பாரதிராஜா பிறந்த நாள்: பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்களும்!

எல்லோருக்கும் ஒரு தாய் இருப்பார்கள். ஆனால் எனக்கும் பாரதிக்கும் இரண்டு தாய்கள். எனது தாய், அவருக்கும் தாய். அவரது தாய் எனக்கும் தாய்.
பாரதிராஜா பிறந்த நாள்: பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்களும்!

என்னுடைய ‘நிழல்கள்’ படத்தின் தோல்வி தான் என்னை சாதாரணமான சினிமாவிற்குள் தள்ளியது, 'நிழல்கள்' வெற்றி பெற்றிருந்தால் உலகத்தரமான சினிமா பக்கம் சென்று இருப்பேன். நான் செய்ய முடியாத அந்த உலகத்தரமான சினிமாவை யாரேனும் செய்வார்களா என்று பல  நாள் ஏங்கியதுண்டு. இன்றைய இளைஞர்களில் 50 சதவிதம் அப்படிப்பட்ட கதையுடன் தான் சினிமாவிற்குள் வருகிறார்கள்.

அறிமுக இயக்குனர் பிரம்மா இயக்கிய 'குற்றம் கடிதல்' படம் பல்வேறு சர்வதேச திரைபட விழாக்களில் பங்குபெற்றதுடன் தேசிய விருதையும் வென்றது. இந்தப் படத்தின் விழாவில் பாரதிராஜா இவ்வாறு பேசினார். 

இயக்குநர் பாரதிராஜா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காகச் சமூகவலைத்தளங்களில் அவருக்குப் பலரும் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், சேரன், பாலா, வைரமுத்து உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளார்கள். 

தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர், கடந்த 43 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர், சென்னையில் அமைக்கப்பட்ட செட்களில் உருவாகி வந்த தமிழ் சினிமாவை முதல் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் அவர்தான். அவரது வருகையும் அவரால் உருவாக்கப்பட்ட புதிய அலையும் பல திறமைசாலிகளை இந்திய சினிமாவுக்குக் கொண்டு வந்தன என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதிராஜாவுக்குத் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் எனப் பலர் உள்ளார்கள். இளையராஜா, எஸ்.பி.பி., ஒளிப்பதிவாளர் கண்ணன் என இந்த மூவருடனான பாரதிராஜாவின் நட்பின் ஆழத்தை அவர்கள் அளித்த பேட்டியில், பேச்சிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பாரதிராஜாவும் இளையராஜாவும்

பாரதிராஜாவின் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கில் உருவான படம் பொம்மலாட்டம். இந்தியில் சினிமா என்ற பெயரிலும் தமிழில் பொம்மலாட்டம் என்ற பெயரிலும் இப்படம் வெளியானது.  இந்தி இசைப் புயல் ஹிமேஷ் ரேஷமய்யா இசையமைத்தார். 

இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இளையராஜா பேசியதாவது:

எல்லோருக்கும் ஒரு தாய் இருப்பார்கள். ஆனால் எனக்கும் பாரதிக்கும் இரண்டு தாய்கள். எனது தாய், அவருக்கும் தாய். அவரது தாய் எனக்கும் தாய். அம்மா, தெய்வத்துக்கும் மேலே.

அவர் இயக்கிய சில படங்களுக்கு நான் இசையமைக்காமல் இருந்திருக்கலாம். என்னை அவர் கூப்பிடாமல் இருந்திருக்கலாம். அதையும் மீறி எங்களுக்குள் ஒரு ஜீவனுள்ள நட்பு உண்டு. சிறு வயதிலிருந்தே இந்த நட்பு தொடர்ந்து வருகிறது.

எனக்கும், பாரதிக்கும் உள்ள நட்பை சொல்லத் தெரியவில்லை. நான் எனது சுயசரிதை எழுத உட்கார்ந்தேன். எழுத எழுத பாரதிராஜாவைப் பற்றித்தான் நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது, பாரதி இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் பாரதி இல்லை. எனது வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறார் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

நான் சென்னைக்கு வந்தபோது அவர்தான் எனக்கு வழிகாட்டி. இதுதான் கடற்கரை, இதுதான் மெரீனா பீச், இதுதான் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி என்று எனக்கு காட்டியிருக்கிறார். அவர் காட்டிய வழியில் நான் போகவில்லை. இந்த விழாவுக்கு வராமல் இருந்தால் எனது வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை என்பதால்தான் இந்த விழாவுக்கு நான் வந்தேன் என்றார். 

