Enable Javscript for better performance
‘தெய்வக்குரல்’ டி.எம்.எஸ்.: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...- Dinamani

சுடச்சுட

  

  ‘தெய்வக்குரல்’ டி.எம்.எஸ்.: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...

  By எழில்  |   Published on : 26th March 2020 05:00 PM  |   அ+அ அ-   |    |  

  TMSounderRajan11_19-01-2008_18_31_6xx

   

  பொன்மகள் வந்தாள், பொருள்கோடி தந்தாள்...
  ஆடலுடன் பாடலைக் கேட்டேன்...
  பூமாலையில் ஓர் மல்லிகை...
  பச்சைக் கிளி முத்துச் சரம்...
  நினைத்தேன் வந்தாய் நூறு வயது...
  முத்தைத்தரு பத்தித் திருநகை...
  ஹா... யாரடி நீ மோகினி
  ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...
  இன்கிலாப் ஜிந்தாபாத், இந்துஸ்தான் ஜிந்தாபாத்..
  ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...
  பாட்டும் நானே, பாவமும் நானே...


  வாசிக்கும்போதே டி.எம்.எஸ் குரல் காதில் ஒலிக்கிறது அல்லவா! அதுதான் டி.எம்.எஸ். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற பாடகர். இன்றுவரைக்கும் இவருக்கு ஈடு இணையான இன்னொரு பாடகர் தமிழ் சினிமாவில் இல்லை.

  அந்தக் கம்பீரக் குரலின் ரகசியம் தான் என்ன?

  'குனிஞ்சு பாடக் கூடாது. கலைஞன்னா நிமிர்ந்துதான் பாடணும்' என்று ஜி. ராமநாதன் சொல்வார். அந்தக் கட்டளையை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளார் டி.எம்.எஸ். என்னுடைய சாரீரத்தோட குரு தியாகராஜ பாகவதர். உச்சரிப்புக்கும் சொல்வளத்துக்கும் கே.பி.சுந்தராம்பாள் குரு. பாவத்துக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா குரு என்று முன்னோர்களைப் போற்றி வணங்குகிறார் டி.எம்.எஸ். இவருடைய குரலை தெய்வக்குரல் என வர்ணிப்பார் யேசுதாஸ். லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னாலும் ஸ்ருதி விலகிப் பாடச்சொன்னால் பாடமாட்டார் அதுதான் டி.எம்.எஸ் என்று எம்.எஸ். விஸ்வநாதனிடம் பாராட்டுப் பெற்றவர். வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.எஸ். கர்நாடகப் பாடகர்களே கூட சமயங்களில் ஸ்ருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம் என்று பாராட்டினார் வாலி.

  1922 மார்ச் 24-ல் மதுரையில் இசைப்பின்னணி இல்லாத (குஜராத்) செளராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தார் டி.எம்.எஸ். அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார். பி.யூ. சின்னப்பா, சுப்பையா பாகவதர் பாடல்களைக் கேட்டு வளர்ந்த டி.எம்.எஸ்., தியாகராஜ பாகவதரின் பரம ரசிகர். அதனால் தியாகராஜ பாகவதர் குரலில் மேடைக்கச்சேரிகளில் பாடி ஆரம்பத்தில் கவனம் ஈர்த்துள்ளார். ஒருமுறை தியாகராஜ பாகவதரின் பாடலைக் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தபோது அதைக் கேட்டு பாகவதரே ஆச்சர்யப்பட்டுப் போய், நீ சென்னைக்கு வந்தால் வளமான எதிர்காலம் உண்டு என வாழ்த்தியுள்ளார். (இதேபோல கவிஞர் வாலிக்கு ஊக்கமாக அமைந்தது டி.எம்.எஸ்.ஸின் பாராட்டு. 1950களில் திருச்சி வானொலி நிலையத்தில் பணிபுரிந்த வாலியின் திறமையைக் கண்டு, சென்னைக்கு வந்து சாதிக்கவும் என்று பாராட்டியிருக்கிறார் டி.எம்.எஸ்.)

