பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில்: வாழையடி வாழையாகத் தழைத்த நகைச்சுவை!

ஒரே சமயத்தில் 45 படங்களில் நடித்ததெல்லாம் உண்டு என்கிறார் செந்தில்...
பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில்: வாழையடி வாழையாகத் தழைத்த நகைச்சுவை!

13 வயதில் சென்னைக்குத் தனி ஆளாக வந்திறங்கியபோது செந்திலுக்குத் தனக்கு இப்படியொரு அமர்க்களமான வாழ்க்கை அமையும் என யூகித்திருக்க முடியாது. 

ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் செந்தில். மளிகைக்கடை வியாபாரம். 13 வயதில் அப்பா திட்டியதால் கோபித்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிவிட்டார். நடிப்பு ஆர்வமும் இருந்ததும் அதற்கு இன்னொரு காரணம். அந்த ஆர்வம் தான் செந்திலை இன்று தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நிறுத்தியுள்ளது. இன்று அவருடைய பிறந்தநாள். 

1979 முதல் நான் நடிக்க ஆரம்பித்ததாக புள்ளிவிவரங்கள் கூறலாம். ஆனால் அதற்கு முன்பிருந்தே இளம் வயதில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறேன் என்கிறார் செந்தில். 70களில் நடிக்க வந்தவர்களில் செந்திலைப் போல வெகுசிலரே இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னைக்கு வந்து சிலபல வேலைகள் பார்த்தவருக்கு மேடை நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதுவே அவரைப் பல வாய்ப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. மேடை நாடகத்தில் நடிக்கும்போதுதான் சக நடிகராக கவுண்டமணி பழக்கமாகியுள்ளார். இருவரும் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்கள் மூலமாகத்தான் நடிப்பின் சூத்திரங்களைக் கற்றுகொண்டேன். உடனக்குடன் கிடைக்கும் பாராட்டுகளும் விமரிசனங்களும் உங்களுடைய நடிப்பை மெறுகேற்றும். டைமிங் கற்றுக்கொண்டது மேடை நாடகங்கள் மூலமாகத்தான். கேமரா முன்பு நடிக்கும்போது டைமிங் முக்கியம் என்கிறார் செந்தில். 

புரொடக்‌ஷன் மேனஜர் ஒருவரின் உதவியால் பிரேம் நஸிர் நடித்த மலையாளப் படம் (Itti Karai Pakki) மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார் செந்தில். தமிழில் பசி, பொய் சாட்சி, இன்று போய் நாளை வா என வரிசையாக நடித்தவருக்கு தூறல் நின்னு போச்சு (1982), மலையூர் மம்பட்டியான் (1983), வைதேகி காத்திருந்தாள் (1984) போன்ற படங்கள் பெயரை வாங்கித் தந்தன. 1985-ல் வெளியான உதயகீதம் படத்தில் கவுண்டமணி - செந்தில் ஜோடி ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெற்றது. 

1985-ல் ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்களில் நடித்துத் தள்ளியிருக்கிறார். 90களின் மத்தியில் விவேக், வடிவேலு ஆகிய இருவரும் முன்னுக்கு வரும் வரை செந்தில் நடிக்காத படங்களே இல்லை என்னும் அளவுக்கு அத்தனை படங்கள். 1995-க்குப் பிறகுதான் செந்தில் நடித்த படங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இன்றுவரை இத்தனை படங்களில் நடித்துள்ளார் என்று செந்திலால் எண்ணிக்கையைச் சொல்லமுடியாத அளவுக்கு 1300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார் செந்தில்.

செந்தில் நடித்து ஒரு வருடம் 80 படங்கள் வெளிவந்துள்ளன. இதுபோல ஒரு பெருமை இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்குக் கிடைக்குமா? ஒரே சமயத்தில் 45 படங்களில் நடித்ததெல்லாம் உண்டு என்கிறார் செந்தில். 

1300 படங்களில் நடித்தவருக்குப் பிடித்த படம்? ராமநாராயணின் சாத்தான் சொல்லைத் தட்டாதேவில் நடித்த கதாபாத்திரமும் அதன் நகைச்சுவைக் காட்சிகளும் தான் நடித்ததில் தனக்குப் பிடித்தமானது என்கிறார். அப்படத்தில் பூதமாக நடித்திருந்தார். என்.எஸ். கிருஷ்ணன், தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தான் தன்னுடைய நடிப்புக்கு ஊக்கமாக இருந்தன என்கிறார். 

தான் நடித்த படங்களில் நகைச்சுவைப் பகுதிகளை எழுதிய வீரப்பனை தன்னுடைய வெற்றிக்கான முக்கியக் காரணமாக எண்ணுகிறார் செந்தில். என்னுடைய பல கதாபாத்திரங்களுக்கு அவர் தான் காரணம். எனக்கான வசனங்களை அவர் எழுதினார் என்கிறார். கவுண்டமணியிடம் செந்திலை அறிமுகப்படுத்தியதும் வீரப்பன் தான். கரகாட்டக்காரனின் வாழைப்பழ காமெடியையும் அவர் தான் எழுதினார். செந்திலும் கவுண்டமணியும் இணைந்து நடித்த 100-வது படம் அது. 

கொடைக்கானலில் நடந்த ஒரு படப்பிடிப்பில் தவறி விழுந்து, முதுகு எலும்பில் அடிபட்டதால் சில வருடங்கள் படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தியிருந்தார். ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார் செந்தில். கடந்த வருடம், ராசாத்தி என்கிற டிவி தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். 

செந்திலின் மூத்த மகன் மணிகண்டன், மருத்துவராக உள்ளார். 2-வது மகன் ஹேமச்சந்திர பிரபு, திரைத்துறையில் இயக்குநராகவுள்ளார். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அனைவரும் கூட்டுக் குடும்பமாக உள்ளார்கள். 

செந்திலின் மனைவி கலைச்செல்வி. சமீபத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டபோது அவர்தான் என்னைக் குழந்தையாகப் பார்த்துக்கொண்டார் என்கிறார் செந்தில். எனக்கு அவர் தான் உலகம். அவருக்கும் நான் தான் உலகம். இதுவரை நான் நடித்த படங்களின் படப்பிடிப்புகளுக்கு ஒருநாளும் அவர் வந்ததில்லை என்கிறார். என் வாழ்க்கையின் வரம்  என் மனைவி என்று பேட்டிகளில் மனைவியை அப்படிப் புகழ்கிறார். 

எம்.ஜி.ஆர். இறந்தபிறகு 1989-ல் சேவல் சின்னத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார் செந்தில். இவருடைய அண்ணன் பாண்டியன், அதிமுக கட்சி கிளை செயலாளராக இருந்துள்ளார். எம்.ஜி.ஆர். மீதான ஈர்ப்பினால் இன்றுவரை அரசியலில் உள்ளார் செந்தில். தற்போது, தினகரனின் அமமுக அமைப்புச் செயலாளராக உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com