பரதேசி வெளிவந்து 7 ஆண்டுகள்: விடாது துரத்தும் வெக்கையும் வெறுமையும்

ராஜராஜனையும் ராஜேந்திரனையும் கங்கைகொண்டானையும் கடாரம் வென்றானையும் தெரிந்த அளவுக்கு உழைத்த மக்களை, அவர்களை அந்த உயரத்துக்கு உயர்த்திய மக்களைத் தெரியுமா...
பரதேசி வெளிவந்து 7 ஆண்டுகள்: விடாது துரத்தும் வெக்கையும் வெறுமையும்

[1920-லிருந்து 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் இருந்த நிலைமைகள் பற்றிய துல்லியமான, உண்மையான ஓர் அறிமுகத்தைத் தர என்னால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளேன். 1941-லிருந்து 1965 வரை 25 ஆண்டுகள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்திருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில், 1900 முதல் 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த பலரைப் பேட்டி கண்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் அவர்கள் பணிபுரிந்த சூழ்நிலைகள் பற்றி அவர்களிடமிருந்து எழுத்துமூலமான வாக்குமூலங்கள் பெற்றிருக்கிறேன். அவற்றின் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலில் தேயிலைத் தோட்டங்களைப் பற்றி மட்டும்தான் எழுதியுள்ளேன். ஆனால், இது காபி மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கும் பொருந்தும் - எரியும் பனிக்காடு நாவலுக்கான முன்னுரையில் டாக்டர் பி.எச். டேனியல்.]

பாலாவின் பரதேசி வெளிவந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இப்போது மீண்டும் பார்க்கும்போதுகூட அதன் அழுத்தம் மட்டும் சற்றும் குறைந்தபாடில்லை.

`ரெட் டீ’ ஆங்கிலத்தில் வெளிவந்து அவ்வளவாகக் கவனம் பெறாத இந்த நாவல் விடியலின் வெளியீடாக முருகவேளின் மொழிபெயர்ப்பில் எரியும் பனிக்காடென வந்தது. உள்ளபடியே, தமிழில் எழுதியதைப் போன்றே இருக்கும் இந்த நாவல், கல்நெஞ்சையும் கரைத்துவிடக் கூடியது.

பாலா படமாக எடுப்பதாகக் கேள்விப்பட்டபோது, இந்த நாவலைத் திரைப்படமாக எடுப்பது என்பது சாத்தியமே அல்ல என்றுதான் தோன்றியது. கூடவே, இவ்வளவு அழுத்தமான கதைக்களத்தைக் கொண்டதொரு படம், தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெறுமா? என்கிற அச்சமும்.

தவிர, இதுபோன்ற நாவல்கள் படமாக எடுக்கப்படும்போது வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்காலத்தில் நல்ல நாவல்கள் படமாகும் வாய்ப்பு உள்ளது என்பதால் பரதேசி வெற்றி பெறாவிட்டாலும்கூட பரவாயில்லை, தோற்றுவிடக் கூடாது என்ற உள்ளூர அச்சம் கலந்த ஆவலும்கூட அப்போது படத்தை உடனே பார்க்க வேண்டுமென உந்தித் தள்ளியது (பாலாவின் முந்தைய படமான `அவன் இவன்’ படத்தால் ஏற்பட்ட ரத்த காயங்களையும் தாண்டி; வெளிவந்தவுடன் அவன் இவனைப் பார்த்துவிட்டுவந்த பாலாவின் ரசிகரான திருச்சி நண்பர் ஒருவர் சொன்னார்: `கார்ப்பரேஷன் கழிப்பறைக்குள் சென்றுவந்தபின் தொடருவதான துர்நாற்றம் இன்னமும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது’. பின்னர் படம் பார்த்தபோது, எனக்கும்கூட அப்படித்தான் தோன்றியது, எங்கே, ஏன் சறுக்குகிறார் பாலா? ஒருவேளை சரக்கு தீர்ந்துதான் போய்விட்டதோ என்றுகூட தோன்றியது). 

பாலாவின் பரதேசி படத்தைப் பார்க்கத் தூண்டியதென்னவோ எரியும் பனிக்காடு ஏற்படுத்திய ஈர்ப்புதான்.

தமிழகத்தின் வெக்கையும் வெறுமையுமான தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்திலிருந்து வாழ்வுக்கான கனவுகளுடன் கூலிகளாகத் தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் மக்களின் அவதிதான் படத்தின் ஒரு வரிக் கதை.

வறிய கிராமம் சாலூர். கடும் வறட்சி. பசி, பஞ்சம் பட்டினியுடன்கூட அந்த ஏழை எளியதுகளின் சின்னச்சின்ன மகிழ்ச்சியும் கலந்த வாழ்க்கை, மிகக் குறைவான காட்சிகளிலேயே அழுத்தமாக முன்னிறுத்தப்பட்டுவிடுகிறது. ஒரு திருமணத்தோடுகூட அந்த மக்களின் வாழ்க்கை மேலும் தெளிவாகவும் அழுத்தமாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்தக் காலத் திருமணக் கொண்டாட்டம் புது அனுபவம்.

திருமணக் கொண்டாட்டத்துக்கு நடுவே சாலூர் ராசாவுடைய பெரியப்பாவின் சாவும், அந்த சாவுச் செய்தியைத் தெரிவிப்பவரிடம், `வெளியே  சொல்லாதே, இன்னைக்கு ஒருவேளையாவது நம்ம ஜனங்கள் நெல்லுச் சோறு திங்கட்டும்’ என்று செத்துப்போனவரின் மனைவியே சொல்வதும் அந்த வறுமையைத் தெளிவாகக் காட்டுகிறது.

வேலைவெட்டியில்லாத ஒட்டுப்பெறக்கி சாலூர் ராசா. ஊரெல்லாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டு, தமுக்கடித்துத் திரியும், அம்மத்தாவால் வளர்க்கப்படும் தாய் தந்தைற்ற  இளைஞன். எழுத்தாளர் நாஞ்சில்நாடன்தான் வசனம் என்பதாலோ என்னவோ அவருடைய இடாலக்குடி ராசா என்ற கதை, ஏறத்தாழ அதே அலைவரிசையில் சாலூர் ராசாவின் பாத்திரத்தைச் சித்திரிக்க கொண்டுவரப்பட்டிருக்கிறது.

எரியும் பனிக்காட்டின் கருப்பனைப் போல அல்லாமல் சற்றே மனவளர்ச்சி குன்றியவனோ எனத் தோன்றும் ராசாவின் மீதும் ஓர் இளம் பெண்ணுக்குப் பிடிப்பு – அங்கம்மாவின் சொல்லில் `நினைக்கிறேன்’ - (காதல் என்றால் அது வழக்கமான தமிழ்த் திரைப்படத்தை நினைவுக்குக் கொண்டுவந்து கொச்சைப்படுத்திவிடும் ஆபத்து இருக்கிறது). உற்சாகமான ஒரு தருணத்தில் அவர்களுக்குள் ஒருமுறை – மிக இயல்பாகக் கடந்துசெல்கிறது - உறவும் ஏற்பட்டு விடுகிறது.

வறிய கிராம மக்களுக்கு வாழ்வளிக்க வந்தவனைப் போலத்தான் தேயிலைக் காட்டின் கங்காணி வந்துசேருகிறான். ``இங்க கிடந்து கஞ்சிக்குப் படாதபாடு படாதீங்க...வேலைக்குத் தக்கன கூலி, தங்கறதுக்கு வீடு... கூதலுக்குக் கம்பளி, கறிச்சோறு, ஞாயிற்றுக்கிழமையானா விடுப்பு…’’... கங்காணியின் கவர்ச்சிகரமான பேச்சை நம்பிக் காசை வாங்கிக் கொண்டு விரல் ரேகை பதிக்கிறது ஜனங்கள். குஞ்சு குழுவான்களுடன் ஊரே திரண்டு ஊர்வலம் போவதைப் போல, வேலையுடன் விடிவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், புறப்பட்டுப் போகிறார்கள்; அந்தப் பெண்ணை விட்டுவிட்டு ராசாவும்.