  எம்.கே. தியாகராஜ பாகவதரும் சி.எஸ். ஜெயராமனும் கொடிகட்டிப் பறந்த காலம் அது. அதனால் டி.எம்.எஸ்ஸுக்கு அவ்வளவு சுலபமாக பின்னணிப் பாடல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1946-ல் கிருஷ்ணவிஜயம் படத்தில் எஸ்.வி. சுப்பையா நாயுடு இசையில் முதல்முதலாகப் பின்னணிப் பாடகராக அறிமுகமானார் டி.எம்.எஸ். ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி என்கிற பாடல்தான் அவர் முதலில் பாடியது. அந்தப் படம் 1950-ல் வெளியானது. அந்தப் படத்தில் 5 பாடல்களைப் பாடினார். அன்று ஆரம்பித்த இசைப்பயணம் மகத்தான சாதனைகளைப் படைத்தது. தமிழில் மட்டும் 11,000 பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். டி.எம்.எஸ்.-ஸின் மகத்துவமாகப் பார்க்கப்படுவது - தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா பாடிய காலக்கட்டத்தில் பாட ஆரம்பித்து தனக்கென ஒரு பாணியையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கால் நூற்றாண்டு காலம் கொடி கட்டிப் பறந்தது.

  1946-ல் பின்னணிப் பாடகராக அறிமுகமானாலும் அதற்குப் பிறகு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கக் கிட்டத்தட்ட 10 வருடங்கள் காத்திருந்தார் டி.எம்.எஸ்.

  சிவாஜி நடித்த தூக்குத்தூக்கி (1954) படத்தில் எட்டு பாடல்கள். அப்போது முன்னணிப் பாடகராக இருந்த திருச்சி லோகநாதனைப் பாட வைக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடலுக்கு ஐந்நூறு ரூபாய், எட்டுப் பாடல்களுக்கு நான்காயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார் லோகநாதன். அருணா பிலிம்ஸ் சார்பில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனே இதற்கு லோகநாதனே வழி சொன்னார். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்றொரு புதுப்பாடகர் வந்துள்ளார். அவரிடம் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் என்று டி.எம்.எஸ்.ஸுக்கு அற்புதமான வழியை உருவாக்கித் தந்தார்.

  கிருஷ்ண விஜயம் படத்தில் நான்கு பாடல்களையும் அருமையாகப் பாடியிருந்தார் என்று சான்றிதழ் வழங்கினார் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன். இதையடுத்து, தூக்குத்தூக்கியில் எட்டுப் பாடல்களையும் பாட டி.எம்.எஸ்.ஸுக்கு இரண்டாயிரம் சம்பளம் தரப்பட்டது. பின்னணிப் பாடகராக மாறுவதற்கு முன்பு நிறைய சின்னச் சின்ன வேலைகளைச் செய்தவர் டி.எம்.எஸ். அதனால் இந்த வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணினார். ஆனால் படக்கதாநாயகன் சிவாஜி ஒரு தடை போட்டார். புதிய பாடகர் வேண்டாம். பராசக்தியில் பாடிய சி.எஸ். ஜெயராமன் தான் பாடவேண்டும் என்று கூறிவிட்டார். பராசக்திக்குப் பிறகு மனோகரா, அந்த நாள் படங்களில் நடித்து தனக்கென ஓர் ஆளுமையை உருவாக்கியிருந்தார் சிவாஜி. நல்லவேளையாக, இசையமைப்பாளர் ராமநாதன், டி.எம்.எஸ் பக்கம் நின்றார். நம் படத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களுக்கு இவருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்றார். இந்தக் குழப்பத்துக்கு டி.எம்.எஸ்ஸே ஒரு வழி சொன்னார். நான் மூன்று பாடல்களைப் பாடுகிறேன். பிடிக்கவில்லையென்றால் விலகிக்கொள்கிறேன் என்றார். வைராக்கியம். சரி என்றார் சிவாஜி.

  சிவாஜியின் சம்மதத்துக்காக முதலில் மூன்று பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. மூன்றையும் கேட்ட சிவாஜி, டி.எம்.எஸ் இந்தளவுக்குப் பாடுவார் என எதிர்பார்க்கவில்லை. உடனே டிக் அடித்தார். அன்று ஆரம்பித்தது சிவாஜி - டி.எம்.எஸ் கூட்டணி.

  சிவாஜிக்காக அதே வருடம் வெளியான கூண்டுக்கிளியில் கொஞ்சும் கிளியான பெண்ணை என்கிற பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மலைக்கள்ளன் படத்தில் டி.எம்.எஸ் பாட சிபாரிசு செய்தார். எம்.எஸ். சுப்பையா நாயுடு இசையில் டி.எம்.எஸ். பாடிய, எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... பாடலை கேட்டவுடன் தமிழக ரசிகர்கள் அள்ளிக்கொண்டார்கள். அதுதான் எம்.ஜி.ஆர். - டி.எம்.எஸ். கூட்டணிக்குத் தொடக்கமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்துக்கும் வெற்றிகளுக்கும் இந்தப் பாடல் முக்கியமாக அமைந்தது.

  முதலில் நல்ல வாய்ப்புகளுக்காகத் தடுமாறிய டி.எம்.எஸ்., மலைக்கள்ளன் படத்தில் பாடிய பிறகு, மெல்ல மெல்ல நட்சத்திரப் பாடகராக மாறினார்.

  *

  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி, ஆலங்குடி சோமு, வாலி போன்ற கவிஞர்களின் அழகிய, கருத்துள்ள வரிகள் டி.எம்.எஸ்.ஸின் வெண்கலக் குரலுக்குக் கச்சிதமாக அமைந்தன. சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன் போன்ற மகத்தான இசையமைப்பாளர்களும் திராவிட, சமத்துவக் கருத்துகளை வெளிப்படுத்திய படங்களும் டி.எம்.எஸ். பாடல்களை மேலும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. இதனால் சிறிது காலம் காத்திருந்தாலும் வேகம் எடுத்தவுடன் பாடகர்களின் சூப்பர் ஸ்டாராக மிளிர்ந்தார் டி.எம்.எஸ்.
  ரசிகர்களின் மனத்தில் குடிகொண்டு அரசியலில் வெற்றி பெற எம்.ஜி.ஆருக்கு பெரிதும் உதவியது டி.எம்.எஸ்ஸின் பாடல்கள்தான் என்றால் அதை யாரால் மறுக்கமுடியும்? நான் ஆணையிட்டால்..., ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... போன்ற பாடல்கள் மூலம் மக்களிடம் அரசியல் கருத்துகளைச் சேர்ப்பதற்கு இசை, பாடல் வரிகளுடன் டி.எம்.எஸ்ஸின் ஆளுமையான குரலும் முக்கியப் பங்கு வகித்தது.   

  ரசிகர்களின் ஒரே ஆச்சர்யம். அதெப்படி சிவாஜிக்கு டி.எம்.எஸ். பாடினால் சிவாஜியே பாடியது போலவே இருக்கிறது, எம்.ஜி.ஆருக்குப் பாடினாலும் அதே உணர்வுதான் கிடைக்கிறது! இந்த அதிசயம் எப்படி சாத்தியமாகிறது? டி.எம்.எஸ்ஸின் பதில்:

  ஒவ்வொரு நடிகரும் எந்தவிதமான பாவத்துடன் பேசுவார்கள் என்பதைக் கவனித்துக்கொள்வேன். மற்றும் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துக்கொள்வேன். பிறகு, அவர்களுடைய குரலுக்கு என்னுடைய குரல் பொருந்துவதுபோல பாடுவேன். சிலசமயம் ஆண்மைத்தனமான குரலில் பாடவேண்டும். சிலசமயம் சோகமாக, சிலசமயம் குதூகலமாக என குரலின் வடிவம் பாடலுக்கு, நடிகர்களுக்கு ஏற்றாற்போல மாறும். சும்மா மைக்கில் நின்று பாடிவிட்டுச் செல்லமுடியாது. மைக் முன்பு நடிக்கவேண்டும். பாடும்போது நான் எப்படி நடித்துக்காட்டுகிறேன் என்று பார்ப்பதற்காக நடிகர்கள் வருவார்கள். பிறகு நான் வெளிப்படுத்திய நடிப்பை அப்படியே படப்பிடிப்பில் செய்துவிடுவார்கள். பின்னணிப் பாடல் என்பது நடிப்பையும் சேர்த்ததுதான். கதாபாத்திரத்துக்கு என்னுடைய குரல் வலு சேர்ப்பதால் தான் நான் பாடவேண்டும் என்று சிவாஜியும் எம்.ஜி.ஆரும் விரும்புவார்கள் என்று பேட்டியளித்துள்ளார் டி.எம்.எஸ்.

  உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் வந்ததே பாடலில், கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப் பாடுவதாகக் காட்சி அமைந்திருந்தது. இதற்காக ஸ்டூடியோவில் சிறிது தூரம் ஓடிவந்து அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

  சாந்தி படத்தில் யார் இந்த நிலவு என்கிற பாடலைக் கேட்டு சிவாஜி அசந்து போயிருக்கிறார். டி.எம்.எஸ். பாடியதுபோல நடிக்கவேண்டும் என்றால் சிறிது பயிற்சி தேவை என்று டேப் ரிக்கார்டரை எடுத்துக்கொண்டு போய் தொடர்ச்சியாகப் பயிற்சி எடுத்தபிறகே படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

  *

  பட்டினத்தார், அருணகிரிநாதன் ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் டி.எம்.எஸ். முத்தைத் திருபத்தித் திருநகை பாடலைப் பாடலைப் பாடும் முன்பு, கிருபானந்த வாரியாரிடம் சென்று அப்பாடலுக்கு அர்த்தம் கேட்டுப் பாடியுள்ளார். சினிமா பாடல்களில் மட்டுமல்லாமல் பக்திப் பாடல்களாலும் ரசிகர்களைக் கவர்ந்திழுத்துள்ளார். 'அழகென்ற சொல்லுக்கு முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...', 'உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே...' போன்ற பாடல்கள் மூலம் இன்றைக்கும் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பக்தர்களின் மனத்திலும் குடிகொண்டுள்ளார். உள்ளம் உருகுதயா பாடலை முதலில் அவருக்குக் கற்றுத் தந்தவர், பழனி விடுதி ஒன்றில் பணியாற்றிய இஸ்லாமியர் ஒருவர்.

  அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...
  அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...
  தொட்டால் பூ மலரும்...
  அவளுக்கென்ன அழகிய முகம்...
  என் கேள்விக்கென்ன பதில்...
  கடவுள் எனும் முதலாளி...
  இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்...
  பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த, ஊர்வலம் நடக்கின்றது...
  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்...
  நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
  ஓடி ஓடி உழைக்கணும்... ஊருக்கெல்லாம் கொடுக்கணும்...
  யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...

  *

  டி.எம்.எஸ். கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசித்துள்ளார் இளையராஜா. முதலில் இசையமைத்த அன்னக்கிளி, சின்ன பட்ஜெட் படம். டூயட் பாடல்களோ, வேறு பிரமாண்டமான பாடல்களோ கிடையாது என்றாலும் டி.எம்.எஸ்.ஸின் குரல் தனது முதல் படத்தில் ஒலிக்கவேண்டும் என்று விருப்பப்பட்டார் இளையராஜா. இதற்காக பஞ்சு அருணாசலத்திடம் சொல்லி அதற்கென ஒரு காட்சியை உருவாக்கச் சொன்னார். அன்னக்கிளி... என்று தொடங்கும் பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். அந்தப் பாடலில் கடைசியில் அன்னக்கிளி என்கிற வரியை மூன்று விதமாகப் பாடி அசத்தியிருப்பார்.

  ஆனாலும் டி.எம்.எஸ். - இளையராஜா இடையிலான மோதல் ஒன்று ரசிகர்களிடம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. வெளிநாட்டில் ஒரு கச்சேரியில் இளையராஜாவை டி.எம்.எஸ். தவறாகப் பேசிவிட்டார் என்றொரு தகவல் வெளியாகி, ரசிகர்களின் விவாதப்பொருளாக அது மாறியது. இதனால் தான் ராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடுவதில்லை என்றும் பேசப்பட்டது.

  ஆனால் ஒரு வார இதழுக்கு இருவரும் இணைந்து அளித்த பேட்டியில் இதைத் தெளிவுபடுத்தினார் இளையாராஜா.

  அன்னக்கிளி, பத்ரகாளி, தீபம்னு மூணு படத்துக்கு இசையமைச்சு முடிஞ்ச நேரம். அப்ப மலேசியாவில் இசை நிகழ்ச்சி. நீங்க அங்கே பேசினதைப் பலரும் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க. 'கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் மாதிரியான ஜாம்பவான்கள் இசையில் அவ்வளவு சுலபமாப் பாடிட முடியாது. பாடிப் பாடி பிராக்டீஸ் பண்ணிக் குரலில் மெருகேத்தித்தான் பாடுவேன்'னு நீங்க பேசுனீங்க. ஆனா, அப்ப வளர்ந்து வரும் என்னை மாதிரியான இசையமைப்பாளர்களை நீங்க மட்டம் தட்டுறீங்கன்னு பல பேர் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனால், உங்க பேச்சுல சத்தியம் இருந்தது. அது எனக்குத் தெரியும்'' என்றார் இளையராஜா.

