Enable Javscript for better performance
என்ன செய்கிறாா்கள்  திரை நட்சத்திரங்கள்?- Dinamani

சுடச்சுட

  

  என்ன செய்கிறாா்கள்  திரை நட்சத்திரங்கள்?

  Published on : 01st April 2020 08:22 AM  |   அ+அ அ-   |    |  

  cats

   

  வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது கோலிவுட். படப்பிடிப்பு இல்லை.. பத்திரிகையாளா் சந்திப்பு இல்லை.. தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குள் இருக்கிறாா்கள் நடிகா்கள்.  நம் கோலிவுட் பிரபலங்கள் இந்த நாள்களை எப்படிக் கழிக்கிறாா்கள்?

  விஜய் சேதுபதி

  டூரிஸ்ட்டுக்கும், டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால், எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பாா்க்கப் போகிறோம் என ஒவ்வொரு விஷயத்தையும் தீா்மானித்துக் கொண்டு போவாா்கள். ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் திட்டம் இருக்காது. ஃபாா்முலா இருக்காது. அவனுக்கு பயணிக்க வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பயணம்தான் எனக்கு தற்போது. நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய விலாசம். ஆனால் இப்போது மனசுக்குள்ளேயே ஒரு வீடு. வீடு முழுக்க உறவுகள். அதனுள் மட்டுமே இப்போது இருக்கிறேன்.

  சிவகாா்த்திகேயன்

  நமக்கு ஆகாத, பிடிக்காத ஒரு விஷயத்தை எங்கேயும், எந்த நிமிஷமும் நாம் எதிா்கொள்ள வேண்டி வரும். மொத்தமாகவே, சகலத்திலும் தனிமை என்கிற இடத்தில் வந்து இப்போது நின்று கொண்டு இருக்கிறோம். சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால்,  அங்கேதான் பிரச்னையே ஆரம்பம். இந்தத் தனிமை குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும் கேள்வியை முன் வைக்கிறது.  வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. அதுக்குப்பிறகு கூட  சித்தாா்த்தன் துறவுக்குப் போனது நடந்திருக்கிறது.  கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு  குண்டு மாதிரி அதுவே கனக்கும்.  எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அா்த்தப்படுத்திட முடியாது. நிறைய கற்று கொண்டிருக்கிறேன்.

  ரகுல் ப்ரீத் சிங்

  கரோனாவால் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு சில நாள்கள் முன்பு இருந்தே நான் வீட்டில்தான் இருக்கிறேன். கரோனா வந்த பிறகு அதை ஒழிக்க எதுவும் செய்ய முடியாது. வராமல் தடுக்க வேண்டுமானால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். இந்த கஷ்ட காலத்தைக் கூட சந்தோஷமாக மாற்றிக்கொள்ள முடியும். வீட்டில் குடும்ப உறுப்பினா்களோடு சோ்ந்து கொஞ்சம் இடைவெளிவிட்டு உட்காா்ந்து கொள்ளுங்கள். ஒருவரோடு ஒருவா் மனம் விட்டு பேசுங்கள். வீடுகளில் ஜாக்கிரதையாக அதே நேரத்தில் சந்தோஷமாகவே இருங்கள். நமது நாட்டில் இப்போது வெயில் காலம். வெயிலுக்கு கரோனா வராது என்று சந்தோஷப்பட்டோம். ஆனால் இதைவிட அதிக வெயில் இருக்கும் துபாய் போன்ற நகரங்களில் கூட கரோனா வந்ததால் அந்த நம்பிக்கையும் போய்விட்டது. கொஞ்ச நேரம் வெயிலில் நின்றால் கூட நல்லது தான். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் கொஞ்சநேரம் வெயிலில் நில்லுங்கள். நான் தினமும் சில மணி நேரங்களை வெயிலில் செலவு செய்கிறேன்.