சாலூரில் ஓட்டமும் நடையுமாகத் தொடங்குகிறார்கள் மக்கள். காட்சிக்குக் காட்சி அவர்களின் நடையிலேயே வித்தியாசம். 48 நாள்களுக்குப் பின், அவர்களின் முகங்கள் மட்டுமல்ல, உடல்களும்கூட வதங்கிக் கிடக்கின்றன. ஒருவர் இருவர் மட்டுமல்ல, பல நூறு பேரும் அப்படியே தோன்றுகிறார்கள். அவர்கள் நடப்பதுவும் உணவு உண்பதுவும் குளத்தில் தண்ணீர் குடிப்பதுவும் எல்லாமே அழுத்தமான, அடர்த்தியான ஒளி ஓவியங்கள். நடைவழியிலேயே கங்காணியின் உண்மை முகம் தெரியத் தொடங்கிவிடுகிறது. தேயிலைத் தோட்டத்துக்குள் கதை நுழைவதற்கு முன்னரே, சர்வசாதாரணமாக நிகழ்த்திச் செல்லும் பேரதிர்ச்சியொன்றுடன் இடைவேளை வந்துவிடுகிறது.

எரியும் பனிக்காடு நாவலே தேயிலைத் தோட்டத்தில்தான். இங்கு இடைவேளையே வந்துவிட்டதே, இனி எப்படி நகர்த்திச் சென்று இத்தனை பெரிய நாவலைப் படமாக முடிக்கப் போகிறார்கள்? என்று புதிராகத் தோன்றும். ஏனெனில், நாவலில் ஏராளமான சம்பவங்கள், எல்லாமே அழுத்தமானவை, கதைக்குத் தேவையானவையும்கூட. எதை விடப் போகிறார்கள், எதை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்? என்பதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

பின்னர், தேயிலைக் காட்டின் ஆதிக்கம், அகதிகளையும்விடக் கேவலமாக மாறிவிட்ட அடிமைகளாக வாழ்க்கை, கங்காணியின் கடுமை, ஏமாற்று, பித்தலாட்டம், தேயிலைத் தோட்ட நிர்வாகிகளான வெள்ளைக்கார துரைமார்களின் அக்கிரமம், தொற்று நோய்... ஒரு டாக்டரின் வருகை... அடுத்தடுத்த நிகழ்வுகள். எல்லாமே நினைத்தும் பார்க்க முடியாத வேகத்தில். அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்துக்கு ஒரு முடிவு வருகிறது. ஆனாலும் தொடருகிறது கதை. நாவலின் சில பல பக்கங்கள், ஒரு பாடலிலேயே நகர்ந்துவிடுகின்றன (நாவலைப் படிக்காதவர்களுக்கு இந்த வேகத்தில் இந்தக் காட்சிகள் எட்டியதா எனத் தெரியவில்லை, ஆனாலும், கவலைப்பட வேண்டியதில்லை).

படத்தின் தொடக்கத்தில் நன்றி என்று `ரெட் டீ’ நாவலின் ஆசிரியர் பி.எச். டேனியல் குடும்பத்தினர் பெயர்களைப் போட்டுவிட்டுக் கதை என்று பாலாவின் பெயரைக் குறிப்பிட்டபோது, லேசாகத் துணுக்குற்றது, இது எந்த ஊர் நியாயம் என்பதாக. ஆனால், படம் முடியும்போது சரிதான் என்றே தோன்றியது.