  உங்களை நான் பயன்படுத்திக்கலை, ஓரங்கட்டினேன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. அப்ப ரஜினி, கமல் மாதிரியான நடிகர்கள் வளர்ந்து வந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நானும் வளர்ந்துட்டிருந்தேன். உங்களைப் புறக்கணிக்கணும்கிறது என் நோக்கம் கிடையாது. ஆனா, உங்களை எப்படி அணுகுறதுங்கிற கூச்சம் எனக்கு இருந்துச்சு. அதுதான் நிஜம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு உங்களை என்னுடைய இசையமைப்பில் பாடவைக்க முடியவில்லை. காரணம், உங்கள் குரல் வளத்துக்கு வாயசைத்து நடிக்கும் திறமையும் தகுதியும் எவருக்கும் இல்லையென்பதால்தான் உங்கள் குரலைப் பயன்படுத்த முடியவில்லை. அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்றார் ராஜா.

  இதற்கு விளக்கம் அளித்த டி.எம்.எஸ்., உங்களைப்பற்றி நான் எப்போதாவது ஏதாவது கோபப்பட்டு பேசியிருப்பேன். அதையெல்லாம் மனதில் தயவுசெய்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்மீது கோபம் இருந்தால் மறந்து விடுங்கள் என்றார்.

  *

  ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் - பைரவி. கலைஞானம் கதை, வள்ளிவேலன் மூவிஸ் தயாரிப்பு, இயக்கம் - எம். பாஸ்கர்.
   
  நண்டூறுது, நரிïறுது பாடலைப் பாடினார் டி.எம்.எஸ்.

  பாடலைக் கேட்ட ரஜினி, கலைஞானத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, "கலைஞானம் சார்! டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை!'' என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

  டி.எம்.எஸ். வாழ்க்கையில் நடைபெற்ற உருக்கமான சம்பவத்தைப் பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், தன்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

  சிலசமயங்களில் நிஜ வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை எந்தப் புனைவிலும் காணமுடியாது.

  மும்பையில் உள்ள தனது மகனின் வீட்டில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்துள்ளார் வாலியின் தாய். தனது சகோதரனின் வீட்டில் இருக்கும் தாய் உங்களைக் காண விருப்பப்படுகிறார் என டி.எம்.எஸ்ஸிடம் கோரிக்கை வைத்தார் வாலி. உடனே சென்று அவரைப் பார்த்து அவருக்கு விருப்பமான இரு பாடல்களைப் பாடி விட்டு வந்திருக்கிறார் டி.எம்.எஸ். அதில்தான், தான் எத்தகையை சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதை மிகவும் உணர்வுபூர்வமான விதத்தில் நிரூபித்துள்ளார்.

  டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பாகப்பிரிவினை படத்தில் பாட அழைத்துள்ளார்கள். மகனின் நிலை கண்டு அழுதுகொண்டிருந்த டி.எம்.எஸ். பாடச் சென்றுள்ளார். வழக்கமாக பாடும்போது இரண்டு முறையாவது ஒத்திகை பார்ப்பார் டி.எம்.எஸ். அன்றைக்கு டியூனும் பாடல் வரிகளையும் கேட்டார். இசையமைப்பாளரிடம் பாடிக்காண்பித்தார். நேராக டேக்குக்குச் சென்றுவிட்டார். ஒரே டேக்கில் பாடலைத் துல்லியமாகப் பாடிவிட்டார். அன்று அவர் இருந்த நிலைக்குக் கச்சிதமாக இருந்தது பாடலின் வரிகள்.

  ஏன் பிறந்தாய் மகனே... பாடல் தான் அது.

  பாடலைப் பாடிவிட்டு வீட்டுக்கு வந்தால் மகனின் உயிர் பிரிந்திருந்தது.

  மகனின் நினைவு வரும் என்பதால் அந்தப் பாடலை மட்டும் எந்த மேடையிலும் பாடக்கூடாது என முடிவெடுத்தார் டி.எம்.எஸ். எத்தனை பெரிய நபர் கேட்டாலும் பாடமாட்டார். வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தாலும் அணைத்துவிடுவார்.

