‘அருவி’ நயன்தாரா!

‘அருவி’ நயன்தாரா!

நயன்தாராவுக்காகவே கதை எழுதும் இயக்குநர்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளார்கள்..

பொதுவாக எந்தவொரு நடிகையும் பார்வையாளர்களால் இரண்டு விதங்களில் நினைவுகூரப்படுவார். ஒன்று அழகிற்காக. மற்றொன்று, நடிப்புத் திறமைக்காக. நயன்தாராவோ வசீகரமான அழகு, நடிப்புத் திறமை என இரண்டு அம்சங்களும் கொண்ட பிரத்யேகமான நடிகை. ஐயா முதல் ஐரா வரையிலான நயன்தாராவின் தமிழ்த் திரையுலக வாழ்க்கை மகத்தான ஒன்று. 

‘நடிப்புத்துறை இழிவானது’ என்று கருதப்பட்ட முந்தைய காலக்கட்டத்தில் தெருக்கூத்துகளில் ஆண்களே பெண் வேடம் அணிந்து ‘ஸ்திரீபார்ட்டாக’ நடிக்க வேண்டியிருந்தது. பிறகு நிலைமை மெல்ல மாறியது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் நடிக்க முன்வந்தார்கள். கூத்தும் நாடகமும் சினிமாவாகப் பரிணமித்த பிறகு புகழிற்காகவும் பணத்திற்காகவும் பல பெண்கள் நடிப்புத்துறைக்குள் நுழைந்தார்கள். அவர்களில் வெகு சிலர் சிறந்த நடிகைகளாகவும் திகழ்ந்தார்கள்.

ஆனால் இன்று நிலைமை வேறு. பணக்காரப் பின்னணியில் இருக்கும் இளம் பெண்கள், அடிப்படையான கலைத்திறன் ஏதுமில்லாமல் புற அழகை மட்டுமே நம்பி புற்றீசல் போல கிளம்புகிறார்கள். இந்தக் கூட்டத்தில் பலர் வந்த வேகத்தில் உடனே மறைந்து போகிறார்கள்.

நாயகர்களோடு ஒப்பிடும் போது, திரைத்துறையில் நாயகிகளின் ஆயுள் மிகக்குறைவு. அழகு, இளமை, சிறந்த வாய்ப்புகள் போன்றவை நீடிக்கும் வரைதான் அவர்களால் திரைத்துறையில் இயங்க முடியும். இவற்றில் சிறிய சறுக்கல் நிகழ்ந்தாலும் உடனே காணாமல் போக வேண்டியதுதான். 

ஆனால், தமிழ்த் திரையுலகில் எத்தனை நடிகைகள் வந்து குவிந்தாலும், தனித்தன்மையுடன் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பிரகாசிக்கும் நடிகையாக உள்ளார்,  நயன்தாரா. இவர் திரைத்துறைக்கு அறிமுகமானது 2003-ம் ஆண்டு. அதுவும் மலையாளத்தில். சத்தியன் அந்திக்காடு இயக்கிய ‘மனசினக்கரே’ என்பதுதான் நயன்தாராவின் முதல் திரைப்படம்.

பதினாறு ஆண்டுகள் கழித்து, இன்றும் கூட பார்வையாளர்கள் மற்றும் இயக்குநர்களின் விருப்பத்துக்குரிய நெ.1 நடிகையாக ஒருவர் நீடிப்பதென்பது எளிதான விஷயமில்லை. நடிகைகள் அரிதாக இருந்த முந்தைய காலத்தில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டாராக’ இருந்தது கூட ஆச்சரியமில்லை. ஆனால் ஏராளமான இளம் பெண்கள் குவிந்து வாய்ப்பிற்காக முட்டி மோதும் சமகாலத்தில் தனக்குரிய இடத்தை ஒரு நடிகை தொடர்ந்து தக்கவைத்திருப்பதும் தன்னுடைய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பதும் உண்மையிலேயே ஒரு சாதனைதான். இந்தச் சாதனைக்கு முற்றிலும் தகுதியானவர் நயன்தாரா.

நயன்தாராவின் கலைப்பயணமும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, அழகான அருவியைப் போன்ற உயரமும், நடுநடுங்க வைக்கும் அதலபாதாளத்தின் பயங்கரத்தையும் கொண்டது. இவர் நடித்ததில் பல வெற்றிப்படங்கள் இருந்தாலும் தோல்விப் படங்களும் கலந்தே உள்ளன. போலவே அவருடைய வாழ்க்கையிலும் சிலபல காதல்கள், தோல்விகள், சர்ச்சைகள், துரோகங்கள், ஏமாற்றங்கள் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருந்தன. வேறெந்த நடிகைக்காவது இது நிகழ்ந்திருந்தால், அவர் திரைத்துறையிலிருந்து காணாமல் போயிருக்கக்கூடும்.

ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் ஊடகங்களில் நயன்தாரா பெரிதாக எதையும் பேசியதில்லை. அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. தன்னுடைய படங்களில் கவனம் செலுத்துவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். ராதாரவி தொடர்பான சமீபத்திய சர்சையிலும் கூட ஒரு கடிதத்தின் மூலம் தன்னுடைய கண்டனத்தைக் கச்சிதமாகவும் அழுத்தமாகவும் தெரிவித்துவிட்டு ‘சரி.. என் வேலையைக் கவனிக்கப் போகிறேன்’ என்றே அந்தக் கடிதத்தை முடித்திருக்கிறார்.

மாடலிங் உலகில் இருந்து மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனாலும் நயன்தாரா அதிகம் நடித்ததும் அதிகப் புகழ்பெற்றதும் தமிழ்த் திரையுலகில் தான். சேரநாட்டிலிருந்து எந்தவொரு வசீகரம் தென்பட்டாலும் வாரி அணைத்துக் கொள்ளும் தமிழகம், இவரையும் அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டது. என்றாலும் தமிழிற்கு அடுத்தபடியாக மலையாளம், தெலுங்கு, ஒரேயொரு கன்னடத் திரைப்படம் என்று ஏறத்தாழ அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இவரது வெற்றிக்கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. ‘தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை’ என்று நயன்தாராவைப் பற்றி கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட சமீபத்திய பட்டியலில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.  

கறாரான விமரிசன நோக்கில் நயன்தாராவை மிகச்சிறந்த நடிப்புத்திறன் வாய்த்தவர் என்று சொல்லி விட முடியாதுதான். ஆனால் தன்னுடைய பாத்திரங்களுக்கு நியாயம் செய்ய அவர் எப்போதுமே தவறியதில்லை. ஹாலிவுட் நடிகையைப் போல கவர்ச்சிகரமான நீச்சலுடையில் வந்து ரசிகர்களை மூச்சுத்திணற வைத்த ‘பில்லா’ (2007) திரைப்படமாக இருந்தாலும் சரி, இராமாயணத்தை ஒட்டிய தெலுங்குத் திரைப்படமான ‘ஸ்ரீ ராம ராஜ்யத்தில்’ (2011)  சீதாவாக நடித்த போதும் சரி, அந்தந்த பாத்திரங்களுக்கேற்ப கச்சிதமாக பொருந்திப் போனார். ஸ்ரீ ராம ராஜ்யம்’ திரைப்படத்திற்காக தெலுங்கு திரைத்துறையின் உயரிய விருதான ‘நந்தி விருது’ முதல் ‘பிலிம்பேர் விருது’ வரை பல விருதுகளைப் பெற்றுள்ளார். ‘அறம்’ ‘நானும் ரவுடிதான்’ ‘ராஜா ராணி’ ‘புதிய நியமம்’ (மலையாளம்) போன்ற திரைப்படங்களுக்காக இவர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீள்கிறது. தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதையும் பெற்றுள்ளார்.

‘ஐயா’ (2005) திரைப்படத்தின் மூலம், சரத்குமாரின் நாயகியாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, அடுத்தத் திரைப்படத்திலேயே ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக (சந்திரமுகி) நடிக்குமளவிற்கு உயர்ந்தார். சிம்பு, தனுஷ் போன்ற இளம்தலைமுறை நடிகர்களுடனும் இவரது பயணம் தொடர்ந்தது. வெளிவரப்போகிற ‘Mr.லோக்கல்’ என்கிற படத்தில் சிவகார்த்திகேயனுடனும் அட்லி இயக்கும் படத்தில் விஜய்யுடனும் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக இயக்கும் படத்தில் மீண்டும் ரஜினியுடனும் நடிப்பதில் இருந்து நயன்தாராவின் வசீகரமும் சந்தை மதிப்பும் இன்னமும் மங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு கட்டத்தில், வழக்கமான நாயகி மற்றும் கவர்ச்சியான நடிகை என்னும் பிம்பத்தில் இருந்த நயன்தாராவின் பாதை சமீபகாலமாக மாறிவிட்டது. கதாநாயகியை மையப்படுத்தும் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளார். இவருக்காகவே கதை எழுதும் இயக்குநர்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளார்கள். கதாநாயகர்கள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்த் திரைத்துறையில் ஒரு நாயகி இப்படி முக்கியத்துவம் பெறுவது அரிதானது.

ஹிந்தியில் வித்யாபாலன் நடித்திருந்த ‘கஹானி’யின் ரீமேக்கான ‘அனாமிகா’ முதல் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, சமீபத்திய ‘ஐரா’ வரை (இதில் முதன்முறையாக இரட்டை வேடம்) நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் வெற்றி வரிசை தொடர்கிறது. அஜித் நடித்து சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திலும் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் நயன்தாராவிற்கு தரப்பட்டிருந்தது.

ஏறத்தாழ சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். நடிப்புத்துறையும் அதில் விதிவிலக்கல்ல. இந்தச் சூழலில் ஒரு பெண் அந்தத் துறையில் முட்டி மோதி உயரத்தை அடைந்து, தனக்கான பிரத்யேகமான இடத்தைத் தக்க வைத்திருப்பதென்பது ஒரு சிறந்த முன்னுதாரணம். அப்படியொரு சிறந்த அடையாளமாகத் திகழ்கிறார் நயன்தாரா.

‘டயானா மரியம் குரியன்’ என்கிற இயற்பெயரைக் கொண்ட, சிரியன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவருக்கு, சினிமாவிற்காக ‘நயன்தாரா’ என்ற பெயர் சூட்டப்பட்டது. ‘நட்சத்திரத்தின் கண்கள்’ என்று அர்த்தமாம். தென்னிந்தியத் திரையுலகின் துருவ நட்சத்திரமாக நயன்தாரா நினைவுகூரப்படுவார் என்பதால் இது பொருத்தமான பெயர்தான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com