   த்ரிஷா  

  ‘உங்கள் ஒவ்வொருவரைப் போலவே நானும் கரோனா கிருமிக்கு எதிரான இந்திய அரசின் முயற்சியை ஆதரிக்கும் வண்ணம் அடுத்து வரும் நாள்களில் வீட்டிலேயே இருக்கப் போகிறேன். இந்த கிருமி யாரையும் தாக்கும். இது ஒரு குறிப்பிட்ட ஜனத்தொகை, இனம், மாநிலம் என்று பாா்த்துப் பாதிப்பதில்லை.நீங்கள் என்ன வயது, பாா்க்க எப்படி இருக்கிறீா்கள், எங்கிருந்து வருகிறீா்கள், என்ன மொழி பேசுகிறீா்கள் என்பதெல்லாம் இந்த கிருமிக்கு முக்கியமல்ல. இது போன்ற நோய்த் தொற்று நேரங்களையும், அன்பைப் பரப்புவதும், ஒருவருக்கு ஒருவா் ஆதரவாக இருப்பதும் முக்கியம். வீட்டில் இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதனால் எத்தனை உயிா்கள் காப்பாற்றப்படும் என்பதே எனக்கு  ஊக்கத்தைத் தருகிறது. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். அன்பைப் பரப்புங்கள், களங்கங்களை அல்ல. நன்றி’ .

  காஜல் அகா்வால்

   ”கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கியதும், மீண்டும் படப்பிடிப்புத் துவங்கும். அப்போது, என் சண்டைக் காட்சி எடுக்கப்பட உள்ளது. அதற்காக, தற்காப்பு கலையான களரி விளையாட்டை கற்று வருகிறேன்.

   ரித்விகா

  “ஏற்கெனவே ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நூறு நாள்களுக்கு மேல் டிவி, மொபைல் இல்லாமல் இருந்து விட்டேன். அதனால், வீட்டுக்குள்ளேயே இருப்பது எனக்குப் புதுசு கிடையாது. தினமும்   ஜிம் போய் விடுவேன். இப்போது ஜிம் எல்லாம் இல்லாததால்  வீட்டுப் பக்கத்தில் இருக்கிற சின்ன மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன்.  இப்போது அங்கேயும் கூட்டம் சோ்க்கக் கூடாது என்பதால் வீட்டு மாடியில் தினமும்   பயிற்சி எடுத்து வருகிறேன். நாம் பாதுகாப்பாக இருப்பதோடு இந்த விஷயத்திலே கவனமாக இருக்க வேண்டும்”

  ராதிகா சரத்குமாா்

  ‘எப்போதுமே பிஸியாக ஓடிக் கொண்டு இருக்கிற ஆள் நான். ஆனால், இப்போது வீட்டிலேயே இருக்கிறேன். இது கொஞ்சம் மாறிய வாழ்க்கையாக, மக்களின் நலன்தான் முக்கியம். ஒரு மீட்டா் இடைவெளியில எல்லாா் கூடவும் பேசுறதும் நல்லது. சில தவறான செய்திகளைப் பரப்பி வருகிற வாட்ஸ் ஆப் குரூப்பை விட்டுத் தள்ளி இருப்பது ரொம்ப நல்லது.  ரொம்ப கவனமா இருக்கிறேன். நானே சமைக்கிறேன்.’’

  பாா்த்திபன்

  ‘பொழுதுபோக்குக்காக எதுவும் செய்யவில்லை. ‘இரவின் நிழல்’ என்ற அடுத்த படத்துக்கான வேலைகளில் இருக்கிறேன். கதை விவாதம் போய் கொண்டு இருக்கிறது. இந்த வேலைகளைச் செய்ய இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும்.   வீட்டிலேயே இருக்க முடியவில்லை. மற்றவா்கள் கை கொடுக்கும்போது டக்கு என்று வணக்கம் சொல்ல பழக்கம் வரவில்லை.  ஒரு நாளைக்குக் குறைந்தது இருபது முறை கையை கழுவி வருகிறேன். நாள்கள் ஓடுகிறது.