  1959-ல் அந்தப் பாடலைப் பாடிய டி.எம்.எஸ்., தனது நிலைப்பாட்டை ஒருவருடத்தில் மாற்றிக்கொண்டார், வாலியின் தாய்க்காக.

  தன்னைப் பார்க்கவேண்டும் என்று விருப்பப்பட்ட வாலியின் தாய், ஏன் பிறந்தாய் மகனே பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டதும் துடிதுடித்துப் போய்விட்டார் டி.எம்.எஸ். ஆனாலும் சில நொடிகளில் அந்த முடிவை எடுத்தார். உடல்நலமில்லாமல் இருக்கும் இந்தத் தாயின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும். தனது மனத்தை மாற்றிக்கொண்டு அவர் கேட்டபடியே உருக்கமாகப் பாடினார். ஏன் பிறந்தாய் மகனே...

  *

  டி.எம்.எஸ்ஸுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஐந்து பெண்கள்; நான்கு பையன்கள். ஐந்து பெண்களில் நால்வரும் பையன்களில் இருவரும் இறந்துவிட்டார்கள். பால்ராஜ், செல்வகுமார் என இரு மகன்களும் மல்லிகா என்கிற மகளும் உள்ளார்கள். இரு மகன்களும் மெல்லிசைக் கச்சேரிகளில் பாடிவருகிறார்கள்.

  *

  கலைஞரின் மகன் மு.க. அழகிரி டி.எம்.எஸ்ஸின் தீவிர ரசிகர். மதுரையில் டி.எம்.எஸ்.ஸுக்காகத் தனியாகப் பாராட்டு விழாவும் நடத்தினார். டி.எம்.எஸ். இமயத்துடன் என்கிற வாழ்க்கை வரலாற்று ஆவணப் படத்தை எடுப்பதில் நடுவில் நிதிச்சிக்கல் ஏற்பட்டபோது அதைக் கேள்விப்பட்ட மு.க.அழகிரி, 'இந்தத் தொடரை நல்லா எடுங்க. கலைஞர் டி.வி-யில் போட ஏற்பாடு செய்யறேன். வேற எந்த உதவியா இருந்தாலும் செய்றேன்' என்று அதன் இயக்குநர் விஜய்ராஜிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

  *

  ஆறு தலைமுறைகளுக்குப் பாடியவர் டி.எம்.எஸ். 1950களின் மத்தியில் ஆரம்பித்து 1970களின் இறுதிவரை வானொலிகளிலும் ஒலிப்பெருக்கிகளிலும் டி.எம்.எஸ். பாடிய பாடலைக் கேட்காமல் எந்தத் தமிழனும் உறங்கச் சென்றிருக்கமுடியாது. (1970களின் இறுதியில் இளையராஜாவின் வரவுக்குப் பிறகு எஸ்.பி.பி.யும் யேசுதாஸும் டி.எம்.எஸ்ஸை முந்திச் சென்றுவிட்டார்கள்.) ஆனாலும் 1980களின் இறுதிவரை டி.எம்.எஸ்ஸின் குரல் தமிழ் சினிமாவுக்குத் தேவையாக இருந்தது. விஜய்காந்த் நடித்த உழவர் மகன் படத்தில் டி.எம்.எஸ். பாடிய உன்னை தினம் தேடும் தலைவன் பாடல் ஹிட் ஆனது. 1989-ல் சத்யராஜ் நடித்த தாய்நாடு படத்தில் ஆறு பாடல்களைப் பாடினார். 2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ரஹ்மான் இசையமைத்த “செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடல்தான் அவர் கடைசியாகப் பாடியது. திரைப்படங்களில் பல மொழிகளில் பாடினாலும் தமிழில் பெற்ற பேர், புகழ் மற்ற மொழிகளில் அவருக்குக் கிடைக்கவில்லை.

  *

  90-வது வயதில் சித்தராகிவிடவேண்டும் என்று எண்ணியிருக்கிறார் டி.எம்.எஸ். இசைஞானச் சித்தர் என்று உலகம் தன்னை ஞாபகம் வைத்திருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

  *

  91-வது வயதில் 2013, மே 25 அன்று காலமானார் டி.எம்.எஸ். இறுதிக்காலங்களில் ஆல்ஃபா மைண்ட் பவர், யோகா, ஆசனங்கள், தினமும் மாலை வேளையில் பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசத்தை இருமுறை பாராயணம் செய்வது என உடலையும் மனத்தையும் வலிமைப்படுத்தும் வெவ்வேறு வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளார்.

