நகைச்சுவையின் மூலமாகவே மாபெரும் துயரக் கதைகளை சொல்ல முடியும்! ராபர்த்தோ பெனிகினி

மனிதநேயத்தை ஆழமாக வலியுறுத்தும் திரைப்படங்களின் வரிசையில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும் திரைப்படம் Life is beautiful.
நகைச்சுவையின் மூலமாகவே மாபெரும் துயரக் கதைகளை சொல்ல முடியும்! ராபர்த்தோ பெனிகினி

மனிதநேயத்தை ஆழமாக வலியுறுத்தும் திரைப்படங்களின் வரிசையில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும் திரைப்படம் Life is beautiful. யூத வதைமுகாமில் சிக்கியிருக்கும் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற மரணித்தலுக்கும், உயிர்ப்பித்திருப்பதற்கும் இடையிலான ஊசலாட்டத்தை இத்திரைப்படம் நெகிழ்வூட்டும் வகையில் பதிவு செய்திருக்கிறது. இத்திரைப்படத்தின் நாயகரும், இயக்குனருமான ராபர்த்தோ பெனிகினி தனது இயல்பான நகைச்சுவையின் வாயிலாகவே அந்த கொடும் வரலாற்று தருணங்களை அணுகி நம் மனதில் பெரும் துயரத்தை ஏற்படுத்திவிடுகிறார். மரணத்தின் விளிம்பில் நின்றிருக்கும் போதிலும், தனது மகனுக்காகதான் அனுபவிக்கின்ற ஒட்டு மொத்த சித்திரவதைகளையும், நகைச்சுவைக் கதையாகச் சொல்லும் மனிதனாக இத்திரைப்படத்தில் பெனிகினியின் கதாப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. அவரது வெகுளித்தனம் படம் நெடுக நம்மை பல்வேறு உணர்ச்சிகளுக்கு உட்படுத்துகிறது.

'இதுவொரு எளிமையான கதைதான் என்றாலும், சொல்வதற்கு அத்தனை எளிமையான ஒன்றல்ல” என்ற வரிகளுடன் துவங்கும் இத்திரைப்படம் இறுதியில் மனதில் பெரும் பாரத்தை ஏற்படுத்திவிடுகிறது. சாவு என்பது நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் அதன் முன் நின்று புன்னகைக்கும் பெனிகினியின் கதாப்பாத்திரம் உலக சினிமாவில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று. 1997ம் வருடத்தில் வெளியான life is beautiful பார்வையாளர்களிடத்தில் பலத்த அதிர்வுகளை உருவாக்கியதோடு மட்டுமல்ல, அவ்வருடத்தின் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்று பெரும் கவனிப்பை பெற்று நிற்கிறது. ராபர்த்தோ பெனிகினியிடம் திரைப்பட ஆர்வலர் ஆந்த்ரேயன் சில திரைப்பட மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் மொழியாக்கம் இது.   

Life is Beautiful  திரைப்படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பு, உங்களது துவக்க கால கலை உலக வாழ்க்கைக் குறித்தும், நீங்கள் எப்படி ஒரு நகைச்சுவை நடிகனாக உருவானீர்கள் என்பதையும் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் துஸ்கானியில் வளர்ந்தவர், அதோடு என் கணிப்பு தவறில்லை என்றால், சர்க்கஸில் நீங்கள் வேலை செய்திருக்கிறீர்கள். உங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள முடியுமா?

நன்றி. நன்றி ஆந்த்ரேயன். எனக்கு இவ்விடத்தில் இத்தகைய வாய்ப்பை கொடுத்ததற்காக எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மிகுந்த நன்றிகள் ஆந்த்ரேயன்! அப்புறம், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

ஆமாம். நான் நலமாக இருக்கிறேன். நான் இங்கு இருப்பதை மிகவும் விரும்புகிறேன். ஏனெனில், லண்டனில் எனது முதல் கேள்வி பதில் நிகழ்வு இதுதான். அதனால் மிகுதியான பதற்றத்தில் இருக்கிறேன். எனது இருதயம் கொந்தளிப்பில் இருக்கிறது. உணர்வற்ற நிலையில் இருக்கிறேன். இது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பரிசைப் போன்றது. உங்கள் எல்லோருக்கும் எனது நன்றிகளை மீண்டுமொருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி. ம்ம்ம். இப்போது உங்களது கேள்விக்கு பதிலளிக்க விரும்புகிறேன். ஆனால், உங்களது கேள்வியை மறந்து விட்டேன்.

நகைச்சுவை நடிகராக நீங்கள் உருவெடுத்த பயணத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ளுங்கள். நன்றி. இது மிக மிக எளிமையானதொரு கேள்வி! இதுவொரு நல்ல கேள்வியும்கூட! எனக்கு தெரிந்த எனது ஒட்டுமொத்தமான வாழ்க்கையை முதன்மைப்படுத்தும் கேள்வி இது. எனினும், என்னை இங்கு அழைத்ததற்கு எனது ஆழ்மனதில் இருந்து உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது அளவுகடந்த நேசத்தை வெளிப்படுத்தும் மக்களின் எதிரில் நின்றிருப்பது பெரிதும் நெகிழ்வூட்டுகிறது. உங்களுக்கு நன்றிகள். என்னால் உங்களது அதீத அன்பை உணர முடிகிறது. உண்மையாகவே நான் கொடுத்து வைத்தவன். நானும் எனது அன்பை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் மடங்காக எனது அன்பை பெரிதுப்படுத்திக் கொடுக்கிறேன். நன்றிகள். இப்போது, நான் எப்படியொரு நகைச்சுவை நடிகராக உருவானேன். அதானே?

ம்ம்ம். துஸ்கானியில் மிக ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். எனது தாயாரும், தந்தையும் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்கள். எனினும், எனது குழந்தைப் பருவம் எவ்வித புகார்களும் அற்றதாகத்தான் இருந்தது. எனக்கு அமைந்திருக்கின்ற குழந்தைப் பருவத்துக்கு என்றென்றும் நான் நன்றியுடன் இருப்பேன். ஏனெனில், அதில் மகிழ்வும், மனிதநேயமும்தான் நிறைந்திருந்தது.

என் தந்தை எப்போதும் என்னுடன் இருக்கவில்லை. அவர் வேலைத் தேடி வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்தபடியே இருந்தார். எனக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள். அதோடு, எங்கள் வீட்டில் இருந்த ஒரேயொரு படுக்கையில் நானும், எனது சகோதரிகளும், தாயாரும் ஒன்றாக உறங்குவோம். எனது குழந்தைப் பருவம் முழுவதும் இந்த நான்கு பெண்களுடன்தான் என் உறக்கத்தை கழித்திருக்கிறேன். அது மிக மிக அற்புதமானது! ஒற்றைய படுக்கையில் ஆறு நபர்கள். என்னால் அந்த தினங்களைத் தெளிவுற நினைக்க முடிகிறது. அற்புதமான நினைவுகள். தெளிவுற துலங்கும் அற்புத ஞாபகங்கள்.

அதன்பிறகு, நான் மிகச் சிறியவனாக இருந்தபோதே, நாங்கள் வேறொரு நகரத்திற்கு இடம்பெயர்ந்துச் சென்றோம். அந்த நகரத்தில்தான் முதல்முதலாக பள்ளியில் சேர்ந்தேன். எனது தாயார் மாயாஜால நிபுணர்களையும், மாந்த்ரீகவாதிகளையும் என்னிடம் அழைத்து வந்தார். ஏனெனில், நான் மிகவும் கோரமான உருவம் கொண்டவனாகவும், எளிதில் சகித்துக்கொள்ள இயலாத வகையிலும் இருந்தேன். அதனால் என்மீதிலான சிலருடைய மந்திர பிரயோகங்கள் தேவையென எனது தாயார் கருதியிருந்தார் – இது உண்மைதான் – நினைத்துப் பார்க்கவே அருவருப்பூட்டும் மருந்து ஒன்றை ஓராண்டு காலம் நான் உட்கொள்ள வேண்டும் என்று என் தாயார் என்னிடத்தில் பணித்தார். அதன்பிறகு, மிக நீண்ட உயரம் கொண்ட ஒரு மதபோதகர் எங்கள் வீட்டிற்கு வந்தார். பல்வேறு மருந்து மாத்திரைகளை உண்டு, சோர்வுற்றிருந்த என்னிடம், “ஏதேனும் அசெளகர்யமாக உணருகிறாயா? சிறுவனே?” என்று கேட்டார். அவருக்கு சுவாரஸ்யமான பதிலொன்றை தர வேண்டும் என்பதற்காக நானும், “ஆமாம், நான் நிறைய உணர்வு நிலைகளுக்கு ஆட்பட்டிருக்கிறேன்” என்றேன். உடனே அவர் எனது தாயாரிடம், “இந்த சிறுவன் இப்போது என்னுடன் வரப் போகிறான். அவனை நான் மதம் தொடர்பான பள்ளி ஒன்றில் சேர்க்கப் போகிறேன். இவனை ஒரு மிகச் சிறந்த மதபோதகராக மாற்றுவதே எனது பணி” என்றார். அதனால், வெறும் பனிரெண்டே வயது நிரம்பியிருந்த நான், அப்போதே புளோரென்ஸில் இருந்த மதபோதகருக்கான பள்ளியில் சேர்ந்திருந்தேன்.

புகழ்மிக்க சொற்றொடர் ஒன்று இருக்கிறது. ”சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். ஆனால், அதனை மட்டும்தான் அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்”. இந்த சொற்றொடர் எனது மனதில் மிக நீண்ட காலம் தங்கியிருந்தது.

என் வாழ்க்கை இவ்வகையில் பயணித்துக் கொண்டிருக்க, 1964-ம் வருடத்தில் புளோரென்ஸில் மிகப் பெரிய வெள்ளம் ஒன்று வந்திருந்தது. அந்த காட்சியை நான் துலக்கமாக நினைவில் வைத்திருக்கிறேன். ஏனெனில் அதுவொரு பெலினியின் (Felini) திரைப்பட காட்சித் துணுக்கைப்போல இருந்தது. எங்கும் நிறைந்திருக்கும் நீர் மற்றும் மனிதர்களின் கதறல்கள். அப்போது நான் மதப் பள்ளியில் இருந்து நீரில் நனைந்தபடியே என் வீடு நோக்கி ஓடினேன். அந்த தருணத்தை எனது விடுதலைக்கான ஒரு பயணமாக நான் கருதினேன். மிக விரைவாக ஓடி எனது வீட்டை அடைந்த நான், எனது தாயாரை கட்டி அணைத்துக்கொண்டு, “இதற்கு மேலும் எனக்கு உணர்வதற்கு எதுவுமில்லை” என்றேன்.