நாவலில் கருப்பனுக்கும் வள்ளிக்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள். இருவரும் சேர்ந்தேதான் தேயிலைக் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்று எல்லாத் துயர்களையும் எதிர்கொள்வார்கள். பரதேசியில் திரைப்படத்துக்கேற்ற வகையில் திறமான, திட்டமிட்ட வகையிலான முடிச்சுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இரு பாத்திரங்கள் ஒன்றாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று இரண்டாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் உச்சம், கிளைமாக்ஸ், நினைத்தே பார்க்க முடியாதது. படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஒட்டுமொத்தமாக ஒரு பேரழுத்தம் கவிந்து அழுத்திக் கொண்டுவிடுகிறது.

அடிமை இந்தியாவில் (சுதந்திர இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறது என்கிறீர்களா?) உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு சுரண்டப்பட்டார்கள் என்பது மிக அற்புதமாக (அற்புதமாக என்று சொல்ல உறுத்தலாக இருக்கிறது, காத்திரமாக என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்) படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விடுதலைக்கு முந்தைய தமிழகத்தின் கிராமப்புற வாழ்வும் அடிமைகளின் தாழ்வும் இந்த அளவுக்குப் பளிச்சென வேறெந்தப் படத்திலும் பதிவு பெற்றதாகத் தெரியவில்லை.

தேயிலைத் தோட்டங்களில் வறிய மக்களைச் சுற்றிவளைத்து எல்லாருமே சுரண்டுகிறார்கள். உள்நாட்டைச் சேர்ந்த கங்காணி, கங்காணியின் குடும்பம், டாக்டர் என்ற பெயரில் வரும் கம்பவுண்டர், ஏமாற்றுவதற்கென்றே கணக்கு வைத்துக்கொண்டிருக்கும் கடைக்காரர், கிறித்துவத்தையும் பரப்ப வரும் டாக்டர், வெள்ளைக்கார துரைகள்... வித்தியாசமே இல்லை.

படம் முழுவதும் மிக அற்புதமாக நடித்திருப்பவை கண்களே. அதர்வா, வேதிகா, தன்ஷிகா... ஒவ்வொருவருடைய கண்களும். உள்ளபடியே யார் நடிகர்கள் என்றே தெரியவில்லை. முன்பாதியில் பேசிக்கொண்டே இருக்கும் அதர்வா, பிற்பாதியில் பேசுவதேயில்லை. கடைசியில் பேசும்போது... மூன்றாவது படத்திலேயே அதர்வாவுக்கு இப்படியோர் அரிய வாய்ப்பு. மறைந்த நடிகர் முரளி இருந்து தன் மகனின் நடிப்பைப் பார்த்திருக்க வேண்டும். அவருக்கே வாழ்நாளில்   கிடைக்காத வாய்ப்பு.

வேதிகா, தன்ஷிகா எனப் பரதேசியில் அனைவருமே பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள்கூட. ராசாவின் அம்மத்தா, கருத்தக்கண்ணியாக வரும் ரித்விகா... அனைவருடைய முகங்களும் கண்களிலேயே நிழலாடிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வேதிகா! நினைத்தே பார்க்க முடியாது.

சிறிது நேரமே வந்து செல்கிறது பெரியப்பாவின் பாத்திரம். ஒட்டுமொத்த பாத்திரங்களும் ஒருமாதிரியாக முடிதிருத்தி இருக்கும்போது, இவர் மட்டும் வேறு மாதிரியாக இருப்பது ஒட்டவில்லை. ஊர்ப் பெரியவராகக் காட்டப்படும் இவருடைய மனைவி மட்டும்தான் நகையணிந்திருக்கிறார். வேற்றாள்?

