இயக்குநர் மகேந்திரனின் நினைவு தினம்: ரஜினிக்கு கை கொடுத்த கலைஞன்!

‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்?’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கி...
இயக்குநர் மகேந்திரனின் நினைவு தினம்: ரஜினிக்கு கை கொடுத்த கலைஞன்!

80களில் தமிழ் சினிமாவில் புதிய அலை ஒன்று வீசியது. பாரதிராஜா, பாலு மகேந்திரா, கே பாலசந்தர், மணி ரத்னம், கே. பாக்யராஜ் ஆகியோரின் வரிசையில் தானும் இடம்பெற்று தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திக் காட்டியவர் மகேந்திரன். கடந்த வருடம் இதே நாளில் நம்மை விட்டுப் பிரிந்தார்.

1978-ல், முள்ளும் மலரும் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகுக்கு இயக்குநராக மகேந்திரன் அறிமுகமானார். முன்னதாக நாம் மூவர்,     சபாஷ் தம்பி, நிறைகுடம், கங்கா, திருடி உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். முதல் படத்தைத் தொடர்ந்து உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். 2006-ல் வெளியான சாசனம் அவர் இயக்கிய கடைசிப் படம். தெறி, நிமிர், மிஸ்டர் சந்திரமௌலி, சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர். 1939-ல் பிறந்தார். நிஜப் பெயர், அலெக்ஸாண்டர். கல்லூரியில் படித்தபோது விளையாட்டில் திறமையாக இருந்த தனது சீனியர் மீதான அன்பினால் தனது பெயரை மகேந்திரன் என்று மாற்றிக்கொண்டார். இளையான்குடியில் பள்ளிக்கல்வியையும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 'இண்டர்மீடியட்' கல்வியையும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.ஏ பொருளாதாரமும் படித்தார்.

குறை மாதத்தில் பிறந்ததால் பலரும் மகேந்திரனின் தாயிடம், மற்ற பிள்ளைகள் போல இவனால் ஓடியாட முடியாது என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இதை மாற்றவேண்டும் என முயற்சி எடுத்துள்ளார் மகேந்திரன். நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துள்ளார். கல்லூரியில் படித்தபோது எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தது இவரது வாழ்க்கையை சினிமா பக்கம் திருப்பிவிட்டது.

எம்.ஜி.ஆர். கொடுத்த வாய்ப்புகள்

திரையுலகின் ஆரம்ப வாழ்க்கையின்போதே எம்.ஜி.ஆருடன் பேசிப்பழகும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்?

கல்லூரி மாணவராக இருந்தபோதே எம்.ஜி.ஆரை ஈர்த்துள்ளார் மகேந்திரன்.

எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படத்தின் 100-வது நாள் விழா, மதுரை அழகப்பா கல்லூரியில் நடைபெற்றது. அந்தக் கல்லூரி மாணவரான மகேந்திரன், எம்.ஜி.ஆர். முன்னிலையிலேயே தமிழ் சினிமாவை விமரிசித்துப் பேசினார். முக்கியமாக தமிழ் சினிமாவில் இடம்பெறும் பாடல்கள் குறித்த தனது விமரிசனத்தைத் தைரியமாகக் கூறினார். இந்தப் பேச்சை மிகவும் ரசித்துள்ளார் எம்.ஜி.ஆர்.

பிறகு சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றியபோது எம்.ஜி.ஆரை மீண்டும் சந்தித்தார் மகேந்திரன்.

சினிமாவை விமரிசனம் செய்த மகேந்திரனை சினிமாவிலேயே பணியாற்ற வைத்தார் எம்.ஜி.ஆர். பொன்னியின் செல்வன் நாவலை மகேந்திரனிடம் அளித்து அதைத் திரைக்கதையாக்கும் பணியை வழங்கினார். அதுதான் திரைக்கதையாசிரியராக மகேந்திரனின் முதல் பணி. பலருடைய

எம்.ஜி.ஆர். சொல்லி பலர் பொன்னியின் நாவலுக்குத் திரைக்கதை அமைத்துள்ளார்கள். ஆனால் எதிலும் திருப்தியடையாத எம்.ஜி.ஆர்., மகேந்திரனின் பொன்னியின் செல்வன் திரைக்கதையைப் படித்துவிட்டு சம்மதம் சொல்லியுள்ளார். மகேந்திரன் எழுதிய திரைக்கதையைப் படமாக்கவும் முடிவு செய்தார். ஆனால், கடைசிவரை எம்.ஜி.ஆரால் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வனை உருவாக்க முடியாமல் போனது. எம்.ஜி.ஆருக்காக மகேந்திரன் எழுதிய பொன்னியின் செல்வன் திரைக்கதை இன்று யாரிடம் உள்ளது என்று தெரியவில்லை.

எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித் தலைவன் படத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் மகேந்திரன். இதுபோல எம்.ஜி.ஆருடன் இணைந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1960களில் நாடகங்களுக்கு வசனம் எழுதிய மகேந்திரன், 1966-ல் ஜெய்சங்கர் நடித்த நாம் மூவர் படத்துக்கு வசனம் எழுதியதன் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். சிவாஜி நடித்த நிறைகுடம் (1969), ரிஷி மூலம் (1980), ஹிட்லர் உமாநாத் (1982), தங்கப் பதக்கம் (1974) போன்ற படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். தங்கப்பதக்கம் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். அந்தப் படத்தில் மனைவி இறந்தபிறகு சிவாஜிக்கு வசனம் இருக்காது. இது, தமிழ்த் திரையுலகில் புதிய உத்தியாகப் பாராட்டப்பட்டது. குறைவான வசனங்களில் நடிப்பது புதிதாக இருக்கிறது என சிவாஜி, மகேந்திரனைப் பாராட்டியுள்ளார். பத்திரிகைகளில் சினிமா விமரிசனங்களும் மகேந்திரன் எழுதியுள்ளார்.

சினிமா எனக்குக் கட்டாயக் கல்யாணம் போல. கட்றா தாலியை என்றார் எம்.ஜி.ஆர். கட்டிவிட்டேன் எனப் பேட்டியளித்துள்ளார் மகேந்திரன்.

முள்ளும் மலரும்

கதை, வசனம் எழுத ஆரம்பித்து 12 வருடங்கள் கழித்து தான் மகேந்திரனால் இயக்குநர் ஆக முடிந்தது. அப்போது பாரதிராஜா, கே. பாலசந்தர், பாலு மகேந்திரா போன்றோர் பிரபல இயக்குநர்களாக இருந்தார்கள். எனினும் 1978-ல் வெளியான முள்ளும் மலரும் மகேந்திரனுக்குத் தனி அடையாளத்தை அளித்தது. உமா சந்திரன் எழுதிய நாவலைக் கொண்டு கதை அமைத்தார். உன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மகிழ்கிறேன் என முள்ளும் மலரும் பார்த்துவிட்டு ரஜினியைப் பாராட்டினார் கே. பாலசந்தர். எனக்கே இன்னொரு ரஜினியைக் காண்பித்தார் மகேந்திரன் என அப்படத்தைப் பற்றி எப்போது பேசினாலும் வியந்து பாராட்டுவார் ரஜினி.

*

முள்ளும் மலரும் படத்துக்கு கமல் ஹாசன் உதவியது குறித்து ஒரு விழாவில் இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது:

முள்ளும் மலரும் படத்துக்கு முன்னாடியே வசனகர்த்தாவா தமிழ் சினிமால அறிமுகமானேன். நிறைய படங்கள் பண்ணினேன். ஒருகட்டத்துல சில காரணங்களினாலே சினிமாவே வேண்டாம்னு முடிவு பண்ணினேன்.

அப்போதெல்லாம் ஆழ்வார்பேட்டையில இருக்கிற கமல் வீட்டுக்கு அடிக்கடி போய் சினிமா பத்தி நிறைய பேசிட்டிருப்போம். அந்த மாதிரி ஒரு சமயத்துல அவர் நடிச்ச மலையாளப் படத்தோட தமிழ் டப்பிங்குக்கு வசனம் எழுதச் சொன்னார்.

அப்புறம் அவரே தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார்கிட்ட என்னை அனுப்பினார். அவர் தயாரிக்க நான் என்னோட முதல் படத்தை இயக்குவதா முடிவாச்சு. அதுதான் முள்ளும் மலரும். கமல் அதுல நடிக்கிறதா பிளான் பண்ணினோம். ஆனா அது நடக்கல.

படத்தில் எனது ரசனைக்கேற்றவாறு கேமராமேன் கேமிராமேன் அமையலன்னு கமலிடம் புலம்பினேன். அடுத்தநாளே அவர் எனக்கு பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்தி வைச்சார்.