அந்த சமயத்தில், எனது தாயார் மேலும் வறுமையில் பீடிக்கப்பட்டிருந்தார். குதிரைகள் ஒருபுறம் பிணைக்கப்பட்டிருந்த அற்புதமான அறையில் நாங்கள் தங்கியிருந்தோம்.

குதிரைக் கொட்டகை?

இல்லை. மிகத் துல்லியமாக அதுவொரு குதிரைக் கொட்டகை இல்லை. நாங்கள் குதிரைகளுடன் சேர்ந்து உறங்கவில்லை. எங்களது அறை ஒரு குதிரைக் கொட்டகையின் மிக அண்மையில் இருந்தது. எங்களது அறையின் ஜன்னல் வழியே எங்களால் குதிரைக் கொட்டகையை பார்க்க முடிகின்ற அளவில் அவ்வறை இருந்தது. எனினும், அவ்வறையை இன்னமும் நான் நினைவு வைத்திருக்க காரணம், அவ்வறை மிகமிக குளிர்ச்சி மிகுந்ததாக இருந்தது. என்னால் அந்த குளுமையை மிகத் துலக்கமாக நினைவுக்கூர முடிகிறது.    

அதன்பிறகு, ட்ரோலின் என்றொரு சர்க்கஸ் இருந்தது. அதனுள் சென்று காட்சிகளை பார்க்கும் அளவுக்கு என்னிடம் அப்போது பணம் இல்லை. என்றாலும் மாலைவேளையில் மெல்ல எவருக்கும் தெரியாமல் அந்த சர்க்கஸின் உள்ளே ஊடுருவி செல்வேன். மாயாஜால கலைஞர்களையும், கோமாளிகளையும், விலங்கையும் அதோடு, அந்தரத்தில் தொங்கும் கலைஞர்களையும் பார்ப்பேன். அது மிக மிகச் சிறியதொரு சர்க்கஸ். அவர்களிடம் ஒரேயொரு சிங்கம் மட்டும்தான் இருந்தது. அந்த மாயாஜால வித்தைக்காரர் தினமும் மாலையில் வந்து சர்க்கஸை இலவசமாக பார்க்கும்படி என்னிடத்தில் தெரிவித்தார். இறுதியில், ஒருநாள் என் அம்மாவிடம், “இந்த சிறுவனை நான் வைத்துக்கொள்கிறேன். எனக்கொரு உதவியாளர் தேவை” என்றார். எனக்கு அது மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. என்னை விடவும் எனது அம்மாவுக்கு இந்த அழைப்பு பெரும் மகிழ்வைக் கொடுத்தது. ஏனெனில், உணவு பங்கீட்டில் ஒரு தலை இதனால் குறைந்துவிடும் அல்லவா?. எனது அம்மா முகம் மலர்ந்து, “போ, ராபர்த்தோ, போய் வா” என்றாள்.

நான் முழு நிறைவுடன் இருந்தேன் – முழுமையாக. அதோடு, அந்த வித்தைகள் மிக எளிமையானதாகவும் இருந்தன. ஒவ்வொரு மாலையும் மாயாஜால வித்தைக்காரரின் உதவியாளனாக செல்லும் நான், அவரது சொற்களால் வசியம் செய்யப்பட்டதைப்போல நடந்துக்கொள்ள வேண்டும். அவர் சொல்லுவார், ”நீ இப்போது சஹாரா பாலை நிலத்தில் இருக்கிறாய். இங்கு வெப்பம் மிக கடுமையானதாக இருக்கிறது”. உடனடியாக எனது உடைகளை ஒவ்வொன்றாக கழற்றும் வேலையில் ஈடுபடுவேன். மேலாடைகளை அகற்றிவிட்டு, உள்ளாடைகளை நெருங்கும் சமயத்தில் அவர் மீண்டும் என்னிடத்தில், “ஓஹ்! இப்போது நீ வடதுருவ பகுதிக்குள் வந்துவிட்டாய்” என்பார். உடனடியாக நான் அவைகளை மீண்டும் அணிந்துகொள்ள துவங்குவேன். இது மிகவும் முட்டாள்தனமான செய்கைதான் என்றாலும், அந்த காலத்தில் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக கொண்டாடப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இது இருந்தது. மக்கள் இந்த வேடிக்கையை பெரிதும் விரும்பினார்கள். கூடுதலாக, நெருப்பை வைத்து செய்யும் வேடிக்கை ஒன்றிலும் நான் ஈடுபட்டேன். விநோதமான பொடியையும், கிரீமையும் உபயோகித்து எனது கரங்களில் தீ மூட்டினால், எனது கரங்களில் தீப் பற்றிக்கொள்ளாது. ஆனால், ஒருமுறை அந்த மாயாஜால வித்தைக்காரர் இந்த செய்கையை தவறாக பிரயோகித்ததில் எனது கைகளில் உண்மையாக தீ படர்ந்துவிட்டது. இப்போதுக்கூட அந்த நெருப்பு என் கையில் உண்டாக்கிய தழும்புகள் இருக்கின்றன. 

மீண்டுமொருமுறை தப்பித்தல் நிகழ்ந்தது. நான் சர்க்கஸில் இருந்தும் விடுபட்டேன். அப்போது எனது அம்மா மீண்டும், “இனியும் இதனை தொடராதே! நிறுத்து!” என்றார்.

முதலில் நீரினால் மீட்கப்பட்ட நான், இந்த முறை நெருப்பினால் காப்பாற்றப்பட்டேன். அப்போது பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் என்று நினைக்கிறேன். பெண்கள் பள்ளியில் ஆசிரியராக இருந்த மற்றுமொரு மதகுருவை அத்தருணத்தில் சந்தித்தேன் – இத்தாலியில் கத்தோலிக்க மதகுருமார்கள் எங்கும் நிறைந்திருந்தார்கள் – அவர் செயலக பள்ளியில் சேர விண்ணப்பிக்குமாறு எனக்கு ஆலோசனை வழங்கினார். அதனால் அந்த பள்ளியில் சேருவதென்று முடிவு செய்தேன். எனது வகுப்பறையில் மொத்தம் 40 பெண்கள் இருந்தனர். அவ்வகுப்பறையில் நான் ஒருவன் மட்டுமே ஆண். அது மிக மிகச் சிறப்பானது அல்லவா! ஆனாலும், எனக்கு ரொம்பவும் கூச்சமாக இருந்தது. 40 பெண்களும், நானும். இதுவும் உண்மையில் பெலினியின் மற்றொரு காட்சித் துணுக்கைப்போலவே இருந்தது. அதுவொரு அற்புத நினைவலைகளை எனக்கு கொடுத்த சிறுவெளியாக எனக்குள் புதைந்திருக்கிறது. அந்த தினங்களில் அனைத்துமே மிக மிக அற்புதமானவை.

எனது தந்தை துஸ்கான் மரபின் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். அதனால் அரியோஸ்டோவை போலவோ அல்லது ஸ்பென்சாரை போலவோ நானும் எனது கவித் திறனை வளர்த்தெடுக்க வேண்டும் என விரும்பினார். பார்வையாளர்கள் நமக்கு கொடுக்கின்ற கதாப்பாத்திரத்தின் தன்மை அறிந்து அதற்கேற்றாற்போல சொற்களின் சந்த நயத்தை கட்டமைப்பதும், அதனை மெல்ல மெல்ல மெருகூட்டியபடியே இருப்பதும் எனது தந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. இவைகளின் மீதான எனது தந்தையின் காதல் அளப்பரியது. அதனால், இதில் ஈடுபாடு செலுத்தும்படி தொடர்ச்சியாக என்னை வலியுறுத்தியபடியே இருந்தார். அவருக்கு இதுபோன்ற புதிரான கலைகளில் எல்லாம்தான் ஆர்வம் அதிகம். அதனால், அதில் நானும் சேர்ந்துக்கொண்டேன். எனினும், எனக்கு அடுத்ததாக அந்த குழுவில் இருந்தவர்களில் இளமையானவருக்கு வயது 75! அந்தளவிற்கு அக்கலை மிக மிகப் பழமையானது.

இருந்த போதிலும், நான் அதனையும் முயற்சித்துப் பார்த்தேன். பல புதிய விஷயங்கள் எனக்கு அறிமுகமாயின. அருவருக்கத்தக்க வார்த்தைகள் மற்றும் மிக நவீன வார்த்தைகள் எனக்கு கிடைத்தன. அந்த குழுவினரும் என்னை மிகவும் விரும்பினார்கள். ஏனெனில், அது முற்றிலும் புதியதாகவும், செவ்வியல் பண்புகளை கொண்டதாகவும் இருந்தது. நாங்கள் அதனை கவிதையில் நிகழும் சண்டை என்று சொல்வோம். மிகுந்த சுவாரஸ்யமிக்க கலை அது. எங்கள் குழுவினருடன் வெளியூர் சென்றிருந்தபோது ரோமில் இருந்து ஒரு இயக்குனர் வந்திருந்தார் – நல்லவேளை அவர் இப்போது உயிருடன் இல்லை – அவர் என்னை அதிகம் புகழ் அடைந்திராத அதே சமயத்தில் மிகுதியான திறன்கொண்ட நாடக குழுவில் இணைத்து செயல்பட சொன்னார். இது நிகழ்ந்தது 1970ன் துவக்கத்தில் என்று நினைக்கிறேன். 70 அல்லது 71. அந்த இயக்குனர் என்னை ரோமில் அப்போது புதிதான சிந்தனைகளுடன் நாடகவெளியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருந்த நாடகக் குழுவில் சேர்ந்துக்கொள்ளும்படி உத்வேகமூட்டினார். நானும் சேர்ந்துக்கொண்டேன். ஆங். எனது வாழ்க்கையின் மிக மிக அற்புதமான அனுபவங்களில் அவையும் குறிப்பிடத்தகுந்தவை. சேக்‌ஷ்பியர் எழுதிய ஹேம்லெட்டில் ஓபிலியா வாத்தாக நடிக்கும் பகுதியை அல்லது ரோமியோ ஜூலியட்டில் ரோமியோ பாட்டிலாக நடிக்கும் பதியை மேடையில் அரங்கேற்றினோம். எங்களது கற்பனைகளில் பலவும் வேடிக்கையானவை என்றாலும், அதியற்புதமான தலைசிறந்த சில உருவாக்கங்களும் அதில் இருந்தது.