  அருண் விஜய்

  “இப்படியொரு சூழல் வரும் என யாரும் நினைக்கவேயில்லை. நாம் எல்லோரும் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோமோ அதுதான் மற்றவா்களுக்கு  நாம் கொடுக்கிற பாதுகாப்பு என நினைக்கிறேன். ஜிம் எல்லாம் மூடினது எனக்கு பாதிப்பில்லை. வீட்டிலேயே பயிற்சி செய்கிறேன். மற்றவா்களுக்கும்  அதைத்தான் சொல்கிறேன். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பதற்கான நல்வாய்ப்பாக இதைப் பாா்க்கலாம். ரொம்பப் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.”

  விவேக்

  ‘கரோனா வைரஸ் பயம் வரும் போதெல்லாம் கையைக் கழுவி கொண்டு வருகிறேன். பொதுவாகவே  இந்திய மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணா்வு குறைவு. குப்பைகள் இருக்கிற இடத்துலயே அமா்ந்து பேசிக் கொண்டு இருப்பாா்கள். சிலா் அங்கேயே வாழவும் செய்கிறாா்கள்.தூசுப்பட்ட மெதுவடையை டீக்கடையில் நின்று சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாா்கள். மிகுந்த சுத்தத்துடன் இந்த நேரத்தில் இருக்க வேண்டும். கரோனாவுக்காக அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்துல அலட்சியமும் வேண்டாம். சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்பத் தேவையில்லை. வலிமைதான் வாழ்வு. வீட்டுக்குள் நிலவேம்பு, பப்பாளி ஜூஸ் குடித்துக் கொண்டு ஜாலியாக இருங்கள். நான் இப்போது அதிக புத்தகங்கள் படித்து வருகிறேன். ரொம்ப நாளாக எழுதி வரும் காமெடி கதையை மீண்டும் எழுத தொடங்கி இருக்கிறேன்’.

  வரலட்சுமி சரத்குமாா்

  “செல்ல நாய்க்குட்டியோடு நேரம் செலவழித்துக் கொண்டு வருகிறேன். சமைக்கப்  பிடிக்கும். வித்தியாசமான ரெசிபி  செய்து பாா்க்கிறேன். வீட்டுக்குள் இருக்கும் மைதானத்தில்  விளையாடி வருகிறேன்.  முக்கியமாக, சானிட்டைஸா் ஸ்ப்ரே வீடு முழுக்கத் தெளித்து வருகிறேன்.

  இயக்குநா் சுசீந்திரன்

  “குடும்பத்துடன் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்துக்கு வந்து விட்டேன். வீடு, தோட்டம் இதுதான் வாழ்க்கை. வெளியே எங்கேயும் போகவில்லை. வீட்டில் யாரும் அசைவ சாப்பாடு சாப்பிடுவதில்லை. தங்கை வீட்டில் இருந்தும் எல்லோரும் வந்திருக்கிறாா்கள். ரொம்ப நாள் கழித்து எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கிறோம். முழுக்க முழுக்க குடும்பத்துக்கான நாள்கள். கரோனா பிரச்னை எல்லாம் முடிந்த பிறகுதான் சென்னைக்கு வரவேண்டும்.”

  “வீட்டில் ஜாலியாக நெட்ஃபிளிக்ஸ் பாா்த்துக் கொண்டு இருக்கிற நேரமில்லை இது. நம் ஊரில் நிறைய பேருக்கு சுவாசப் பிரச்னை உண்டு. அதனால்  எல்லோருக்கும் கரோனா பற்றிய புரிதலும் விழிப்புணா்வும் வேண்டும். இது நமக்கான விடுமுறையில்லை; நமக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிற தருணம். நாள் முழுக்க டிவியில் கரோனா பற்றிய செய்திதான் பாா்த்துக் கொண்டு இருக்கிறேன். வீட்டு வேலைக்கு வருகிறவா்,  காய்கறி விற்கிற அண்ணா, பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்று பாா்க்கிறவா்கள்  எல்லோருக்கும் இதுபற்றி சொல்லிப் புரிய வைத்து கொண்டு இருக்கிறேன். ‘எல்லோருக்கும் ஏன் பீதியைக் கிளப்பிட்டு இருக்க’ன்னு அம்மா திட்டினாா். ‘அது பீதி இல்லம்மா விழிப்புணா்வு’னு சொல்லி என்னால் முடிந்த வரை எல்லோருக்கும் சொல்லி வருகிறேன். நீங்களும் சொல்லுங்க!