ஒரு வழியாகப் படப்பிடிப்பு முடிந்தது. படத்துல ஒரு முக்கியமான காட்சியை எடுக்காம இருந்தோம். கடைசியா பேட்ச் அப் ஒர்க் பண்ணனும் என நினைத்திருந்தேன். அதுதான் செந்தாழம்பூவே பாட்டோட லீட் சீன். ஆனா தயாரிப்பாளர் வேணு செட்டியார் இதுக்கு மேல செலவு பண்ணமாட்டேன் எனக் கண்டிப்பா சொல்லிட்டார்.

அதை எடுக்காம இருந்தா பாட்டைப் படத்துல பயன்படுத்த முடியாது. ஆனா அந்தப் பாட்டைப் பத்தி எனக்குக் கவலை கிடையாது என வேணு செட்டியார் உறுதியா மறுத்துட்டார்.

இந்த விஷயங்களை எல்லாம் கமலிடம் சொன்னேன். உடனே அவர் வேணு செட்டியாரிடம் பேசினார். ஆனால் அவர் எவ்வளவு சொல்லியும் வேணு செட்டியார் கேட்கவில்லை. உடனே கமல், ‘பரவாயில்லை செட்டியார், அந்த ஒரு சீனுக்கு என்ன செலவாகுமோ அதை நான் ஏத்துக்கறேன்னு உடனே சொல்லிட்டார்.  

மறுநாளே சத்யா ஸ்டுடீயோவில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. நான் விரும்பிய விதத்தில் படம் வந்தது. என்னைப் பொறுத்தவரை கமல் ஒரு மகா கலைஞன், மகா மனிதன் என்றார்.

எனினும் மகேந்திரன் இயக்கத்தில் கமலின் நடிப்பைக் காணும் வாய்ப்பு கடைசிவரை ரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை. (ரஜினி - கமல் நடித்த ஆடு புலி ஆட்டம் படத்துக்கு மகேந்திரன் கதை, வசனம் எழுதினார்.)

உதிரிப் பூக்கள்: காலத்தால் அழியாத காவியம்

மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்தின் தரத்துக்கு அருகில் செல்லக்கூடிய ஒரு படத்தை நான் இயக்கிவிட்டால் மகிழ்ச்சியடைவேன் என்று மணி ரத்னம் ஒருமுறை பேட்டியளித்தார். அந்தளவுக்கு எல்லாத் தமிழ் இயக்குநர்களின் பெஞ்ச்மார்க் - உதிரிப்பூக்கள் தான்.

ரஜினியை வைத்து வெற்றிப் படம் கொடுத்தாலும் கமல் நெருங்கிய நண்பராக இருந்தாலும் அதைப் பயன்படுத்தி அடுத்தப் படங்களை அவர் எடுக்கவில்லை. புதுமுகங்களை வைத்து உதிரிப்பூக்கள் போன்ற ஒரு படத்தை எடுத்து உலகத்துக்குத் தன் திறமையை மீண்டும் நிரூபித்துக் காண்பித்தார். கன்னட நடிகை அஸ்வினியைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

புதியவர்களை வைத்து எடுக்கும் படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என நான் நினைக்கவில்லை. பட தயாரிப்பாளர்களை நிராகரித்தேன். என்னிடம் உதவி கேட்டு வந்த தயாரிப்பாளரை, உதிரிப்பூக்கள் படத்தின் தயாரிப்பாளர் ஆக்கினேன் என்றார்.

இப்படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்த விஜயன் கதாபாத்திரத்தை மெச்சாத தமிழ் சினிமா இயக்குநர்களே இருக்கமுடியாது. தமிழ் சினிமா வில்லன்களை உதிரிப்பூக்களுக்கு முன்பு, உதிரிப்பூக்களுக்குப் பின்பு எனப் பிரிக்கலாம் என்கிறார் இயக்குநர் கரு. பழனியப்பன்.

உதிரிப்பூக்கள் வெளியான பிறகு தில்லிக்குச் சென்றிருந்த எம்.ஜி.ஆர்., மகேந்திரனும் தில்லியில் இருப்பதை அறிந்து, நேரில் சென்று பட்டு சால்வை போர்த்தி, உன் திறமையை 1958-லேயே எனக்குத் தெரியும் என்று பாராட்டியுள்ளார். இதன்மூலம் சினிமாவில் சாதிக்கும் திறமை மகேந்திரனுக்கு உள்ளது என்கிற எம்.ஜி.ஆரின் கணிப்பை உண்மையாக்கியுள்ளார்.