அதன்பிறகு, மிகச் சிறந்த இயக்குனரான குசப்பி பெர்ட்டோலூசியை (Giuseppi Bertolucci) சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது சிறிய கிராமத்து நினைவுகளில் இருந்து அனைத்தையும் அவரிடம் நான் பகிர்ந்துக்கொண்டேன். அதனை மேடைகளில் நிகழ்த்தப்படும் சொற்பொழிவைப்போல பேசி அரங்கேற்றம் செய்தோம். இத்தாலியில் அந்த நிகழ்ச்சி மிகப் பிரபலமாக பேசப்பட்டது. எங்கள் நிகழ்வை காண்பதற்காக வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் திரண்டிருந்தார்கள். இதன் மூலமாக, The Building where I love you என்றொரு திரைப்படத்துக்கு எழுதும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. இப்படித்தான் நான் மெல்ல மெல்ல திரையுலகுக்கு வந்து சேர்ந்தேன். இப்போது உங்களது முதல் கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது என்று நம்புகிறேன்.

பெலினியை பற்றி பலமுறை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் 1979-ல்தான் அவருடன் சேர்ந்து வேலை செய்தீர்கள் இல்லையா? அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பெலினி இயற்கைக்கு சொந்தமானவர். அவரது மரணத்திற்கு பின்பாக, இத்தாலிய செய்தித்தாள் ஒன்றில் அவரைப் பற்றி நான் எழுதியபோது, பெலினி இல்லாத உலகம் என்பது, ஆலிவ் எண்ணெய் இல்லாத உலகத்தைப் போன்றது என்று குறிப்பிட்டிருந்தேன். அதாவது, முழுமையாக இயற்கையால் நிரம்பிய ஒன்று, இயற்கைக்கு உரிய ஒன்று. தனிப்பட்ட வகையில், பெலினி எனக்கு தர்பூசணி பழத்தைப் போன்றவர். தர்பூசணி பழம் இன்னும் இருக்கிறது. அதற்கு மரணம் இல்லை. அதனால் மரணடைய முடியாது. பெலினியும், புனுவலும்தான் என் வாழ்க்கையை மாற்றியவர்கள். எனது மிக விருப்பமான இயக்குனர்கள் அவர்கள்தான். திரைப்படங்கள் என்பது கனவின் தன்மையிலானது என்கின்ற கூற்று உண்மையானதுதான். பெலினியும், புனுவலும் கனவு நிலையில்தான் திரைப்படங்களை படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். இயற்கை அவர்களுக்கு என்ன கொடையை அளித்ததென்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் கனவுகளுக்குள் அமிழ்ந்திருந்தபடியே, கனவுநிலையின் சாயைகளை தங்களின் திரைப்படங்களில் படரவிட்டிருந்தார்கள். அவர்களது திரைப்படங்களை பார்த்ததற்கு பிறகு, இந்த உலகத்தின் மீதான எனது கண்ணோட்டம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அவருடன் சேர்ந்து The Voice of the Moon திரைப்படத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது அவரைக் கூர்ந்து அவதானித்தேன். அவரிடம் ஏதோவொரு வசீகரம் மிகுந்திருந்தது. ஒரு தாயின் அணுக்கத்தை என்னால் அவரிடத்தில் உணர முடிந்தது. ஓக் மரத்தின் அருகில் இருப்பதைப்போல அப்போது உணர்ந்தேன். படம்பிடித்தலின்போது காட்சிகளை மெல்ல அவர் மெருகூட்டியபடியே இருப்பார் என்றொரு கட்டுக்கதை அவர் தொடர்பாக உலவி வருகிறது. அது உண்மை இல்லை என்றே  கருதுகிறேன். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக, எல்லோரும் பேரமைதியில் ஆழ்ந்திருப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கு எதிரில் மாஸ்ட்ரோ தயாராகிக் கொண்டிருக்கிறார். ஒரு சிறு பூச்சிக்கூட சப்தம் எழுப்பாது. ஆனால், அவர் “ஆக்‌ஷன்” என்று உரக்கச் சொல்லிவிட்டாரென்றால் உடனடியாக அவ்விடமே பரபரவென இயக்கம் கொண்டுவிடும். எல்லோரும் அலறத் துவங்கிவிடுவார்கள். நடிகர்கள் இந்த பெரும் குழப்பச் சூழலில் நடித்துக்கொண்டிருப்பார்கள். நீங்கள் அந்த திரைப்படத்துடன் புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப்போல உணருவீர்கள். இந்த அணுகுமுறை எனக்கு முற்றிலும் நேரெதிரானது. அதன்பிறகு அவர் அனைத்தையும் ஒலிச் சேர்க்கையின்போது (dubbing) மாற்றிவிடுவார். அவருக்கு ஒலிச் சேர்க்கையின் மீது பெரும் விருப்பம் இருந்தது. ஒரு காட்சியில் நான், “குடிக்க கொஞ்சம் நீர் கிடைக்குமா?” என்று கேட்டிருப்பேன். ஆனால், பெலினி அக்காட்சியின் குரல் பதிவின்போது, இப்போது நீ, ”உன்னை மிக அதிகமாக காதலிக்கிறேன்” என்று சொல்ல வேண்டும் என்பார். பெலினி அனைத்தையும் மாற்ற விரும்பினார். ஒரு மாயாஜால வித்தைக்காரரைப்போல அவரது செயல்பாடுகள் இருந்தன. எனது வாழ்க்கையில், இரண்டாவது முறையாக மீண்டும் நான் மாயாஜால வித்தைக்காரரின் உதவியாளனாக சேர்ந்திருந்தேன். பெலினி என் ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிட்டார்.

அவர் உங்களை பாதித்திருக்கிறாரா? அவரிடம் பணியாற்றியதில் இருந்து சில வருடங்களிலேயே உங்களது முதல் திரைப்படத்தை இயக்கி இருக்கிறீர்கள். பெலினியுடன் சேர்ந்து வேலை செய்தது திரைப்படம் இயக்கும் எண்ணத்தை உங்களுக்கு உண்டாக்கியதா? அல்லது துவக்கத்தில் இருந்தே நீங்கள் இயக்குனராக உருவாக வேண்டுமென்று விரும்பினீர்களா?

பெலினியின் திரைப்படம் ஒன்றை முதல் முறையாக பார்த்தபோது? ஆம்! பெலினியின் திரைப்படத்தை முதல் முதலாக பார்த்துவிட்டு, திரையரங்கில் இருந்து வெளியேறிய உடன் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை தொடருவதுதான் மிகச் சரியானது என்றே கருதினேன். ஏனெனில், நான் எனக்குள்ளாக சொல்லிக்கொண்டேன்: இதுப்போல அழகான ஒன்றை ஒருபோதும் உருவாக்கிட முடியாது. இல்லை. அது என்னை வளர்த்தெடுத்துக்கொள்ள பெரிதும் உதவியது. பெலினி ஒரு கொடையாளர். பெலினி போன்ற மனிதர்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

20 வருடங்களாக பெலினியை எனக்கு தெரியும். ஒவ்வொரு முறை ஒரு புதிய திரைப்படத்தை அவர் இயக்கி முடித்ததும், என்னை தொலைபேசியில் அழைத்துவிடுவார். ”ராபர்த்தோ, உன்னை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்க விரும்புகிறேன். சில ஒத்திகைகளை பார்க்க வேண்டும். தயாராய் இரு” என்று சொல்வார். அதன்பிறகு, என்னை ஒரு பெண்போல உடை அணியச் செய்து, “ஏதாவது நடித்துக் காட்டு” என்பார். பின்னர் உனக்கு என்ன வயது ஆகிறது என்று கேட்பார். “எனக்கு 30 ஆகிறது” என்று பதிலளித்தால், ”ஓஹ், என்னை மன்னித்துவிடு, எனக்கு 70 வயதுடைய நடிகர்தான் தேவை. மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு ஒரு பெண்தான் தேவைப்படுகிறாள். எனக்கு இவ்வளவு நேரமும் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றிகள்” என்பார். கடந்த 20 வருடங்களாக அவருக்காக நான் ஒத்திகைகளை செய்துக்கொண்டிருக்கிறேன். எனினும், இறுதியில் அவர், “எனக்கொரு நாய்தான் வேண்டும் அல்லது பெண்தான் வேண்டும் அல்லது முதியவர்தான் வேண்டும்” என்று சொல்லிவிடுவார்.

அவருக்கு பினாச்சியோவை (Pinocchio) படமாக்க வேண்டுமென்று பெரும் விருப்பம் இருந்தது. தெய்வாதீன நகைச்சுவைத்தன்மை கொண்ட அதனை திரைப்படமாக உருவாக்க விரும்பியும் அவர் கைவிட்டுவிட்டார். எனது திரைப்பட வாழ்க்கையில் இரண்டு மிகச் சிறந்த கதைகளை விவாத அளவிலேயே நின்றுப்போய்விட்டது. பெலினியுடன் சேர்ந்து பினாச்சியோவை உருவாக்குவது, மற்றொன்று மைக்கேலாஞ்சலோ அந்தோனியோனியுடன் சேர்ந்து புனித பிரான்ஸிஸ் (Saint Francis) பற்றிய திரைப்பட முயற்சி. அந்தோனியோனி இத்தாலிய திரைப்பட படைப்பாளிகளுக்கு ஒரு ஹோமரை போன்றவர். புனித பிரான்ஸிஸ் கடவுளின் முட்டாள். அவனால் சாவின் எதிரில் நின்றுக்கூட புன்னகைக்க முடியும். உலகத்தின் மிக அதிக வலியை சுமந்திருக்கும் தருணத்திலும்கூட அவனால் சிரிக்க முடியும். புனித பிரான்ஸும் என்னைப் பொறுத்தவரையில் பினாச்சியோவைப்போல அதிக முட்டாள்தனங்கள் நிறைந்த கோமாளிதான். அதனால்தான் நாங்கள் அதனை எழுதத் துவங்கினோம். அதை எப்படி எழுதுவது என்பதில் இருவருக்கும் இடையில் சிறிய அளவில் கருத்து வேறுபாடு உருவாகியது. எங்கள் இருவரது அணுகுமுறையும் முற்றிலும் எதிரெதிராக இருந்தது. அதோடு அந்தோனியோனியின் உடல்நிலையும் அப்போது சீராக இல்லை என்பதால், அந்த திரைப்பட முயற்சியை எங்களால் முன்செலுத்த முடியவில்லை. முற்றிலும் நேரெதிரான அணுகுமுறையை கொண்டவர்கள்தான் என்றாலும், பெலினியைப்போலவே அந்தோனியோனியும் மிகப்பெரும் அறிவாளி என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை.      