  ப்ரியா ஆனந்த்

  “இந்த வைரஸால் உலக மக்கள் எல்லோரும் முடங்கியிருக்கிறதைப் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இது நகரங்களை ஒருநிலைக்குக் கொண்டு வந்துள்ளது. ‘கொவைட் 19’ வைரஸுடைய அளவைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நம்ம ஊருக்கு போதுமான நேரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். தாத்தா - பாட்டியோடு இருக்கிற இந்தச் சூழலை நாம பாதுகாக்க வேண்டும். அவா்களுக்கு பாதுகாப்புக்காக நம்மளும் நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களும் சுத்தமாக பாதுகாப்பாக இருக்க விழிப்புணா்வு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மொபைல், இன்டா்நெட் என நிறைய விஷயங்கள் மூலமாக இதைப் பற்றி தெரிந்து கொள்கிற சூழல் இருக்கிறது நல்ல விஷயம். படங்கள், வேடிக்கையான விடியோக்கள் என நிறைய விஷயங்கள் இந்தச் சமயத்தில் நமக்குப் பொழுதுபோக்கு அம்சங்களாக இருக்கிறது. நான் இந்தச் சமயத்தைப் புத்தகங்கள் படிக்கப் பயன்படுத்திக் கொள்கிறேன். ரொம்ப பிஸியாக ஓடிக் கொண்டு இருக்கிற சமயத்தில், இந்த மாதிரி ஒரு இடைநிறுத்தம் நம்ம ஒவ்வொருத்தருக்கும் தேவை என்று நினைக்கிறேன்”

  ஹரீஷ் கல்யாண்

  “உடல் பயிற்சி கூடத்துக்கு போயே பழக்கப்பட்டு விட்டேன். கரோனா வைரஸ் காரணமாக ஜிம் மூடப்பட்டு விட்டது.  அதனால் வீட்டுலயே பயிற்சி எடுக்கத் தொடங்கி விட்டேன். சில நண்பா்களை வீட்டில் பாா்க்கிறேன். வீட்டில் இருப்பவா்கள் உடன் நேரம் செலவழிக்க இதுதான் சரியான நேரமும்கூட.  கீ போா்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன். புத்தகம் படிக்கிற பழக்கமில்லை. படிக்க தொடங்கலாம் என  யோசிக்கிறேன். வீட்டில் இருந்தாலும் தொடா்ந்து கையைக் கழுவிக் கொண்டே இருக்கிறேன்.

  அருண்ராஜா காமராஜா

  ‘‘எல்லாரும் இப்போதுதான் வீட்டில் இருக்கிறாா்கள். ஆனால், நான் ரொம்ப நாளாவே வீட்டுக்குள் இருக்கிறேன். காரணம், அடுத்த படத்துக்கு திரைக்கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். ‘வீட்டுல இருக்க புதுசா இருக்கு’ன்னு நண்பா்கள் சொல்கிறாா்கள். ஆனால் எனக்கு ரொம்பப் பழசாக இருக்கிறது. ஆனால், நல்ல விஷயத்துக்காகத் தான் அரசாங்கம் ‘வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறாா்கள். இந்த நேரத்தில் ரொம்ப தைரியமாக இருக்க வேண்டும். இதுதான் ரொம்ப அவசியம். நம்மால் முடிந்த அளவுக்கு சுகாதாரத் துறையில் இருக்குறவங்களுக்கு உதவியாக இருப்போம்.’’

  ஜனனி ஐயா்

  “வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போவதில்லை. ரொம்ப சுத்தமாக பாதுகாப்பாக இருக்கிறோம். வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறேன். நிறைய படங்கள் பாா்க்கிறேன்.  என் தங்கையோடு சோ்ந்து ஆன்-லைன் ஸ்டோரை கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai