தேசிய விருது பெற்ற குடும்பக் காவியம்: காலத்தால் அழியாத விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’!

தங்கத் தாமரை விருது கிடைக்கவேண்டும் என்று கனவு கண்ட இயக்குநர்களில் 95% பேர் எனக்கு போன் பண்ணி வாழ்த்தவில்லை.
தேசிய விருது பெற்ற குடும்பக் காவியம்: காலத்தால் அழியாத விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’!

இவ என் பொண்ணு. பேரு சரோஜினி. கவிக்குயில் சரோஜினி நாயுடு பேரை வைச்சிருக்கேன். இது சிதம்பரம். வ.உ.சி, நினைவா வைச்சிருக்கேன். ரெண்டாவது பையன் சிவா. சுப்ரமணிய சிவாவை ஞாபகப்படுத்துற விதமா வைச்சிருக்கேன். இதான் என் மூணாவது பையன் பாரதி. இவனுக்கு அந்த மகாகவியோட ஏண்டா வைச்சோம்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கேன்...

இப்படிப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான தனது வாரிசுகளை அழகாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவார் விசு. 

குடும்பக் காவியம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சம்சாரம் அது மின்சாரம் படம் விசுவுக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் புகழையும் தந்தது. மத்திய அரசின் தங்கத் தாமரை விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் அடைந்தது. நேற்று காலமான விசுவின் பெயரைக் காலம் முழுக்கச் சொல்லப் போகும் படமும் இதுதான்.

சம்சாரம் அது மின்சாரம் படம் எடுக்கும் முன்பு மூன்று தோல்விப் படங்களை எடுத்திருக்கிறார் விசு.

அவள் சுமங்கலி தான், புதிய சகாப்தம், கெட்டிமேளம் என மூன்று தோல்விப் படங்களை விசு எடுத்த சமயம் அது. அதிலும் புதிய சகாப்தமும் கெட்டிமேளமும் மோசமான தோல்விகளைச் சந்தித்தன. ஆனாலும் ஏ.வி.எம்., விசுவை வைத்துப் படம் எடுக்க நினைத்தது.

நல்லவனுக்கு நல்லவன் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார் விசு. படம் வெற்றி பெற்றதால் சொன்ன சம்பளத்தை விடவும் அதிகமாகக் கொடுத்துள்ளார் ஏ.வி.எம். சரவணன். ஏ.வி.எம்.மில் இயக்க வாய்ப்பு கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார் விசு. 

1975-ல் வெளியான படம் - உறவுக்கு கை கொடுப்போம். 1973-ல் உறவுக்கு கை கொடுப்போம் முதலில் மேடை நாடகமாக வெளிவந்தது. அதைப் பார்த்த தயாரிப்பாளர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (கே.எஸ்.ஜி.), மேடையிலேயே ரூ. 300 அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஒய்.ஜி. மகேந்திரன் இயக்கத்தில் (திரைக்கதை, வசன, இயக்கம் மேற்பார்வை - கே.எஸ். கோபாலகிருஷ்ணன்) ஜெமினி, செளகார் ஜானகி, தேங்காய் சீனிவாசன் நடித்த அந்தப் படம் தோல்வியடைந்தது. தமிழில் வெளிவந்து தோல்வியடைந்த படத்தை ரீமேக் செய்ய விரும்பினார் விசு. இத்தகவலைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார் ஏ.வி.எம். சரவணன்.

இந்தமுறை சரியாக எடுக்கலாம் என நம்பிக்கையளித்துள்ளார் விசு. சரி என்று சம்மதம் சொல்லினார் சரவணன்.

உறவுக்கு கை கொடுப்போம் படத்தின் உரிமையை கே.எஸ்.ஜி-யிடமிருந்து வாங்கினார் விசு. அவர் ஆச்சர்யப்பட்டுள்ளார். 

நீங்கள் ஏமாறப்போகிறீர்கள் என்று சொல்லி உரிமையை வழங்கியுள்ளார் கே.எஸ்.ஜி. கடைசியில் இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரிசா மொழிகளில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தியில் மட்டும் சுமாராக ஓடியது. இந்த விஷயத்தில் விசு சொல்லி அடித்த ஒரு படம் - சம்சாரம் அது மின்சாரம்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மொத்த பட்ஜெட் - 18 லட்சம் தான். 41 நாள்களில் படமாக்கப்பட்டது. 