பாரதிராஜா பேசும்போது, இங்கு நான் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். இளையராஜா இல்லாமல் எனது படங்கள் இல்லை, இளையராஜாவின் இசை இல்லாமல் எனது படங்கள் முழுமை பெறாது, உயிர் பெறாது என்றார். 

பாரதிராஜாவும் எஸ்பிபியும்

1983 ஏப்ரல் மாத சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பாரதிராஜாவுடனான நட்பு பற்றி பாடகர் எஸ்.பி.பி. கூறியதாவது:

நானும் பாரதிராஜாவும் 16 வருட நண்பர்கள். அவர் இயக்குனராக ஆவதற்கு முன்பே இருவரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு பல்வேறு பிரச்னைகளை, கதைகளை அலசி ஆராய்ந்திருக்கிறோம். 'பதினாறு வயதினிலே' படம் அவர் இயக்க, முதல் நாள் பாட்டை நான் பாட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆரம்ப விழாவன்று  பாடல் பதிவும் நடந்தது. அன்று காலை ஒரு பாடல் பதிவுக்கு சென்ற பொழுது என்னால் சரியாகப்  பாட முடியவில்லை. காரணம் இருமல், ஜலதோஷம். அதனால் ரிக்கார்டிங்கை கேன்சல் செய்துவிட்டு பாரதிராஜாவின் பூஜைக்கு சென்றேன்.

என்னைப் பார்த்தவுடனே அவனுக்கு ரொம்பவும் சந்தோஷம்.  'பரவாயில்லை பாலு, ரொம்ப சீக்கிரமா வந்திட்டே' என்று கூற, நான் விஷயத்தை கூற இருவருக்கும் ஏக கோபம். நான் சொல்வது இளையராஜாவையும் சேர்த்து! அப்பொழுது எங்கள் குழுவில் பாடிக் கொண்டிருந்த மலேசியா வாசுதேவனை வைத்து டிராக் எடுப்பதாக கூறினார்கள். நான் சொன்னேன், 'மலேசியா வாசுதேவன் வளரும் இளம் பாடகர்; நன்றாக இருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள், வேறொரு பாடலை நான் பாடுகிறேன்' என்று. ஆனால் 'பதினாறு வயதினிலே'வுக்குப் பிறகு எடுத்த நான்கு படங்களிலும் நான் பாட முடியவில்லை. ஏதாவது ஒரு காரணமாகத் தடைபட்டு போகும்.  கடைசியில் அவருக்காகப் பாடிய முதல் பாடல் 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் 'முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே'!

பாரதிராஜா எப்போதுமே ஒரு புதிய யோசனை ஏதாவது ஏற்பட்டால் அடுத்த நாளே அதற்கான காட்சியின் பாடலை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார். 'காதல் ஓவியம்' படத்தின் பாடல்கள் எல்லாவற்றையும் நான்தான் பாட வேண்டும் என்று விரும்பினார். நானும் ஒவ்வொன்றாகப் பாடி முடித்தேன். கிளைமாக்ஸ் காட்சிக்கான  'ராஜ தீபமே ' பாடல் ஒளிப்பதிவு முடிவு செய்து எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து விட்டார். என்னிடம் மட்டும் 'இரண்டு வரி பாட வேண்டும், அரை மணியில் அனுப்பி விடுகிறோம்' என்று கூற, நானும் சம்மதித்தேன்.

