சுதா கொங்கராவைப் போற்று!

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என இரு தரமான, சுவாரசியமான படங்களை வழங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
சுதா கொங்கராவைப் போற்று!

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என இரு படங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநராக உள்ளார் சுதா கொங்கரா. இயக்குநராகச் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் முக்கியமாகப் பெண்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம். 

தெலுங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவரான சுதா கொங்கரா, சென்னை அடையாறு பகுதியில் வளர்ந்தவர். முருகன் வாடகை நூலகத்துக்குச் செல்வது, விடியோ கேசட்களை வாங்கி வந்து பார்ப்பது என பள்ளி வயதில் இவருடைய பொழுதுபோக்கு அறிவையும் ரசனையையும் வளர்ப்பதிலேயே இருந்தது. 

2002-ல் வெளியான மித்ர் மை பிரெண்ட் படத்தில் இணை கதாசிரியராகப் பணியாற்றினார். சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருது இதற்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் ரேவதியுடன் இணைந்து பல வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டார் சுதா. சினிமாவை முதலில் கற்றுக்கொண்டது இங்குதான். 

அடுத்ததாக, மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 

15 வயது முதல் மணி ரத்னத்தின் ரசிகை. இதனால் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது சுதாவின் கனவாகவே இருந்துள்ளது. இசை, காட்சிகளைப் படமாக்குவதில் இருவருக்கும் ஒரே ரசனை. ஆனால் அவர் போல் என்னால் படமாக்க முடியாது. என்னுடைய ஒவ்வொரு படத்திலும் எனக்கென்று ஒரு பாணியை உருவாக்க முயல்கிறேன் என ஒரு பேட்டியில் கூறுகிறார் சுதா.

மணி ரத்னத்திடம் பணிபுரியும்போது எனக்கு வேலைகள் குறைவாகக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனக்கு எவ்வித சலுகைகளும் வேண்டாம். நான் பெண் என்பதால் எனக்குச் சலுகை கிடைத்தது என என் அருகில் உள்ளவர்கள் நினைத்துவிடக்கூடாது என எண்ணினேன். அந்தச் சமயங்களில் நான் விடுமுறையே எடுத்ததில்லை என நினைக்கிறேன். பெண் என்பதால் உரிய அங்கீகாரம் கிடைக்க இரு மடங்கு பணிபுரிய வேண்டியுள்ளது. ஓர் உதவி இயக்குநராக உடைகள் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்பவில்லை. கொல்கத்தாவில் குரு படப்பிடிப்பின்போது கூட்டத்தை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த அபிஷேக் பச்சன், இந்த வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார். ஆனால் மணி ரத்னம் என்னை எல்லா வேலைகளையும் செய்ய வைத்தார் என்கிறார் சுதா. அதேபோல தன்னைப் பெண் இயக்குநர் என்று அழைப்பதையே அவர் விரும்புவதில்லை. இதை அவமானமாக எண்ணுகிறார். படைப்பாளிகளில் ஆண், பெண் எனப் பிரித்துப் பார்க்கவேண்டாம் என்கிறார். 

சுதா கொங்கராவின் முதல் தமிழ்ப் படம் - துரோகி. ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் நடித்த படம். 2010-ல் வெளியாகி தோல்வியடைந்தது. துரோகி சரியான சமயத்தில் வெளியாகவில்லை என்கிற வருத்தம் சுதாவிடம் உண்டு. அதனால் தான் இன்றும் யாராவது துரோகி படத்தைப் பாராட்டிப் பேசினால் உற்சாகமாகிவிடுவார். அந்தப் படத்தில் சுதா கொங்கராவின் பெயர் சுதா கே. பிரசாத் என இருக்கும்.

துரோகி படத்துக்குப் பிறகு இயற்கை விவசாயம் அல்லது உணவகம் போன்ற தொழில்களில் ஈடுபடலாமா என யோசித்துள்ளார் சுதா.  மணி ரத்னத்துடன் தன்னுடன் இணைந்து பணியாற்றிய பிஜாய் நம்பியாரிடம் தன் மனநிலையைப் பகிர்ந்துகொண்டார். சினிமாவை விட்டு வெளியேறப் போவதாக மனம் நொந்து பேசிய சுதாவுக்கு அறிவுரைகள் கூறியுள்ளார் பிஜாய். தன்னுடைய படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். உன்னிடம் உள்ள கதையை மாதவனிடம் சொல்லிப் பார் என புதிய வழியைக் காண்பித்துள்ளார். அதுதான் இறுதிச்சுற்று படக்கதை.

வட சென்னையில் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடும் பெண்களைப் பற்றி அறிந்த சுதாவுக்கு அதில் பல சுவாரசியங்கள் இருப்பதாக உணர்ந்தார். இறுதிச்சுற்று கதையை எழுத ஆரம்பித்தார். முடிக்க மூன்று வருடங்கள் ஆயின. நாட்டிலுள்ள பல குத்துச்சண்டை வீரர்கள், பயிற்சியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஒவ்வொருவரும் சொன்ன அனுபவங்களைக் கொண்டு படத்துக்கான திரைக்கதையை அமைத்தார்.

இறுதிச்சுற்று படத்தை எடுத்து முடிக்க சுதாவுக்கு ஆறு வருடங்கள் ஆயின. 2011-ல் வேட்டை படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது மாதவனிடம் சென்று இறுதிச்சுற்று கதையைக் கூறினார் சுதா. நான் நடிக்கிறேனா என்பதை 48 மணி நேரத்தில் கூறுகிறேன் என்று பதில் சொல்லியிருக்கிறார் மாதவன். சரியாக 48 மணி நேரம் கழித்து போன் செய்து, என்ன ஒரு அபாரமான கதை. நிச்சயம் நான் நடிக்கிறேன் எனச் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் என்னிடம் தயாரிப்பாளர் இல்லை என்று கூற, அதைப் பார்த்துக்கொள்ளலாம் என அடுத்ததாகத் தயாரிப்பாளரைத் தேடும் பணியில் மாதவனும் இறங்கியிருக்கிறார். 3 இடியட்ஸ் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி, படத்தைத் தயாரிக்க முன்வந்தார். ஷஷிகாந்த், சி.வி. குமார், மாதவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இருந்துள்ளார்கள். 

இதன்பிறகு படப்பிடிப்பை முடிக்க மேலும் மூன்று வருடங்கள் ஆகியிருக்கின்றன. 2014 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது. நவம்பரில் தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார் மாதவன். இத்தனைக்கும் அப்போது இன்னும் ஆறு நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருந்தன. 2015 ஏப்ரலில் ஹிந்திப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சில மாதங்கள் இறுதிச்சுற்று கதாபாத்திரத்துக்குத் தயாராகி, செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பினார் மாதவன். 

இந்தப் படத்தில் பிரதான வேடங்களில் நடித்த ரித்திகா சிங், மும்தாஜ் சர்கார், இங்கிலாந்தைச் சேர்ந்த எலேனா ஆகிய மூவருமே தொழில்முறை குத்துச்சண்டை வீரர்கள். இதுதவிர 40 குத்துச்சண்டை வீரர்களும் படத்தில் நடித்துள்ளார்கள்.

இறுதிச்சுற்று பட வெற்றி சுதாவுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எல்லாப் பெரிய கதாநாயகர்களும் சுதாவிடம் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்கள். இந்தமுறை சுதாவின் கதையால் ஈர்க்கப்பட்டவர் சூர்யா.

2003-ல் சுதாவின் குடும்பம் சிம்லாவுக்குச் சென்றது. கேப்டன் கோபிநாத் அளித்த ரூ. 1 மற்றும் ரூ. 500 டிக்கெட் சலுகையில் 13 பேர் கொண்ட குடும்பம் விமானத்தில் பறந்தது. அப்போதே கோபிநாத்தின் இந்த விமான டிக்கெட் சலுகைத் திட்டம் சுதாவைக் கவர்ந்தது. 2010-ல் கோபிநாத்தின் பேட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்தார். அதே வருடம் தான் கோபிநாத்தின் சுயசரிதை வெளியானது. சூரரைப் போற்று படத்தின் விதை அப்போது முளைத்தது.

சுதா கொங்கராவின் தந்தை, சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது இறந்துவிட்டார். தந்தையுடனான அனுபவம் ஒன்றை சூரைப் போற்று படத்திலும் வைத்திருப்பார். படத்தின் டைட்டில் கார்டிலும் தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

சூரரைப் போற்று படத்தைப் பார்க்கும் இளைஞர்களுக்கு எந்தக் கனவையும் நிறைவேற்ற முடியும் என நம்பிக்கை வரவேண்டும் என்கிறார் சுதா. அதனால் படத்தில் அநீதிக்கு எதிரான கதாநாயகனின் கோபத்தை சினிமாத்தனமாக மாற்றாமல் உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்டு திரைக்கதையை உருவாக்கினார். தன்னம்பிக்கை கொண்ட அபர்ணா முரளியின் கதாபாத்திரம் அதிகப் பாராட்டுகளைப் பெற்றது.

மணி ரத்னத்திடம் மட்டுமல்லாமல் பாலாவுடன் இணைந்து பரதேசி படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் சுதா. ஒரு தீபாவளியன்று, சுதாவைத் தன்னுடைய தங்கை என அழைத்த பாலா, 40 நாள்களில் ஒரு படம் முடிக்கிறேன் என்று கூறி பரதேசி படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்தப் படத்தை முடிக்க 90 நாள்கள் ஆயின. பாலா ஒரு ஷாட்டுக்கு 25 டேக்குகள் வரை செல்வதைப் பார்த்திருக்கிறார். இருந்தாலும் இந்த விஷயத்தில் மணி ரத்னத்தைப் பின்பற்றுகிறார் சுதா. 6 டேக்குகளில் வராவிட்டால் அது எப்போதும் வராது என்பது அவருடைய பாணி. அதேபோல நடிகர்களுக்கு நடித்துக் காட்டுவதிலும் மணி ரத்னத்தைப் பின்பற்றுகிறார் சுதா. மணி ரத்னம் நடித்துக் காண்பிக்க மாட்டார். பாலா தலைகீழ். என்ன உணர்வு வேண்டும் என்பதை அப்படியே நடித்துக் காட்டிவிடுவார். அதனால் மாதவன், சூர்யாவிடம் முன்பே சொல்லிவிட்டார் - என்னை நடித்துக்காட்டச் சொல்ல வேண்டாம். நீங்களே நடித்து விடுங்கள். மேலும் படப்பிடிப்புக்கு முன்பு கதாபாத்திரமாக மாற நடிகர்களுக்கு சிறிது நேரம் கொடுப்பார். காட்சிகளின் யதார்த்தத்துக்காக மிகவும் மெனக்கெடுவார். (சூரரைப் போற்று-வின் மேக்கிங் விடியோக்களில் இதை உணரமுடியும்.) ரித்திகாவுக்கு இறுதிச்சுற்று வசனங்கள் அனைத்தையும் முதலிலேயே கொடுத்துவிட்டார். இதனால் நான்கு வருடங்களும் ரித்திகாவின் ஐபாடில் இறுதிச்சுற்று வசனங்கள் எப்போதும் இருந்தன. அதேபோல மதுரைத் தமிழைச் சரியாகப் பேசுவதற்காக கேரளாவைச் சேர்ந்த நடிகை அபர்ணா முரளிக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளித்துள்ளார். ஆங்கிலத்தில் சிந்தித்து கதை எழுதுபவர் சுதா. அதனால் தான் சூரரைப் போற்று படத்தின் வசனங்களை உறியடி இயக்குநர் விஜய் குமார் எழுதினார்.

திரையுலகில் கதாநாயகிகளை லூசாகக் காட்டுகிறார்கள். நான் கதாநாயகன். கதாநாயகி இருவரையும் சமதளத்தில் வைத்துக் காட்சிகளை உருவாக்குகிறேன். அதுதான் யதார்த்தம். படத்தில் மனைவியிடம் சூர்யா கடன் வாங்கும் காட்சி உண்டு. இதற்குப் படக்குழுவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சூர்யா போன்ற ஒரு கதாநாயகன் நடிப்பதால் அக்காட்சியை நீக்கவேண்டும் என்றார்கள். ஆனால் நான் ஏற்கவில்லை. இந்தக் காட்சிக்கு சூர்யா ஆதரவு தெரிவித்தார் என்கிறார் சுதா. 

பாடல்கள் படமாக்கப்படுவதிலும் சுதா வித்தியாசமாக அணுகுவார். வழக்கமான பாடல்கள் இவர் படத்தில் இடம்பெறாது. வெயிலோன் சில்லி பாடல் சூர்யா - அபர்ணா கதாபாத்திரங்களின் 3 வருட வாழ்க்கையை வெளிப்படுத்தும். என் படத்தின் பாடல்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும், இல்லாவிட்டால் கதையை முன்னே நகர்த்தும் என்கிறார். 

ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று படத்துக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தாலும் சில விமர்சனங்களும் உண்டு. படத்தில் வில்லனின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக, சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு கேப்டன் கோபிநாத் கூறியதாவது: சூரரைப் போற்று படத்தைப் பார்த்தேன். பல காட்சிகள் சிரிக்கவும் குடும்பக் காட்சிகள் அழவும் செய்தன. இந்தக் காட்சிகள் எல்லாம் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. என் மனைவி பார்கவி கதாபாத்திரம் அழகாக இருந்தது. சூரரைப் போற்று படம் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. அதிகமாகக் கற்பனைகள் கலந்திருந்தாலும் என்னுடைய சுயசரிதையின் நோக்கத்தைப் படம் சரியாகப் பிரதிபலித்திருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கராவுக்குப் பெரிய சல்யூட். முன்னேறத் துடிக்கும் ஒரு தொழில்முனைவோரின் கதாபாத்திரத்தை சரியாகவும் வலுவாகவும் செய்திருக்கிறார் சூர்யா. தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்தப் படம் பலருக்கும் உத்வேகமாக அமையும் என்று கூறினார்.

சூரரைப் போற்று திரைப்படம், ஆஸ்கா் போட்டியில் களமிறங்கியுள்ளது. முதலில் பொதுப்பிரிவில் போட்டியிட்ட சூரரைப் போற்று படம், தற்போது 366 படங்கள் கொண்ட சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படம் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் முதல் சுற்றிலேயே இந்தப் படம் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஆஸ்கர் பந்தயத்தில் படிப்படியாக முன்னேறி வரும் சூரரைப் போற்று படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. (மார்ச் 15 அன்று இறுதிக்கட்டப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும்.)

பேரரசுவின் படங்களைப் போன்று சுவாரசியமான, கலகலப்பான அனைவரும் பார்க்கும் விதத்தில் படங்களை இயக்க வேண்டும் என்பது சுதாவின் விருப்பம். அதனால் தான் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என இரு தரமான, சுவாரசியமான படங்களை வழங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இவர் எட்ட வேண்டிய உயரம் இன்னும் உள்ளது. அதை அவர் அடையும்போது தமிழ் சினிமாவின் உயரமும் அதிகமாகியிருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com