நயன்தாராவின் 36-வது பிறந்த நாள்: தமிழ் சினிமாவின் தைரியலட்சுமி!

ஒரு கதாநாயகியால் தனித்து நின்று பெரிய வெற்றிகளைப் பெற முடியும் என முதலில் நிரூபித்தவர்... 
நயன்தாராவின் 36-வது பிறந்த நாள்: தமிழ் சினிமாவின் தைரியலட்சுமி!

பிரபல நடிகை நயன்தாரா தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.  

கடந்த வருடம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் நயன்தாரா. இந்தமுறை கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். 

2003-ல் மனசினக்கரே என்கிற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. 2005-ல் தமிழில் அறிமுகமான ஐயா வெளிவந்தது. அவ்வளவுதான். அந்தப் புத்தம் புதிதான அழகைத் தமிழ் ரசிகர்கள் அள்ளிக் கொண்டார்கள். ஒரு வார்த்தை பேச ஒரு நிமிஷம் காத்திருந்தேன் பாடல் நயன்தாரா தமிழ் ரசிகர்களின் மனத்தில் நன்குப் பதிய மிகவும் உதவி செய்தது. ‘டயானா மரியம் குரியன்’ என்கிற இயற்பெயரைக் கொண்ட, சிரியன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவருக்கு, ‘நயன்தாரா’ என்கிற புதிய பெயரைச் சூட்டியது திரையுலகம். நட்சத்திரத்தின் கண்கள் என்று இதற்கு அர்த்தம். 

ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வேண்டுமானால் ஒரு நடிகை நிறைய சாதித்திருக்க வேண்டும். ஆனால் தனது 2-வது தமிழ்ப் படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அடுத்ததாக கஜினி படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்தது என் தவறு எனப் பிறகு தைரியமாகப் பேட்டியளித்தார். (எனினும் கருத்துவேறுபாடுகள் நீங்கி, முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்தில் மீண்டும் நடித்தார்.) விஜய் நடித்த சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா என்கிற ஒரே ஒரு பாடலுக்கு ஆடினார். பாடலின் தொடக்கத்தில் நயன்தாராவா... என விஜய் வியக்கும் அந்த ஒரு வசனமே ஆரம்பக்கட்டத்திலேயே அவர் எந்தளவுக்குப் புகழுடன் இருந்தார் என்பதற்கு உதாரணம். கள்வனின் காதலி, ஈ, தலைமகன் என அடுத்தடுத்து நடித்தவர், சிம்புவுடன் இணைந்து நடித்த வல்லவன் படத்தில் நடித்தபோது ஏராளமான சர்ச்சைகளை எதிர்கொண்டார். அவையும் நயன்தாராவுக்கு மேலும் புகழைச் சேர்த்தன.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதே வருடம் வெளியான அஜித் நடித்த பில்லா படம் நயன்தாராவை நீச்சலுடையில் வெளிப்படுத்தியது. நயன்தாராவின் அழகை புதிய விதத்தில் வெளிப்படுத்திய படம் இது. அடுத்த வருடம் வெளியான யாரடி நீ மோகினி படம் நயன்தாராவின் வெற்றிப் படங்களின் வரிசையில் இணைந்தது. 

சில தோல்விப் படங்களால் துவண்டு போன நயன்தாராவின் பயணத்துக்குப் புதிய உற்சாகம் அளித்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் அட்டகாசமான வெற்றி. 2011-ல் வெளியான ஸ்ரீ ராம ராஜ்யத்தில் என்கிற தெலுங்குப் படத்தில் சீதாவாக நடித்து மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். 

இத்துடன் நயன்தாரா திரை வாழ்க்கையின் முதல் பாகம் முடிவடைந்தது.

ஸ்ரீ ராம ராஜ்யம் படப்பிடிப்பு நிறைவு நாளன்று தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களிடம் நயன்தாரா ஆசி பெற்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு இல்லற வாழ்வில் ஈடுபடப் போகிறேன் என்று அவர் கூறியதாக வெளியான தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் முதலில் சிம்பு, பிறகு பிரபுதேவா என இரு பிரபலங்களைக் காதலித்துப் பிரிந்ததால் மனத்தளவில் உடைந்து போயிருந்தார் நயன்தாரா. திரைத்துறையிலிருந்து இரு வருடங்கள் விலகியிருந்தார். தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப் பிறகு நயன்தாராவைத் தேட வேண்டியிருந்தது.

சோகத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க மீண்டும் படங்களில் நடிப்பதே சரியான முடிவாக இருக்கும் எனக் களமிறங்கினார். அட்லியின் முதல் படமான ராஜா ராணி, அதற்குச் சரியான வாய்ப்பாக அமைந்தது. படம் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நயன்தாராவின் நடிப்புக்கும் சவாலாக இருந்தது. இதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 2015-ல் தனி ஒருவன் தான் நயன்தாராவுக்குத் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிடைத்த வெற்றிப் படம்.  

தனி ராஜ்ஜியம்

இந்தக் கட்டுரைக்கு தைரியலட்சுமி எனத் தலைப்பு வைத்ததற்குக் காரணம் இதுதான்.

தமிழ் சினிமாவில் கதாநாயகனைச் சாராமல் ஒரு கதாநாயகியால் தனித்து நின்று பெரிய வெற்றிகளைப் பெற முடியும் என முதலில் நிரூபித்தவர் நயன்தாரா தான். 

2015-ல் வெளியான மாயா படம் கதாநாயகியை மையமாகக் கொண்ட ஒரு படம். இதன் வெற்றி பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் நயன்தாரா. அதேசமயம் அவர் ஒரேடியாகத் தனி வழியிலும் செல்லவில்லை. ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என சமகால நட்சத்திரங்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்தார். இதில் கிடைக்கும் பேர், புகழை மாயா, அறம், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டார்.

2017-ல் வெளியான அறம், நயன்தாராவின் அந்தஸ்த்தை மேலும் உயர்த்தியது. அடுத்த வருடம் வெளியான கோலமாவு கோகிலா இன்னும் பெரிய வெற்றி பெற்றது. கதாநாயகர்களின் தயவு இல்லாமல் ஹிட் படங்களை அளிக்க முடியும் என மற்ற கதாநாயகிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் நயன்தாரா. இதனால் பெரிய புரட்சி தென்னிந்தியத் திரையுலகில் நிகழ்ந்து வருகிறது. ஜோதிகா, சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, ஓவியா, அமலா பால் என ஒரு பெரிய படையே கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

அறம் 2 படத்தை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கோபி நயினார் இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் ஒரு பேட்டியில் இதை மறுத்தார் இயக்குநர் கோபி நயினார். அவர் கூறியதாவது: நயன்தாராவை வைத்துதான் அறம் 2 படத்தை எடுப்பேன். வேறு யாரை வைத்தும் அந்தப் படத்தை எடுக்கமாட்டேன். தற்போது வெளியான செய்தி வதந்தியாகும். இதனால் நான் கவலையில் உள்ளேன். கரோனா ஊரடங்கு காரணமாக படம் எப்போது தொடங்கும் என என்னால் இப்போது கூறமுடியாது என்று கூறினார். 

2019-ம் வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில் என நயன்தாரா நடித்த ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகின. இந்த வருடத் தொடக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் வெளியானது. அடுத்ததாக ரஜினியுடன் மீண்டும் இணைந்து அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாராவை மையப்படுத்தி வெளியான மூக்குத்தி அம்மன், ஓடிடியிலும் ஹிட் ஆகியுள்ளது. 

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் என சமீபத்தில் அன்னையர் தினத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த வருடம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினருடன் வந்து நள்ளிரவில் அத்திவரதரைத் தரிசனம் செய்தார் நயன்தாரா. கோயில் பட்டாச்சாரியார்கள் நயன்தாராவுக்கு அத்திவரதர் திருவுருவப்படமும், கோயில் பிரசாதமும் வழங்கினார்கள். இதன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. 

இந்த வருடம், ஓணம் பண்டியைக் கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றார்கள். பிறகு கேரளாவிலிருந்து நேராக கோவா சென்று விடுமுறையைக் கழித்தார்கள். இனியும் இருவரைப் பற்றியும் செய்திகள் தொடரும் என்பது மட்டும் உறுதி.

10 வருடங்களுக்குப் பிறகு அளித்த பேட்டி
 

இந்தியாவிலேயே தனது படத்தின் விளம்பரத்துக்காகப் பேட்டி தராத ஒரே நடிகை நயன்தாராவாகத்தான் இருக்க முடியும். 

10 வருடங்களுக்குப் பிறகு, வோக் ஆங்கிலப் பத்திரிகைக்கு நயன்தாரா அளித்த பேட்டியில், தான் இத்தனை வருடங்களாகப் பேட்டியளிக்காததற்கான காரணத்தைக் கூறினார். 

கடந்த பத்தாண்டுகளில் நான் அளிக்கும் முதல் பேட்டி இது. நான் என்ன நினைக்கிறேன் என உலகம் அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை. நான் மிகவும் தனிப்பட்ட மனிதர். கூட்டம் எனக்கு சரிவராது. பேட்டிகளில் நான் சொன்னது பலமுறை தவறாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. என்னால் இதைக் கையாள முடியவில்லை. என் வேலை நடிப்பது தான். படம் தான் பேசவேண்டும் என்றார். 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நயன்தாரா நடித்தாலும் சில சமயங்களில் கதாநாயகனைப் போற்றிப் புகழும் படங்களிலும் நடிக்கிறார். ஏன் என்கிற கேள்விக்கு நயன்தாரா அளித்த பதில் - சிலசமயங்களில் உங்களுக்கு வேறு வழி கிடையாது. எத்தனை முறை தான் நடிக்க முடியாது எனக் கூறமுடியும் என்றார்.

சமகாலப் பிரச்னைகளில் நயன்தாரா!

சமகாலப் பிரச்னைகள் குறித்து சமீபகாலமாக அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. அதன் தொகுப்பு:

*

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸாா் என்கவுன்ட்டரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சுட்டுக் கொன்றனா். இந்த விவகாரம் குறித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை.

இந்தத் திரைப்படச் சொற்றொடர் இன்று நிஜமாகியுள்ளது. உண்மையான கதாநாயகர்களான தெலங்கானா காவல்துறை தங்கள் செயலில் இதை நிரூபித்துள்ளார்கள். மனித நேய மிக்க செயல் என இதை அழைப்பேன். நேற்றைய தினத்தை பெண்களுக்கு நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக்கொள்ளலாம். அனைவரிடமும் சரிசமமாக அன்பை, மரியாதையைச் செலுத்துவதே மனித நேயமாகும். 

நீதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்றாலும் இதுதொடர்பாக நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். முக்கியமாக பையன்களுக்கு, எப்போது இந்த உலகைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுகிறார்களோ அப்போது ஆண்கள் கதாநாயகர்கள் ஆகிறார்கள் எனக் கூறினார். 

சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்படுத்தின.

நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்தது. 

இதையடுத்து, நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அறிவித்தது. 

நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

பொதுவாக நான் அரிதாகவே அறிக்கை வெளியிடுவேன். என் தொழில் சார்ந்த பணிகள் பேசவேண்டும் என எண்ணுவேன். இப்போது நீண்ட விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. முதலில் என்னைப் பற்றி மோசமாகப் பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. 

ராதாரவி மற்றும் அவரைப் போன்ற பெண்கள் வெறுப்பாளர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, அவர்களும் ஒரு பெண்ணால் இந்த உலகத்துக்கு வந்தவர்கள்தாம். பெண்களின் நிலையைக் கீழிறக்கியும் மோசமான கருத்துகளால் பேசுவதாலும் இவர்கள் ஆணுக்குரிய பெருமையை அடைகிறார்கள். முன்தீர்மானத்துடன் இவர்கள் பெண்களை நடத்துவதைக் கண்டு வருந்துகிறேன். திரையுலகில் ஏராளமான அனுபவம் உள்ள ராதாரவி இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். ஆனால் பெண் வெறுப்பாளர்களின் ரோல் மாடல் பதவியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். பொது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வரும் இந்த நேரத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் பெண்களுக்குப் பிரச்னைகளாக உள்ளன. நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் இதுபோன்று மலிவான உத்திகள் மூலம், புகழ் பெற ராதாரவி போன்ற நடிகர்கள் எண்ணுகிறார்கள். 

இதுபோன்ற மோசமான பேச்சுகளுக்குப் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டும் கைத்தட்டல்களும் கிடைப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசும் பேச்சுகளுக்கு பார்வையாளர்கள் பாராட்டு தெரிவிக்கும்வரை ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டுதான் இருப்பார்கள். ராதாரவி போன்றவர்களின் நடத்தையை ஆதரிக்கவேண்டாம் என என் ரசிகர்கள் மற்றும் நல்ல எண்ணங்களுடைய குடிமகன்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிக்கையின்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும் குறிப்பாக என்னைப் பற்றியும் பேசிய ராதாரவியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்புகளையும் நல்ல ரசிகர்களையும் அளித்து கடவுள் என் மீது கருணை காட்டியுள்ளார். நான் இதற்குப் பிறகும் சீதா, பேய், கடவுள், நண்பர், மனைவி, காதலி எனப் பல வேடங்களில் நடிப்பேன். என் ரசிகர்களுக்கு அதிகபட்சப் பொழுதுபோக்கு அளிக்கவேண்டும் என்பதே என் எண்ணம். என்றார். மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஐசிசி அமைப்பை உருவாக்குவீர்களா? அப்படி உருவாக்கி, விசாகா வழிகாட்டுதலின்படி விசாரணைக் குழு அமைப்பீர்களா என நடிகர் சங்கத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

*

கடந்த செப்டம்பர் மாதம் பாடகர் எஸ்.பி.பி. இறந்தபோது அறிக்கை வெளியிட்டார். 

தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. நீங்கள் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆறுதல் சொல்லிக்கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும் என்று கூறினார். 

ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த பெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா ரூ. 20 லட்சம் நிதியுதவி செய்தார்.

*

தமிழ் சினிமாவின் நெ.1 நடிகை, லேடி சூப்பர்ஸ்டார் என தனக்கென ஒரு பாதை, வியூகம் அமைத்து அதில் வெற்றிநடை போட்டு வருகிறார் நயன்தாரா. 2021-ல் மேலும் பல வெற்றிப் படங்கள் அவருக்கு அமையும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. தமிழ்த் திரையுலகின் வரலாற்றுப் பக்கங்களில் நயன்தாராவின் சாதனைகளுக்குத் தனி இடம் இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com