Life is Beautiful திரைப்படத்தைப் பற்றிய உரையாடலை துவங்குவதற்கு முன்பாக, நகைச்சுவை கலைஞர்களை பற்றியும், பிற நகைச்சுவை நடிகர்கள் உங்களின் மீது செலுத்திய தாக்கத்தைப் பற்றியும் பேச விரும்புகிறேன். சார்லி சாப்ளினை பற்றி ஒரு நேர்காணலில் நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படித்திருக்கிறேன். அதில், நீங்கள் சார்லி சாப்ளினின் பின்புறத்தைப் பற்றி பேசியிருந்தீர்கள். அதைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள விழைகிறேன். கூடுதலாக, உங்களது நகைச்சுவை பாவனைகளின் வெளிப்பாட்டு முறைகளில் எவரின் சாயல் அதீதமாக படர்ந்துள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

திரைப்படங்கள் மீதான எனது முதல் ஞாபகங்கள் எங்களது சிறிய கிராமத்தில் வெள்ளம் புகுந்த தினத்திற்கு பிற்பாடு துவங்குகிறது. நான் எனது இரண்டு சகோதரிகளுடன் அப்போது இருந்தேன். ஆனால், திரைப்படங்களை பார்ப்பதற்கு தேவையான பணம் எங்களிடம் இல்லாதிருந்தது. அதனால், நாங்கள் வெளியிலேயே பல மணி நேரமாக காத்திருந்தோம். இறுதியில், எங்களது கன்னத்தில் ஆளுக்கு ஒரு அரை கொடுத்துவிட்டு, கடைசி பத்து நிமிட காட்சியை மட்டும் பார்க்க உள்ளே அனுமதித்தார்கள்.

நான் பார்த்த முதல் திரைப்படம் – அந்த திரைப்படம் என்னை பாதித்தது என்று என்னால் சொல்ல முடியாது – பென் ஹர். திரையரங்குக்கு வெளியில் திரையிடப்பட்டிருந்த அதனை சோளக்கதிர்கள் அசைந்தாடிக்கொண்டிருந்த ஒரு சிறிய வெளியில் அமர்ந்துப் பார்த்தோம். அதுவும் அந்த திரைப்படம் இறுதியில் இருந்து முதல் காட்சியை நோக்கியபடி ஓடிக்கொண்டிருந்தது. எனது நினைவில் எப்போதுமே Ben Hur என்பது Ruh Nebதான்! சார்ல்டன் ஹெஸ்டன் எனது மிக விருப்பமான நடிகர். அதோடு வில்லியம் வைல்டர்! ஆஹ்! எத்தனை அற்புதமான இயக்குனர் அவர்!

அதனால் நான் இரண்டாவதாக பார்த்த திரைப்படம்தான் உண்மையில் எனது முதலாவது திரையரங்க அனுபவம். அது மிகவும் மெலோடிரமட்டிக்காக உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நான் கதறி கதறி அழுதேன்! டக்ளஸ் சிர்க் இயக்கிய The imitation of lifeஎனும் அந்த திரைப்படத்தைப் பார்த்து ஒட்டுமொத்த பார்வையாளர்களும் உணர்ச்சிவயப்பட்டு அடக்க முடியாமல் அழுது தீர்த்தார்கள். வீட்டில் அந்த திரைப்படத்தின் கதையை எனது அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருக்கையில், அம்மாவும் நெகிழ்வுற்று, “போதும்!” என்றார்.

1978ல் நான் எனது முதல் திரைப்படத்தை உருவாக்கியிருந்தபோதுதான், எனது அம்மாவும் அப்பாவும் முதல்முறையாக திரையரங்கத்திற்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு 60 வயது ஆகியிருந்தது. நுழைவுச் சீட்டை பெற்றுக்கொண்டு, மாலை நான்கு மணியளவில் அரங்கத்துக்குள் நுழைந்த அவர்கள் நள்ளிரவு வரையில் உள்ளேயே அமர்ந்திருந்தார்கள். பொதுவாக நடன நிகழ்வுகளுக்கு சென்று, அரங்கம் மூடப்படுகின்ற வரையில் அமர்ந்திருக்கும் வழக்கமுடையவர்கள் அவர்கள் என்பதால், திரையரங்கத்தையும் அவ்வாறே கருதி அவர்கள் உள்ளிருந்துவிட்டார்கள். மொத்தமாக நான்கு முறை எனது திரைப்படத்தைத் தொடர்ச்சியாக அவர்கள் பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு எனது திரைப்படம் மிகவும் பிடித்துவிட்டது.

அதன்பிறகு செவ்வியல் ஆக்கங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. நவீன நகைச்சுவையின் சாரம்சங்கள் சேக்‌ஷ்பியரின் நாடகங்களில் – குறிப்பாக அவரது துவக்க கால படைப்புகளில் – இருப்பதை கண்டுணர்ந்தேன்.

அதோடு நான் டோட்டோவையும் (Toto) நேசித்தேன் (நேப்பிள்ஸை சேர்ந்த கோமாளி). ஏனெனில் என்னை எப்போதும் அச்சுறுத்திய விசித்திரமான திரைப்படம் அது. சர்க்கஸில் எனக்கு உண்டான அனுபவங்களின் மூலமாக, கோமாளி என்பவர் எப்போதுமே ஒரு அரசரைப் போன்றவர் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஒரு சிங்கமோ அல்லது ஒரு மாயாஜால வித்தகரோதான் உச்சநிலையில் இருப்பவர் என்றே கருதினேன். ஆனால், கோமாளிதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். அவருக்கு நண்பர்களை வென்றெடுக்க தெரிந்திருக்க வேண்டும். இசைக் கருவிகளை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். அதோடு, நகைப்பூட்டும் உடல் அசைவுகளையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு கோமாளியின் குணவியல்புகளை, முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டேன். ஆனால் அவர்களது முக அலங்காரம் எப்போதும் என்னை பயமுறுத்தவே செய்திருக்கிறது. உங்களுக்கு மிக நெருக்கமாக வந்து ஒரு கோமாளி புன்னகைக்கும்போது, அந்த சிரிப்பு பச்சை நிறத்தில் ஒளிர்ந்துக்கொண்டிருக்கும். இது என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. அதனால், முதல் முறையாக டோட்டோவை பார்த்தபோது நான் பயந்துவிட்டேன். டோட்டோ நேப்பிள்ஸை சேர்ந்த கோமாளி. அதோடு, நேப்பிள்ஸில் நானொரு தீர்க்கத்தைப் பார்த்தேன். டோட்டோவின் தோள்பட்டைக்கு பின்னால், அலங்காரத்துக்கு அடியில் மரணத்தை குறிக்கும் முகமுடி ஒன்றை என்னால் பார்க்க முடிந்தது. அதனால்தான், அவன் வலிமையானவனாக இருக்கிறான். அதோடு, அவன் பிரத்யேகமான குணவியல்புகளை கொண்டவன். அதனால்தான் அவனைப் பார்த்து நாம் பயப்படுகிறோம். அவன் செய்வது நகைச்சுவையோ அல்லது முரணியக்கமோ அல்லது ஸ்லாப்ஸ்டிக் அசைவுகளோ அல்லது தருணங்களின் நகைச்சுவையோ அல்ல. டோட்டோ ஒருவகையில் ஆபாசங்கள் நிறைந்த கோமாளி. இங்கு பாலுணர்வெழுப்புதல் என்பதுதான் நகைச்சுவையாகிறது.

நீங்கள் சாப்ளினையோ அல்லது பஸ்டர் கீட்டனையோ அல்லது லாரலையோ பார்த்தீர்கள் என்றால், அவர்கள் மிக அரிதாக தங்களது முகங்களுக்கு அண்மைக் காட்சிகளை வைத்திருப்பார்கள். ஒரு அசலான கோமாளியை இவ்வகையில் அண்மைக் காட்சியில் பதிவு செய்தீர்கள் என்றால், அவர்களது முகமுடி உங்களை அதீத பதற்றத்துக்கு உள்ளாக்கிவிடும். ஆனால், எதனால் சார்லி சாபிளினின் பின்புறத்தை குறிப்பிட்டேன் என்றால், ஒரு கோமாளி மிக அரிதாகவே தனது முகத்தை அண்மையில் பதிவு செய்வார். அவரது நகைச்சுவை என்பது உடலின் பின்புறத்தை வேடிக்கையாக அசைப்பதிலும், நகர்த்துவதிலும் இருந்துதான் துவங்கும். உடல்தான் இங்கு நகைச்சுவையின் வெளிப்பாட்டு களமாக அசைகிறது. கீழ் நோக்கி போகப் போக நகைச்சுவையின் விஸ்தாரம் பெருகியபடியே கிருக்கிறது. உடலை தாழ்வு நிலையில் இருந்து பதிவாக்கும்போது, கலை ஒருவித உன்னத நிலையை அடைகிறது.

நெப்பொலியனின் டைரியில் படித்த விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. போர்களத்தில் இருந்து ஒரு தளபதி அவரைப் பார்க்க வருகிறார். நெப்பொலியனிடம் பகிர்ந்துக்கொள்ள கொடூரமான துயரச் செய்தி ஒன்று அவரிடம் இருக்கிறது. போரில் தோல்வி தழுவியது தொடர்பான தகவல் அது. அவரது குழப்பத்தை உணரும் நெப்பொலியன், முதலில் அவரை அமரச் சொல்கிறார். அதனால் அந்த தளபதி தனது போர் கருவிகளுடன் குழப்பத்துடன் அவருக்கு எதிரில் அமருகிறார். நெப்பொலியன் அவரது உடலின் இயக்கத்தை விவரித்திருக்கும் முறையைப் பார்த்ததும், இதில் ஒரு நகைச்சுவை இருப்பதை என்னால் உணர முடிந்தது. அந்த தளபதியின் உடலசைவுகளில் நகைச்சுவை இயல்பாக உருவெடுக்கிறது. இதனை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. நெப்பொலியன் போரின் தோல்வியை எதிர்கொள்ள தன்னளவில் தயாராகிறார்.

இப்போது life is beautiful திரைப்படத்தைப் பற்றி உரையாடுவோம். இயக்குனராக இது உங்களுக்கு ஐந்தாவது திரைப்படம். நீங்கள் நடித்து இயக்கிய மற்றைய அனைத்து திரைப்படங்களில் இருந்து இது முற்றிலுமாக வேறுப்பட்டிருக்கிறது. இது மிகத் தீவிரமான நிகழ்வு ஒன்றை கதைக்களமாக கொண்டிருக்கிறது. இதுவொரு நகைச்சுவை படமும்கூட அல்லது இந்த திரைப்படத்தில் நகைச்சுவையும் இருக்கிறது. உங்களது திரையுலக பயணத்தில் இந்த தருணத்தில் இப்படியான படுகொலைகள் குறித்த திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்கின்ற உந்துதல் எவ்வாறு உருவாகிறது?

யூதப் படுகொலை நிகழ்வு எல்லோருக்கும் பொதுவானது என்றே கருதுகிறேன். நீங்கள் அது குறித்த தகவல்களை வாசித்து முடித்ததும் முற்றிலும் வேறான மனிதராக மாறியிருப்பீர்கள். இந்த திரைப்படத்துக்கான உந்துதல் எந்தவொரு புத்தகத்தில் இருந்தும் உருவாகவில்லை. தனிப்பட்ட வகையில் எனக்கு தெரிந்திருந்த பிரிமோ லிவி (Primo Levi) தெரிவித்த தகவல்களை கொண்டும் உருவாக்கப்படவில்லை. ஏனெனில், அவரிடம் மிகக் குறைவாகவே நான் பேசியிருக்கிறேன். பாசிஸம் பிறப்பெடுத்த இத்தாலிக்கு, பேரழிவு தருணங்களுடன் ஒருவிதமான தொடர்பு எப்போதுமிருக்கிறது. ஆனால், ஒரு திருப்புமுனையாக இந்த பேரழிவு தருணங்கள் ஒட்டுமொத்த உலகத்தையும் பாதித்து, மனிதநேயத்தை ஆழமாக வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக நிலைத்துவிட்டது.          

நான் எனது திரைக்கதை ஆசிரியருடன் அமர்ந்து அடுத்த திரைப்படத்துக்கான கதைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு புதிய திரைப்படத்துக்கான தீவிர யோசனை என்பது மெலொடிக்களைக் கோர்ப்பதற்கு நிகரானது. இந்தவகையிலான மனநிலையில் இருக்கும்போது பல்வேறு யோசனைகள் இயல்பாகவே உங்களுக்கு தோன்றும். ”இப்போது ஏதாவது புதிதாக செய்தாக வேண்டும். திரையுலக பயணத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. அடுத்த திரைப்படம் குறித்து மட்டுமே வெகு நிதானமாக சிந்தித்துக்கொண்டிருந்தேன். சில நேரங்களில் எனது திரைக்கதை ஆசிரியருடன் அமர்ந்துக்கொண்டு, பழங்கால ரோம் நாட்டை சேர்ந்தவனைப் போலவோ ரஷ்ய பெண்மணியைப் போலவோ அல்லது ஒரு ஸ்பானிஷ் நாயைப் போலவோ மனதில் தோன்றும் வசனங்களை தொடர்ச்சியாக உரையாடிக் கொண்டிருப்பேன். அத்தகையதொரு தருணத்தில்தான் மிக தற்செயலாக மென்மையானதும், நகைச்சுவை உணர்வுமிக்கதுமான ஒரு திரைப்படத்துக்கான கரு எங்களுக்கு கிடைத்திருந்தது.

பின்னர் மெல்ல மெல்ல அதனை செறிவுப்படுத்தியபடியே இருந்தேன். அப்போது முற்றிலும் எதிர்பாராத வகையில்  யூத வதை முகாமில் சிக்கியிருக்கும் ஒரு மனிதனைப் போல என்னை உருவகப்படுத்தி அந்த நிலையில் அவனது மனதில் உதிக்கும்  வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நானொரு நகைச்சுவை நடிகன் என்பதால், உலகத்தின் மிகக் கொடூரமான சூழல் நிலவும் அந்த கொலைவெளியில் நின்றிருக்கும் நான் அதன் இயல்புக்கு முற்றிலும் மாறாக, அதனையொரு அழகான இடமாக நினைத்துக்கொள்ள முயற்சித்தேன். நான் ஒரு சிறுவனிடம் பேசுகிறேன், “நீ மகிழ்வாக இருக்கிறாயா? உனது தந்தையைப் பார்த்தாயா? அவர் உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆஹ்! இது அற்புதமானது!”. இந்த எண்ணம் என்னை பெரிதும் நெகிழ்வூட்டியது.

எனது திரைக்கதை ஆசிரியர் நாம் இதுக் குறித்து யோசித்தாக வேண்டும் என்றார். எனக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. எனது உடலை உலகத்தின் மிக மோசமான வெளியில் இருத்திப் பார்ப்பது. இந்த யோசனையை நான் ஆழமாக விரும்பத் துவங்கிவிட்டேன். இப்போது இந்த எண்ணத்தை அதன் உச்சபட்ச அழகியலோடு எப்படி சொல்வது என்பதைதான் நான் சாத்தியப்படுத்த வேண்டும். திரைப்படம் என்பது மிகவும் உணர்வுப்பூர்வமானது. திரையில் நடிகர்கள் சிரித்துக்கொண்டிருக்கும் காட்சியில்கூட பார்வையாளர்கள் அழும் தருணங்களும் உண்டு. அந்த நிலையில், என் கையில் ஒரு உணர்வுப்பூர்வமான கருக் கிடைத்திருந்தது. அதனை எப்படி வளர்த்தெடுத்து சரியான வகையில் கவித்துவத்துடன் திரைப்படமாக்குவது என்பதுதான் எனக்கு இருந்த சவால். ஆனால், நான் சற்று பயத்தில்தான் இருந்தேன்.

எனக்கு இந்த கரு கிடைத்ததற்கு பிறகு, என்னால் ஓய்வாக இருக்க முடியவில்லை. தூங்குவது அரிதாகிப் போனது. அதனால், நான் எனக்குள்ளாக, “நாம் நம்பிக்கையுடன் தைரியமாக இருக்க வேண்டும்” என்றுச் சொல்லிக்கொண்டேன். நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும்போதும், தைரியமாகவும், முழு நிர்வாணமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு நிகரான உணர்வெழுச்சி அது. இப்போது இந்த நேர்காணலில் ஆங்கிலத்தில் பதில் அளித்துக்கொண்டிருக்கிறேன் அல்லவா? அப்படியென்றால் எனக்கு எந்தளவிற்கு தைரியம் இருக்க வேண்டும். இதுப்போல அப்போதும் என்னை மனதளவில் பலப்படுத்திக்கொண்டேன். வான்வெளியில் நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் தீர்க்கத்துடன் என்னை நோக்கி பிரகாசித்துக் கொண்டிருக்கும் இந்த ஒற்றைய பெரும் நட்சத்திரத்தை நானும் பின்தொடர்ந்து பயணிக்கத் துவங்கினேன்.    

இந்த கதையை எழுதி முடித்ததும், தயாரிப்பாளர்களை அணுகும் பணி சிரமமிக்கதாக இருந்ததா? இதுவொரு அழகான கதை என்றாலும் அதனை  நிதி அளிப்பாளர்கள் சரியான வகையில் உணர்ந்துக்கொண்டார்களா? இத்தாலியில் உங்களது இந்த திரைப்படத்துக்கான முயற்சிக்கு ஆதரவு கிடைத்ததா?
இத்தாலியை பொருத்தவரையில், ஓரளவுக்கு நான் விரும்பும் வகையில் எனது திரைப்படங்களை உருவாக்கிட முடியும். ஏனெனில், எனது முந்தைய அனைத்து திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை. ஆனால், சிலர் என்னிடம் இனப் படுகொலை தொடர்பான பின்னணியை வைத்துக்கொண்டு என்ன வகையிலான திரைப்படம் உருவாக்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு கலைஞன் எப்போதும் மக்களின் எதிரில் நின்றுதான் செயல்பட்டாக வேண்டுமே தவிர, பின்னால் நின்றுகொண்டு அல்ல. நீங்கள் எளிதில் யூகிக்கக்கூடிய தன்மையில் இருந்தீர்கள் என்றால், குறுகிய காலத்திலேயே உங்களது திரையுலக வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும். முதலில் எனக்கு நான் முழு உண்மையாக இருக்க வேண்டும். எனக்கு இந்த திரைப்படத்துக்கான கருவின் மீது பெரும் விருப்பம் உண்டாகியிருந்தது. அதனால் எதன் பொருட்டும் அதிலிருந்து விலகும் எண்ணம் எனக்குள் எழவில்லை. பெரும் கோர தருணங்களான வதைமுகாம் சித்திரவதைகளுக்கான எனது எதிர்வினையை அல்லது எனது பங்களிப்பை ஏதேனும் ஒருவகையில் இத்திரைப்படத்தின் வழியே நிகழ்த்திவிட வேண்டும் என கருதினேன். இது ஒரு திரைப்படம் மட்டும்தான். திரைப்படங்கள் உலகத்தில் நிகழும் எதையும் மாற்றிவிடாது. ஆனாலும், இந்த திரைப்படத்தை நான் முழு அர்ப்பணிப்புடன் அணுக வேண்டுமென்று விரும்பினேன். இது நான் வழக்கமாகவே செய்வதுதான் என்றாலும், இந்த திரைப்படத்தில் எனது ஒட்டுமொத்த ஈடுபாட்டையும் முழுமையாக செலுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

