பிக்பாஸ் 3: வெல்லப் போகிறவர் யார்?

அந்த அவப்பெயரைப் போக்குவதற்காகவோ என்னமோ, இம்முறை பார்வையாளர்களின் மனநிலையையே நிகழ்ச்சியும் பிரதிபலிப்பதாக...
பிக்பாஸ் 3: வெல்லப் போகிறவர் யார்?

‘பிக்பாஸ் பார்ப்பது ஒரு பாவச் செயல். சமூக விரோதமான காரியம், இந்த நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு’ என்றெல்லாம் சில கோஷ்டிகள் ஒரு பக்கம் ஆவேசப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சீஸனுக்கு சீஸன் இதன் பார்வையாளர்கள் சதவீதம் பெருகிக் கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள். எனில் எந்தப் பக்கம் உண்மையிருக்கிறது? இரண்டிலுமேதான்.

பெரும்பான்மையைக் கவரும் வெகுஜனக் கேளிக்கைகளின் பின்னே எப்போதுமே அதற்கான பிரத்யேக ஆபத்துக்கள் ஒளிந்துள்ளன. அதே சமயத்தில் இதன் வளர்ச்சியையும் தடுக்க இயலாது. தவிர்க்கவியலாத ஓர் ஆயுதத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்தலாம் என்பது போல் இவற்றின் பயன்பாட்டாளர்களை நெறிப்படுத்த முயலலாம். அவ்வளவே.

மற்றவர்களின் அந்தரங்கத்தை அறிந்து கொள்வதில் மனித குலத்திற்கு எப்போதுமே அடிப்படையானதொரு ஆர்வமுண்டு. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை வேவு பார்க்கவும் அவற்றைப் பற்றி உற்சாகமாக வம்பு பேசவும் நாம் தயங்குவதில்லை.

கூட்டுக்குடும்பம் சிதைவுறாத காலக்கட்டங்களில் அக்கம் பக்கத்தாரைப் பற்றி வம்பு பேசவும், மற்றவர்களின் அந்தரங்கமான விஷயத்தை வேடிக்கை பார்க்கவும் ஏராளமான வசதிகளும் வெளிகளும் இருந்தன. ஆனால் இந்த வாழ்க்கை முறை மெல்ல மெல்ல அருகி அபார்ட்மெண்ட்டின் ‘டபுள் பெட்ரூம்’ சுவற்றுக்குள் சுருங்கி விட்ட பிறகு வம்பு பேச இடமோ, நேரமோ அமையவில்லை. பொதுவாக வம்பு பேசுவதில் அதிகம் ஆர்வம் காட்டும் பெண்கள், பணிக்குச் செல்லும் சதவீதம் அதிகமாகி விட்டதும் ஒரு காரணம். இந்த வெற்றிடத்தைத் தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றிக் கொண்டன. தனிநபர்களைத் தாண்டி பிரபலங்களைப் பற்றிய வம்புகளை வெகுஜன ஊடகங்கள் நெடுங்காலமாக ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன.

இதன் நவீன நீட்சிதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள். சிறிதும் பெரிதுமான 16 பிரபலங்களை எவ்வித புறச்சூழலும் அணுகாதவாறு ஒரு வீட்டிற்குள் நூறு நாள் அடைத்து வைப்பார்கள். அவர்களுக்குள் பிரிவினையையும் விரோதத்தையும் உருவாக்கும் சூழல்களை விளையாட்டு என்கிற மேற்பூச்சில் அமைப்பார்கள். சகிப்புத்தன்மையுடனும் மனமுதிர்ச்சியுடனும் இந்தச் சவால்களைக் கடப்பவர்களே அதிக நாட்களை அந்த வீட்டில் ஓட்ட முடியும். மாறாக தங்களின் உணர்வுகளுக்கு எளிதில் பலியாகிறவர்கள் மற்றவர்களுடன் சண்டையிட்டு விரைவில் வெளியேற நேரிடும்.

சில தனிநபர்களின் அந்தரங்கமான தருணங்களை வணிகமாக்குவதுதான் இது போன்ற நிகழ்ச்சிகளின் அடிப்படையான நோக்கம். மற்றவர்களின் வம்புகளை அறிவதில் மனித குலத்திற்கு எப்போதுமே ஆர்வமுண்டு என்கிற அடிப்படைக் காரணமாக பிக்பாஸ் என்கிற விளையாட்டு சர்வதேச அளவில் வெற்றியடைந்து கொண்டு வருகிறது.

ஹிந்தியைத் தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் நுழைந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் இந்த நிகழ்ச்சி, தற்போது தமிழில் மூன்றாவது சீஸனை எட்டியிருக்கிறது. ஒரு காலத்தில் புகழ்பெற்ற, ஆனால் இப்போது ஓய்ந்து போயிருக்கிற பிரபலங்கள்தான் இவர்களின் இலக்காக உள்ளது. போலவே சிறிய வட்டத்தில் பிரபலமாகியிருக்கும் இளம் தலைமுறையினரும் போட்டியாளர் வரிசையில் உள்ளார்கள்.

பிக்பாஸ் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய ஆராய்ச்சிகள் நடப்பதாக சொல்கிறார்கள். போட்டியாளர்களின் வயதையொட்டிப் பார்த்தால் ஒரு சராசரியான குடும்ப அமைப்பு போலவே போட்டியாளர்களின் வரிசை இருக்கும். வயதான குடும்பத் தலைவர், தலைவி, அதற்கு அடுத்து அண்ணன், அக்கா வயதில் இருக்கும் சிலர், பிறகு தங்கை, கடைக்குட்டி என்று ஒரு குடும்பத்தின் சாயலை அதில் பார்க்கலாம். இத்தகைய அமைப்பு பார்வையாளர்களையும் வயது வித்தியாசமில்லாமல் கவரும்.

மற்றவர்களின் வம்புகளை அறிவதிலும் அதைப் பற்றி உற்சாகமாகப் பேசுவதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக ஆர்வம் உண்டு என்பது வழக்கமான மரபு. ஆனால் பிக்பாஸ் போன்ற நவீன வம்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆண் பார்வையாளர்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது ஒருவகையில் ஆச்சரியம்தான்.

பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளர்களைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

மோகன் வைத்யா: ‘அப்பா’ என்று குடும்பத் தலைவராக அறியப்பட்ட பாடகர். இவர் மூன்றாம் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டு விட்டார். மற்றவர்களின் கேலியால் எளிதில் உணர்ச்சிவயப்பட்டு ‘முணுக்’ என்று அழுது விடும் குணாதிசயம் காரணமாக பார்வையாளர்களால் வெறுக்கப்பட்டார் எனலாம். போலவே பெண்களைக் கட்டியணைத்து அடிக்கடி முத்தமிட்டதாலும் பார்வையாளர்கள் இவரை வெறுத்தனர். எனவே மூன்றாம் வாரத்திலேயே இவர் வெளியேற வேண்டியிருந்தது.

பாத்திமா பாபு: பிக்பாஸ் வீட்டின் குடும்பத் தலைவியாக அறியப்பட்டவர், செய்தி வாசிப்பாளர், நடிகை என்று பல முகங்களைக் கொண்ட பாத்திமா பாபு அடிப்படையில் தலைமைப் பண்பு கொண்டவராகத் தெரிந்தார். எனவே தன்னை முன்நிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டினார். ஆனால் வனிதா செய்த ராவடிகள் மற்றும் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்ததாலும் இவர் தன்னைச் சுருக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. பிக்பாஸ் எதிர்பார்க்கும் வம்புத் தீனியை இவரால் அதிகம் தர முடியவில்லை. எனவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படும் முதல் போட்டியாளராகி விட்டார்.

வனிதா: நடிகையாக அறிமுகமாகி விரைவிலேயே ஓய்ந்து போனாலும் ஊடகங்களில் இவரது தனிப்பட்ட சர்ச்சைகளுக்காக விரும்பத்தகாத அளவில் புகழ்பெற்றவர். இவரிடமும் தலைமைப் பண்பு அதிகமிருந்தது. ஆனால் அதை தனது அடாவடித்தனமான பேச்சாலும் செய்கைகளினாலும் நிகழ்த்தி பார்வையாளர்களின் அதிகபட்சமான வெறுப்பைப் பெற்றார்.

