நம்ப முடியாத வாழ்க்கை இது: பாலிவுட்டில் 10 வருடங்களைப் பூர்த்தி செய்த ரன்வீர் சிங் உருக்கம்

பல நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைந்தேன். ஏதாவது ஒரு வாய்ப்பாவது கிடைக்குமா என பலமுறை கவலைப்பட்டுள்ளேன்...
நம்ப முடியாத வாழ்க்கை இது: பாலிவுட்டில் 10 வருடங்களைப் பூர்த்தி செய்த ரன்வீர் சிங் உருக்கம்

10 வருடங்களுக்கு முன்பு பாண்ட் பாஜா பாரத் படத்தில் அறிமுகமானார் ரன்வீர் சிங். தற்போது பாலிவுட்டில் 10 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளார். இன்று இவர் ஒரு பிரபலம். 

லூட்டெரா, பாஜிராவ் மஸ்தானி, தில் தடக்னே தோ, பத்மாவத், கல்லி பாய் எனப் பல படங்களில் தன் முத்திரையைப் பதித்துள்ளார்.

பத்மாவதி வெற்றியின் மூலம் ரூ. 300 கோடி வசூலைத் தொட்ட முதல் இளம் நடிகர் என்கிற பெருமையை அடைந்தார். 

2018-ல் இத்தாலியில் ரன்வீர் சிங்கும் பிரபல நடிகை தீபிகா படுகோனும் திருமணம் செய்துகொண்டார்கள். 

தன்னுடைய 10 வருட திரையுலக வாழ்க்கை பற்றி ரன்வீர் சிங் பேட்டியளித்ததாவது:

இந்த 10 ஆண்டுகளில் எந்தத் தருணத்தை சிறந்ததாகக் கருதுகிறீர்கள்? 
 
இந்த பத்தாண்டுப் பயணத்தில் எனது முதல் படத்தைத் தேர்ந்தெடுத்த தருணத்தையே மறக்க முடியாத தருணம் எனக் கூறுவேன். இப்போதும் கூட அதைப் பற்றி நினைக்கும் போது எனக்கு மெய்சிலிர்க்கிறது. சாதாரணப் பின்னணியைச் சேர்ந்த என்னைப் போன்ற ஒருவர் இவ்வளவு பெரிய வாய்ப்பைப் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்டது. கனவு நிறைவேறியது என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எனது திறமையை அறிய உதவியது என நம்புகிறேன். 
 
நீங்கள் சுயமாக முன்னேறியவர். பாண்ட் பாஜா பாரத் படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பு பல நிராகரிப்புகளை எதிர்கொண்டவர். ஒரு கேள்விக்குறியான எதிர்காலம் உங்கள் கண் முன் தெரிந்தபோது அதை எவ்வாறு எதிர்த்துப் போராடினீர்கள்? 
 
எனது போராட்டக் காலம் எளிதானது அல்ல. அது பொருளாதார மந்தநிலையில் நாடே தவித்த காலமும் கூட. அச்சமயம், திரைப்படத்துறை மிகவும் செழிப்பாக முன்னேறவில்லை என்றும் கூறலாம். மிகக் குறைவான எண்ணிக்கையில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. எனவே, புது நடிகர்களுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. அப்போது சமூகவலைத்தளங்கள், ஓடிடி தளங்கள் இல்லை. எனவே வாய்ப்புகள் கிடைப்பதே கடினம், அதிலும் நல்ல வாய்ப்புகள் வருவது மிக மிகக் கடினம். மூன்று ஆண்டுகளாகத் தட்டுத் தடுமாறி பல்வேறு வழிகளை முயற்சி செய்தேன். 

பல நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைந்தேன். ஏதாவது ஒரு வாய்ப்பாவது கிடைக்குமா என பலமுறை கவலைப்பட்டுள்ளேன். ஹிந்திப் படங்களில் ஒரு முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என என்னைப் போன்ற ஒருவர் நினைப்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்று. இது  மில்லியனில் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு. விடாமல் முயற்சி செய்தேன். நான் கலைப் பசியுடன் இருந்தேன், சில சமயங்களில் முட்டாள்தனமாக கூட நடந்துகொண்டேன், ஆனால் மிகவும் உறுதியோடு இருந்தேன். எனது போராட்டத்தைத் துவங்கியபோது எனக்கு 21 வயது. 24-வது வயதில் ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. பாட்டியாலா ஹவுஸ் என்கிற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நான் கிட்டத்தட்ட அறிமுகமானேன். அனுராக் நேரடியாக மற்றும் மறைமுகமாகப் பங்கேற்ற சில சிறிய பட்ஜெட் படங்களில் நான் நடித்துள்ளேன். 


 
பாண்ட் பாஜா பாரத் படத்தில் நடித்தபோது அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த அளவு உயரத்தை எட்டுவீர்கள் என எண்ணியதுண்டா?
 
கண்டிப்பாக இல்லை. நான் அறிமுகமான அந்த வெள்ளிக்கிழமை முதல், எனக்கு நிகழ்ந்தவை, என் பயணம் என அனைத்தும் எனது கற்பனைக்கு அப்பாற்பட்டவையே. இந்த வாழ்க்கை பற்றி கனவில் கூட நினைத்ததில்லை. கனவு காணும் தொலைநோக்குப் பார்வை கூட எனக்கு இருந்ததாகக் கூற முடியாது. ஆனால் ஏதாவது ஒரு நல்லது நடக்கும் என்கிற மன உறுதி இருந்தது. துணிவோடு பெரிய கனவுகளைக் காண வேண்டும் என்பார்கள்.  ஆனால் என்னால் இந்த அளவு பெரிய கனவைக் கண்டிருக்க முடியாது. இப்போதும் கூட நடப்பது உண்மையா என்ற சந்தேகமே என்னைச் சூழ்கிறது.
 
இந்திய சினிமா வரலாற்றில் ரன்வீரின் அடையாளம் என்னவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
 
ஒவ்வொரு நாளும் நான் பெருமைப்படக்கூடிய அளவிலான அடையாளத்தை விட்டுச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது மூத்த கலைஞர்கள் என்னை ஊக்கப்படுத்தியது போலவே நானும் கலைத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி, மற்ற கலைஞர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். ஒரு முழுமையான பொழுதுபோக்காளராக, பல திறமைகள் கொண்ட நடிகராக, தலைசிறந்த படங்களை வழங்கிய ஒருவராக நான் நினைவில் நிற்க விரும்புகிறேன். இந்த முயற்சியில் கடவுள் என்னை வழிநடத்துவார் என முழுமனதாக நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com