அதோடு, எனக்கு சிறியளவில் அச்சமும் இருக்கத்தான் செய்தது. ஏனெனில், பொதுவாக ஒரு நகைச்சுவை நடிகர் இதுப்போன்ற பெரும் அதிர்வுமிக்க தருணங்களை கையாளக்கூடாது என்றொரு கருத்தும் நிலவி வருகிறது. யூத இன படுகொலை என்பது மிகப்பெரும் துயரம், என்றென்றைக்கும் ஈடு செய்ய முடியாத பெரும் துன்பியல் நிகழ்வு என்பதால் அவ்விதமான எதிர்வினைகள் வரும் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே சிலர், இந்த கொடும் துயரத்தை ஒரு நகைச்சுவை கதையாக சொல்ல முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், இக்கருத்து மாற்ற முடியாததோ அல்லது நிலைபெற்றுவிட்டதோ அல்ல. சில தருணங்களில் நகைச்சுவையின் வழியாக மட்டுமே மாபெரும் துயரத்தைக் பிறருக்கு கடத்த முடியும் என்று நம்புகிறேன். தாந்தேவின் Inferno-வில் சொல்லப்படுவதைப்போல பெரும் துயர் சூழந்திருக்கும் நிலையிலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்வதுதான் உலகத்தின் ஆகச்சிறந்த துயர் நிலை. அதனால்தான் எனது திரைப்படத்தின் இரண்டாம் பகுதி அதீத சோகமேற்படுத்தும் இயல்பை பெற்றிருக்கிறது. மக்கள் அந்த தருணங்களை பார்க்கின்றபோது, முதல் பகுதியில் நிகழ்ந்த மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் அவர்களது மனதில் படர்ந்து நெளிந்தபடியே இருக்கும்.

படத்தின் இரண்டாம் பகுதியில், நானொரு குட்டையான ஆடையை பயன்படுத்தியிருந்தேன். மிக மிக குட்டையான ஆடை. அரைகுறை உருமாற்றத்தைப்போல அந்த ஆடை இருக்கும் – பெண் வேடமிடும் கோமாளிகள் நகைப்புக்காக அணிந்திருக்கும் ஆடையைப்போல – ஆனால், திரைப்படத்தில் அது பெரிதும் அச்சத்தை கிளர்த்தும் ஆடையாக இருக்கிறது. அதே சமயத்தில் கையறு நிலையின் உச்சபட்ச பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. அதேப்போல, தவறாக மொழிபெயர்த்து சொல்லும் காட்சியும் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டதல்ல. அங்கு அவன் தனது மகனின் உயிரை காப்பாற்றியாக வேண்டும். அதனால்தான் உங்களால் அக்காட்சியின்போது சிரிக்க முடியவில்லை. நீங்கள் சிரிப்பீர்கள். ஆனால், உங்களது இருதயம் பல நூறு கூறுகளாக  உடைந்து நொருங்கியிருக்கும். வெடித்திருக்கும். அங்கு வலிந்து இரக்க உணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கவில்லை. ஒரு கவிஞன் சொன்னதைப்போல, மிக ஆழமாக பதிந்திருக்கும் ஞாபகம் என்பது நாம் மறந்திருப்பதாக நினைத்திருக்கும் விஷயங்கள்தான். என்ன நடந்தது என்பதை நாம் ஆழமாக தெரிந்து வைத்திருக்கிறோம். அதனால், என்னை வெகு தொலைவாகவே நிறுத்திக்கொண்டு, சிறிய சிறிய சமிஞ்கைகளின் மூலமாக மட்டுமே நிகழும் தருணங்களை தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.

இத்தாலியில் சிலர், ஏன் இந்த திரைப்படத்தை உருவாக்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்கள். நான் அவர்களிடம், “எனக்கான பார்வையாளர்களில் சிலரை இழப்பதுப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், நான் நம்புகின்ற நேசிக்கின்ற ஒன்றை உருவாக்குவதுதான் எனக்கு முக்கியமானது” என்றேன். இருப்பினும், உள்ளுக்குள் லேசான பயம் இருக்கத்தான் செய்தது. திரைக்கதை எழுதி முடித்ததும், மிலானில் இருந்த ஒரு யூத குழுவினருக்கு அதனை அனுப்பி வைத்தேன். அவர்கள் அதனைப் படித்துவிட்டு, ”இது நிகழக்கூடாது, இது தவறான சித்தரிப்பு, வரலாற்றை பொருட்படுத்தாது” என்றார்கள்.

ஆனால், நானொரு கலைஞன். ஒரு ஆவணப்பட தொகுப்பாளரோ அல்லது வரலாற்று அறிஞனோ அல்ல. திரைப்படத்தின் முதல் பகுதியில் பல தருணங்கள் நானாக உருவாக்கியது என்பது எனக்கு தெரியும். அந்த காலத்தில், ஒரு யூதன் அவ்வளவு எளிதில் வேறொரு மதத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும். அதோடு, பிரெஞ்சு மொழியில் ஒப்பாரா பாடுவதும் சாத்தியமில்லாதது. முசோலினி அதனை தடைச் செய்திருந்தார். இவையெல்லாம் நான் எடுத்துக்கொண்ட கால பின்னணிக்கு முரணானவை என்பது எனக்கு தெரிந்தும், வேண்டுமென்றேதான் இவைகளை திரைப்படத்தில் பயன்படுத்தினேன். இதேப்போல இரண்டாம் பகுதியிலும் பல காட்சிகளை இவ்வகையில் சேர்த்திருக்கிறேன். ஒருவேளை நான் கணிசமான பார்வையாளர்களை இத்திரைப்படத்தினால் இழக்க நேரிடலாம். ஆனால், மிக அதிகமாக நேசிக்க துவங்கியிருந்த ஒன்றை அதற்காகவெல்லாம் கைவிட நான் தயாராக இல்லை.

ஆச்சர்யப்படத்தக்க வகையில், எனது படைப்புகளில் இந்த திரைப்படம்தான் இத்தாலியில் பெரு வெற்றிப் பெற்ற ஒன்றாக நிலைப்பெற்றிருக்கிறது. மக்கள் எனக்கு ஏராளமான கடிதங்களை எழுதினார்கள். யூதர்கள் என்னை வெகுவாக கொண்டாடினார்கள். எனது திரைப்படத்தின் மீதான இத்தகைய வரவேற்புக்கு நான் எவ்வகையில் அவர்களுக்கு நன்றிச் சொல்லப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

பார்வையாளர்களின் கேள்விகள்:

முதலாவது கேள்வி: இனப் படுகொலை தொடர்பான திரைப்படத்தில் நகைச்சுவையை புகுத்தியது தொடர்பாக சில யூதர்களால் உங்களின் மீது வைக்கப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

எதிர்ப்புணர்வை தெரிவித்தவர்கள் மிகக் குறைவானவர்கள் என்பதையும், அவர்களது கருத்துகளை முழுமையாக நான் மதிக்கிறேன் என்பதையும் பலமுறை தெரிவித்திருக்கிறேன். இத்தகைய ஒரு கோர நிகழ்வை கையாளும்போது, இப்படியான எதிர்ப்பு குரல்கள் எழுவது இயல்பானதுதான். அது எங்கிருந்து எப்போது எழுந்துவந்தாலும் நான் அதனை மதிக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு அணுகுமுறையை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை இயல்பாகவே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகில்  வதைமுகாம் சித்திரவதைகள் குறித்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், எனது திரைப்படம்தான் கொஞ்சம் நகைச்சுவை கலப்புடன் இதனை அணுகியிருக்கிறது. எதிர்வினை என்பது மிக அழுத்தமாகவே எழும்தான் என்றாலும், திரைப்படத்தின் இரண்டாம் பகுதி பெரும் துயரத்தை கிளர்த்தும் வகையில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதால், இந்த எதிர்ப்பு குரல்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களது கேள்விக்கு என்னால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். எதிர்ப்பு குரல்களை மதிக்கின்ற அதே சூழலில் அதனை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் தங்களது விமர்சனத்தை நியாயப்படுத்துவதற்காக இதுவொரு பாஸிஸ சிந்தனைக்கொண்ட படம் என்றோ அல்லது எதிர்மறையான படம் என்றோ நிறுவ முயற்சித்தால், விளைவு இன்னும் மோசமாக அமைந்துவிடும்.

இந்த திரைப்படத்தின் எளிமையை அது அதுவாகவே வெளிப்படுத்திவிட வேண்டும். முதலில் இதுவொரு காதல் கதை. எனது மகனுக்கு அங்கு நிகழ்ந்துக் கொண்டிருக்கும் உண்மையை மறைத்து அதுவொரு விளையாட்டு என நான் சொல்வதற்கான  காரணம், ஒரு ஐந்து வயது சிறுவனை பதற்றத்திற்குள்ளாக்கி கொலை செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றுவதற்கும், அவனது மூளை சிதறிவிடாமல் காப்பாற்றவும்தான். அந்த கொலைகளத்தை அவ்விதமாக விளையாட்டு களமாக கருத செய்வதன் மூலமாகவே அவனது இயல்பு காப்பாற்றப்படுகிறது. இந்த இயல்புத்தனமான அணுகுமுறைதான் மழலைத்தனத்தை பாதுகாக்கிறது. இதுதான் அதிக நேயமிக்க செயல் என்று கருதுகிறேன். நாம் எந்த அளவிற்கு இருதயபூர்வமாக தூய்மையாக இருக்கின்றோமோ அந்த அளவிற்கு நம்மால் கடவுளை நெருங்கிச் செல்ல முடியும். வதைமுகாமல் இருந்து தப்பியவர்களின் வாக்குமூலங்கள், ஆவணப்பதிவுகள் போன்றவைதான் அசலான உண்மையை சொல்ல முடியுமென்று நினைக்கிறேன்.

பிரிமோ லெவியும் கூட ஒருமுறை, ஆஸ்ட்விச் வதை முகாமில் இருந்து தப்பித்திருந்த ஒருவனைப் பற்றி எழுதும்போது, ’நான் உண்மையைத்தான் எழுதினேன் என்றாலும் பத்து முறை எழுதிப் பார்த்தாலும் என்னால் நிறைவை எட்ட முடியவில்லை’ என்றுத் தெரிவித்திருக்கிறார். அவர் அந்த தருணத்தை சொல்வதற்கான சரியான அணுகுமுறையை தேடிக் கொண்டிருந்தார் என்றே நினைக்கிறேன். ஒருவகையில், இதுவும் உண்மைக்கு துரோகம் இழைப்பதைப் போலத்தான். நீங்கள் ஒன்றை உருவாக்கும்போது, ஏதோவொரு வகையில் உண்மைக்கு துரோகம் செய்துதான் ஆக வேண்டும். நான் அந்த நினைவுகளை பெரிதும் மதிக்கிறேன் என்றாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்தவர்களில் நானும் ஒருவனல்ல. சிலர் அந்த சித்திரவதைகளை மெளனத்தால் மட்டுமே விவரிக்க முடியும் என்று சொல்வதை நானும் ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன்.

அதர்னோ (Adorno) ஒருமுறை, வதைமுகாம் சித்திரவதைகளுக்கு பிறகு, உலகத்தில் கவிதை என்பதே இல்லாமல் போய்விடும் என்றார். ஆனால், அவரது கூற்றுக்கு நேரெதிராக இப்போதும் கவிதை இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில், வாழ்க்கையே முரண்களால் கட்டமைக்கப்பட்டதுதான். அதர்னோவே தொடர்ந்து கவிதைகளை எழுதிக்கொண்டுதான் இருந்தார். உண்மையில் இருந்து விடுபட்டு நின்றிருப்பதுதான், அந்த நிகழ்வுகளுக்கு செய்யும் பெரும் மரியாதையாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னால் ஸ்பீல்பர்க்கை போலவோ அல்லது ஸ்கார்ஸஸியை போலவோ வன்முறையை நேரடியாக திரைப்படங்களில் சித்தரிக்க முடியாது. என்னுடைய அணுகுமுறை என்பது தொலைவில் இருந்தே, அந்த தருணங்களின் அபாயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதுதான். நாம் நேரடியாக சித்திரவதைகளை பார்க்கவில்லை என்கின்றபோதிலும், சில சமயத்தில் நமது உணர்வுகள் சீண்டப்படுவதன் மூலமாக, அந்த கொடூரத்தை நம்மால் உணர முடிகிறது. இத்தாலியில், “இல்லையென்கின்ற உணர்வுதான், இருத்தலை தீவிரமாக கிளர்த்திவிடுகிறது” என்றொரு சொற்றொடர் இருக்கிறது. யூத வதைமுகாம் குறித்த புத்தகங்களை ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும், பாதியிலேயே எனது வாசிப்பை நான் நிறுத்தியாக வேண்டிய சூழல் உருவாகிறது. ஏனெனில், அதன் நுணுக்க விபரங்களை என்னால் எதிர்கொள்ள முடிவதில்லை. நாம் வதைமுகாமில் இருக்கிறோம். ஆனால், அந்த கோர சித்திரவதைகள் நாம் பார்ப்பதில்லை. என்றாலும் நம்மால் அதன் கொடூரத்தை உணர முடிகிறது. அது நம்மை சூழந்து நிம்மதியிழக்கச் செய்கிறது.

பிரான்ஸ் காஃப்காவின் சிறிய கதை ஒன்று இருக்கிறது. ஒருமுறை மாக்ஸ் பிராட் எனும் அவரது நண்பர், தனது வீட்டுக்கு வந்து உறங்கும்படி காஃப்காவை அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்று அங்குச் செல்லும் காஃப்கா, அவ்வீட்டின் அமைப்புமுறை தெரியாததால், தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு பதிலாக மாக்ஸின் தந்தை உறங்கும் அறைக்கு சென்றுவிடுகிறார். உடனே பதற்றமாகும் காஃப்கா அவரிடத்தில், “என்னை மன்னியுங்கள். உங்களைத் தொந்திரவு செய்ய வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. என்னை ஒரு கனவு என்றே நினைத்துகொள்ளுங்கள்” என்கிறார். அதனால், எனது திரைப்படத்தையும் ஒரு கனவு என்றே எடுத்துக்கொள்ளுங்கள். நான் யாரையும் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. இது திரைப்படம் அல்ல. வெறும் கனவு மட்டுமே.

கேள்வி இரண்டு: தொடர்ந்து திரையுலகில் இருப்பதற்கான ஒரு வழிமுறையாக நகைச்சுவையை பயன்படுத்துகிறீர்களா?

இந்த திரைப்படத்தின் நாயகனான கில்டோவை போலவே நானும் இருக்க ஆசைப்படுகிறேன். ஏனெனில், அவன் ஒரு முன்னுதாரண மனிதன் மற்றும் தந்தை. அதோடு, அவனது மனைவியை பொருத்தவரையில், அவள் விண்ணுலகத்தில் இருந்து வந்த அதிசய பரிசைப் போன்றவள். இதனை இங்கு பகிர்ந்துகொள்வதற்கு உண்மையாகவே நானொரு அதிர்ஷ்டசாலிதான். நிக்கோலெட்டா பிராஸ்சிக்கு (Nicoletta Braschi - பெனிகினியின் மனைவி) இவ்விடத்தில் நன்றிக்கூர விரும்புகிறேன். அவரும் இங்கு இருக்கிறாள். அதோடு, இந்த திரைப்படத்தின் உருவாக்கத்தில் அவளது பங்களிப்பு மிகுதியானது. இந்த திரைப்படத்தை எழுதும்போதே, என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அல்லது நடிக்க முடியாத துயரார்ந்த தருணங்களை அவளுக்கென மாற்றி எழுதியிருந்தேன். அதற்காகவும் அவளுக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும். வானில் இருந்து எனக்காகவே இறங்கி வந்திருக்கும் இந்த அற்புத நடிகையை பெற்றிருப்பதற்காக மிக ஆழமாக என் ஆன்மாவில் இருந்து அவளுக்கு நன்றி தெரிவிக்க விழைகிறேன். இந்த இரண்டு விஷயங்களுக்காக (நகைச்சுவை உணர்வு மற்றும் இந்த அழகிய பெண்) இத்திரைப்படத்தில் கில்டோவாக நான் இருந்திருப்பதை விரும்புகிறேன். ஆனால் கில்டோவை போல என்னால் அற்புதங்களை உருவாக்க முடியுமா என்று மட்டும் எனக்கு தெரியவில்லை.

கேள்வி மூன்று: Life is beautiful திரைப்படத்துக்கும் The great dictator திரைப்படத்திற்கும் ஏதேனும் ஒப்புமைகள் இருக்கின்றனவா?

நிச்சயமாக இருக்கிறது. நகைச்சுவையாளர்கள் எது செய்தாலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஏதேனுமொரு வகையில் அவர்கள் சாப்ளினுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர் எங்கள் எல்லோருக்கும் மேலான பேரரசன். இந்த திரைப்படத்தைப் பொருத்தவரையில், The great dictator மட்டுமல்ல The Kid திரைப்படத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அந்த திரைப்படமும் ஒரு சிறுவனை பாதுகாப்பது தொடர்பானதுதான். சாப்ளின் உருவாக்கிய The great dictator மிகச் சிறப்பான ஆக்கம்தான் என்றாலும், இனியொருவரும் ஹிட்லர் கதாப்பாத்திரத்தை நகைச்சுவையாக அணுக முடியாத சூழல்தான் இருக்கிறது. ஏனெனில், ஹிட்லர் செய்திருக்கும் நாசகார செயல்கள் நமக்கு தெரியும். தனிப்பட்ட வகையில், ஹிட்லரைப் பார்த்து என்னால் சிரிக்க முடியாது என்றே கருதுகிறேன். சாப்ளினே கூட, “ஹிட்லரின் செய்கைகளை நான் முழுமையாக அறிந்திருந்தால், அங்கு என்ன நடந்திருந்தது என்பது எனக்கு தெரிந்திருந்தால், நிச்சயமாக எனது திரைப்படத்தை வேறொரு கோணத்தில் அணுகியிருப்பேன்” என்றார். அவ்வுணர்வை மிக ஆழமாக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் முசோலினி மற்றும் ஹிட்லரை வைத்து நிறைய ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையை செய்திருக்கிறார். அது நிஜமாகவே முகத்தில் கேக்கை பூசுவதைப் போன்றதுதான் என்றாலும், அக்காட்சியை பார்க்கும்போது எனக்குள் அச்ச உணர்வே மேலெழுந்தது. சாப்ளினின் மூளையில் என்ன நிகழ்ந்துக்கொண்டிருந்தது என நினைத்து வியக்கிறேன். ஏனெனில், அது ஆயிரமாயிரம் கயிறுகளால் நமது வாயை கட்டியிருப்பது போலவும், நிதானமிழக்க செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த திரைப்படத்தை நான் வலியுடனேயே நினைவில் வைத்திருக்கிறேன். குறிப்பாக, உணர்வெழுச்சியை தூண்டும் வகையிலான அதன் இறுதிக் காட்சிகளை. பொதுவாக, அத்தகைய உணர்வை மெலெழுப்பும் காட்சிகளுக்கு நான் எதிரானவன் என்றாலும், சாப்ளின் முற்றிலும் வேறானவராக எனக்குத் தோன்றினார். அந்த திரைப்படத்தின் முடிவு முன்னதாகவே பலமுறை பலரும் கையாண்ட உத்தியில்தான் உருவாக்கப்பட்டிருந்தது என்றாலும், இப்போது அந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளை நான் பெரிதும் விரும்புகிறேன்.