குறிப்பிட்ட நாளன்று காலையில் ஒரு பாடல் இருந்ததால், அரை மணிக்குள்  இவருடைய பாடலைப் பாடி விட்டு அந்தப் பாடலைப் பாடச் செல்லலாம் என்றிருந்தேன். அங்கே சென்று பார்த்தால் இளையாராஜா கர்நாடக இசையில் ஒரு பெரிய பாடலுக்கான இசையமைப்பைச் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று, 'என்ன ராஜா இரண்டு வரி பாடல் என்றார்கள், நீங்கள் என்னவோ முழுப்பாடலுக்கான இசை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்க, 'எனக்கு ஒன்றும் தெரியாது, இது முழுப்பாடல்தான்' என்று கூறினார். பாரதிராஜாவிடம் சென்று கேட்ட பொழுது, 'கடைசி பாடல் பாலு, படத்தை வெளியிட வேண்டும்' என்றார்.

நான் 'வேறொவருக்குப் பாடுவதாக சொல்லி விட்டு இங்கே பாடுவது முறையல்ல, நீங்களே அந்த இசை அமைப்பாளரிடம் சொல்லி அனுமதி பெற்றால் நான் இங்கே பாடுகிறேன்' என்றேன். அதற்குள் நீங்கள் எங்கும் சென்று விடக் கூடாது என்று கூறி, உண்மையாகவே என்னை அறையில் வைத்து பூட்டிவிட்டார்.      

அந்த இசையமைப்பாளர் ஒப்புக்கொள்ள, பிறகு பாரதிராஜாவுக்கு பாடி விட்டு அங்குச் சென்றேன். 

பாரதிராஜாவும் கண்ணனும்

நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன். அந்தக் கண்களுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறுபுறத்தையும் பார்க்கத் தெரியும்...

ஒளிப்பதிவாளர் கண்ணனைப் பற்றி பாரதிராஜா பேசிய புகழ்பெற்ற வார்த்தைகள் இவை.

பாரதிராஜாவின் படம் என்றால் ஒளிப்பதிவு கண்ணன் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருடைய கூட்டணியும் தமிழ்த் திரையுலகில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

இத்தனைக்கும் பாரதிராஜாவின் முதல் படத்தில் மட்டுமல்ல ஆரம்பத்தில் பாரதிராஜா இயக்கிய சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கண்ணன் அல்லர், நிவாஸ்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் வரைக்கும் நிவாஸ் தான் ஒளிப்பதிவு செய்தார். இதன்பின்னர் நிழல்கள் படத்தில் ஆரம்பித்து பொம்மலாட்டம் வரை கண்ணனின் கொடி தான் பாரதிராஜாவின் கோட்டையில் பறந்தது.

1975-ல் திரைப்படக் கல்லூரியில் படித்தவர் கண்ணன். புதிய வார்ப்புகள் படம் பார்த்தபோதுதான் பாரதிராஜா படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்கிற ஆர்வம் கண்ணனுக்கு ஏற்பட்டது. பாரதிராஜா போல ஓர் இயக்குநர் கிடைத்தால் ஒளிப்பதிவுக்காக என்னால் பெயர் வாங்க முடியும் என்று நண்பர்களிடம் கண்ணன் கூறியிருக்கிறார். எண்ணியதுபோலவே புதிய வார்ப்புகள் படத்தின் தெலுங்குப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கண்ணனுக்குக் கிடைத்துள்ளது.

பாரதிராஜாவுடன் பணியாற்றுவது பற்றி ஒரு பேட்டியில் கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்:

முதல் இரண்டு படங்களில் பாரதிராஜாவின் ரசனையைப் புரிந்துகொண்டேன். இதனால் அவர் என்ன நினைக்கிறாரோ அதை என் கேமராவில் கொண்டுவந்துவிடுவேன் என்கிற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. அவர் ஸ்பாட்டில் இல்லாவிட்டாலும் அவர் ரசனைக்கேற்றாற் போல ஷாட்டை எடுத்துவிடுவேன்.

பாடல் காட்சியைப் படமாக்கும்போது எனக்குச் சாதாரணமாகத் தெரிவதை எடிட்டிங் டேபிளில் அதற்குத் தனி உருவம் கொடுத்து விடுவார். அங்கு என்ன மாயம் செய்வாரோ யாருக்கும் தெரியாது. பாடல் காட்சியைப் படமாக்கிய நானே ஆச்சர்யப்படும் அளவுக்கு எடிட்டிங் டேபிளில் ஓவியமாக மாற்றி விடுவார். இதை கே. விஸ்வநாத் கூட பாராட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.

நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா வா, மண் வாசனை, புதுமைப்பெண், முதல் மரியாதை, ஒரு கைதியின் டைரி, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர்த் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல், கேப்டன் மகள், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ் செல்வன், தாஜ்மஹால், கடல் பூக்கள், கண்களால் கைது செய், பொம்மலாட்டம் போன்ற பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு, கண்ணனின் உதவியாளராக 24 படங்களில் பணியாற்றியுள்ளார்.

வார இதழ் ஒன்றில் கண்ணன் பற்றி பாரதிராஜாவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

மை பார்ட்னர். என் வாழ்க்கையில் என் மனைவி, குழந்தைகளிடம் நேரத்தைச் செலவழித்ததை விடவும் கண்ணனுடன் படப்பிடிப்பில் செலவழித்த நேரம் தான் அதிகம்.

என் சிந்தனையை அழகாகத் திரையில் காட்டிவிடுவார் கண்ணன். அலைகள் ஓய்வதில்லை படத்தின் கதாநாயகித் தேர்வுக்காக கேரளாவில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று ராதாவைப் பார்த்தோம். அப்போது அவர் வீட்டில் மின்சாரம் இல்லாததால் சிமிழ் விளக்கு வெளிச்சத்தில் தான் நானும் கண்ணனும் ராதாவைப் பார்த்தோம். நம்ம படத்துக்குச் சரிபட்டு வராது சார் என்றார் கண்ணன். இல்லை கண்ணன், இந்தப் பெண் தான் கதாநாயகி என்றேன். அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததை விடவும் திரையில் ராதாவை அழகாகக் காண்பித்தார் கண்ணன். என் அலைவரிசையைப் பிடிப்பதில் கண்ணன் அந்த அளவுக்கு மாஸ்டர் என்று பாராட்டியிருந்தார்.

சமீபத்தில் மறைந்த கண்ணனுக்கு பாரதிராஜா இரங்கல் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

என் வாழ்க்கையில் என் துணைவியாரிடம் அதிக நேரத்தைச் செலவழித்ததை விடவும் கண்ணனிடம் அதிக நேரம் செலவழித்துள்ளேன். மகா ஒளிப்பதிவுக் கலைஞர் அவர். படப்பிடிப்புக்கு நான் கேமராவை எடுத்துச் செல்வதில்லை. கண்ணனின் இரண்டு கண்களைத்தான் எடுத்துச் செல்கிறேன். அவருக்குத்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும் என்று சொல்லியிருக்கிறேன். 40 ஆண்டு காலம் ஒன்றாகப் பணியாற்றியுள்ளேன். கரோனாவால் அவரை நேரில் தரிக்க முடியாமல் இருக்கிறேன்.

ஓர் அற்புதமான கலைஞனை நான் மட்டுமல்ல கலையுலகும் இழந்துவிட்டது. என்னுயிர்த் தோழன் படத்துக்குக் குடிசைப் பகுதிகளில் எப்படி ஒளிப்பதிவு செய்யவேண்டும், நாடோடித் தென்றலில் வரலாற்றுப் பின்புலம் என்பதால் அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்யவேண்டும், காவியமான காதல் ஓவியம் படத்துக்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என இந்த வித்தைகளை எல்லாம் தெளிவாகத் தெரிந்த கலைஞன் அவர். இன்று அவர் இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் படங்களின் மண் வாசனையும் கலாசாரமும் தான் என்னை உங்களிடம் அறிமுகப்படுத்தியது. அதில் கிடைத்த பெருமை, புகழின் பெரும்பகுதி கண்ணனுக்குத்தான் போய்ச் சேரவேண்டும். கரோனாவால் அவரைப் பார்க்க முடியாத துக்கத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் என்றார். 

பாரதிராஜாவின் கூட்டணியில் தமிழர்களின் வாழ்வியல் கூறுகளைப் பதிவு செய்துவிட்டு சென்றிருக்கிறார். கண்ணன் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com