆகின்றன. ஆனால் இளையராஜா 3 நாள்களில் முடித்துவிடுவார். 

முதலில் அவரை ராஜா சார் என்றுதான் அழைப்பேன். பேண்ட் சட்டையிலிருந்து வேட்டி, ஜிப்பாவுக்கு மாறிய பிறகு சாமி என்றுதான் அழைக்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் சாமி என்றுதான் அழைத்துக்கொள்கிறோம். மன்னன் படத்தில் 6 வரிகள் பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது. என்னை விட கமலுக்கு நல்ல பாடல்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றார் ரஜினி.

அதற்குப் பதில் அளித்த ராஜா, இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாடல்களை வழங்குகிறீர்கள் என்பார். ஏன் ராமராஜன், மோகனுக்கு நல்ல பாடல்களை நான் வழங்கவில்லையா? எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவருடைய படங்களுக்கும் ஒன்றுபோலத்தான் நான் இசையமைத்தேன் என்றார். 

பிப்ரவரி 05: ‘எனக்கு ஷங்கரிடம் சான்ஸ் கேக்குறியா?’: இளையராஜாவின் கோபம் குறித்து ரோஹிணி பதில்!

இளையராஜா 75 நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றிய ரோஹிணியை இளையராஜா ஒரு தருணத்தில் கடிந்துகொண்டார்.

இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜாவைப் பாராட்ட மேடைக்கு வந்தார் இயக்குநர் ஷங்கர். அப்போது அவரிடம் ரோஹிணி, நீங்களும் ராஜா சாரும் மேடையில் இருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட கூட்டணியைப் பார்க்க நிறைய பேர் ஆவலா இருக்காங்க என்றார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட இளையராஜா, நீ எனக்கு சான்ஸ் கேக்கறியா என்று கடிந்துகொண்டார். அப்படி இல்லை என்று சமாளித்தார் ரோஹிணி. பிறகு ரோஹிணியிடம் ராஜா கூறியதாவது:

ஐ டோண்ட் லைக் திஸ்...  இப்ப ஏன் அந்த மேட்டரை எடுக்குற நீ? அவருக்குச் செளகரியமானவர்களை வைத்து அவர் வேலை பார்த்துட்டு இருக்கார். அவரைப் போய் ஏன் தொந்தரவு செய்றே என்று கோபமாகவும் படபடவென்றும் பேசினார்.

இந்தச் சம்பவம் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து ரோஹிணி கேள்வி கேட்ட விதம் குறித்தும் ராஜாவின் கோபம் குறித்தும் பரவலான விமரிசனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை ரோஹிணி ட்விட்டரில் எழுதியதாவது:

இளையராஜா என்னிடம் பேசிய விதம் குறித்துப் பேசும் அனைவருக்கும் - இது ஒரு பெரிய விஷயமில்லை, இதை மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 05: இளையராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குநர் பார்த்திபனால் சாத்தியமானது: விஷால்

தமிழக முதல்வரை நடிகரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால் நேரில் சந்தித்துப் பேசினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இளையராஜா 75 பாராட்டு விழாவுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். இளையராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குநர் பார்த்திபனால் சாத்தியமானது. விழாவில் ஒரே மேடையில் இளையராஜா பாட, ரஹ்மான் இசையமைக்க... இதுபோன்று வேறு எங்கும், கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் கூட நடக்காது. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதைப் பார்க்கமுடியாது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில் ராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் தோன்றினால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்து செய்த விஷயம் இது. பாராட்டு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கினோம். நடிகர், நடிகைகள் பலர் வரவில்லை என்றார். 

பிப்ரவரி 11: தமிழகத்தில் எனது பாதம் படாத இடம் கிடையாது​!

இளையராஜாவின் 75 ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு  வெளிநாடு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  "எப்போதும் ராஜா' என்ற தலைப்பில்  இன்னிசைக் கச்சேரி  நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஈரோடு அருகே கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்று இளையராஜா பேசியதாவது:

நான் ஏற்கனவே ஈரோடு புத்தக திருவிழாவில் பங்கேற்று  பேசியபோது, எனது குழுவினருடன் ஈரோட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்  இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் எந்தக் குக்கிராமத்திலும் எனது பாதம் படாத இடம் கிடையாது. எனக்கு எப்போதும் நெருங்கிய நண்பன் என்னுடைய ஆர்மோனிய பெட்டிதான். இந்தப் பெட்டியிலிருந்து வரும் இசையால் உங்களை குளிர வைக்கிறேன். எனது இசையையும், ரசிகர்களையும் என்னிடமிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது என்றார். பின்னணி பாடகர்கள் ஹரிசரண், சித்ரா, மனோ, பிரசன்னா, மதுபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பல்வேறு பாடல்களைப் பாடினர். ஹங்கேரி நாட்டைச்  சேர்ந்த இசையமைப்பாளர் லாஸ்லோ கோவாச் தலைமையிலான இசைக் குழுவினர் 40 பேர் உள்பட 100 -க்கும்  மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசைக் கருவிகளை மீட்டினர். 

நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு, சக்தி மசாலா நிறுவனங்கள் சார்பில் ஏலக்காய்கள் மூலமாக செய்யப்பட்ட செங்கோல்  பரிசளிக்கப்பட்டது. 

பிப்ரவரி 13: விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா!

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கி முடித்துள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது.

இப்படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளார்கள்.  இந்நிலையில் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளுக்குப் பாடல்களும் பின்னணி இசையும் இளையராஜா எப்படி அமைத்துத் தரப்போகிறார் என ஆவலாக உள்ளேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். கமல் இயக்கிய ஹே ராம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்குத்தான் பாடல்கள் உருவாக்கினார் இளையராஜா. அதேபோல இந்தப் படத்திலும் முழுப்படமும் படமாக்கப்பட்ட பிறகு பாடல்களை உருவாக்கவுள்ளார்.

மார்ச் 15: இளையராஜாவுக்குப் பாரத ரத்னா, நடிப்புத் துறையில் எம்ஜிஆர் பெயரில் தேசிய விருது: பாமக தேர்தல் அறிக்கை

2019 மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பாமக சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் திரைத்துறை தொடர்பாகக் கூறப்பட்டுள்ளதாவது:

திரைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது போன்று, நடிப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாரத ரத்னா விருது பெற்ற நடிகரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் பெயரில் தேசிய விருது தோற்றுவித்து வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தும். 

மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுத் தர பாமக பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் 16: பொள்ளாச்சி சம்பவம் குறித்து இளையராஜா!

சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு என தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா, பொள்ளாச்சி சம்பவம்போல இன்னொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

ஏப்ரல் 11: தேர்தலில் இளையராஜா படத்தை பயன்படுத்த வேண்டாம்

அரசியல் லாபத்திற்காக இசையமைப்பாளர் இளைய ராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இளையராஜாவின் மியூசிக் மேனஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட  செய்தி: சில அரசியல் கட்சிகள் இந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகளைப் பெற இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துகின்றனர். எந்த அரசியல் கட்சியும், அவரது பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த வேண்டாம் என்று  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 3: ரமணரின் ஆராதனை விழா: இளையராஜா பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமத்தில் பகவான் ரமணரின் 69-ஆவது ஆராதனை விழா நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை ஆஸ்ரமத்தில் உள்ள ரமண லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த ரமண மாலை பாடல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ரமணர் பற்றிய பாடல்களை இளையராஜா பாடினார். விழாவில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் உள்ளூர், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மே 07: தீர்ந்தது மனவருத்தம்: ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி!

இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடவுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இதையடுத்து இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக நிலவிய மனவருத்தம் தீர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானது.

மே 13: ஏகாம்பரநாதர், சித்ரகுப்தர் கோயில்களில் இளையராஜா வழிபாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், சித்ரகுப்தர் கோயில்களில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா காஞ்சிபுரத்துக்கு வருகை புரிந்தார். அப்போது, பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவரை வரவேற்ற கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மூலவர், சோமாஸ்கந்தர், மாவடி, காலபைரவர் உள்ளிட்ட பிரகாரங்களில் அவர் வழிபாடு செய்தார். தொடர்ந்து, ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, சித்ரகுப்தர் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் தனது குடும்பத்தினருக்கு அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.

மே 13: இசை தெரபி மையம் அமைக்க இளையராஜாவுக்கு நிலம் வழங்கத் தயார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் இசை தெரபி சிகிச்சை மையம் அமைக்க இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நிலம் வழங்க புதுவை அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில், 54-ஆம் ஆண்டு கம்பன் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலாவைப் பாராட்டி, கேடயம் வழங்கிய முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

தற்போது, அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் இசை தெரபி என்ற மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்ற இசை தெரபி மையத்தை புதுவை மாநிலத்திலும் அமைக்க இசையமைப்பாளர் இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, புதுச்சேரியில் இந்த மையம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்குத் தேவையான நிலத்தை இளையராஜாவுக்கு வழங்கவும் புதுவை அரசு தயாராக உள்ளது என்றார்.

மே 27: 96 பட சர்ச்சை!

இசை கொண்டாடும் இசை என்ற இளையராஜாவின் இசை கச்சேரி தொடர்பாக சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு இளையராஜா பேட்டியளித்துள்ளார். அவரிடம், சமீபத்தில் வெளிவந்த 96 படத்தில் அப்படக் கதாநாயகி ராஜாவின் பாடல்களைப் பாடுவது குறித்து இளையராஜா கூறியதாவது: 

அதெல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் பாடல்களையே பயன்படுத்தவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அங்கு புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான். யோதோன் கி பாரத் என்றொரு ஹிந்திப் படம். இசை - ஆர்.டி. பர்மன். அந்தக் கதையில் ஒரு குடும்பத்தில் 3 சகோதரர்கள் உள்ளார்கள். சிறிய வயதில் சந்தோஷமாக ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அவர்கள் பிரிந்து போய், எங்கெங்கோ சென்று கஷ்டப்படுகிறார்கள். இறுதிக்கட்டக் காட்சியில் அதே பாடலைப் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் மூலம் குடும்பம் ஒன்றாகிறது. 20 வருடங்களுக்கு முன்பு வேறொரு இசையமைப்பாளர் பயன்படுத்திய பாடலை இசையமைப்பாளர் அந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை. அவர் சொந்தமாக கம்போஸ் செய்தார், 20 வருடத்துக்கு முன்பு இந்தப் பாடலைத்தான் பாடினார்கள், அதை மீண்டும் இப்போது பாடுகிறார்கள் என. அதை இசையென்று சொல்வதா?!