இது போன்ற அடாவடிக் கதாபாத்திரங்கள் காரணமாகத்தான் நிகழ்ச்சியின் பரபரப்பும் விறுவிறுப்புமாக கூடுதலாக அமையும் என்பதால், பார்வையாளர்கள் ஒருபக்கம் வெறுத்தாலும், தயாரிப்பாளர்கள் இவரை உடனே வெளியேற்ற மாட்டார்கள் என்றுதான் பலரும் நினைத்தார்கள். முதல் சீஸன் காயத்ரி இதற்கு நல்ல உதாரணம். ஆனால் இரண்டாம் வாரத்திலேயே வனிதாவை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்கள்.

பார்வையாளர்களின் தேர்விற்கும் பிக்பாஸ் குழுவின் தேர்விற்கும் இடையே ஏராளமான இடைவெளியும் அரசியலும் இருப்பதாக கடந்த சீஸன்களில் பலரால் முணுமுணுக்கப்பட்டது. அந்த அவப்பெயரைப் போக்குவதற்காகவோ என்னமோ, இம்முறை பார்வையாளர்களின் மனநிலையையே நிகழ்ச்சியும் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.

இயக்குநர் சேரன்: பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில் சேரன் இருக்கிறார் என்கிற தகவலே பலரது ஆச்சரியத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளானது. கண்ணியமான திரைப்படங்களை உருவாக்கி, தேசிய அளவில் விருது பெற்றவருக்கு ஏன் இந்த வேலை என்று பலர் முணுமுணுத்தார்கள். ஆனால் அவருக்கு என்ன நெருக்கடியோ பாவம் என்பதும் சிலரது கருத்தாக இருந்தது. அவரது மென்மையான அணுகுமுறை காரணமாக, பிக்பாஸ் வீட்டில் அதிக நாட்கள் நீடித்து மற்றவர்களுக்கு கடுமையான சவாலை சேரன் அளிப்பார் என்று தோன்றுகிறது.

ரேஷ்மா: முதல் வாரங்களில் அதிகம் தென்படாத இவர், அது சார்ந்த புகார்கள் எழுந்த பின் தன்னை அதிகம் வெளிப்படுத்தத் துவங்கியிருக்கிறார். குறிப்பாக வனிதாவின் வெளியேற்றத்திற்குப் பின் இவரது குரலும் நடமாட்டமும் அதிகமாகியிருக்கிறது. தன்னை ‘நியூட்ரலாக’ இவர் அறிவித்துக் கொண்டாலும் புறம் பேசுவதிலும் தகவல்களை திரித்துக் கடத்துவதிலும் ஆர்வமுள்ள நபர் என்பதால் பார்வையாளர்களின் அதிருப்தியை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் தனிநபராக இரண்டு குழந்தைகளை ஆளாக்கும் பெண் என்கிற அனுதாபமும் இருக்கிறது.

லாஸ்லியா: தமிழகத்தைத் தாண்டி தமிழர்கள் வசிக்கும் இதர சர்வதேசப் பகுதிகளையும் அதிகம் கவர வேண்டும் என்கிற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நோக்கத்தினாலேயோ என்னவோ இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் செய்தி வாசிப்பாளர், இந்த நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இருக்கிற போட்டியாளர்களிலேயே வயதில் குறைந்தவர், அழகானவர் என்பதாலேயே இவருக்கு உடனே ஆர்மியெல்லாம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஓவியாவிற்காவது அவரது நல்லியல்புகளையும் குணாதிசயங்களையும் பார்த்து அவதானித்த பின்புதான் ஆர்மி உருவாகி அதன் எண்ணிக்கை பெருகியது. இவருக்கு உடனே பார்வையாளர்களின் ஆதரவு உருவாகியிருப்பது எப்படி பலமோ அப்படியே பலவீனமாகவும் அமையலாம்.

‘கழுவுகிற நீரில் நழுவுகிற ஆள்’ என்பது மாதிரியான பிம்பம் லாஸ்லியா குறித்து உருவாகியிருக்கிறது. இவருடைய தனித்தன்மை இன்னமும் கூட வெளிப்படவில்லை. அது நட்பா அல்லது காதலா என்று தெரியாத உறவில் கவினிடம் விழுந்திருக்கிறார். இதுவே இவருக்கொரு பின்னடைவாக அமையலாம். ஆனால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கக்கூடிய நபராக இவர் இருக்கக்கூடும்.

ஷெரீன்: இவர் வருகிறார் என்கிற தகவல் பரவியுடனேயே ஆர்மியைத் துவக்கி விட்டு பின்பு இவரின் புஷ்டியான தோற்றத்தைப் பார்த்து ஆர்மியிலிருந்து அவசரம் அவசரமாக ரிசைன் செய்தவர்கள் அதிகம். சாக்‌ஷியுடன் இணைந்து பின்பாட்டு பாடுவதில்தான் இவரது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இவரது தனித்தன்மையும் இன்னமும் வெளிப்படவில்லை.

சாக்‌ஷி: கவினுடன் காதலில் இணையும் இன்னொரு முக்கோணப் பிம்பம் சாக்‌ஷி. தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அடிப்படையில் ஒரு மாடல். காதல் சர்ச்சைகளிலும் கண்ணீரிலும் அடிக்கடி விழும் இவர் விரைவில் வெளியேறுவது இவரது மனநலத்திற்கு நல்லது.

மீரா: பிக்பாஸ் வீட்டின் இம்சை அரசி என்றே இவரைச் சொல்லலாம். வனிதாவின் ராவடி ஒரு ரகம் என்றால், இவர் செய்த அழும்புகள் தனி ரகம். எளிதில் கடக்கக்கூடிய அற்பமான விஷயத்தையும் பெரிதாக்கி ஊதி ஊதி வளர்ப்பது, எதிராளியுடன் உரையாடும் போது உணர்ச்சிவசப்பட்டு சட்டென்று எழுந்து நின்று வெறுப்பேற்றுவது, பெரும்பாலானோருடன் இணக்கமான உறவைப் பின்பற்றாதது போன்ற காரணங்களினால் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் தாண்டி பார்வையாளர்களின் அதிருப்தியையும் நிறையச் சம்பாதித்துக் கொண்டவர். சேரனுடன் எழுந்த பஞ்சாயத்து ஒன்றினால் இவர் வெளியேற்றப்பட்டார். இந்த வகையில் இவர் நாலாவது போட்டியாளர்.

முகின்: தனிப்பட்ட மியூசிக் ஆல்பங்களை உருவாக்கி மலேசியாவைத் தாண்டியும் சிறிய வட்டத்தில் பிரபலமாக உள்ளவர். துவக்க நாட்களில் அதிகம் வெளிப்படாத இவர், நட்பா காதலா என்று பிரித்தறிய முடியாத உறவை அபிராமியுடன் பேணுகிறார். நட்புதான் என்று இவர் அடித்துச் சொன்னாலும் அபிராமியின் லவ் இம்சையிலிருந்து விடுபட முடியவில்லை. கமலே கிண்டல் அடிக்குமளவிற்கு முன்கோபம் இவருடைய பலவீனமாக இருக்கிறது.

அபிராமி: துவக்க நாளில் இவரது அறிமுக வீடியோவைப் பார்த்த போது தனித்தன்மையுள்ள போட்டியாளராக இருப்பார் என்று தோன்றியது. கலாஷேத்ரா மாணவியும் கூட. ஆனால் துவக்கத்திலேயே கவினுடன் காதல் வயப்பட்டு பின்பு திசைமாறி இப்போது முகினுடன் காதல் வயப்பட்டிருக்கிறார். எந்த நேரத்திலும் தான் வெளியேற்றப்படலாம் என்கிற பீதியில் இருக்கிறார். அவரது கலவரம் விரைவில் உண்மை நிலவரமாகும்.

தர்ஷன்: பிக்பாஸ் வீட்டின் செல்லப் பிள்ளை எனலாம். ஏறத்தாழ அனைவரிடமும் இணக்கமாகச் செல்லும் இவருக்கு அங்கு எதிரிகளே இல்லை எனலாம். இருந்த ஒரே மென் பகைமையாளரான மீராவும் வெளியேறி விட்டார். அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கக்கூடிய போட்டியாளர். அனைவருமே கடுமையான போட்டியாளராக இவரைப் பார்க்கிறார்கள் என்பதே இவருக்கான தகுதி.

கவின்: பிக்பாஸ் வீட்டின் ரோமியோ என்று இவரை அழைக்கலாம். அந்தளவிற்கு காதல் சர்ச்சைகள் இவரைத் தொடர்கின்றன. அபிராமியுடன் தன் கணக்கைத் துவங்கியவர் இப்போது சாக்‌ஷி, லாஸ்லியா என்று இரட்டைக்குதிரைச் சவாரியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதனாலேயே அடிக்கடி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகின்றன. ‘மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்’ என்று கமலும் இவரை ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார். என்றாலும் நகைச்சுவையுணர்வும் இயல்பான குணமுமே இவரை இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.

சரவணன்: ஒரு காலத்திய தமிழ் சினிமா ஹீரோ. இந்த வீட்டில் வித்தியாசமான குணாதிசயத்தைக் கொண்ட ஆசாமி என்று இவரைச் சொல்லலாம். அமைதியான குணாதிசயமுள்ள இவர், மனதில் பட்டதைச் சுருக்கமான வார்த்தைகளால் ‘சுருக்’கென்று சொல்லி விடுகிறார் என்பதாலேயே இவரைப் பார்த்ததும் இதர போட்டியாளர்கள் தெறித்து ஓடுகிறார்கள். சாண்டி மற்றும் கவினுக்கு நண்பராகவும் காட்ஃபாதராகவும் இருக்கிறார். ‘ஆளை விட்டா போதும் சாமி” என்கிற மூடிலிலேயே இவர் இருந்தாலும் மக்களின் விருப்பத்தின் காரணமாக அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் வரும் வாரங்களில் இவர் வெளியேற்றப்படலாம்.

சாண்டி: பாரபட்சமில்லாமல் அந்த வீட்டில் அனைவராலும் விரும்பப்படுபவர் என்று சாண்டியைச் சொல்லலாம். (மதுமிதா மட்டும் ஒப்புக் கொள்ளமாட்டார்). இளம் தலைமுறையினருக்கேயுடைய துள்ளலும் குறும்புத்தனமும் நிறைந்தவர். அதனாலேயே கமல் உட்பட பார்வையாளர்களும் இவரை அதிகம் விரும்புகிறார்கள். என்றாலும் சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி நிற்பது, மற்றவர்களின் மனம் புண்படும்படி கேலி பேசி விடுவது போன்றவை இவருக்கு எதிரான விஷயங்களாக இருக்கும். கடைசி வாரங்கள் வரை தாக்குப் பிடிப்பார் என்று நம்பலாம்.

மதுமிதா: ஏறத்தாழ சாண்டியைப் போலவே நகைச்சுவையுள்ள ஜாங்கிரி. ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையும் கோபமும் இவருக்குப் பின்னடைவாக அமையக்கூடும். வனிதா இருந்த போது அவரது ஆக்கிரமிப்பைத் தாங்க முடியாமல் ஒதுங்கியிருந்த இவர், தற்போது அதிகம் பேசத் துவங்கியிருக்கிறார். உற்சாகமான போட்டியாளர் என்றாலும் இறுதி வரை தாக்குப் பிடிப்பது சிரமம்.

இப்போதைய சீஸனில் எவர் வெல்லுவார் என்று இப்போதே யூகிப்பது மிகவும் சிரமமான காரியம். ஏனெனில் சில புதிய போட்டியாளர்களையும் பிறகு அதிரடியாக அறிமுகப்படுத்துவார்கள். அவர்களின் தகுதியையும் பார்த்த பிறகுதான் யூகிக்க முடியும்.

