பிணவறை முதல் சிரிச்சா போச்சு வரை: ரசிகர்கள் கொண்டாடிய வடிவேல் பாலாஜியின் வாழ்க்கை!

பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். மக்கள் கலைஞனுக்கான அடையாளம் இதுதான்...
பிணவறை முதல் சிரிச்சா போச்சு வரை: ரசிகர்கள் கொண்டாடிய வடிவேல் பாலாஜியின் வாழ்க்கை!

சின்னத்திரையில் வடிவேல் பாலாஜி தோன்றும் போதெல்லாம் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. இந்த வாழ்க்கை 42 வயதில் முடிந்து போகும் என யார் எண்ணியிருக்க முடியும்?

வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மிகப்பெரிய எதிர்காலம் அமைந்திருக்க வேண்டியவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. 

சென்னை சேத்துப்பட்டுப் பகுதியில் வசிக்கும் வடிவேல் பாலாஜி மதுரையைச் சேர்ந்தவர். கல்லூரி நாள்களில் வடிவேலுவின் கதாபாத்திரத்தைக் கொண்டு மேடையில் நிகழ்ச்சிகள் செய்ததால் வடிவேல் பாலாஜி என்கிற பெயரைப் பெற்றார். வடிவேலுவின் உடல் மொழி, மதுரைத் தமிழ் என வடிவேலுவாக அவர் மாறிய நாட்கள் அவை. 

சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், நிஷா, தீனா எனப் பலருக்கும் வாழ்வளித்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி தான் வடிவேல் பாலாஜிக்கும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

சென்னையில் பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் துறையில் வேலை பார்த்துக்கொண்டே கலக்கப் போவது யாரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 

கலக்கப் போவது யாரு சீசன் 4-ல் வடிவேல் பாலாஜி வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும் தனது நகைச்சுவையால் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆகியிருந்தார். நாய் சேகர், வண்டு முருகன் போன்ற வடிவேலுவின் மறக்க முடியாத கதாபாத்திரங்களைத் தன் பாணியில் பிரதி செய்து தனிக்கவனத்தை உண்டாக்கினார். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தான் தயாரித்து வந்த நகைச்சுவைகளைச் சொன்னதோடு மட்டுமல்லாமல் நடுவர்களாக இருந்த பாண்டியராஜன், உமா ரியாஸிடமும் கலகலப்பாகப் பேசுவார். 

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி முடிந்ததும் அத்துடன் அவரை யாரும் மறக்கவில்லை. அது இது எது நிகழ்ச்சியில் வருகிற சிரிச்சா போச்சு பகுதி வடிவேல் பாலாஜிக்குத் தனி அடையாளத்தைத் தந்தது. அது இது எது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் சிரிச்சா போச்சு பகுதிக்காகக் காத்திருந்ததற்கு முக்கியக் காரணம் வடிவேல் பாலாஜி. அந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களைச் சிரிக்க வைக்கும் பகுதியில் லிப்டில் இருந்து வடிவேல் பாலாஜி வரும்போதே அவருடைய கெட்அப்பைப் பார்த்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். சிரிக்காமல் இருப்பவர் கூட, வடிவேல் பாலாஜி அருகே வந்தவுடன் வைராக்கியத்தை மறந்து சிரித்து விடுவார். அந்தளவுக்குப் பேசாமலேயே தன்னுடைய தோற்றத்தின் மூலமாகவும் அடுத்தவர்களைச் சிரிக்க வைக்கும் திறமையும் அவரிடம் இருந்தது. சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் பலமுறை பெண் வேடமிட்டு அதகளம் செய்துள்ளார் வடிவேல் பாலாஜி. 

விஜய் தொலைக்காட்சியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய பிறகு வேலையை விட்டு விட்டார். 

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள வடிவேல் பாலாஜி, தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் ஏராளமான மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

திரைப்படங்களில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தார். உங்களிடம் அருமையான திறமை உள்ளது. சினிமாவில் நடிக்க ஆசை இருந்தால் சொல்லுங்கள் என்று விஜய் சேதுபதி ஒருமுறை இவரை அழைத்து உற்சாகப்படுத்தியுள்ளார். நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகம் ஆனார் வடிவேல் பாலாஜி. விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியவர் என்பதால் வடிவேல் பாலாஜியின் திறமையை நெல்சன் பயன்படுத்திக்கொண்டார். பந்தயம், சுட்ட பழம் சுடாத பழம், காதல் பஞ்சாயத்து, கற்பனை, யாருட மகேஷ் போன்ற படங்களில் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். 

கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் முத்திரை பதித்தால் இன்னும் பல மடங்கு வளர்ச்சி பெறுவா எனப் பலரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் காலம் அனைவரையும் ஏமாற்றிவிட்டது.

இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்தபோது வடிவேல் பாலாஜிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் பிரச்னை ஏற்பட்டதால் உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்கிற சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே உடல்நலக்குறைவுடன் இருந்ததாக நடிகர் ராமர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மருத்துவ சிகிச்சைக்குப் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனையை மாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவருக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்துள்ளார். 

19 வருடங்களாக வடிவேல் பாலாஜியுடன் நட்பு கொண்டிருக்கும் ரோபோ சங்கர், தன் நண்பரின் மறைவு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். வடிவேல் பாலாஜியின் மரணம் அதிர்ச்சியாக உள்ளது. என்னுடன் 19 வருடங்களாக மேடைகளில் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக நகைச்சுவை செய்து மக்களைக் கட்டிப் போட்டுச் சிரிக்க வைப்பார். 10 நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் விரைவில் மீண்டு வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார். அடுத்த 10 நாள்களில் இப்படியொரு செய்தி வந்திருப்பதை என்னால் தாங்கவே முடியவில்லை. அவருக்கு அழகான குழந்தைகள் உண்டு. கடந்த 10 நாள்களாகப் போராடினார். நல்ல கலைஞனுக்குக் கூட இப்படியொரு கொடூரமான சாவா என்று கடவுளிடம் கேட்கிறேன் என தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

சென்னை சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வடிவேல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். மக்கள் கலைஞனுக்கான அடையாளம் இதுதான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com