*

சுஹாசினி, சரத்பாபு, மோகன், பிரதாப் போத்தன் நடித்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் 1981-ல் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது. ஒரு பெண் ஜாகிங் செய்வதை ஹோட்டல் ஜன்னலில் இருந்து பார்த்துள்ளார் மகேந்திரன். அந்தப் பெண்ணின் கவனம் எல்லாம் உடற்பயிற்சியில் தான் இருந்திருக்கிறது. இதே கவனம் திருமணத்துக்குப் பிறகும் இருக்குமா என்கிற கேள்வியில் பிறந்த படம் தான் அது.

நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் கதாநாயகியாக நடிக்க மகேந்திரன் முதலில் தேர்வு செய்தது, ஓவியர் ஜெயராஜின் மகள் ஹில்டா. ஆனால் அவர் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். பிறகு படப்பிடிப்புக்கு வந்த ஜெயராஜ், அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த சுஹாசினியைப் பார்த்து, இவரையே கதாநாயகியாக நடிக்கவைக்கலாமே என்று யோசனை சொல்ல, அதை ஏற்றுக்கொண்டார் மகேந்திரன்.

பிரபாகரனுடன் சந்திப்பு

மகேந்திரன் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று, 2006-ல் கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள் திரைப்படப் பயிற்சி அளித்துள்ளார் மகேந்திரன். பிறகு பிரபாகரனை நேரில் சந்தித்துள்ளார். முள்ளும் மலரும் இறுதிக்காட்சி தன்னைப் பாதித்ததாக மகேந்திரனிடம் கூறியுள்ளார் பிரபாகரன். நினைவுப்பரிசாக சிறிய தங்கப்பதக்கம் ஒன்றையும் மகேந்திரனுக்கு அளித்துள்ளார்.

நடிகராக அறிமுகம்

இயக்குநர் மகேந்திரன் நடிகராக அறிமுகமான படம் - அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி. இந்தப் படத்தில் நடிப்புக்காகப் பாராட்டுகளைப் பெற்ற மகேந்திரன், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியதாவது:

தாணு சார் அலுவலகத்துல இருந்து அழைத்திருந்தார்கள். சார், ஒரு ஆப்ளிகேஷன். வீட்டுக்கு வரலாமா என்றார் தாணு. அவரிடம்தான் மற்றவர்கள் ஏதாவது கேட்டுப் போவார்கள். அதனால் திகைத்துப் போய்விட்டேன். அதனால் அவர் எதைக் கேட்டாலும் செய்யவேண்டும் என எண்ணியிருந்தேன். என்னைச் சந்தித்து, இந்தப் படத்துல நீங்கள் நடிக்கணும்னு சொல்லி அதற்கு ஒரு கவித்துவமான காரணத்தைச் சொன்னார்.

இதைச் சொல்ல எனக்குக் கூச்சமாக உள்ளது. அவர் என்ன சொன்னார் என்றால், உங்கள் படங்களில் உலகத்தைக் காட்டினீர்கள். நாங்கள், உலகத்துக்கு உங்களைக் காண்பிக்க ஆசைப்படுகிறோம் என்றார். நான் கேட்டேன், இது மிஸ்டர் விஜய்க்குத் தெரியுமா என்று. அவர் சம்மதித்துதான் உங்களைத் தொடர்பு கொள்கிறோம் என்றார். நான் மிகமிக மதிக்கும் கலைஞன், விஜய். அவருடைய பண்பு, அவர் பழகும் விதம் கேள்விப்பட்டு அவர் மீது எனக்கு அன்பு உண்டு. பிறகு என்னால் மறுக்க முடியவில்லை.

எனக்கு நடிக்கக்கூடிய சக்தி உள்ளதா, திறமை உள்ளதா எனத் தெரியவில்லை. ஒப்புக்கொண்டேன். விஜய் தன்னிடமுள்ள உயரத்தை செட்டில் காண்பித்துக்கொள்ள மாட்டார். அற்புதமான மனிதர். நல்ல மனிதாக இருந்தால் மட்டுமே இந்த உயரத்தை அடையமுடியும் என்று பேசினார்.

மகேந்திரன்: சின்னச் சின்ன செய்திகள்

* ஏ பிலிம் பை மகேந்திரன் என்று தன் படத்தின் இறுதியில் போட்டுக்கொள்ள மாட்டார் மகேந்திரன். ஒரு படம் தோற்றால் அதற்கு நான் தான் காரணம். ஆனால் வெற்றி பெற்றால் பலரும் காரணம். அதனால் தான் அப்படிப் போட்டுக்கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.

* மகேந்திரன் படங்களில் குறைவான நடிகர்களே இடம்பெற்றுள்ளார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் - அப்போது வந்த தமிழ்ப் படங்களில் ஒன்றிரண்டு தான் நான் பார்த்துள்ளேன். அதனால் எனக்கு நடிகர்களை அவ்வளவாகத் தெரியாது.

* எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் இணைந்து பணியாற்றினாலும் அவர்களுடன் இணைந்து ஒரு புகைப்படமும் மகேந்திரன் எடுத்துக்கொண்டதில்லை.

* அஸ்வினி, சுஹாசினி, பேபி அஞ்சு, கமலின் சகோதரர் சாருஹாசன் போன்றோரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துள்ளார் மகேந்திரன்.

* சண்டைக்காட்சிகள், பாடல்களிலிருந்து தமிழ் சினிமா விடுபடவேண்டும் என்பது மகேந்திரனின் விருப்பமாக இருந்துள்ளது. அதனால் தான் தன் படங்களை யதார்த்தப் பாணியில் இயக்கவேண்டும் என முடிவெடுத்தார்.

* ஓர் இயக்குநர் என்பவர் தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களைக் கூர்மையாகக் கவனிக்கவேண்டும் என்பார் மகேந்திரன்.

* என் படங்களைப் பத்திரிகைகள் பாராட்டி எழுதியதைக் கூட பெரும்பாலும் படித்ததில்லை என்பார் மகேந்திரன்.

* எனக்கு பிடித்த இயக்குநர் மகேந்திரன் தான் என்று தன்னை அறிமுகம் செய்த பாலசந்தரிடமே ரஜினி கூறியுள்ளார்.

* 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ள மகேந்திரனின் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் ரஜினி. முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை. ரஜினியின் நடிப்பு மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். இன்றைய இயக்குநர்களுக்கு ரஜினியின் நடிப்பு பற்றி தெரிவதில்லை. அவருடைய ஸ்டைலைப் பற்றி மட்டுமே அறிந்துள்ளார்கள். காளி கதாபாத்திரத்தை அருமையாக வெளிப்படுத்தினார். அருமையான நடிகர் என ரஜினியைப் பாராட்டியுள்ளார் மகேந்திரன்.

* தன் மகனின் (ஜான் மகேந்திரன்) வாய்ப்புகளுக்கு எந்த ஒரு பிரபலத்திடம் உதவி கேட்டதில்லை மகேந்திரன். சொந்த முயற்சியில்தான் மகன் முன்னேறவேண்டும் என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்துள்ளார்.

* 2013-ல் சினிமாவும் நானும் என்கிற சுயசரிதையை வெளியிட்டார் மகேந்திரன்.

* மகேந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற வேண்டும் என்று விருப்பப்பட்டவர் பிரியதர்ஷன். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பிறகு பிரியதர்ஷன் இயக்கிய நிமிர் படத்தில் நடித்ததோடு இணை வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார் மகேந்திரன்.

* தெறி, நிமிர், சீதக்காதி, பேட்ட, காமராஜ், மிஸ்டர் சந்திரமெளலி, பூமராங் ஆகிய படங்களில் நடித்துள்ளார் மகேந்திரன்.

* மகேந்திரனுக்குப் பிடித்த உலக சினிமா - வசனங்கள் குறைவாக உள்ள கொரியப் படமான தி வே ஹோம்.

* சர்வதேசப் படங்கள் மட்டுமல்லாமல் நிறைய தமிழ்ப் படங்களையும் பார்க்கும் வழக்கம் அவரிடம் இருந்துள்ளது. இறக்கும் முன்பு தனக்குப் பிடித்ததாக அவர் சொன்ன படம் - ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியா ஜுலியட்.

மறைந்தார்
 

கடந்த வருடம், சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாத காலம் மகேந்திரனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் 2 அன்று மகேந்திரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசக் கோளாறு அதிகரித்ததன் காரணமாக, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அப்போது அவர் வயது 79.

மகேந்திரனுக்கு மனைவி ஜாஸ்மின், மகன் ஜான், மகள்கள் டிம்பிள், அனுரீட்டா ஆகியோர் உள்ளனர். மகேந்திரனின் மகன் ஜான், விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியவர்.

மகேந்திரன் உடலுக்கு நடிகர்கள்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், மோகன், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், சிம்புதேவன், கோபி நயினார், நடிகைகள் ராதிகா, சுஹாசினி உள்பட திரையுலகினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மந்தைவெளி பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இயக்குநர் மகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவின் இரங்கல்

ரஜினிகாந்த்

என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் மகேந்திரன். நடிப்பில் புதிய பரிமாணத்தை கற்றுக் கொடுத்தவர். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர். தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும். இயக்குநர் மகேந்திரனுடன் சினிமாவைத் தாண்டி நட்பு இருந்தது.

கமல் ஹாசன்

கிட்டத்தட்ட புரொடக்‌ஷன் மேனேஜர் அளவுக்கு முள்ளும் மலரும் படத்துக்காக வேலை பார்த்தேன். அது என் மனதில் பசுமையாக உள்ளது. மகேந்திரனைப் பார்த்துதான் நிறைய இளைஞர்கள் சினிமா எடுக்க கிளம்பி வந்தார்கள்.

இயக்குநர் சீனு ராமசாமி: தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது. வரலாறு மறக்க முடியாத இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி என் முன்னோடி ஆசான் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். இதய அஞ்சலி சார்.

நடிகர் ஆர். பார்த்திபன்

முள்ளும் மலரும் மரணம்? இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்'!

பலரின் மரணம் வருத்தமளிக்கும். சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு...ஆனால் மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது!

இயக்குநர் வசந்த பாலன்

சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன். தன் படைப்புகள் மட்டும் பேசப்பட்டால் போதும் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சுயபெருமை பேசாமல், அவர் படங்களில் காணக்கிடைக்கும் அமைதியை போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அவரிடம் இருக்கும் நிதானம், அர்த்தமிக்க அமைதி, முதிர்ச்சி அவரது படங்களில் பிரதிபலிக்கும். அவர் இழுத்து சென்ற தேர் அதே இடத்தில் அதன் தரிசனம் குறையாமல் ஒளிவீசிய வண்ணம் இருக்கிறது.

தங்கப்பதக்கம் திரைப்படம் அதன் வசனத்திற்காகவும் உரத்த கதைகூறலுக்காகவும் நினைவு கூறப்பட்ட திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதிய மகேந்திரனின் திறமையை பாராட்டி அவருக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மிக குறைவான வசனங்கள் உள்ள, திரைமொழிக்கு முக்கியத்துவமுள்ள முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்குகிறார். அங்கு தான் அவரின் கலைத்தன்மை மேலெழுந்து நிற்கிறது.

இன்றும் அவர் படங்கள் அதன் ஸ்திரத்தன்மையை இழக்காமல் காலத்தை எதிர்த்து நிற்கின்றன. காளி என்கிற கதாபாத்திரம் நடிகர் ரஜினி அவர்களை பேட்டை வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திர வடிவமைப்பு. கதாசிரியராக இயக்குநராக அவரின் படங்கள் காலம் மூர்க்கமாக வீசுகிற அலைகளுக்கு முன் துருவேறாமல் அப்படியே நிற்கின்றன. ஒரு கலைஞனின் இடையறாத ஆசையும் கனவு அது தானே. தன் கனவு மெய்ப்பட்டதை கண்ட கலைஞன். நிறைவான பயணம். சென்று வாருங்கள் சார்.

சீமான்

நாடகப் பாணியிலான  திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில்..இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள் , வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகிற்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து.

அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.

கவிஞர் வைரமுத்து

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டு வந்தவர்.

‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுகள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையைத் தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன்.

‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்?’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது. ‘தங்கப் பதக்க’த்தில் அவர் எழுதிய ‘அழகான தவறு’ என்ற வசனம் சிவாஜியைப் போலவே மறக்க இயலாதது.

எனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்தார்.

புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com