கீர்த்தி சுரேஷ்: சாதித்து வரும் தமிழ்ப் பெண்!

குறுகிய காலத்தில் பேர், புகழ், தேசிய விருது என அனைத்தையும் பார்த்துவிட்டார்...
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

தமிழ்த் திரையுலகில் கவர்ச்சியாக நடிக்காமலும் சாதிக்க முடியும், பிரபல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடிக்க முடியும் என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளவர் கீர்த்தி சுரேஷ். இன்று அவருடைய பிறந்த நாள்.

மலையாளப் படத் தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமாருக்கும் தமிழரான நடிகை மேனகாவுக்கும் பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். 4-ம் வகுப்பு வரை சென்னையில் படித்தவர் பிறகு கேரளா சென்று மீதிப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஃபேஷன் டிசைன் படிப்பதற்காக மீண்டும் சென்னை வந்துவிட்டார். இதனால் நடித்துள்ள அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசியுள்ளார். 

குழந்தை நட்சத்திரமாக சில மலையாளப் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், 2013-ல் பிரியதர்ஷனின் கீதாஞ்சலி படத்தில் கதாநாயகியாக நடித்தார். நான் நடிக்க வந்ததற்கு என்அம்மா மேனகாவும் ஒரு காரணம். அவர் நடித்த படங்களை பார்த்தது முதல் சிறு வயதிலிருந்தே நடிகையாக வேண்டுமென்ற ஆசை எனக்குள் இருந்தது. மேலும் எனக்கு தூண்டுதலாக இருந்தவர் என் அம்மாவின் சகோதரர் கோவிந்த அங்கிளும் காரணமாவார் என்று நடிப்பின் மீதான ஆசை பற்றி கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்.

விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக ஓடவில்லை.

ஆனால் அடுத்த வருடம் அவருக்காக ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமொன்று காத்திருந்தது ரஜினி முருகன்.

கார்த்திகா தேவி வேடத்தில் சிவகார்த்திகேயனின் காதலியாக ஜாலியாக நடித்துப் பெயர் பெற்றார். உன் மேல கண்ணு பாடல் கீர்த்தி சுரேஷின் அடையாளமாக மாறிப்போனது.

முதலில் தொடர்ந்து மூன்று மலையாளப் படங்களிலும் பிறகு ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்த கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகனின் வெற்றியால் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடிப்பில் அடுத்து வெளியான ஐந்து படங்களும் தமிழ்ப் படங்களாக இருந்தன.

ரஜினி முருகனுக்கு அடுத்து தனுஷுக்கு ஜோடியாக தொடரி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் தோல்வியடைந்தாலும் இதில் அவருடைய நடிப்பைப் பார்த்துதான் மகாநடி வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு வந்தது. 

ரெமோ படத்துக்காகப் பல கதாநாயகிகளைப் பார்த்தும் சரியாக வராததால் சிவகார்த்தியனின் ஜோடியாக மீண்டும் தேர்வானார் கீர்த்தி சுரேஷ். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தப் படமும் கீர்த்தி சுரேஷின் வெற்றிப் படங்களில் இணைந்தது.

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்திலும் அவருடைய ஜோடியாக நடித்தார். இதுபற்றி இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கூறியதாவது: ஏற்கெனவே இருவரும் ரஜினி முருகன் படத்தில் நடித்துவிட்டதால் வேறு கதாநாயகியைதான் தேடினோம். ஆனால் டாக்டர் கதாபாத்திரத்துக்கு அவரே தேர்வானார். பி.சி. ஸ்ரீராம் சார், கீர்த்தி சுரேஷைப் பரிந்துரை செய்தார். அதேபோல என் குழுவும் நன்குத் தமிழ் தெரிந்த நடிகையே வேண்டும் என்பதால் கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் என்றார்.

விஜய்க்கு ஜோடியாக பைரவாவில் நடித்தார். அப்பாவிப் பெண் வேடத்தில் அவர் நடித்த இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றது. சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.

இதன்பிறகு கிடைத்த வாய்ப்பு தான் மகாநடி. தமிழில் நடிகையர் திலகம். நடிகை சாவித்ரியைத் திரையில் தத்ரூபமாக வெளிப்படுத்தியதால் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழ்த் திரையுலகில் இன்று நடித்து வரும் எத்தனை கதாநாயகிகளுக்கு இந்தப் பெருமை கிடைக்கும்!

நடிகையர் திலகம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றபோது கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் கூறியதாவது:

கடந்த ஒரு வருடமாக நீடித்த அற்புதமான பயணம் நிறைவுபெற்றுள்ளது. மிகவும் உணர்வுபூர்வமாகக் கடந்தகாலத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். நாக் அஸ்வின் மற்றும் விஜயாந்தி பிலிம்ஸ் ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்ததற்குப் பெரிய நன்றி. கடந்த காலம் குறித்துப் பெருமையுடன் திரும்பிப் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு என்றார். 2019 இறுதியில் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவிடமிருந்து தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். 

இந்தப் படம் அவர் மேலும் கூறியதாவது:

சாவித்திரியாக நடிக்க என்னை அணுகிய போது முதலில் மறுத்தேன். கோவிந்த் அங்கிள்தான் எனக்கு நம்பிக்கையூட்டினார். கூடவே இயக்குநர் நாக் அஸ்வின் "மகாநடி' திரைக்கதை முழுவதையும் கொடுத்து என்னை படிக்கச் சொன்னார். இருந்தாலும் இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது முடியாத காரியம் என்றேன். வலுவான அந்த பாத்திரம் எனக்கு பயத்தைத் தந்தது. ஆனால் இயக்குநர் விடவில்லை. வேறுயாரும் இந்த பாத்திரத்திற்குப் பொருத்தமானவராக எனக்குத் தெரியவில்லை என்று கூறியதோடு நம்பிக்கையை வளர்த்தார். 

எனக்கும் சாவித்திரி அம்மாவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் தோன்றியது. அவரது வரலாற்றை மீண்டும் முழுமையாகப் படித்தேன். சரியென்று ஒப்புக் கொண்டேன். அவர் நடித்த பல படங்களின் கிளிப்பிங்ஸ்களை பார்த்தேன். சிறுவயதில் அவர் நடித்த "மாயாபஜார்' படம் பார்த்தது நினைவில் இருந்தது. அந்தப் படத்தின் சில காட்சி படத்திலும் இடம் பெறுவதை உணர்ந்தேன். அவரது குடும்பத்தினரை சந்தித்து மேலும் அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தேன். இன்னும் உள்ள அன்றைய நடிகர்களிடம் அவருடன் நடித்த அனுபவங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் உள்ள சில ஒற்றுமைகள் என்னவெனில் எனக்கும் அவரைப் போலவே கிரிக்கெட் விளையாட்டிலும், நீச்சலடிப்பதிலும் ஈடுபாடு உண்டு. சாவித்திரி பாத்திரத்தை நான் சிறப்பாக ஏற்று நடித்து வெற்றிப் பெற்றதில் பலருக்கும் பங்குண்டு என்றார்.

2018-ல் சாமி 2, சண்டகோழி 2, சர்கார் போன்ற படங்களில் விக்ரம், விஷால், விஜய் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். சண்டகோழி 2 படத்தில் இடம்பெற்ற கம்பத்துப் பொண்ணு பாடலில் துடிப்பாக நடித்து அசத்தினார். எந்தக் கலாசார ஆடையாக இருந்தாலும் சரி, அது கீர்த்தி சுரேஷுக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும். அதுதான் அவருடைய முக்கியமான சிறப்பம்சம் என்று ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய அனு பார்த்தசாரதி ஒரு பேட்டியில் கூறினார்.  

2018-ல் நல்ல படங்கள் அமையாததால் 2019-ல் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்கக் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான பெண்குயின் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. கருவுற்ற பெண் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் கீர்த்தி சுரேஷ். இது அவருடைய 24-வது படம். 

மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்பதற்காக அந்த வாய்ப்பைத் தவறவிட்டார். சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார். சில வருடங்களிலேயே தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.  

பைரவா, சர்கார் என விஜய்யுடன் இணைந்து இரு படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தை சமீபத்தில் வெளிப்படுத்தினார். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் ஒரு நிமிடப் பகுதியை வயலினில் வாசித்து அதன் விடியோவை வெளியிட்டார். தனது புதிய திறமையைக் கொண்டு விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு விஜய் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

குறுகிய காலத்தில் பேர், புகழ், தேசிய விருது என அனைத்தையும் பார்த்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்தியதால் தேசிய விருது அவருடைய வீட்டை அலங்கரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com