படத்தின் முக்கியக் காட்சிகள் நடக்கும் விசுவின் வீட்டுக்காக ஏ.வி. எம். ஸ்டூடியோவில் தனியாக செட் போடப்பட்டது. பிறகு படப்பிடிப்புத் தளமாக மாற்றப்பட்ட இந்த செட், ஏ.வி.எம்.-முக்கும் பெரிய வருமானத்தை அளித்தது. 

விசுவின் படங்களில் கதாநாயகிகளுக்கு உமா என்று பெயர் வைக்கப்படும். இப்படி இருந்தாலே இதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கும்தானே!

1970களின் ஆரம்பத்தில், முதலில் டிராவல் ஏஜெண்ட்டாக வேலை பார்த்துள்ளார் விசு. பத்மா சேஷாத்ரி பால பவனில் வேலை பார்க்கும் 40 ஆசிரியைகளை அழைத்துக்கொண்டு இலங்கை சென்றுள்ளார். அப்போது, கதிர்காமம் கோயில் அருகே இரவு 11 மணிக்கு கதை எழுதிக்கொண்டிருந்துள்ளார் விசு. அருகில் தங்கியிருந்த ஆசிரியைகளில் ஒருவர் அப்போது அந்த இடத்துக்கு வந்து இதைப் பார்த்துள்ளார். தூக்கம் வரவில்லை, எழுதிக்கொண்டிருக்கும் கதை சொல்லுங்கள் என்று விசுவிடம் கேட்டுள்ளார். பிறகு, கதை கேட்டு முடித்தவுடன் அவர் நன்கு அழுதுள்ளார். நீங்கள் டிராவல் ஏஜெண்ட் மட்டும் இல்லை. நீங்கள் பெரிய அளவில் சாதிப்பீர்கள். இதை கதிர்காமம் முருகன் கோயிலில் வைத்துச் சொல்கிறேன் என்றார். அவர் பெயர் உமா. விசு சொல்லியிருக்கிறார், நீங்கள் சொல்வது போல நான் பெரிய ஆள் ஆனால் என் கதாநாயகிகளுக்கு உமா எனப் பெயர் வைக்கிறேன் என்று. அந்த உமா தான் இந்தப் படத்தில் லட்சுமி கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டது. (பிறகு, தன் மனைவியையும் உமா என்றே கடைசி வரை அழைத்துள்ளார் விசு.)

ஏ.வி.எம். சரவணனிடம் முதலில் கதை சொல்லும்போது, படத்தில் பல அழுத்தமான காட்சிகள் இருந்தாலும் நகைச்சுவைப் பகுதிகள் குறைவாக இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார். ஏ.வி.எம். படங்களில் வெகுஜன ரசனைக்கு எது குறைவாக இருந்தாலும் அதைச் சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்படும். (விக்ரம் நடிப்பில் சரண் இயக்கிய ஜெமினி படத்திலும் இதுபோன்ற ஒரு குறை சரவணனுக்குத் தென்பட்டது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைய இருப்பதால் செண்டிமெண்ட் காட்சிகளையும் படத்தில் சேர்க்கவேண்டும் என்று சரணுக்குக் கோரிக்கை வைத்தார். இதற்குப் பிறகு படத்தில் மனோரமாவின் கதாபாத்திரம் இணைக்கப்பட்டது. மனோரமா தொடர்பான காட்சிகளை ஒரே நாளில் எடுத்து முடித்தார் சரண்).

நகைச்சுவைப் பகுதி குறைவாக இருப்பதால், அந்த வீட்டு வேலைக்காரப் பெண்மணியாக மனோரமாவை நடிக்க வைத்து நகைச்சுவைக் காட்சிகளைப் படத்தில் சேர்த்துள்ளார் விசு. சரவணனின் ஆலோசனை விசுவுக்கும் உடன்பாடாக இருந்ததால் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கண்ணம்மா கதாபாத்திரம் படத்தில் இணைக்கப்பட்டது. 