இது தன்னுடைய பலவீனத்தைக் காண்பிக்கிறது. இது ஆண்மையில்லாத்தனமாகத் தானே உள்ளது?! ஒரு கதையில் 1980-ல் உள்ள பாடல் என்றால் 80களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்கவேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை? ஜனங்களை என்னுடைய இசையை விட்டுப் பிரிக்கமுடியாது. அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறீர்கள். அது ஆண்மையில்லாத்தனம் என்றார். இதற்குப் பதிலளித்துள்ள 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, தான் என்றென்றும் இளையராஜாவின் ரசிகன் என்றார். 

ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட் போன்ற ஆல்பங்களை மீண்டும் முயற்சிக்காதது ஏன்: இளையராஜா பதில்

​சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு இளையராஜா பேட்டியளித்தார். சில பாடல்களை பாடல்களை இன்னும் வேறு விதத்தில், வித்தியாசமாகச் செய்திருக்கலாமோ என்று உங்களுக்குத் தோன்றியதுண்டா என்கிற கேள்வி இளையராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

எந்தப் பாடலையும் புதிய வடிவத்தில் என்னால் தரமுடியும். நானாக ஓர் உத்வேகத்தோடு செய்ததுதான் ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட் ஆல்பங்கள். அதுபோல ஆல்பங்கள் எத்தனை செய்திருக்க முடியும்? ஆனால் பைரசியும் ஆடியோ மார்க்கெட்டும் வேறொரு மாதிரியாக மாறிவிட்டதால் அதுபோன்ற ஆல்பங்களைச் செய்வதை நான் நிறுத்திவிட்டேன். இதனால் புதிதான இசையைப் படைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டன. அதேசமயம், வித்தியாசமாக முயற்சி செய்திருக்கலாம் என்கிற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதுண்டு என்று கூறியுள்ளார்.

மே 27: மீண்டும் இணைந்த இளையராஜா - எஸ்பிபி!

இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் மீண்டும் சந்தித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ராயல்டி உரிமை தொடர்பாக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பி-க்கும் இடையே பிரச்னை வெடித்தது.  இது இசை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. சினிமாவிலும் இருவரும் இணையவில்லை. அண்மைக் காலங்களில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளிலும் எஸ்.பி.பி. கலந்து கொண்டு பாடவில்லை.  இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து வந்தது. 

இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒத்திகைக்காக இளையராஜாவை திங்கள்கிழமை சந்தித்தார் எஸ்.பி.பி. இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்களது நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர். ராயல்டி உரிமை பிரச்னைக்கு பிறகு, இருவரும் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வாக இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சி அமையவுள்ளது. 

மே 31: உலகத்தில் எங்கேயும் நடந்ததில்லை!

இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் இளையராஜா கூறியதாவது:  

பல ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் கண்ணதாசனுக்கு சிலை எடுக்க வேண்டும் என்பதற்காக நான், எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் மற்றும் சுசீலா, ஜானகி என பெரும் இசைக் கலைஞர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு, மூன்று இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி கண்ணதாசனுக்கு  என் வீட்டுப் பக்கத்திலேயே சிலை வைத்தோம். இப்போது நடக்கவுள்ள இந்த இசை நிகழ்ச்சியை சினிமா இசையமைப்பாளர் சங்கத்துக்காக நடத்துகிறோம். இந்த இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியால் மட்டும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய இயலாது. 

இந்த இசை நிகழ்ச்சி மூலமாக கிடைக்கும் தொகை நிகழ்ச்சியை நடத்துவதற்கே சரியாகி விடும். இசை சங்கத்துக்கும், இசைக் கலைஞர்களுக்கும் என்னுடைய அன்பளிப்பாக ஒரு நல்ல காரியம் செய்ய இருக்கிறேன். அது என்னுடைய சொந்த முயற்சியின் மூலம் நடக்கவுள்ளது. இது மக்களிடம் வசூல் செய்து நடத்துகிற காரியம் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். அறிவிக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் கடைசி நேரத்தில் வராமல் கூட போகலாம். அது அந்த கலைஞர்களின் மனநிலையைப் பொறுத்தது.  யாராவது ஒரு கலைஞர், எங்களால் கொடுக்க முடியாத தொகையைக் கேட்கலாம். அது போன்று ஏதாவது நடக்கலாம். 

நான் எங்கு சென்றாலும் மக்கள் இன்முகத்துடன் வரவேற்பது எனக்குத் தெரியும். 75-ஆவது பிறந்தநாளை, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஆண்டு முழுவதும் கொண்டாடியது இங்கேதான் என்று நினைக்கிறேன். உலகத்தில் எங்கேயும் நடந்ததில்லை. கல்லூரியில் மாணவ, மாணவிகள் கொண்டாடினார்கள். நான் பொதுவாக என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. ஏனென்றால் பிறந்த நாள் என்பது ஒரே ஒரு முறைதான். அது மீண்டும் வருவதில்லை என்பது என் எண்ணம். 1943 -ஆம் ஆண்டு வைகாசி 20 நான் பிறந்த நாள்.  அந்த நாள் வருமா... மறுபடியும் வராது. அதனால் அதைக் கொண்டாடுவதில்லை. மக்கள் கொண்டாடுகிறார்கள். மக்களோடு மக்களாக நான் இருப்பதும், என் இசை அவர்களின் உள்ளத்தைத் தொடுவதும், உயிரில் கலந்து வாழ்வதைப் போல இருக்கிறேன். மக்களுக்கும் எனக்குமான பிணைப்பு இருக்கிறதே,  அது கயிறு போட்டோ அல்லது வேறு எதைக் கொண்டோ கட்டப்பட்டதில்லை.  இசைதான் எங்களைப் பிணைத்திருக்கிறது. அதுதான் அவர்களை மயக்கி வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத புது விதமாக பின்னணி இசை எப்படி வாசிக்கப்படும் என்பதை இசைத்துக் காட்டப் போகிறோம். அது ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். முதன்முறையாக 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றார் இளையராஜா.

ஜூன் 2: சென்னையில் நடைபெற்ற இசை கொண்டாடும் இசை

இளையராஜாவின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி ‘இசை கொண்டாடும் இசை' என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை "தினமணி' மற்றும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக இருந்து நடத்தின.

இந்த நிலையில் இளையராஜா பேசியதாவது: இசைச் சங்கத்துக்கும், இசைக் கலைஞர்களுக்கும் என்னுடைய அன்பளிப்பாக ஒரு நல்ல காரியம் செய்ய இருப்பதாகவும், அது என்னுடைய சொந்த முயற்சி, இது மக்களிடம் வசூல் செய்து நடத்துகிற காரியம் அல்ல என்றும் சொல்லியிருந்தேன். அது என்னவென்றால், திரையிசை கலைஞர்கள் சங்கத்துக்கான கட்டடத்தை கட்டித் தர இருக்கிறேன். அதற்கான மொத்தச் செலவையும் ஏற்கிறேன். இதற்கான செலவு இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட பணம் அல்ல. அதையெல்லாம் மீறி இதைச் செய்கிறேன். இதுகுறித்த திட்டம் வெகு நாள்களாக நடந்து வருகிறது. இப்போதுதான் ரசிகர்கள் முன்பு அறிவிக்கிறேன். அந்த கட்டட மாதிரி வரைவை சங்கத்திடம் ஒப்படைக்கிறேன் என்றார் இளையராஜா. சங்க கட்டட மாதிரியை, திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா உள்ளிட்ட நிர்வாகிகளிடம் இளையராஜா வழங்கினார்.

ஜூன் 2: இளையராஜா இசையில் மீண்டும் பாடிய எஸ்.பி.பி.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படத்துக்காக இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடினார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் - தமிழரசன். இயக்கம் - பாபு யோகேஸ்வரன். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இப்படத்துக்கான பாடல் பதிவு நடந்தது. இதில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடினார். இது குறித்து படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் கூறும்போது, "சில அதிசயங்கள் கலையால் மட்டும்தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக் கலை நிகழ்த்தி இருக்கிறது. விஜய் ஆண்டனி நடித்து வரும் "தமிழரசன்' படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இசையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜேசுதாஸ் இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை ஆச்சரியமாக கொண்டாடி வந்தவேளையில், இளையராஜாவின் இசையில் இப்போது இந்தப் படத்துக்காக எஸ்.பி.பி., ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி. குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமுகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் பதிவின்போது இருவரும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டனர். கவிஞர் பழனிபாரதி எழுதியிருக்கும் "வா வா என் மகனே' எனும் இந்தத் தாலாட்டுப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குநர்.

ஜூன் 4: அனுமதி இல்லாமல் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தத் தடை 

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை முறையான அனுமதி இல்லாமல் ஆன்லைன், வானொலி நிறுவனங்கள், இசைப் போட்டிகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், என்னுடைய அனுமதியைப் பெறாமல், அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம், கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இசை நிறுவனங்கள் நான் இசையமைத்த திரைப்படப் பாடல்களை விற்பனை செய்து வருகின்றன. அந்தத் திரைப்படப் பாடல்களுக்கான முழுமையான உரிமை என்னிடம் தான் உள்ளது. எனவே அந்த பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்காலத் தடையை நிரந்தரத் தடையாக மாற்றி உத்தரவிட்டார். மேலும், இளையராஜாவின் பாடல்களைத் திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் பயன்படுத்த தடை விதிக்கிறேன். குறிப்பாக ஆன்லைன், வானொலி நிறுவனங்கள், இசைப் போட்டிகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தக் கூடாது. இந்த பாடல்களை பயன்படுத்த வேண்டும் எனில், முறையான அனுமதி பெற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இளையராஜாவின் பாடல்களை 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி, அகி இசை நிறுவனம் தொடர்ந்த வழக்கை, நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

ஜூன் 9: கோவையில் இளையராஜா இசை நிகழ்ச்சி

ராஜாதி ராஜா என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கோவையில் ஜூன் 9 அன்று நடைபெற்றது. 

அருண் மீடியாஸ், மஹம் எண்டர்பிரைசஸ், சியா அமைப்பு ஆகியவற்றுடன் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக இணைந்து வழங்கிய இந்த இசை நிகழ்ச்சி, கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இளையராஜா நேரடியாகப் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சியில் ஹங்கேரி நாட்டின் இசைக் கலைஞர்களும் பங்கேற்றார்கள். இதில், பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, பாடகி உஷா உதுப் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பாடினார்கள். 

ஜூன் 12: இளையராஜா இசையமைப்பில் ஆதி நடிக்கும் கிளாப்!

ஈரம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற ஆதி, தற்போது இளையராஜா இசையமைக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார். கிளாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தடகள வீரனாக நடிக்கிறார் ஆதி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிருத்வி ஆதித்யா இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜூலை 5: காக்கா முட்டை மணிகண்டன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிக் கவனம் அடைந்துள்ள இயக்குநர் மணிகண்டனின் அடுத்தப் படம் - கடைசி விவசாயி. மணிகண்டன் இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். விவசாயி வேடத்தில் நல்லாண்டி நடித்துள்ளார். குற்றமே தண்டனை படத்துக்குப் பிறகு மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 11: மிஷ்கினின் துப்பறிவாளன் 2 படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா!

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது.  மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இத்தகவலை விஷால் அறிவித்துள்ளார். திரையுலகில் 15-ம் ஆண்டில் அடியெடுத்தும் வைக்கும் நான், முதல்முறையாக இளையராஜா சார் இசையமைப்பில் நடிக்கிறேன்  என்று கூறியுள்ளார் விஷால். 

2013-ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவுக்கும் தற்போது இயக்கி வரும் சைக்கோ படத்துக்கும் இளையராஜா தான் இசை. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு -  தன்வீர் மிர். 

துப்பறிவாளன் 2 படத்துக்கும் இளையராஜா இசையமைப்பதின் மூலம் முதல்முறையாக மிஷ்கின் இயக்கும் அடுத்தடுத்தப் படங்களுக்கு அவர் இசையமைக்கிறார்.

செப்டம்பர் 14: இளையராஜா - யுவன் இசையமைக்கும் ‘மாமனிதன்’ படத்துக்குப் பாடல்கள் எழுதிய பா. விஜய், பழனி பாரதி!

ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஒருவேளை இந்தப் படத்திலாவது அது சாத்தியமாகுமா என. ஆனால் வழக்கம்போல ரசிகர்கள் எதிர்பார்க்கும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி இந்தமுறையும் நிகழவில்லை.

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைக்கிறார்கள். மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுபெற்றது. 

சீனு ராமசாமியின் முதல் படம் தவிர்த்து அடுத்து அவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், கண்ணே கலைமானே ஆகிய படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. அதுமட்டுமல்லாமல், தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்தக் கூட்டணி தற்காலிகமாகப் பிரிந்துள்ளது. 

கமல் நடிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்துக்குப் பிறகு கருத்துவேறுபாடுகள் காரணமாக இளையராஜா - வைரமுத்து கூட்டணி பிரிந்தது. சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் தொடருமா என்கிற சிறு நம்பிக்கையும் ஆவலும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இப்படத்தின் பாடல்கள் குறித்து யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள ட்வீட்டில், பா. விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் மாமனிதன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் பா. விஜய், பழனி பாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.

செப்டம்பர் 29: என் பெயரை வைத்து இளையராஜாவைச் சிறுமைப்படுத்த வேண்டாம்: சீனு ராமசாமி உருக்கம் 

என் பெயரை வைத்து இளையராஜாவைச் சிறுமைப்படுத்த வேண்டாம் என்று இயக்குநர்  சீனு ராமசாமி தெரிவித்துளார்.

சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ’மாமனிதன்’ படத்தில் இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜாவிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்.”

திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்றேன். அது சரி என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழுப் படத்தையும் அவருக்குக் காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்.

1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இளையராஜாவுக்கு இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார். அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களைக் கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.

படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கும் கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்“ என்றேன். யுவன் தரப்பில் “பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். ஓர் இயக்குநராக முழு சுதந்திரத்தைத் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4-வது படம். இளையராஜாவுடன் பணிபுரியும் முதல் படம் .