  டி.எம்.எஸ்.ஸின் பரம ரசிகரான விஜயராஜ், டி.எம்.எஸ்.ஸின் வாழ்க்கையை இமயத்துடன் என்கிற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார். விஜயராஜ், ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அடையார் திரைப்படக் கல்லூரியில் படித்தவர். டி.எம்.எஸ். ஆவணப்படத்துக்காக அவர் 10 வருடங்கள் உழைக்கவேண்டியிருந்தது. சாதனையாளர்கள் இறந்த பிறகுதான் அவர்களைப் பற்றி எண்ணுகிறோம். சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாமல் டி.எம்.எஸ்ஸை உள்ளே விட மறுத்தார்கள். காவலரிடம் தன்னைப் பற்றி விளக்கியபிறகுதான் அவரால் உள்ளே செல்ல முடிந்தது. அதனால்தான் அனைவரும் அவருடைய அருமையை உணரவேண்டும் என்பதற்காக டி.எம்.எஸ். உயிருடன் இருக்கும்போதே அவருடைய வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளேன் என்று கூறுகிறார் விஜயராஜ்.

  டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் இடம்பெற்ற நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலருடைய பேட்டியின் வழியாக டி.எம்.எஸ்.ஸின் வாழ்க்கையை அதில் விவரித்திருந்தார் விஜயராஜ். 2001-ம் ஆண்டு டி.எம்.எஸ்., மதுரையில் பிறந்த வீட்டிலிருந்து ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2013-ல் 60 லட்சம் செலவில் முடிந்துள்ளது. லதா மங்கேஷ்கர், நாகேஷ்வர ராவ், சிவாஜி, ஜெயலலிதா, ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என 3 தலைமுறை நடிகர்கள், கலைஞர்களுடன் டி.எம்.எஸ். உரையாடுவது போல ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டி.எம்.எஸ். பிறந்த வீடு, சிறிய வயதில் கச்சேரி செய்த இடங்கள், பாடல் பதிவான ஸ்டூடியோக்கள், சென்னையில் டி.எம்.எஸ். வாழ்ந்த இடங்கள் என டி.எம்.எஸ். வாழ்வில் தொடர்புடைய அத்தனை இடங்களுக்கும் டி.எம்.எஸ்.ஸை அழைத்துச் சென்று படமாக்கியுள்ளார் விஜயராஜ். டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள் இங்குக் கிடைக்காத நிலையில் மலேசியாவில் உள்ள கொலம்பியா நிறுவனத்திடமிருந்து அவற்றை வாங்கியுள்ளார். இப்படி அசாத்தியமான உழைப்பு, அர்ப்பணிப்பினால் ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை செண்ட்ரல் ஸ்டூடியோவிலிருந்து தான் ஐந்து முதல்வர்களின் திரையுலக வாழ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. சி.என். அண்ணாதுரை, கலைஞர், எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., வி.என். ஜானகி. அந்த ஸ்டூடியோவில்தான் தனது முதல் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். ஒருவருடம் காத்திருந்த பிறகு அங்குப் படப்பிடிப்பு நடத்த விஜயராஜுக்கு அனுமதி கிடைத்துள்ளது. (இந்தப் படப்பிடிப்பு முடிந்தபிறகு அந்த ஸ்டூடியோ இடிக்கப்பட்டுவிட்டது.) முழு ஆவணப்படத்தையும் எடிட்டிங் டேபிளில் பார்த்த டி.எம்.எஸ்., அது தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் முன்பு மறைந்துவிட்டார்.

  காலத்துக்கும் மறக்கமுடியாத பாடல்களைப் பாடிவிட்டுச் சென்றுள்ளார் டி.எம்.எஸ். கேட்டுக்கொண்டே இருப்போம்...

  அழகென்ற சொல்லுக்கு முருகா...
  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...
  சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...'
  உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே...
  யாரந்த நிலவு, ஏனிந்த கனவு...
  எங்கே நிம்மதி...
  மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...
  மலர்ந்தும் மலராத பாதி மலர் போல...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai