Enable Javscript for better performance
நடிகர் சங்க நாடகம்!- Dinamani

சுடச்சுட

  
  vishal1xx

   

  நடிகர் சங்கத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியாது. இதில் வேடிக்கை என்னவென்றால் நடிகர் சங்கத் தேர்தல் எதற்காகத் திடீரென்று நடத்தப்பட்டது என்பதும் சர்வ நிச்சயமாக யாருக்கும் தெரியாது. ‘நடிகர் சங்கத்திற்கென ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்பதை முன்வைத்துதான் பொறுப்புக்கு வந்தோம். இன்னும் ஆறு மாதத்தில் கட்டடம் தயாராகிவிடும். அதுவரை பொறுத்திருக்கலாம். கட்டடம் முடிந்தபின்பு நாங்களே பொறுப்பிலிருந்து விலகத் தயாராக இருக்கிறோம்’ என்றார் பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர் கார்த்தி. ‘அவர்களால் கட்டடத்தைக் கட்டி முடிக்க முடியாது. அதற்குத் தேவையான பணமும் அவர்களிடையே இல்லை. ஆகவே, எங்களை வெற்றி பெறச் செய்தால், பணத்திற்கு ஏற்பாடு செய்து கட்டடத்தைக் கட்டி முடிப்போம்’ என்றார் சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த இயக்குநர் பாக்யராஜ். ஊடகங்களில் தலைப்புச்செய்தியாகவும், நேரலை நிகழ்வாகவும் களைகட்டிய நடிகர் சங்கத் தேர்தலில் கட்டடம் கட்டுவதுதான் முக்கியமான பிரச்னையா? அதற்காகத்தான் இரண்டு தரப்பாக பிரிந்து நின்று மோதிக்கொண்டார்களா?

  நிச்சயம் இல்லை. நடிகர் சங்கக் கட்டடத்தை முன்வைத்து நடத்தப்பட்ட தனிநபர்களுக்கு இடையேயான ஈகோ யுத்தம்தான், 30 லட்ச ரூபாய் செலவில் ஒரு தேர்தலை நடத்துவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்துவிட்ட தமிழ்ச் சமூகத்தில் நடிகர் சங்கம் எதைச் செய்தாலும் தலைப்புச் செய்தி என்பதால் அதுவே ஊடகங்களில் ஒரு வாரம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாகிவிட்டது.

  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 3000 மட்டுமே. இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 2000 பேர். 500 பேர் மட்டுமே மக்களுக்கு நன்கு அறிமுகமான, இன்னும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள். மற்றவர்களெல்லாம் துணை நடிகர்கள், மேடை நாடகக் கலைஞர்கள். இவர்களில் இன்னும் விடாப்படியாக நடிப்புத் தொழிலை மட்டும் கைவசம் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவானவர்கள். 1200 பேர் வாக்களித்து ஓர் அணியைத் தேர்ந்தடுக்கும் நிகழ்வுதான், உள்ளாட்சி மன்றத்தேர்தலை விட அதிகமான எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டது. தேர்தல் ஒத்திப்போடப்பட்டது. தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பது குறித்த விவாதங்கள் நடத்தப்ப்பட்டன. தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதற்காக நீதிமன்றக் கதவுகள் கூடத் தட்டப்பட்டன. காவல்துறையின் பாதுகாப்பு கோரப்பட்டது.

  இடைத்தேர்தல் போலவே இங்கேயும் ஏராளமான பணம் விளையாடியது. வறுமையில் வாடும் நாடக நடிகர்களுக்கு ஏதாவது பொருளுதவி செய்துவிட்டு, வாக்குக் கேட்பதில் தவறில்லை என்று அதை நியாயப்படுத்தவும் செய்தார், இயக்குநர் கே. பாக்யராஜ். நாங்களும் ஏராளமாக செலவு செய்திருக்கிறோம் என்று போட்டிக்கு வந்தது பாண்டவர் அணி. தமிழ்நாட்டின் மிக முக்கியமான, அரசியல் பின்புலமுள்ள சங்கமாக இருந்தாலும் நடிகர் சங்கப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சம்பளமோ வேறு கௌரவமோ கிடையாது என்பதும் ஆச்சர்யமான விஷயம். கோடிகளில் புரளும் நடிகர்களை உறுப்பினர்களாக கொண்ட ஒரு சங்கத்தில் முறையான பதவிகளோ, அதற்கான நியாயமான ஊதியமோ இல்லையென்பது அதிர்ச்சியான விஷயம்.