படத்தின் கிளைமாக்ஸில் கோயிலில் இருந்த விசுவிடம் லட்சுமி குழந்தை வழங்குவதாக முதலில் காட்சியை வைத்திருந்தார் விசு. ஆனால் அது சரியாக இருக்காது, பிறகு குழந்தையைக் கொடுத்துவிட்டு பிறகு அவரே குடும்பத்தைப் பிரிப்பது பொருந்தாது என்று எண்ணி, மனோரமா குழந்தையை விசுவிடம் வழங்குவது போல காட்சியை மாற்றினார் விசு. இதை லட்சுமியிடம் விசு சொன்னபோது உடனே லட்சுமி சொன்னார் - அடிச்சாடா லக்கி பிரைஸ் மனோரமா!

கிளைமாக்ஸ் காட்சியை இப்போது பார்த்தாலும் இதயத்தைத் தாக்குவதாகவே இருக்கும். 

கூட்டுக் குடும்பம்ங்கிறது ஒரு நல்ல பூ மாதிரி. எல்லோரும் சேர்ந்து அதைக் கசக்கிட்டோம்... அப்புறம், மோந்து பார்க்கக் கூடாது... அசிங்கம். இப்படியே... ஒரு அடி விலகி நின்னு, நீ சௌக்கியமா... நான் சௌக்கியம். நீ நல்லாயிருக்கியா... நான் நல்லாயிருக்கேன். பண்டிகை, நாளு, கிழமை எல்லாரும் ஒண்ணா சேர்ந்துக்கலாம். ஒரு நட்போட, அது நல்லாயிருக்கும். 

அதை விட்டு, மறுபடியும் ஒண்ணா வந்துட்டோம்னா... ஏதாவது வாய் வார்த்தை, தகராறு, சண்டைனு வந்தா... அதை தாங்கிக்கிறதுக்கு மனசுலயும் சக்தி இல்ல... உடம்புலயும் சக்தி இல்ல...'

குடும்பங்கள் பிரிவது போல உள்ள க்ளைமாக்ஸ் காட்சிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சரவணன். அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்கள் கதை விவாதத்தில் எந்தளவுக்கு ஆர்வம் காட்டியுள்ளார்கள், இயக்குநரிடம் விவாதித்து ஒரு முடிவெடுத்துள்ளார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.

க்ளைமாக்ஸில் இரு குடும்பங்களும் இணையவேண்டும் என்பது சரவணனின் விருப்பம். ஆனால் விசு இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. குடும்பம் பிரிந்துபோவதுதான் கதைக்குச் சரியாக இருக்கும் என பிடிவாதமாக இருந்திருக்கிறார். இரு தரப்பும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. பிறகு சரவணன் சொல்லியிருக்கிறார். என் அம்மா படம் பார்த்து நீதி வழங்கட்டும். 

படம் பார்த்த சரவணனின் தாய், வெளியே வந்து - சரவணா, அவருக்குக் குடும்பங்களைப் பத்தி நிறைய தெரிஞ்சிருக்கு. மாத்தாதே! 

தமிழ் சினிமாவில் மத்திய அரசின் தங்கத் தாமரை விருது பெற்ற முதல் படம் - சம்சாரம் அது மின்சாரம்.

விருது அறிவிக்கப்படும் முன்பு விசுவை அழைத்துத் தகவல் சொல்லியிருக்கிறார் சரவணன். இன்று மாலை அறிவிக்கிறார்கள். அதுவரை வெளியே சொல்லவேண்டாம்.

உற்சாகமான விசு, அதெப்படி யாருக்கும் சொல்லாமல் இருக்கமுடியும். மூன்று பேருக்கு நான் சொல்வேன். என் மனைவி, தம்பி மற்றும் பாலசந்தர் என்று கூறியுள்ளார். சரி, ஒருவேளை விருது கிடைக்காவிட்டாலும் மூன்று பேரும் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி ரகசியமாக வைத்துக்கொள்ளச் சொல்லவும் என்று கூறியுள்ளார் சரவணன். 

முதலில் மனைவிக்கும் பிறகு தம்பிக்கும் அடுத்ததாக பாலசந்தருக்கும் தகவல் கூறியுள்ளார் விசு. நான் வாங்கியிருந்தால் கிடைத்த சந்தோஷத்தை விடவும் நீ வாங்கியதில் சந்தோஷம்  என்று வாழ்த்தியுள்ளார் கே.பி. 

தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டும் இருந்த காலகட்டம் அது. 

நாடக நடிகரும் செய்தி வாசிப்பாளருமான டிவி வரதராஜன் அன்றைய தினம் விசுவுக்கு போன் செய்துள்ளார். எதுவாக இருந்தாலும் இரவு 8 மணிக்கு மேல் பேசலாம் என்று அவரிடம் கூறியுள்ளார் விசு. தேசிய விருதுச் செய்திக்காகக் காத்திருப்பதால் அதற்கு முன்பு யாரிடமும் பேசவேண்டாம் என எண்ணியுள்ளார் விசு. ஆனால், எதுவாக இருந்தாலும் நான் 7.30 மணிக்கு முன்பு பேசவேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளார் வரதராஜன். ஏனெனில் அன்றைக்கு தூர்தர்ஷனில் செய்தி வாசித்தவர் வரதராஜன் தான்.  அவர் கையில் செய்திகள் அடங்கிய தாள் இருந்தது. அதில் விசுவுக்குத் தேசிய விருது குறித்த செய்தி இருந்ததால் செய்தி வாசிப்பதற்கு முன்பு விசுவுக்குச் சொல்லி, வாழ்த்து சொல்ல அவருக்கு போன் செய்துள்ளார். இது உறுதியான தகவல். நான் இதைச் செய்தியாக வாசிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் வரதராஜன். 

நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விசு இவ்வாறு கூறுகிறார்: தமிழுக்குத் தங்கத் தாமரை விருது கிடைக்கவேண்டும் என்று கனவு கண்ட இயக்குநர்களில் 95% பேர் எனக்கு போன் பண்ணி வாழ்த்தவில்லை. இத்தனைக்கும் சங்கத்தில் எல்லோரும் நண்பர்கள்தாம். நமக்குக் கிடைக்கலையே எனச் சில பேர். இவனுக்குக் கிடைச்சிருக்கே எனச் சில பேர் இருந்திருக்கலாம் என்கிறார். 

சம்சாரம் அது மின்சாரம் 2 படத்தை உருவாக்கவும் தயாராக இருந்துள்ளார் விசு. ஷாட் முதற்கொண்டு அனைத்தையும் எழுதி டிவிடி-லும் பென் டிரைவிலும் பதிவு செய்தும் வைத்திருந்தார். இந்தப் படத்தை தன்னுடைய உதவியாளரும் ஆதித்யா படத்தை இயக்கியவருமான பாஸ்கர் ராஜா இயக்கலாம் என தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். 

சம்சாரம் அது மின்சாரம் படம் வெளியானபோது உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் விசு. படம் பார்த்த ஒருவர் படம் சுமார் என்று கூறியுள்ளார். குமாரபாளையத்தில் மட்டும் விசுவும் ரகுவரன், லட்சுமி குடும்பமும் ஒன்றாக இணைவது போல படத்தை முடித்துள்ளார்கள். லட்சுமி பேசும் உணர்ச்சிகரமான அந்த கிளைமாக்ஸ் வசனத்தை வெட்டியிருக்கிறார்கள். 

படம் நன்றாகப் போகிறது. ஆனால் குமாரபாளையத்தில் மட்டும் சுமாராகப் போகிறது என்று ஏ.வி.எம். சரவணன் தன்னிடம் தகவல் கூறியதை இத்துடன் இணைத்துப் பார்க்கிறார் விசு. உடனே சரவணனுக்குத் தகவல் போகிறது. எந்த க்ளைமாக்ஸ் வேண்டும் என்று சரவணன் நினைத்தாரோ அந்த க்ளைமாக்ஸை வைத்து ஓடிய குமாரபாளையத்தில் படம் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் விசு சொன்னவுடன் உடனே சரவணன் தலையிட்டு, திரையரங்கு உரிமையாளரிடம் பேசி, நிலைமையைச் சரிசெய்து, சரியான கிளைமாக்ஸைத் திரையிட வைத்துள்ளார். தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காத தயாரிப்பாளர் என்று மெச்சுகிறார் விசு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com