சமந்தாவின் பாடல் ஆண்களுக்கு எதிராக பேசுகிறதா? மீண்டும் கவர்ச்சி பாடல் டிரெண்டை உருவாக்குகிறதா?

சமந்தா நடனமாடியுள்ள புஷ்பா பட பாடல் குறித்த விமர்சனம் 
சமந்தாவின் பாடல் ஆண்களுக்கு எதிராக பேசுகிறதா? மீண்டும் கவர்ச்சி பாடல் டிரெண்டை உருவாக்குகிறதா?

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை பிரபல கதாநாயகன் படம் என்றால் அதில் ஒரு கவர்ச்சிப் பாடல் இருக்கும். அந்தப் பாடல்களில் பிரபல கதாநாயகிகள் நடனமாடுவது வழக்கம். காரணம் அது வெற்றிக்கான வழியாக இருந்து வந்தது. 

பிரபல நாயகர்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்கள் என்றால் அதில்  அனல் பறக்கும் சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், உணர்வுப்பூர்வமான காட்சிகள் ஆகியவற்றுடன் ஒரு கவர்ச்சி பாடலும் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அப்பொழுது தான் அது கமர்ஷியல் படம்.

அப்படிப் பட்ட பாடல்களில் பெண்களை வெறும் போகப் பொருளாக சித்திரிக்கப்பட்ட பாடல்கள் வரிகள் இடம்பெற்றிருக்கும். மேலும் அந்தப் பாடல்களில் பெண்களின் உடல் பாகங்களை தனித்தனியாக படம்பிடித்து காட்டுவது, நடன அசைவுகள் என பெண்களை தவறாக சித்திரித்துவந்தன.

தமிழின் முக்கிய இயக்குநர்களாகக் கொண்டடாடப்படுவோர் படங்களிலும் கூட படத்துக்கு சம்மந்தமில்லாத கவர்ச்சிப் பாடல்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக நல்ல இயக்குநராகக் கொண்டாடப்படும் மிஷ்கின் படங்களில் மஞ்சள் சேலை கட்டி ஒரு பெண் நடனமாடுவது போன்ற பாடல் தவறாமல் இடம்பெற்றுவந்தன.

ஆனால் சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இந்த நிலை மாறி வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு வெளியான எந்தப் படத்திலும் படத்துக்கு
சம்பந்தமில்லாத கவர்ச்சி பாடல் இல்லை. குறிப்பாக தமிழில் இந்த ஆண்டு முன்னனி கதாநாயகர்கள் நடித்து பெரும் வெற்றிபெற்ற 'அண்ணாத்த', 'மாஸ்டர்', 'ஜெய் பீம்',  'மாநாடு',  'டாக்டர்' போன்ற பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை. 

தற்போது வெளியாகியிருக்கும் 'புஷ்பா' படத்தில் ஊ சொல்றியா பாடல்கள் ஆண்களுக்கு எதிராக பேசுவதாக விமர்சனங்களை எழுந்துள்ளது. தமிழ்நாடு
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. 

மற்றொருபுறம் இதுவரை பெண்களின் உடல்களை வர்ணித்து வந்த தமிழ் சினிமாவில், முதன்முறையாக ஆண்களின் கண்ணோட்டத்தை விமர்சிப்பதாக
இந்தப் பாடலை பாராட்டி பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

உண்மையில் இந்தப் பாடலின் நோக்கம் அதுவா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் பாடலை எழுதிய விவேகா, தமிழில் 'என் பேரு மீனாக்குமாரி' போன்ற ஏராளமான கவர்ச்சிப் பாடல்களை எழுதியவர். 

'ஊ சொல்றியா' பாடலின் சில நிமிட விடியோ காட்சி சமீபத்தில் வெளியானது. அந்த காட்சி பாடலின் நோக்கம் என்னவென்பதை துள்ளியமாக சொல்லிவிடுகிறது.  அந்தப் பாடலில் காட்டப்படும் நடன அசைவுகளும், கேமரா கோணங்களும் ''இன்னும் என்ன பைத்தியக்காரனவே நினைச்சுட்டு இருக்கல்ல?'' என்ற 'டிக்கிலோனா' பட வசனத்தை படக்குழுவினரைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. 

இந்தப் பாடலை ரசிப்பதோடு கடந்துவிடுவது நல்லது. ஆனால் இதனை பாராட்டினோம் என்றால் பெண்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை மேலும் ஊக்குவிப்பது போல் அமைந்துவிடும்.

இந்தப் பாடலின் வெற்றி தமிழ் சினிமாவில் வழக்கொழிந்த கவர்ச்சிப் பாடல் டிரெண்டை மீண்டும் உருவாக்கவே செய்யும். காரணம் தமிழ் படங்கள் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகிறது. இதனால் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் கவர்ச்சிப் பாடல்களை இடம்பெறச் செய்ய இயக்குநர்கள் வற்புறுத்தப்படுவார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com