‘நீங்கள் நல்லசிவமா? அன்பரசுவா?’ அன்பே சிவம் பேசும் அரசியல்

காதல், அன்பு, கம்யூனிஸம், கடவுள், நேசம் என எவ்வளவு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அன்பே சிவம் பேச வந்த செய்திதான் காலம் கடந்தும் அது கொண்டாடப்படுவதற்கு காரணம்.
‘நீங்கள் நல்லசிவமா? அன்பரசுவா?’ அன்பே சிவம் பேசும் அரசியல்

மனித சமூக வாழ்க்கை என்பது முரண்பாடுகளின் மத்தியில் உருவானதுதான். சமூக முன்னேற்றத்திற்கு மாற்றுக் கருத்துகளும், அதன்பொருட்டு எழுகிற விவாதங்களும் அவசியம். ஆதி சமூகம் தொடங்கி இன்றைக்கு உள்ள தாராளமய பொருளாதார சூழல் வரை ஒன்றிலிருந்து மற்றொரு சமூகம் பரிணமிக்க பல்வேறு சமூகக் கூறுகளும், அதன்பொருட்டு வளர்ந்த விவாதங்களும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

இன்றைய மனித வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் முன்பைக் காட்டிலும் உச்சம் பெற்றாலும், அதன் பயன் அனைத்துத் தரப்பினருக்கும் சரிவர சென்று சேரவில்லை என்பதை மறுக்க முடியாது. இத்தகைய நிலையிலிருந்து பொதுவுடமையை நேசிக்கும் ஒரு இடதுசாரியும், முதலாளித்துவ நலன்களை நம்பும் ஒரு இளைஞனும் சந்தித்துக் கொள்ளும் ஒரு புள்ளிதான் அன்பே சிவம். 

அவர்களுக்குள்ளான முரண்பாடுகள், மோதல்கள், விவாதங்கள் என அன்பே சிவம் திரைப்படம் காட்சிக்கு காட்சி கடத்த முயலும் செய்திகள் ஏராளம்.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை எப்போதும் இறுக்கமாகவும், கோபக் கனலானவர்களாகவும் பொது மனதில் பதிந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் நாயகன் நல்லசிவன் எனும் கமல் வழக்கத்திற்கு மாறான கம்யூனிஸ்டாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்.

இளைஞனாகத் தொடங்கிய அவரது அரசியல் பயணம் விபத்துக்குப் பிறகு முதியத்தை நெருங்கும் நிலையில் அவரின் நிதானம், பக்குவம் என திறம்பட கையாளப்பட்டிருக்கும். கமலுக்கு சற்றும் சளைக்காத கதாபாத்திரம் அன்பரசு (மாதவன்). நினைத்த மாத்திரத்தில் முடிவெடுக்கக்கூடிய, தான் நேருக்குநேர் எதிர்கொண்டிராத எந்தவொரு செய்தி குறித்தும் எதிர்மறையாகவும், முன்முடிவோடும் அணுகக்கூடிய கதாபாத்திரம் அன்பரசு. 

இந்த இருவரும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி ஒரு பேரிடர். கட்சிப் பணிக்காக ஒடிசா சென்றுள்ள நல்லசிவமும், தனது தொழில் பயணமாக அதே பகுதிக்கு பயணமாகியுள்ள அன்பரசுவும் கனமழை காரணமாக திரும்பி வர முடியாமல் தவிக்கின்றனர்.

அடுத்த நொடி பரபரப்புக்குள் வாழும் அன்பரசுவுக்கு உடனடியாக சென்னை திரும்ப வேண்டிய நிலையில் அவருடன் இணைகிறார் நல்ல சிவம். இருவரின் பயணம் எப்படி இருக்கப் போகிறது? 

கம்யூனிசம் குறித்து நம்பிக்கையற்ற அன்பரசு நல்ல சிவத்துடன் பயணிப்பதைத் தவிர்க்க, வேதாளம் ஏறிய முருங்கை மரமாக மீண்டும் மீண்டும் அன்பரசுவுடன் இணையும் நல்லசிவம் என்பதாக சூழல் அமைகிறது. ரயில் நிலையத்தில் தன்னுடைய மணி பர்ஸை அன்பரசு திருடனிடம் தவறவிட அதை மீட்டுக் கொடுக்கும் நல்லசிவம் எப்படி அவருக்கு வில்லனாகத் தெரிகிறார் என்பது நம்மில் பலரையும் நினைவுபடுத்துகிறது.

மனிதர்களின் தோற்றம் ஏற்படுத்தக் கூடிய அவநம்பிக்கை, அம்மனிதர்களை அந்நியமானவர்களாகவும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவும் நினைக்கச் செய்கிறது. விபத்தில் தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாத நல்ல சிவம், அன்பரசுவின் பார்வையில் விசித்திரமானவர். அவரைக் குறித்து அறிந்துகொள்ளவோ அல்லது உரையாடவோ அவசியப்படாதவர் அன்பரசு. இறுதியில் அதே நல்லசிவத்தை அண்ணன் எனக் குறிப்பிடும் சூழலுக்கு அன்பரசு எப்படி மாறுகிறார்? என்பதில் அடங்கியிருக்கிறது செய்தி.

அன்பே சிவம் திரைப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல பேருந்து விபத்து, ரயில் விபத்து, தொழிற்சங்க காட்சிகள் என நிறைய இருக்கின்றன. பேருந்து விபத்தில் சிக்கிக் கொள்ளும் நல்ல சிவத்துக்கு முன்பின் அறியாத பாதிரிப் பெண் சிகிச்சையளித்து குணப்படுத்துகிறார். நல்லசிவத்துக்கு அவர்தான் கடவுள், அவர்தான் கம்யூனிஸம். முன்பின் தெரியாத ஒரு உயிருக்கு அளிக்கும் உதவியும் அன்புமே அங்கு கம்யூனிஸம்.

அப்படியே ரயில் விபத்து காட்சிக்கு இடம்மாறலாம். ரயில் விபத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனுக்கு உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது. தடுமாறினாலும், பின் அந்த சிறுவனுக்கு ரத்தமளிக்கிறார் அன்பரசு. அந்தக் காட்சி அழகானது. அதிமுக்கியமானது. ரத்தம் அளித்தபின் சிறுவன் பிழைத்துக் கொள்வான் என அன்பரசு எதிர்பார்த்திருக்கும் சூழலில் மரணித்துப் போகும் சிறுவனால் அன்பரசு ஏமாற்றமடைகிறார். இதற்குமுன் அனைவரையும் கேள்விகளுடனே அணுகியவர் முன்வந்து செய்த முதல் உதவி. அதுவும் பயனற்று போகிறது. அதனால் ஏற்பட்ட விரக்தி அவரை எந்த நிலைக்கு இட்டுச் செல்லும்?

முன்பின் தெரியாத ஒருவருக்கு உதவிய அன்பரசு அவரின் மொழியிலேயே கடவுளாக நல்லசிவத்தால் அழைக்கப்படுகிறார். இருவரும் இணையும் இந்தப் புள்ளி சொல்லும் செய்தி ஒன்றுதான். இந்த சமூக வாழ்விற்கு பழக்கப்பட்டவருக்கு இருக்கும் அடிப்படையான பிற்போக்கு எண்ணங்களை அவர் உதறிவிட தயாராக இருக்கும் கணம்தான் சமூக மாற்றம். 

அன்பே சிவம் திரைப்படத்தில் ஒவ்வொரு பாத்திர வடிவமைப்பும் சிறப்பானது. நல்லசிவமும், அன்பரசுவிற்குமான உரையாடலை முன்வைத்து இந்தக் கட்டுரை வரையப்பட்டிருப்பதால் இதர பாத்திரங்கள் குறித்து ஆழமாக நாம் உரையாடவில்லை. எனினும் முக்கியக் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள் நாசர், கிரண், சந்தான பாரதி, உமா ரியாஸ் என தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்தவர்கள் ஏராளம். 

இடதுசாரி தத்துவம் உலகின் போக்குக்கு விளக்கமளிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வை முன்வைக்கும் தத்துவம். இன்றைக்கு இதுகுறித்த பல திரைப்படங்கள் திரையில் தோன்றினாலும் சட்டென அடையாளம் காட்டப்படும் இடத்தை அன்பே சிவம் பெற்றிருக்கிறது என்றால் அது வடிவமைக்கப்பட்ட விதம் ஆழமானது. திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் நல்லசிவத்தைக் கொல்ல வரும் கந்தசாமியின் (நாசர்) வலதுகரமான சந்தான பாரதி கொலை செய்வதற்கான வாய்ப்பிருந்தும் நிதானிக்கும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறார். நல்லசிவம் கண்டடைந்த கடவுள்கள் இங்கு ஏராளம். 

இங்கு கம்யூனிஸத்துக்கும் கடவுளுக்கும் அடிப்படையாக காட்டப்பட்டிருக்கும் இடம் தான் சக மனிதனின் மீதான நேசம். அது ஒருவருக்கு கடவுளாக இருக்கலாம், மற்றொருவருக்கு கம்யூனிஸமாக இருக்கலாம். உலகின் மீதான நேசமே மனிதனை இயக்கும். 

உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்து அந்த வடிவம் உருக்குலையும்போது உணர்வு அழிந்துபோவதில்லை. மாறாக உணர்வுகளால் கட்டப்பட்ட வடிவங்கள் அழியும் போது அவை மேலும் வலுப்பெறுகின்றன. உணர்வுகளுக்கு வடிவங்கள் ஒரு கைத்தடிதான். தாஜ்மகால் இடிந்தாலும் காதலும் உணர்வுகள் மறிப்பதில்லை எனும் சொல்லும் அதனைத் தொடர்ந்து கம்யூனிஸம் குறித்த உணர்வுக் கடத்தலும் காட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.   

ஒரு சூழலில் குறிப்பிட்ட ஒரு முடிவில் இருக்கும் மனிதன் அதனில் விடாப்பிடியாக நில்லாமல் மனமாற்றம் அடையும் இடம்தான் வாழ்வில் அதிமுக்கியமானது. திரைப்படத்தின் பல இடங்களில் பல கதாபாத்திரங்களை வெளிக்கொணரும் இடம் இதுதான். ரத்த தானமளித்த, நல்லசிவத்துக்கு தன்னுடைய வாழ்வில் இடமளித்த அன்பரசுவாகட்டும், காதலை வெளிப்படுத்தினாலும் நல்லசிவமின் நிலை அறிந்து அவருக்கு வழிவிட்ட உமா ரியாஸாகட்டும், கொலை செய்ய வந்து அதனை மறுத்த சந்தான பாரதியாகட்டும், விபத்துக்கு காரணமானாலும் இறுதிக் காட்சியிலும் உடன் நின்ற அந்த நாய்க்குட்டியாகட்டும் அனைவரும் பேசிய விஷயம் சக மனிதனின் மீதான நேசம்தான்.

கம்யூனிஸம் குறித்த ஆழமான உரையாடலுக்கு வழிவகுத்து அதனை புரிய வைக்க மெனக்கெட்டிருக்கிறது அன்பே சிவம். அதற்கு கடவுள் என நாம் புரிந்து கொள்ளத் தேவையான சொல்லோ, அன்பு என உணர்ந்துகொள்ளத் தேவையான துடுப்போ அவசியப்படலாம்.

காதல், அன்பு, கம்யூனிஸம், கடவுள், நேசம் என எவ்வளவு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அன்பே சிவம் பேச வந்த செய்திதான் காலம் கடந்தும் அது கொண்டாடப்படுவதற்கு காரணம்.

உண்மையில் திரையில் தோன்றும் அன்பரசு தான் இங்கு நம்மில் பலரும். நமக்கென ஒரு முன்முடிவு இருக்கிறது. நாம் வாழ்ந்த இந்த சமூக வாழ்க்கை நமக்கு ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அது உண்மையா இல்லையா என்பதைக் கூட அறிய முடியாத வண்ணம் இந்த சமூகம் நாம் சிந்திப்பதற்கு தேவையான வாய்ப்பை மறுத்து வேகமாக முன் தள்ளுகிறது. அதற்கு உண்மை தேவையில்லை. அந்தந்த சூழல் நியாயங்களும், அதற்கு துணையாக காரணங்களும் மட்டுமே போதுமானதாய் இருக்கிறது. 

இவற்றையெல்லாம் மறுத்து நாம் சிந்தித்தாலோ அல்லது நிதானித்தாலோ நம் அருகில் அமர்ந்திருக்கும் நல்லசிவம் நம் கண்களுக்கு தெரியலாம். அந்த நல்லசிவம் எவ்வளவு அழுக்காக இருந்தாலும், எத்தகைய குறைபாட்டுடன் இருந்தாலும் அவரின் நோக்கம், அன்பு, செயல் நமக்கு புரியும். அதற்கான வாய்ப்பு அவர்களுடான உரையாடல்.  முரண்பாடுகள் மோதலுக்கான களமல்ல. அது புதிய கருத்து பிறப்பதற்கான பிறப்பிடம்.

கமல்ஹாசனின் திரைமொழிக்கு பல திரைப்படங்களும், காட்சிகளும் இருந்தாலும் அதனில் உச்சாணிக் கொம்பில் வைத்துப் பார்க்கப்பட தகுதிவாய்ந்த ரத்தினக்கல் அன்பே சிவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com