நாவலில் வரும் டாக்டர் பாத்திரம் மிகவும் குறிப்பிடத் தக்கது, கண்ணியம் மிக்கது. அவர்தான் நாவலாசிரியரான பி.எச். டேனியல். அவருடைய குறிப்புகளும் பதிவுகளும்தான் நாவலாக உருமாறித் தேயிலைத் தோட்டத் துயரங்களை வெளிக்கொண்டு வந்திருப்பவை. ஆனால், படத்தில் கிறித்துவத்தைப் பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவரைப் போல, சற்று எதிர்மறையாகவே, டாக்டர் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். நிச்சயம் தன்னுடைய பாத்திரம் இவ்வாறு சித்திரிக்கப்படுவதை பி.எச். டேனியல் விரும்பியிருக்க மாட்டார்.

80, 90 ஆண்டுகளுக்கும் முன் நடந்த, பார்த்தவர் யாரும் தற்போது உயிருடன் இல்லாத, ஒரு கதையைச் சொல்கிறபோது, கவனத்துக்குரிய விஷயங்கள் ஏராளம். ஆனால், பாலா ஏமாற்றிவிடவில்லை. படத்தின் தொடக்கமே நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. சாலூரின் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது, கதையும் கேமராவின் நர்த்தனமும் காலத்தின் கோலமும்.

பரதேசியை வண்ணப் படம் என்று கூற முடியாது, கூறவும் கூடாது. கறுப்பு வெள்ளைக்குச்  சற்று மேலே என்று வேண்டுமானால் சொல்லலாம், கதையை மட்டுமே முன்நிறுத்துவதாக `கலர் டோனை’ முற்றிலுமாக மாற்றி உருவாக்கியிருக்கிறார்கள். திரையரங்கிலிருந்து வெளிவந்தபிறகு யோசித்தால், எந்தக் காட்சி என்னென்ன வண்ணத்தில் இருந்தன என்று நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், முன்பாதி வெக்கையும் பின்பாதியின் அடர்த்தியும் மட்டும் இன்னமும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றன. உள்ளபடியே, பரதேசி படம் நெடுக கதைசொல்லியாக இயங்குவது அவற்றில் வரும் பாத்திரங்களோ, இயக்குநரோ அல்ல; கேமராதான்.

மற்றபடி ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை... செழியனின் ஒளிப்பதிவு, சி.எஸ். பாலச்சந்தரின் கலை, பூர்ணிமாவின் ஆடை வடிவமைப்பு, கிஷோர் டி.இ.யின் படத் தொகுப்பு (இடைவேளைக்குப் பிறகு இத்தனை வேகமாக படத்தை நகர்த்திய விதம்!)... எல்லாமே நிறைவு. எல்லாப் புகழும் பாலாவுக்கே. (என்னுடைய நண்பர் ஒருவர் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று வருத்தப்பட்டார். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்).

அவசியம் குழந்தைகளும் பார்க்க வேண்டியது இந்தப் படம், எத்தகைய இன்னல்களையெல்லாம் இந்தச் சமுதாயம் கடந்து வந்திருக்கிறது என்பது இந்த இளவயதிலேயே அவர்கள் மனதில் பதிய வேண்டும் அல்லவா? ஆனால், அவ்வாறு குழந்தைகளுக்குப் பரிந்துரைப்பதில் சில நெருடல்களும் இருக்கின்றன. கங்காணியிடம் வெள்ளைக்கார துரை சொல்வதில் சில வரிகள், துரையின் வீட்டுக்குள் புதுப் பெண் செல்லும்போது கங்காணி பேசும் வசனம். தவிர்த்திருக்கலாம். இந்த வசனங்கள் இல்லாமல் கதையொன்றும் கெட்டுப் போய்விடப் போவதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் பரதேசி ஒளிபரப்பாகிக்கொண்டுதான் இருக்கிறது. 

எனக்குப் பார்க்க, பாலாவின் முந்தைய படங்கள் அனைத்தையும்விட பரதேசிதான் சிறப்பானதாகத் தோன்றுகிறது. இரண்டாவது இடத்தை வேண்டுமானால், சற்றே மிகையாக இருந்தபோதிலும் பிதாமகனுக்குத் தரலாம். முந்தைய படங்களுக்கு மாறாகப் பரதேசி படத்தின் நீளம்கூட இரண்டே மணிநேரம்தான். நிறைய நல்ல, குறிப்பிடும்படியான படங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், எப்போது பார்த்தாலும் புது அனுபவமாக, மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடியதாகக் காலத்தை வென்று நிற்கக் கூடிய படங்கள் மிகச் சிலதான், உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போல. இந்தப் பட்டியலில் பரதேசியும் இடம் பெற்றுவிட்டதாகத்தான் தோன்றுகிறது.

தமிழனுக்குத் தனித்துவமான ஒரு ரசனை உணர்வு இருக்கிறது. ஒரேவேளை உணவிலேயே சோறு, சாம்பார், புளிக்குழம்பு அல்லது மோர்க்குழம்பு, ரசம், தயிர், அப்பளம், பாயசம், ஊறுகாய் என அத்தனையையும் சேர்த்து உண்ணும் பழக்கம். எத்தனைவிதமான ருசி? ஒரே நேரத்தில் எப்படி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அருந்தப் பழகிவிட்டிருக்கிறார்கள்? திரைப்படங்களிலும்கூட இதேபோன்றதான எதிர்பார்ப்பு இருக்கிறது தமிழர்களுக்கு. பாட்டு, ஃபைட்டு, காதல், சோகம், கவர்ச்சி... இந்த மாதிரியான வினோத ரசனையை மாற்றித் தமிழர்களின் தரத்தை உயர்த்துவதற்கேனும் இத்தகைய படங்கள் அதிகமாக வெளிவந்து வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவும் பெற்றது.

பரதேசியைப் பார்த்தபின், அவசியம் அந்த நாவலையும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும் என நினைத்தால் அதுவே மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படும். நாவல்களில் மிக விரிவான விஷயங்கள் இருக்கின்றன.

வரலாற்றின் இருண்ட, எழுதப்படாத பக்கங்களுக்குள் இன்னமும் எத்தனையோ நாவல்களும் திரைப்படங்களும் புதைந்துகிடக்கின்றன. ராஜராஜனையும் ராஜேந்திரனையும் கங்கைகொண்டானையும் கடாரம் வென்றானையும் தெரிந்த அளவுக்கு உழைத்த மக்களை, அவர்களை அந்த உயரத்துக்கு உயர்த்திய மக்களைத் தெரியுமா? முல்லைப் பெரியாறு அணைக்காக உயிரைத் துறந்தவர்கள் எத்தனை பேர்? அழிந்த குடும்பங்கள் எத்தனையெத்தனை? நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது பரதேசி. (இன்னமும் படமாக வேண்டிய எத்தனையோ நாவல்களும் இருக்கின்றன – கண்மணி குணசேகரனின் அஞ்சலை, தஞ்சை பிரகாஷின் கரமுண்டார்வீடு, ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு...) படம் என்பதால் ஒரு தொடக்கமும் முடிவும் இருந்தாலும் இந்தக் கதை இப்போதும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையில் நீண்டுகொண்டேதான் இருக்கிறது.

முதன்முதலில் படத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, தேநீர் அருந்துவதையே நிறுத்திவிடலாமோ என்றுகூடத் தோன்றியது. ஆனாலும், அதைவிடவும் தேநீர் அருந்தும் ஒவ்வொரு வேளையும் அந்தச் சுரண்டலை மட்டுமல்ல, அனைத்து வகைச் சுரண்டல்களையும் நினைத்துக் கொள்ளலாம் எனப் பட்டது. ஆனாலும்கூட ஏழாண்டுகளுக்குப் பிறகும் என்னதான் சீனியைக் கொட்டினாலும் வழக்கத்தைவிடக் கூடுதலாகவே கசக்கிறது தேநீர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com