  நடிகர் சங்கத்திற்காக ஒரு மல்டிபிளக்ஸ் கட்டடம் கட்டுவது என்று முடிவெடுத்தால் திட்டத்தை தகுந்த வல்லுநர்களிடம் கொடுத்து, அதற்கான நிதியளிப்பதோடு நிறுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனமான விஷயம். ஆனால், இளம் நடிகர்கள் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு, ஆர்வக்கோளாறில் நேரடியாகக் களத்தில் இறங்கி கட்டடப்பணியை மேற்பார்வை செய்ததும், நிதி நெருக்கடியால் திணறியதும் செய்திகளாக வந்தன. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அல்லது கார்ப்பரேட் நிர்வாகி வசம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, கண்காணிப்பை மட்டும் மேற்கொண்டிருந்தால், கட்டடத்தை எப்போதே எழுப்பியிருக்கலாம். ஒரு சாதாரண விஷயத்தைப் பெரிதுபடுத்தி, போர்க்களமாக்கி, பிடிவாதமாக ஒரு தேர்தலை நடத்திக்காட்டினார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒட்டு மொத்த மக்களின் கவனத்தையும் திசை திருப்பி ஒரு தேர்தலை நடத்தி, ஏகப்பட்ட நேரமும், உழைப்பும், பணமும் விரயமாகாமல் தடுத்திருக்கலாம். 

   

  சரி, நடிகர் சங்கம் இதுவரை செய்ததும் செய்ய வேண்டியதும் என்னெவென்பதைப் பார்ப்போம். தென்னிந்திய நடிகர் சங்கம், 1952ல் சென்னையில் தொடங்கப்பட்டாலும் 1977 வரை அதற்கென்று சொந்தமாக கட்டடம் எதுவுமில்லை. நடிகராக இருந்து, முதல்வரான எம்ஜிஆர், நடிகர் சங்கத்திற்கென திநகரில் இரண்டாயிரம் சதுர அடி கொண்ட இடத்தை ஒதுக்கீடு செய்தார். அதில் நாடகம் அரங்கேற்றம் செய்வதற்காக ஓர் அரங்கு கட்டப்பட்டது. பின்னர் சிவாஜி கணேசன் நடிகர் சங்கத் தலைவரானபோது ஏகப்பட்ட ஈகோ யுத்தங்கள். 1987ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இடையில் ஏராளமான கடன்களில் சிக்கிக்கொண்டு திணறிய சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த். ரஜினி, கமல் போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து சிங்கப்பூர், மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி, 4 கோடி ரூபாய் வசூலித்து, 2 கோடி ரூபாய் கடனை அடைத்தார்.

  2010ல் நடிகர் சங்க விழாவில் கலந்துகொண்டு சங்கத்தின் மூத்த நடிகைகளைப் பாராட்டி பேசும்போது ரஜினி, நடிகர் சங்கத்திற்கென மல்டிபிளக்ஸ் கட்டி, அதன் மூலம் வருவாயைப் பெருக்குவது குறித்துப் பேசினார். நடிகர் சங்கக் கட்டட வளாகத்திற்குள் ஒரு பயிற்சிக் கல்லூரி, கலையரங்கம், சினிமாக் கலைஞர்களுக்குத் தேவையான அனைத்துத் தொழில்நுட்பங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியான வணிக வளாகமாக இருக்கவேண்டும், எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டுப் பணியாற்றினால் குறுகிய காலத்திற்குள் அதைச் செய்துவிடலாம் என்றார். அப்போது விவாதத்திற்கு வந்த திட்டம், செயல்வடிவம் பெறுவதற்கு சில ஆண்டுகள் ஆயின. இன்று 9 ஆண்டுகளைக் கடந்து இன்னும் தொடர்கிறது. 

  புதிய திறமையாளர்களைக் கண்டெடுப்பதும், அவர்களை ஊக்குவிப்பதும் உலகம் முழுவதும் நடைபெறும் விஷயம். ஹாலிவுட், பாலிவுட்டைச் சேர்ந்த பல்வேறு சினிமா சங்கங்கள், கூட்டமைப்புகள் இதில் ஆர்வம் காட்டுகின்றன. புதிதாக நடிக்க வருபவர்களின் விபரங்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிடுவது, அவர்களுக்கான ஆலோசனைகள் தருவது, நடிப்புக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது என பல்வேறு பணிகளில் மூத்த நடிகர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இவையெல்லாம் அரிதான காட்சிகள். தமிழ் சினிமாக் கலைஞர்கள் பற்றி முழுத் தொகுப்பு இதுவரை சாத்தியப்படவில்லை. அதற்கான எந்தவித முன்னெடுப்புகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் இதுவரை செய்ததில்லை. 

  நாடகப் பிதாமகன் சுவாமி சங்கரதாஸ் சுவாமிகளின் உருவம் பொறித்த பெயர்ப்பலகையைத் தாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பல உறுப்பினர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் பங்களிப்புள் தெரியாது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் நாடக மேடையை வழிநடத்திய சங்கரதாஸ் சுவாமிகளின் ஆரம்ப காலப் படைப்புகளே தமிழ் சினிமாவின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தன. அவரது நாடகங்களே, சினிமா வடிவம் பெற ஆரம்பித்தன. ஏறக்குறைய 50 நாடகங்களை இயற்றியிருந்தாலும் அவற்றில் 14 மட்டுமே கிடைத்திருக்கின்றன. சங்கரதாஸ் பற்றிய சிறுபுத்தகம் ஒன்று வெளிவந்திருக்கிறது. நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது. 

  தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத ஆளுமைகளான தியாகராஜ பாகவதர், என். எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, எம். ஆர் ராதா போன்றவர்கள் குறித்து புத்தகங்கள் வெளிவந்திருக்கிறன. 2010ல் எம்.கே.டி என்னும் தலைப்பில் மாயவரம் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு சிறிய புத்தகமாக நான் எழுதியபோது அவரை இன்னும் நினைவில் வைத்திருக்கும் ரசிகர்களால் மட்டுமே கொண்டாடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகவதரின் நூற்றாண்டு நினைவை ஒட்டி விவாதங்கள் எழுந்தபோது, நடிகர் சங்கம் ஆர்வம் காட்டவில்லை. பாகவதரின் நினைவைப் போற்றும்வகையில் ஒரு பெரும் விழாவை நடிகர் சங்கம் முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தபோதும், நடிகர் சங்கத்திடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. பாகவதர் மட்டுமல்ல சின்னப்பா, எம். கே ராமசாமி என நடிப்பு ஆளுமைகளின் நினைவைப் போற்றும் வகையில் எந்தவொரு பங்களிப்பையும் நடிகர் சங்கம் இதுவரை செய்ததில்லை.

  நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் என்னும் திட்டதை விஷால் பதவிக்கு வந்ததும் செயல்படுத்த ஆரம்பித்தார். நிதி நெருக்கடியின் காரணமாக அதைத் தொடர்வதில் தற்போது சிக்கல் எழுந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்தந்தைகளின் கைப்பிடிக்குள் நடிகர் சங்கம் முழுவதுமாக சிக்கியிருக்கிறது. கணக்கு, வழக்கின்றி கல்வித்தந்தைகள் உதவி செய்வதால் நடிகர் சங்கம் அவர்களது தலையீட்டை ஆதரிக்கிறது. அதை நியாயப்படுத்தி வெளிப்படையாக பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 

  இது தவிர நடிகர்களின் அரசியல் ஆசையும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகளும் நடிகர் சங்கத்தில் ஏராளமான பிளவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பாசத்தலைவனுக்கொரு பாராட்டு விழா என ஒவ்வொரு முறையும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதல்வராக வரும்போதெல்லாம் பாராட்டு விழாக்களை நடத்தி சலுகைகளை பெற்றுக்கொள்வதில் நடிகர் சங்கம் எப்போதும் முன்னுக்கு நின்றிருக்கிறது. நடிகர் சங்கத்தைப் போல் பெருமளவு சலுகைகளைப் பெற்ற சங்கமாக வேறு ஒன்றைக் குறிப்பிட முடியாது. தண்ணீருக்காக தமிழ்நாட்டு மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒட்டுமொத்த ஊடகக் கவனத்தையும் பெறும் தென்னிந்திய நடிகர் சங்கம் தன்னுடைய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கடைப்பிடித்து, தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai