புத்தாண்டில் தமிழ் சினிமா: ரஜினி - கமல் - விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தங்கள் திரையுலக வாழ்வையே பணயம் வைத்து கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறார்கள்...
புத்தாண்டில் தமிழ் சினிமா: ரஜினி - கமல் - விஜய் சேதுபதி!

ஒரு தசாப்தம் முடிந்து புத்தாண்டு தொடங்கியுள்ள இத்தருணத்தில், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவை வடிவமைத்த முக்கிய தருணங்களைத் திரும்பிப் பார்க்க முயற்சி செய்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் தமிழின்  இரு முன்னணி சூப்பர் ஸ்டார்களும் சினிமா, அரசியல் என மாறி மாறி செயல்படுகிறார்கள். கமல் ஹாசன் இந்த இரட்டைத் துறைகளிலும் சம அளவில் காலூன்றி இருக்கிறார். 2013-ல் விஸ்வரூபம் படத்தின் சர்ச்சையை கமல் எதிர்கொண்ட விதத்தில் சினிமா ரசிகர்களிடமும் கூடவே தமிழ் வாக்காளர்களிடமும் தன்னுடைய தலைமைப் பண்பை நிரூபித்தார். அரசியலில் களமிறங்குவதை ரஜினிகாந்த் இன்னும் உறுதிப்படுத்தாமல் இருந்தாலும், உடல் நலிவையும் மீறி, சினிமாவில் வெற்றிப்படங்களோடு முதலிடத்தில் வலம் வருகிறார். தனது உடல்நலத்தையும் நன்கு தேற்றிக்கொண்டு, கடந்த பத்தாண்டுகளில் கபாலி, காலா, எந்திரன் 2.0 போன்ற வித்தியாசமான படத் தேர்வுகளின் மூலமும், போன வருடம் வெளியான பேட்ட படத்தின் மூலமும் தனது சூப்பர் ஸ்டார் பதவியைப் பலப்படுத்திக் கொண்டார்.

விஜய் மற்றும் அஜித்தின் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, சுயாதீன இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து உருவான இளம் இயக்குநர்கள் போன்றவர்களின் வளர்ச்சியையும் நாம் பார்த்தோம். நாளைய இயக்குநர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் சீஸனில் இருந்து கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மற்றும் அருண்குமார் போன்ற அருமையான இயக்குநர்கள் கிடைத்தார்கள். அதே நிகழ்ச்சியின் முதல் சீஸன் தான் இந்தத் தசாப்தத்தில் நம்மைக் கவர்ந்த விஜய் சேதுபதியையும் வழங்கியது. எப்படி கமலுக்கு ஒரு ரஜினியோ, அது போல விஜய் சேதுபதியுடன் போட்டியிட ஒரு சிவகார்த்திகேயன், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் இருந்து கிடைத்தார். இவர்கள் போக இந்தப் பத்தாண்டுகளில் கவனிக்கத்தக்க இயக்குநர்களாக வெற்றிமாறனும், தியாகராஜா குமாரராஜாவும் உருவெடுத்திருக்கிறார்கள். இருவரும் சினிமாவில் தங்களின் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தி, படம் வணிக ரீதியாக வெற்றிபெறுமா என்கிற பயமில்லாமல், தங்கள் கதைகூறும் திறனால் நம்மை மயக்கி வசப்படுத்துகிறார்கள். சிறந்த கதைகளைத் தேர்வு செய்து, சிறந்த நடிகர்களாக தனுஷும் கார்த்தியும் தங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இயக்குநர் மணிரத்னம் இந்தப் பத்தாண்டுகளில் மறுபடியும் தன் வெற்றிப் படத்தோடு திரும்பியுள்ளார் (என்னைப் பொறுத்தவரை அவர் எங்கேயும் போய்விடவில்லை, ஆனால் தமிழ் சினிமா முந்தைய படத்தின் வெற்றியை மட்டுமே கொண்டு வெற்றியாளர்களைத் தீர்மானிக்கிறது). இதன்மூலம் முன்னணிக் கதாநாயகர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி வந்த தமிழ் சினிமா, அதிலிருந்து நகர்ந்து இந்தப் பத்தாண்டுகளில் படைப்பாளிகளுக்கும் வழி ஏற்படுத்தித் தந்துள்ளது எனக் கூறலாமா? தனித்துவமான படைப்புகளைக் கொடுத்து, வணிக ரீதியாகவும் வெற்றிபெற்ற இயக்குநர்கள் அவர்கள் எனக் கூறலாமா? நன்கு ஓடிய திகில் படங்களையும், கதாநாயகியை மையப்படுத்திய படங்களையும் நான் இதில் சேர்க்கவில்லை. ஏனென்றால், இயக்குநரின் பார்வையை மட்டுமே அடிப்படையில் சார்ந்திருக்கும் இத்துறையில், இந்த மதிப்பீடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு  நீண்ட கால வெற்றியைக் கணிக்க முடியாது. மலையாள சினிமாவில் எப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெறும் என்பதைச் சுலபமாகக் கணிக்க முடியும். நல்ல உணர்வை வெளிப்படுத்தும் படங்கள். ஒரு நல்ல மலையாளப் படம், அதில் பெரிய நட்சத்திரப் பட்டாளமோ அல்லது வணிக ஆதாரமுள்ள பெயர்களோ இல்லாவிட்டாலும் கூட கேரளாவில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் நன்கு ஓடி வெற்றி பெறும். அங்குப் பிரபலங்கள் இணைவது ஒரு தொடக்கம் மட்டுமே. ஆனால் தமிழில் அது ஒன்றே முக்கியப் பங்கு வகிக்கும். அதனால் தான் 'நாளைய இயக்குநர்' போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து வந்த இயக்குநர்களின் படங்கள் இந்தப் பத்தாண்டுகளின் பேசுபொருளாக மாறி இருக்கின்றன.

விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தங்கள் திரையுலக வாழ்வையே பணயம் வைத்து கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறார்கள். இதில் அவர் அடைந்துள்ள வெற்றியே, என்னைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளின் தமிழ் சினிமாவை வரையறுக்கும் தருணம் என்பேன். கமல் ஹாசனுக்கு மட்டுமே இன்னொரு கதாநாயகனின் படத்தில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் துணிச்சல் உள்ளது. மேலும் அவரது படங்கள் மட்டுமே இதுவரைக் கண்டிராத கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தன. முப்பதாண்டுகள் கழித்து இப்போது இந்தத் திறனை  விஜய் சேதுபதியிடம் பார்க்கிறேன். அந்தச் சிறப்புமிக்க இடத்தை நோக்கி அவர் வளர்ந்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களைத் துணிச்சலுடன் ஏற்று நடிப்பது என்பது வேறு, இதற்காகவே  மக்கள் அவரை ரசிப்பது என்பது வேறு. அந்த வகையில், விஜய் சேதுபதி இந்தப் பத்தாண்டுகளில் நம் உள்ளங்களைச் சுலபமாகக் கவர்ந்துள்ளார்.

இந்தப் பத்தாண்டுகள் ஒரு நடிகைக்கும் உரியது. துணிச்சலும் விடாமுயற்சியும் கொண்டதால் நயன்தாராவின் முடிவுகள் வெற்றிகளாக மாறுகின்றன. இந்தப் பத்தாண்டுகளில் உச்ச நட்சத்திரமாக அவர் உயர்ந்துள்ளார். தன்னை மையப்படுத்திய கதைக் களங்களை அமைத்துக் கொள்வதும், தான் நினைத்தபடி தன் வாழ்வை அமைத்துக் கொள்வதும் எனப் பாராட்டக்கூடிய இரு குணங்களைக் கொண்டுள்ளார். அடுத்தப் பத்தாண்டுகளில் வரவிருக்கும் கதாநாயகிகள் இவரைப் போல நடந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கதாநாயகர்களோடு இணைந்து கதாநாயகிகளும் வெற்றி பெற்று, அவர்களுக்கென்று வணிகச் செல்வாக்கையும் உயர்த்திக்கொள்ளவேண்டும். இது நடக்கும்போது, பெண் இயக்குநர்களால், பெண்களுக்காக உருவாக்கப்படும் படங்கள் (பழிவாங்கும் தேவதையாக மட்டும் இல்லாமல் பெண்களை மையப்படுத்தும் யதார்த்தக் கதைகளாக), இன்னும் தரம் உயர்ந்ததாக இருக்கும். இந்தப் புத்தாண்டில் இது நிறைவேற வேண்டும் என வாழ்த்துகிறேன். 

தமிழில்: வினுலா

(சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com