தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் வெடிக்குமா? நமுக்குமா?

தீபாவளி என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் வெடிக்குமா? நமுக்குமா?

தீபாவளி என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். காரணம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் படங்கள் அவர்களுக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த ஆண்டு விஜய் நடிப்பில் பிகில், கார்த்தியின் கைதி, ஹவுஸ்புல் 4, மேட் இன் சீனா , சாந்த் ஹி ஆங்க், ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. தீபாவளிக்கு 5 படங்கள் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பு வந்துள்ளது. இவற்றில் எந்த படங்கள் ஹிட் ஆகும் எந்த படங்கள் தோல்வி அடையும் என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள்தான். பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் களம் இறங்கி இருக்கும் பிகில் படம் வெளியாவதற்கு முன்னால் கடும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

பிகில் படத்துக்கான எதிர்ப்பார்ப்புகள்

  • பிகில் படத்தில் விஜய் சொந்தக் குரலில் பாடியுள்ள வெறித்தனம் என்ற பாடல் ஏற்கனவே வைரலாகி ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் படத்தில் அப்பாடல் எப்படி காட்சியமைக்கப்பட்டிருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். இப்படம் 4200-க்கும் அதிகமான திரையரங்குகளில் உலகம் முழுவதும் ரீலீஸாகவிருக்கிறது. மேலும் ரூ.136.55 கோடி வரையில் இதுவரையில் வசூலை குவித்துவிட்டது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25-ம் தேதி) வெளியாகும் இப்படத்துக்காக ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 
  • படத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் நடித்துள்ள காட்சிகளை ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் படத்தில் அவை எப்படி இடம்பெறும் என்பதைக் காண ஆவலாக உள்ளனர். 
  • பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பின்னணிக் கதை என்னவாக இருக்கும் என்பதில் திரை ஆர்வலகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • படத்தில் நான்கு ட்விஸ்ட் உள்ளது என்று அட்லி ஒரு பேட்டியில் கூறியிருக்க அந்த டிவிஸ்டுகளுக்காக இப்போதே நகம் கடிக்கத் தொடங்கிவிட்டனர் விஜய் ரசிகர்கள்.

பிகில் சர்ச்சை 1

தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள பிகில் படத்துக்கு சிறப்பு காட்சியை அனுமதிப்பது குறித்து, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்த கருத்துக்களால் மேலும் சிக்கல் உருவாகியுள்ளது.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. பிகில் படத்துக்கு சிறப்பு காட்சியை அனுமதிப்பது குறித்து, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்த கருத்துக்களால் மேலும் சிக்கல் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்துக்களாவன பின்வருமாறு:

தீபாவளியையொட்டி வெளியாகும் பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை. அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையில்லை என உறுதியளித்தால் மட்டுமே சிறப்பு காட்சியை அனுமதிக்க அரசு தரப்பில் பரிசீலிக்கப்படும். அதேசமயம் பிகில் படத்துக்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பேற்காது.

பிகில் சர்ச்சை 2

இந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று செல்வா என்ற உதவி இயக்குநர் தொடர்ந்துள்ள வழக்கால் படக்குழுவினர் சிக்கலி ஆழ்ந்துள்ளனர்.

பிகில் திரைப்படத்தின் கதைக்கான உரிமை  கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் செல்வா தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஜய் நடித்து இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாடுவது பற்றிய இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது ஆகும். எனவே, இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் இயக்குநர் அட்லீ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இது பதிப்புரிமை தொடர்புடையது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறவும், புதிதாக மீண்டும் வழக்குத் தொடரவும் அனுமதி கோரி, உதவி இயக்குநர் செல்வா சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், இந்தத் திரைப்படம் தொடர்பாக புதிதாக வழக்கு தொடர அனுமதிக்க முடியாது என்ற நிபந்தனையுடன் வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வா வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிகில் திரைப்படத்தின் பதிப்புரிமை தொடர்பாக  மனுதாரர் செல்வா, கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார். மேலும், மனுதாரர் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கதாநாயகி இல்லாத கைதி

'மாநகரம்' படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து "கைதி'யுடன் களம் இறங்குகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஓர் இரவு.. ஒரு காடு... ஒரு கைதி... இதுதான் இந்தப் படத்தின் பரபர ஒன் லைன்.

தீபாவளி ரேஸில் முதல் ஆளாக இடம் பிடித்த 'கைதி', ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசஸருக்கு இணையத்தில் ஏக வரவேற்பு. அதே போல் படத்தின் ட்ரெய்லருக்கும் அமோக வரவேற்பு.

நடிகர்களுக்கு ரிகர்சல் கொடுக்கிற மாதிரி, இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு, படத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு ஒருநாள் ரிகர்சல் நடந்துள்ளது. அதையும் ஒரு படப்பிடிப்பு மாதிரியே நடத்தி ஐந்து நிமிட அளவுக்கான வீடியோவாக எடுத்து, அதை எடிட் செய்து, அதற்குப் பின்னணி இசை சேர்த்து முழுமையான வீடியோவாக தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு படப்பிடிப்புக்கு தயாராவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என்கிறார்கள். இந்த வீடியோ மூலமாக கதை எந்த எல்லைக்குள் பயணிக்கப் போகிறது என்ற மைண்ட் செட்டை படக்குழுவுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். தீரன் அதிகாரம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் படத்துக்கு ஒளிப்பதிவு.

கிடைக்கிற வெளிச்சத்திலேயே அழகான காட்சி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, சண்டைக் காட்சிகளில் எல்லாக் காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடித்திருக்கிறார் கார்த்தி. பின்னணி இசையில் சாம் சி.எஸ்ஸும் படத்தொகுப்பில் பிலோமின் ராஜும் தன் பங்கை நேர்த்தியாக கொண்டு வந்துள்ளார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் தென்மலை பகுதியில் நடந்துள்ளது. கடுமையான குளிரில்தான் படப்பிடிப்பு. குழுவில் எல்லோரும் கம்பளி போர்த்திக் கொண்டுதான் வேலை பார்த்திருக்கிறார்கள். கார்த்திக்கு காட்சிகளுக்கான ஆடை மட்டும்தான். அதனால் குளிரில் பயங்கரமாக சிரமப்பட்டுள்ளார்.

இவை தவிர சில ஹிந்திப் படங்களும் வெளியாகின்றன. துஸ்கர் ஹிராந்தனி இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்த் ஹி ஆங்க் (saand ki aankh). சந்திரா தோமர் மற்றும் பிரகாஷி தோமர் ஆகிய துப்பாக்கி சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

நாகினி புகழ் மௌனி ராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மேட் இன் சீனா. காமெடி ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. போலவே, பர்ஹாத் சாம்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹவுஸ்புல் 4. இதுவும் ஒரு காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com