என்றாலும் இப்போது இருக்கிற சூழலில் எவர் இறுதிக்கட்டத்தை நெருங்குவார் என்பதை உத்தேசமாகப் பார்க்கலாம். அதற்கு முன் முதல் மற்றும் இரண்டாம் சீஸனில் யார் வென்றார் என்பதையும் பார்ப்போம்.

சகிப்புத்தன்மைதான் இந்தப் போட்டியின் பிரதான தகுதி என்றாலும் உடல் வலிமை சார்ந்த விளையாட்டுக்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் இறுதிக் கட்டத்திற்கு நகர்பவர் இளைஞராகத்தான் பெரும்பாலும் இருக்க முடியும். முதல் சீஸனில் ஆரவ் பெற்றி பெற்றார் என்பதைக் கவனிக்கலாம். ஓவியாவுடன் காதலில் விழுந்து அது சார்ந்த சர்ச்சைகளையும் அவர் எதிர்கொண்டாலும் பிறகு சுதாரித்துக் கொண்டார். எவரையும் பகைத்துக் கொள்ளாத அவரது குணாதிசயம் இறுதிப் போட்டிக்கு வர உதவி செய்தது.

இரண்டாவது சீஸனில் ரித்விகா வெற்றி பெற்றார். இவரும் இளைஞர்தான். ஆரம்ப வாரங்களில் இவர் இருக்கும் இடமே தெரியவில்லை. பிறகு மெல்ல முன்னணிக்கு வந்தார். ‘தமிழ்ப்பெண்’ சர்ச்சை கவனம் பெற உதவியது. உடல்சார்ந்த தகுதியையும் தாண்டி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்த வகையில் மூன்றாவது சீஸனின் சமகால நிலைமையைக் கணக்கில் கொண்டால் சிலர் உடனே வெளியேற்றப்படுவதற்கும் சிறிது காலம் தாக்குப் பிடிப்பதற்குமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டிருக்கின்றன. அனைவரையும் அனுசரித்து தகுந்த ஆலோசனை சொல்லும் தந்தையின் ஸ்தானத்தில் உள்ள சேரன் மேலும் பல வாரங்களுக்கு தாக்குப் பிடிக்கலாம்.

கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாக இருக்கும் லாஸ்லியாவும் சில வாரங்களைத் தாண்டுவார். அவர் இந்நாள் வரை எவிக்‌ஷன் பட்டியலில் இடம் பிடிக்காமல் இருப்பதைக் கவனிக்கலாம். இதுவரை செல்லப் பிள்ளையாகக் காலம் தள்ளி விட்டாலும் இப்போதுதான் அவரைச் சுற்றி பகைமை மேகங்கள் சூழத் துவங்கியிருக்கின்றன. அப்படியே அவர் எவிக்‌ஷன் பட்டியலில் வந்தாலும் அவரது ஆர்மி அவரைக் காப்பாற்றி விடலாம்.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்போதைய நிலைமையின் படி சீஸன் மூன்றை வெல்லக்கூடிய போட்டியாளராக தர்ஷன் மட்டுமே தென்படுகிறார். எவரையும் பெரிதும் பகைத்துக் கொள்ளாத குணம், அனைவருடனும் இணக்கமாகச் செல்லும் தன்மை ஆகியவற்றைத் தாண்டி உடல்வலிமை சார்ந்த விளையாட்டுக்களை அநாயசமாக செய்யும் இளமையைக் கொண்டிருப்பது கூடுதல் பலம். வனிதாவுடன் அவசியமான நேரத்தில் சண்டையிட்டு ஹீரோவாகவும் மாறினார். சமீபத்தில் நடந்த ஹீரோ, வில்லன், ஜீரோ விளையாட்டில் பெரும்பான்மையோர் தர்ஷனையே கடுமையான போட்டியாளராக குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

எனவே, பிக்பாஸ் தமிழ் சீஸன் 3 பட்டத்தை தர்ஷன் வெல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com