எனது திரைப்படத்தில் நேரடியாக The great dictator-க்கு மரியாதை செலுத்தும் இடம் ஒன்று இருக்கிறது. அந்த திரைப்படத்தில் சாப்ளினின் கைதி எண்ணான 3797 என்பதையே நானும் எனது திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். அதேப்போல, மிகச் சிறந்த மற்றொரு திரைப்படமான To be or not to be-க்கும் எனது திரைப்படத்தில் மரியாதை செய்திருக்கிறேன். அதில் ஒரு சிறுவனுக்கு ஒரு தவறான மனிதன் ராணுவ டாங்கி ஒன்றை பரிசளிப்பான். அதே ராணுவ டாங்கியைத்தான் நானும் எனது திரைப்பத்தில் உபயோகித்திருக்கிறேன்.

கேள்வி நான்கு: எனக்கு இந்த திரைப்படம் பிடிக்கவில்லை. ஏனெனில், இது வரலாற்றை திரித்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதோடு, தேவையற்ற வகையில் அதீத உணர்வெழுச்சியை தூண்டும் வகையிலும் நிறைவுகொள்கிறது. இந்த விமர்சனத்துக்கு நீங்கள் எப்படி எதிர்வினையாற்ற போகிறீர்கள்?

உங்களது கருத்தை மதிக்கிறேன். இந்த கருத்து ஏற்கனவே பலமுறை என்னிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தை நாம் பல்வேறு முறை பார்க்கும்போது, அந்த படத்தின் மீதான நமது உணர்வும், எண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கும். இதனால், முதல்முறை மிக இயல்பாக இருந்த படத்தின் மீதான நமது அணுகுமுறை மாறிவிடுகிறது. இதுதான் நமது ஞாபகத்தில் ஏற்படுகின்ற மிகப்பெரிய துயரார்ந்த விஷயம்.  நமது மூளையில் தாந்தேவின் நரகம் வந்து இறங்கிவிடுகிறது. ஆனால், நீங்கள் முதலில் தெரிவித்த விஷயத்துக்கு நான் பதிலளித்தாக வேண்டும். இந்த திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் வதைமுகாம் என்பது எந்தவொரு குறிப்பிட்ட வதைமுகாமின் நேரடி சித்தரிப்பு அல்ல. இது இத்தாலி அல்லது ஜெர்மனி என்று எங்கும் குறிப்படப்படவில்லை. மையக் கதாப்பாத்திரங்கள் ஜெர்மனில் பேசுகிறார்கள் என்பதால், கதை நிகழும் இடத்தை ஜெர்மனியாக நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆஸ்ட்விச் வதைமுகாம் என்றோ பெர்கனூ வதைமுகாம் என்றோ நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஏனெனில், பார்வையாளர்கள் உடனடியாக இது அந்த வதைமுகாமைப்போல காட்சியளிக்கவில்லை என்று சொல்லிவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் முற்றிலும் சுதந்திரமானவனாகவும் அதே சமயத்தில் அந்த நிகழ்வுகளின் பின்னுள்ள உணர்வுகளை மதிக்கக்கூடியவனாகவும் இருந்தே இந்த திரைப்படத்தை உருவாக்க எண்ணினேன்.

உதாரணத்திற்கு, எந்தவொரு வதைமுகாமும் மலையடிவாரத்தில் இல்லை என்பது நமக்கு தெரியும். அதனால்தான், எனது திரைப்படத்தில் உருவாக்கிய வதைமுகாமை மலையின் பின்னணியில் அமைந்திருந்தேன். நான் ஆவணப்படத்தை உருவாக்கவில்லை என்கின்ற தெளிவு என்னிடம் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. அதுப்போலவே, இது பேரழிவு தருணத்தைப் பற்றிய கருத்துப் படமும் அல்ல.

இரண்டாவதாக, உணர்வெழுச்சியை தூண்டு வகையில் காட்சிகள் இருந்ததாக நீங்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு மன்னிப்பை கோருகிறேன். முன்பே தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். வலிந்து உணர்வை தூண்டு முறையை நான் மிக மிக மிக அதிகமாகவே வெறுக்கிறேன். இதனை தவிர்க்க வெகுவாக நான் முயற்சித்தேன். ஒரு தந்தை தனது மகனுடன் ஆபத்தில் சிக்கியிருக்கிறான் எனும் இதன் மூல ஐடியா உருவானபோது முதலில் எனக்கு எழுந்த உணர்வு என்பது இது அபாயகரமானதாக இருக்கிறது. நாம் எல்லோரும் தொலைந்தோம்! ஒரு சிறுவன் பேரழிவு சூழலில் சிக்கியிருக்கிறான் எனும் எண்ணத்தை நான் வெறுக்கிறேன். அதுவொரு மிரட்டலைப் போன்றது. அதனால் இது மிகவும் கடினமானது. என்னால் இதனை நெகிழ்வூட்டும் திரையாக்கமாக அன்றி வேறு எப்படியும் உருவாக்க முடியாது என்பது உரைத்ததும், இந்த திரைப்படம் குறித்து சிந்திப்பதையே கிட்டதட்ட நிறுத்திவிட்டேன். படத்தில் நான் மகனுடன் சேர்ந்து அழவில்லை. என்னை நினைவு வைத்துக்கொள் எனும் உருக்கமாக பேசவில்லை. மனிதர்களை வெறுக்காதே என உபதேசம் செய்யவில்லை.  நான் எப்போதும் நகைச்சுவையாகவும் சமயங்களில் கடினமானவனாகவும் மட்டுமே திரைப்படத்தில் இருக்கிறேன். இறுதியில், அவனை முத்தமிடுகிறேன். ஏனெனில், எனது கதையின் விவரிப்பு முறைக்கு அது தேவையாக இருந்தது. அது சிறிய அளவில்  விடைபெறுதலுக்கான குறியீடாக மட்டுமே கையாளப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், எந்தவொரு குழந்தையும் விரும்பும் மிகச் சிறந்த பண்புகளை கொண்ட மெல்லிய உணர்வுகொண்ட தந்தையாக படத்தில் நானிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. நான் எப்போதும் எனக்கான அக நிறைவை மட்டுமே மூலாதாரமாக கொண்டு ஒரு செயலில் இறங்குவதில்லை. நான் முயற்சித்தேன். எனினும், ஒரு சமன்பாடு தேவையாய் இருந்தது. இதையெல்லாம் விடவும் சிறிய சிறிய குறைகள் கதை விவரித்தலில் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை. இந்த திரைப்படத்தை மிகத் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன். இது மிகவும் எளிமையான திரைப்படம். ஒரு நூறு முறை திருத்தி திருத்தி எழுதியதற்கு பிறகே, அந்த சிறுவனுக்கு சிறுவனுக்குரிய மொழியை பயன்படுத்தினோம். பெரியவனைப்போல அவன் பேசினால் ஒட்டுமொத்த உணர்வும் குலைந்துவிடும். கூடுமானவரையில், எளிமையாக இந்த திரைப்படத்தை உருவாக்க விரும்பிய நாங்கள், அதே சமயத்தில் உண்மையில் இருந்து முற்றிலுமாக விலகிவிடவும் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

கவிஞர் ஜான் கீட்ஸ் தெரிவித்ததைப்போல, “உண்மையானதால் அது அழகாக இருப்பதில்லை. ஆனால், அழகான ஒன்று உண்மையாகிவிடுகிறது”. இவ்விரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நீங்கள் ஒன்றை மிக அழகாக உருவாக்கும்போது, அது உண்மை என நிலைத்துவிடுகிறது. அதே சமயத்தில் இது உண்மையாக இருப்பதால் மட்டுமே அழகானதாக இருப்பதில்லை. உண்மை அச்சுறுத்தும் வகையிலான கதையாகவும் இருக்கலாம்.

முதலில் இது புனைவால் உருவாக்கப்பட்டிருப்பது. நீங்கள் ஒரு உண்மை கதையை உருவாக்குகிறீர்கள் என்றாலும், கூடுமானவரையில் அதனை மிகைப்படுத்த வேண்டும். அதுதான் ஒரு கலைஞனின் பணி. அவன் உண்மையை மழுங்கடித்து அதன் மீது தனது கருத்தியலை கட்டியெழுப்ப வேண்டும். இவை கனவுகளை ஒத்தவை. ஏனெனில், மொழிகள் வேறுபாடுகளை கொண்டவை. இல்லையெனில், நாம் வெறுமனே போலிதான் செய்துக்கொண்டிருப்போம். போலி செய்வது கலைஞனின் வேலையும் அல்ல.

கேள்வி ஐந்து: உங்களது கலை செயல்பாட்டில் ஒரு கதையை சொல்லுவதன் மீதுதான் நீங்கள் அதிக சார்புடைவராக இருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. ஆனால், கதைச் சொல்லும் முறையில் ஏதேனும் சிக்கல் உருவெடுத்தால் என்ன செய்வீர்கள்?

இது மிகவும் சுவாரஸ்யமான கேள்வி. தனித்தன்மை வாய்ந்த கேள்வியும் கூட. நான் என்னை ஒரு கதைச் சொல்லியாகத்தான் உணருகிறேன். கதைச் சொல்வதை பெரிதும் விரும்புகிறேன். உலகத்த்தின் மிகத் தொன்மையான செயல்பாடுகளில் – பாலியல் தொழிலுக்கும் முன்னதாக - ஒன்றாக கதைச் சொல்வதை நான் பார்க்கிறேன். எனது வாழ்க்கையில் கதைச் சொல்லாத தருணங்கள் மிகச் சொற்பமானவையே. எனது திரைப்படத்தில் ஒருவகையில் மெளனத்திற்கும் நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன். ஒரு உள்ளுறைந்த சந்தம் இருக்கிறது. இவை அனைத்தும் தாமாக ஒரு கதையை தம்மளவில் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால், உங்களது கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆந்த்ரேயன் எனக்கு உதவி செய்வார் என்று நம்புகிறேன்.

எனது உதவி இல்லாமலேயே நீங்கள் மிக சிறப்பாக பதில் அளித்துவிட்டீர்கள். ஒருவேளை நான் பதில் அளிக்க முயன்றிருந்தால், பெரியளவில் குழப்பமுற்றிருப்பேன். இங்கு குழுமியிருக்கும் அனைவரையும் எழுந்து நின்று ராபர்த்தோவுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று பணிக்கிறேன்.

உங்கள் அன்புக்கு நன்றிகள்! மிகுந்த நன்றிகள்!

நன்றி : அம்ருதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com