’மாமனிதன்’ எனக்கு 7-வது படம். இளையராஜா மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராகப் படம் பிடித்திருக்கிறேன். இளையராஜாவின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன். இதில் என் பெயரை வைத்து இளையராஜாவைச் சிறுமைப்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்குச் சிபாரிசு செய்யவில்லை.

என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது உண்மையல்ல. நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.’தர்மதுரை’யில் வைரமுத்து பாடல் வரிகளுக்குத் தேசிய விருது கிடைத்தது. இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிகிறோம், நிச்சயமாக இந்தப் படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமெனக் கருதுகிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அக்டோபர் 31: கமல் 60 விழாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி!

நடிகர் கமல் ஹாசனின் 60 ஆண்டு திரையுலகப் பயணத்தை விமரிசையாகக் கொண்டாடும் வகையில், 3 நாள்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ரஜினி பங்கேற்கிறார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உங்கள் நான் - 60 மகத்தான வருடங்கள் நிகழ்வை இளையராஜா தொடங்கி வைக்கிறார். கமலைப் பாராட்டும் வகையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி., கமல் உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். கமலுடன் 44 ஆண்டுகள் நட்பைக் கொண்டுள்ள ரஜினி காந்த் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். கமலுடனான அனுபவங்கள் குறித்து அவர்கள் மேடையில் பகிர்ந்துகொள்வார்கள். உங்கள் நான் நிகழ்ச்சி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நவம்பர் 1: இதயம் என் இதயத்தைத் தொட்டது: இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா!

பாரதிராஜா - இளையராஜா கூட்டணியை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. 1977-ல் 16 வயதினிலே படத்தில் ஆரம்பித்த இருவர் கூட்டணியும் 1992-ல் நாடோடி தென்றல் படம் வரை நீடித்தது. இதன்பிறகு இந்தக் கூட்டணி பிரிந்தது.

இந்நிலையில் நீண்ட நாளைக்குப் பிறகு தேனியில் இளையராஜாவைச் சந்தித்ததாக இயக்குநர் பாரதிராஜா சமூகவலைத்தளத்தில் பதிவு எழுதியுள்ளார். இயலும் இசையும் இணைந்தது... இதயம் என் இதயத்தை தொட்டது... என் தேனியில் என்று எழுதியுள்ளார் பாரதிராஜா. மேலும் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

நவம்பர் 16: பெங்களூரில் இளையராஜா இசை நிகழ்ச்சி! 

கா்நாடகத்தில் முதல்முறையாக பெங்களூரில் இளையராஜாவின் இசை விழா நடைபெற்றது. ‘ஜனும ஜனுமத அனுபந்தா’, ’கா்ஜனே’, ‘கீதா’, ’நீ நன்ன கெல்லலாரே’,’ஷிகாரி’,’பாரி பா்ஜரி பேட்டே’,‘பல்லவி அனுபல்லவி’,‘நியாய கெத்திது’,‘நியாய பயலு’ போன்ற நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளாா். அப்படங்களில் இடம்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான பாடல்கள் கன்னட மக்களிடையே இன்றைக்கும் பிரபலமாகியுள்ளது. இதனால் இளையராஜாவுக்கு கன்னட ரசிகா்கள் ஏராளமாக உள்ளனா். பெங்களூரு கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் அமைந்துள்ள தி கான்சா்ட் அரீனா அரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

தனது 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் இசை விழாக்களை நடத்திவரும் இளையராஜா, தனது இசையில் வெளியான கன்னடப் பாடல்களுடன் இசை விழாவைத் தொடங்கினார். கன்னடம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படப் பாடல்களும் இசை விழாவில் இடம்பெற்றன. முன்னதாக, இசை விழாவை பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் தொடக்கி வைத்தார். இந்த இசைவிழாவின் ஊடகப் பங்குதாரராக விளங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கர்நாடக பொது மேலாளர் சுரேஷ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடந்த இசை விழாவில் 100 இசைக்கலைஞர்களுடன் பிரபல பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, உஷா உதூப், மது பாலகிருஷ்ணன், முகேஷ், பவதாரணி உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் கலந்துகொண்டு பாடினர்.

இசை விழாவில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் எடியூரப்பா, இளையராஜாவுக்கு மாலை அணிவித்து கெளரவித்தார். அதன்பிறகு முதல்வர் எடியூரப்பா பேசியது:

இசை உலகின் தலைமகனாக விளங்கும் இளையராஜா பெங்களூரில் முதல்முறையாக நடத்தும் இசை விழாவில் பங்கேற்றதை பெருமையாகக் கருதுகிறேன். கடந்த 40 ஆண்டுகளில் அவரது இசையில் வெளியான பாடல்களை கேட்டு ரசித்தவர்களில் நானும் ஒருவன். கன்னட திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராஜன்நாகேந்திரா கொடிகட்டி பறந்த காலத்தில், கன்னடப் படங்களுக்கு இளையராஜா இசையமைத்து கன்னட ரசிகர்களின் மனங்களை வென்றிருந்தார். இன்றைக்கும் அவர் இசை அமைத்த கன்னடப் பாடல்கள் கர்நாடகத்தில் தினமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட இசைக் கலைஞரான இளையராஜா பெங்களூரில் இசை கச்சேரியை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இசை நிகழ்ச்சிக்கு இடையே இளையராஜா பேசுகையில், "நான் இசை அமைத்து வெளியான முதல் படம் "அன்னக்கிளி' வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எனக்கு ரசிகர்களிடையே தனிமதிப்பு கிடைத்தது. அதன் விளைவாக எனக்கு புதிய உற்சாகம் கிடைத்தது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, பாடகர்கள், இசைக் கலைஞர்களின் ஒத்துழைப்பால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இசைக்கு மொழி கிடையாது. எனக்கு கன்னடம் சரளமாகப் பேசத் தெரியாது என்றாலும், இசையை புரிந்துகொண்டு பாடல் கொடுத்துள்ளேன். நடிகர் ராஜ்குமாரின் படங்களுக்கும் நான் இசை அமைத்துள்ளேன். கன்னட மக்களின் அன்பால், ஆதரவால் பல கன்னடப் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது' என்றார்.

நவம்பர் 17: கமல் 60 விழாவைச் சிறப்பித்த இளையராஜா இசை நிகழ்ச்சி

நடிகர் கமல் ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா நடத்திய இந்த நிகழ்ச்சியில் கமலின் முக்கியத் திரைப்பாடல்கள் இடம் பெற்றன. 

நவம்பர் 23: இளையராஜாவுக்காக அனைத்து படைப்பாளிகளும் ஒன்று கூடுங்கள்: பாரதிராஜா கோரிக்கை

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு கட்டடத்தைப் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக அந்தக் கட்டடம் தொடர்பாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவின் நிர்வாகத்துக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இளையராஜாவின் நீண்டகால நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களைத் தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது மிகவும் வருத்தத்துக்குரிய நிகழ்வாகும். ஆகையால் அவர் மீண்டும் இசைப்பணிகளை அங்குத் தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் நவம்பர் 28 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்று கூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

நவம்பர் 18: சைக்கோ படம்: இளையராஜா இசையமைப்பில் முதல் பாடல் வெளியானது

இப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். இளையராஜா + சித் ஸ்ரீராம் கூட்டணி மிகவும் புதுமையாக உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

நவம்பர் 28: கால அவகாசம் அளிக்க வேண்டும்: இளையராஜாவுக்காக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் பாரதிராஜா கோரிக்கை!

இளையராஜாவின் இசை அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. இங்குதான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறாா். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிா்வாகம். இளையராஜா தனது அத்தனை படங்களுக்கும் அங்குதான் இசை அமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இதனை செய்தாா். இப்போது ஸ்டூடியோ வருமானம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அங்கே அமைந்துள்ள பல ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் வரும் வருமானத்தை பெருக்கும் விதமாக, எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு, மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்தனா். இதனால் அங்கே இப்போது இளையராஜாவின் இசைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பிரசாத் ஸ்டூடியோவில் திரையுலகினா் ஒன்று கூடினார்கள். அவர்கள் பிரசாத் ஸ்டூடியோ நிா்வாகத்தினரைச் சந்தித்துப் பேசினார்கள். பிறகு, செய்தியாளர்களிடம் பாரதிராஜா கூறியதாவது:

பிரசாத் ஸ்டூடியோவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜா பணி செய்து வந்தார். இதனால் இரு தரப்புக்கும் மரியாதை ஏற்பட்டது. தற்போது திடீரென இடத்தைக் காலி செய்யுங்கள் என்று இளையராஜாவிடம் சொல்லிவிட்டார்கள். இந்த இடத்தை செண்டிமெண்டாகக் கருதும் ராஜாவுக்கு இதனால் வருத்தம் ஏற்பட்டது. யாருக்கும் பாதகம் இல்லாமல் இந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடிக்க வேண்டும். கால அவகாசம் தந்து அதுவரை இளையராஜாவைப் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் சார்பில் பிரசாத் ஸ்டூடியோவிடம் அறிக்கை கொடுத்துள்ளோம். அதற்குள் நாங்களே ராஜாவுக்கு வேறு ஏற்பாடு செய்வோம். இன்று பொறுப்பு நிர்வாகிகளிடம் பேசினோம். இன்னொரு முறை அழைத்துப் பேச அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இளையராஜாவுக்கு ஆதரவு அளித்த ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் நன்றி. நாங்கள் இவ்வளவு பேர் பேசியதற்கு இளையராஜா தலைவணங்குவார் என்று கூறினார்.

நவம்பர் 27; கோவா பட விழாவில் அசத்திய இளையராஜா

50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில் இளையராஜாவுடனான இயக்குனர் பால்கியின் கலந்துரையாடல் நடைபெற்றது. மேடையிலேயே ஒரு பாட்டுக்கு இசையமைத்தார் இளையராஜா. 

"தன் தந்தையைக் கொல்வதற்காக சென்று கொண்டிருக்கும் மகன்..." என்று தொடங்கி பாடலுக்கான சூழலை விளக்கினார் பால்கி. ஒரு கணம் ஆழ்ந்து சிந்தித்தபின், பார்வையாளர்களிடம் அமைதி காக்க உறுதி வாங்கிக்கொண்டு, பாடலுக்கான நோட்ஸை எழுத ஆரம்பித்தார் ராஜா. அவர்களும் சொன்னபடியே அமைதி காத்தார்கள், அவ்வப்போது இருமல்களால் அந்த அமைதியை உடைத்தபடியே. "இந்தப் பாடலுக்கு இசையமைக்க, பெரும்பாலானவர்கள் இரண்டு நாள்களாவது எடுத்துக் கொள்வார்கள்," என்றார் பால்கி. 

சில நிமிடங்களில் பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதி முடித்த ராஜா, இசைக்குறிப்புகள் அடங்கிய தாளை வயலின் கலைஞரிடம் வழங்கினார். "இப்போதெல்லாம் இதைப்போல ஒரு பாடலுக்கு இசையமைக்க, இசையமைப்பாளர்கள் மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்" என்று அவர் சொல்ல, அரங்கம் ஆர்ப்பரித்தது. அந்தப் பாடலுக்கு இசையமைக்க, புல்லாங்குழல் வாசிப்பவர் உள்பட அனைத்து இசைக்கலைஞர்களின் பங்கிருந்தது. இரண்டு நிமிடங்களில் பிறந்த பாடல் போலத் தோன்றவில்லை. கிட்டத்தட்ட தாலாட்டு போலிருந்தது. அதைப்பற்றி அவரிடம் கேட்க, "நான் ஏன் இதைத் தாலாட்டைப் போல இசையமைத்தேன் என்றால், சாகப்போகும் ஒரு தந்தையைப் பற்றியது இது. கண்டிப்பாக தன்னைக் கொல்ல வரும் தன் மகனுக்கு முன்னொரு காலத்தில் அவர் தாலாட்டு பாடியிருப்பார்" என்று அனைவரும் பிரமிக்கும் வகையில் விளக்கமளித்தார் ராஜா.

டிசம்பர் 3: இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ பிரச்னை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையிலான பிரச்னை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளேன். வாடகை கொடுக்கத் தயாராக உள்ளேன். இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட உரிமை தொடர்பாகப் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்கவேண்டும் என்று இளையராஜா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 12: கார்ப்பரேட் நிறுவன விளம்பரத்துக்கு இசையமைத்த இளையராஜா

கடந்த 40 வருடங்களில் முதல் முதலாக கார்ப்பரேட் விளம்பர நிறுவனத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படி ஓர் அறிவிப்புடன் கோக்கோ கோலா பெவரேஜ் நிறுவனம் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது. இந்த இசை உருவாக்கத்தின் விடியோவையும் வெளியிட்டது.

டிசம்பர் 20: இளையராஜா கேக்!

இளையராஜாவைப் பெருமைப்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் அவரது உருவத்தில் ஐந்தரை அடி உயர கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமாா் 50 கிலோ எடையில் ஜிப்பா, வேட்டி, துளசி மாலை அணிந்து இருப்பது போல ஐந்தரை அடி உயரமுள்ள இளையராஜாவின் உருவம் வடிவமைக்கப்பட்டு கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கை 5 பணியாளா்கள், 50 கிலோ எடையுள்ள இனிப்புகள் மற்றும் 250 முட்டைகளைப் பயன்படுத்தி சுமாா் 6 நாள்களாக உருவாக்கியுள்ளதாக கடை உரிமையாளா் சுப்பு சதீஸ் தெரிவித்தாா். இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையின் அடிப்படையில் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

டிசம்பர் 28: இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது

இசைக் கலைஞா்களுக்கு கேரள அரசு சாா்பில் வழங்கப்படும் ‘ஹரிவராசனம்’ விருது, இந்த ஆண்டு இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளது.

இசைக் கலைஞா்களை கௌரவிக்கும் நோக்கில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ‘ஹரிவராசனம்’ விருதை கேரள அரசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, 2018-ல் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருது புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்தது.

சபரிமலை சந்நிதானத்தில் ஜனவரி மாதம் நடைபெறும் விழாவில் இந்த விருது இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று கேரள சுற்றுலாத் துறை அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படவுள்ளது.

‘ஹரிவராசனம்’ விருதை முதல் முறையாக பின்னணிப் பாடகா் கே.ஜே.யேசுதாஸ் பெற்றாா். அவருக்குப் பிறகு, பின்னணிப் பாடகா்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமாா், கங்கை அமரன், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோா் இவ்விருதைப் பெற்றுள்ளார்கள்.

டிசம்பர் 30: இளையராஜா இசையமைத்த தமிழரசன் பாடல்கள் வெளியீடு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் - தமிழரசன். இயக்கம் - பாபு யோகேஸ்வரன். இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com