ரசனை மிகுந்த நகைச்சுவை கலைஞன் – கமல்!

நடிகர் கமல்ஹாசனின் நகைச்சுவை படங்கள் குறித்து ஒரு பார்வை. 
ரசனை மிகுந்த நகைச்சுவை கலைஞன் – கமல்!

ரசனை மிகுந்த நகைச்சுவை கலைஞன்கமல்!

''நான் வெற்றி பெற்றவன், இமயம் தொட்டுவிட்டவன்'' என்று வரும் விக்ரம் திரைப்படத்தின் பாடல் வரிகள் கமல்ஹாசனின் ஒட்டுமொத்த திரையுலகப் பயணத்திற்குமே பொருந்தக் கூடியது. சினிமாவின் எல்லா பக்கங்களுக்கும் பயணப்பட்டவர். நடிப்பில், நவரசங்களில் எதுவாகினும் அதனை காட்சி வாயிலாக மக்கள் மனதில் நிலைநிறுத்த தசாவதாரம் எடுக்கும் உழைப்பு சினிமா மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டையே காட்டுகிறது.

தொழில்நுட்ப ரீதியாகவும், கதை சொல்லும் விதங்களிலும் தமிழ் சினிமாவின் ஆரம்பகட்டங்களில் நிகழ்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் காரணமானவர், நகைச்சுவைக் காட்சிகளையும் பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளத் தவறவில்லை.  

திரைக்கதையோடு பொருந்திய நகைச்சுவை காட்சிகளை கட்டமைப்பதில் வல்லவர் கமல்ஹாசன். இதற்காக அவருக்கு வலது கையாக இருந்தவர் கிரேஸி மோகன். நகைச்சுவைக் கலைஞர்களுக்கென தனி கதைப்போக்கு (டிராக்) வைத்து திரைப்படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே இத்தகைய பரிசோதனைகளை கமல் மேற்கொண்டார் என்ற முரண்பட்ட சவால் தான் அவரது பலம்.

கதையோடு பொருந்திய நகைச்சுவை காட்சிகளை வேறு சிலரும் முயற்சித்திருந்தாலும், அதனை ஒவ்வொரு வசனங்கள் வாயிலாகவும், கதாபாத்திரங்களின் இயல்புகள் மூலமும் கட்டமைத்து வெற்றி பெற்றவர் கமல்ஹாசன். சதிலீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை சண்முகி, பம்மல் கே.சம்மந்தம், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்றவை அவரது முயற்சியில் மைல்கற்கள்.

ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என சமகால கதாநாயகர்களும் வணிக நோக்கில் நகைச்சுவை காட்சிகளை ஏற்று நடித்தாலும், கமல் அளவிற்கு கலைத்துவமாக மெனக்கெட்டவர்கள் எவரும் இல்லை. இன்றைய 'பிளாக் ஹியூமர்', கமல் அன்றே சிரித்து முடித்தவைதான்.

சதிலீலாவதி:

நாயக பிம்பத்தை உதறித் தள்ளிவிட்டு கமல்ஹாசன் நடித்த படம். நகைச்சுவைக் காட்சிகளின் எதார்த்தத்திற்காக நகைச்சுவை நாயகி கோவை சரளாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்படத்தில் கமலின் நண்பராக வரும் ரமேஷ் அரவிந்த்துக்கு கல்பனா, ஹீரா ராஜகோபால் ஆகியோர் இணை.

திருமணம் ஆனதை மறைத்து தனது கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்து வேதனையுறும் பெண்ணை கமல்ஹாசனும், கோவை சரளாவும் எப்படி மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் கதை. இந்த கதையை நகைச்சுவைக் காட்சிகளால் நிரம்பியிருப்பார்கள் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும். கோகிலா, மூன்றாம் பிறை படங்களுக்குப் பிறகு பாலுமகேந்திராவுடன் இணைந்த படம்

கோவை வட்டார வழக்கில் கோவை சரளாவிற்கு இணையாக கொங்கு மொழி பேசி அசத்தியிருப்பார் கமல். தமிழ் சினிமாவில் அதிக அளவிலான வட்டார மொழி பேசி நடித்த கலைஞர்களில் கமலுக்கு முதன்மையான இடம் உண்டு. நாயகனில் சக்திவேல் நாயக்கரைப் போன்று நகைச்சுவைக்கு சக்திவேல் கவுண்டர் கதாபாத்திரம்.

திரையில் ஒரு மணி நேரம் மட்டுமே வந்தாலும் கூட காட்சிகளோடு பொருந்திய வார்த்தை விளையாட்டுகளால் கோவை சரளாவுடன் சேர்ந்து மொத்த ரசிகர்களையும் சதிலீலாவதியில் தமது பெயரைச் சொல்ல வைத்திருப்பார்.  கணவன் - மனைவி டூயட் பாடலையும் நகைச்சுவையாகவே எடுத்து ரசிக்க... சிரிக்க வைத்திருப்பார்.

தமிழ் சினிமாவில் அதுவரை வந்து பிரபலமான பாடல்களின் முதல் இரு வார்த்தைகளை வைத்துக்கொண்டு நகைச்சுவையாகவே அமைக்கப்பட்ட டூயட் பாடல்தான் ''மாருகோ.. மாருகோ..''. திரையரங்கில் அன்றைய காலகட்டத்தில் இந்த பாடலுக்கும் காட்சிகளுக்கு தனி ரசிகர்கர் பட்டாளமே இருந்தது. இன்றைய தலைமுறையினரின் விருப்பப் பாடல்களிலும் இந்த பாடல் அதன் சிறப்பம்சமே தெரியாமல் இடம் பெற்றிருக்கும்.

''ஒரு ஆம்பளைக்கி இந்தாடே பொறுக்கிக்கோனு சான்ஸோ, சாய்ஸோ கொடுக்கக்கூடாது. கொடுத்தா ரெண்டையும் பொறுக்கிடுவானுங்கோ'' என்ற வசனம் கருத்தளவில் ஆழமாக இருந்தாலும், அதனை கொங்கு வழக்கில் கமல் பேசி எதேச்சையாக கடந்திருப்பார் கமல்.

''சின்ன வீடே ரெண்டாவது, அதுல ரெண்டாவது சின்ன வீடு வேறயா''... ‘’தீபாவளி வருதுலோ, பொண்டாட்டிக்கு பதிலா சின்ன வீடு வெக்கலாம். புள்ளைங்களுக்கு எந்த வூடு வெக்றது. பண்டிகைக்கு புள்ளைகள பாக்க கண்டிஷனா வருவான். ஒரேயடியா அமுக்கிடலாம்’’ என்று கமல் கணவன் விட்டுச்சென்ற கல்பனாவிற்கு ஆறுதல் கூற.. தீபாவளிக்கு வரலைனா? என அழுதுகொண்டே கல்பனா வினவுவார். அதற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் ''பொங்கல் வருது. பக்கம்தானே..'' என வெள்ளந்தியாக பதிலளித்து இறுதியில் வாக்குப்படி பொங்கலுக்குள் சேர்த்தும் வைப்பார்.

மைக்கேல் மதன காமராஜன்:

சிங்கீதம் சீனிவாச ராவ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 5-வது படம். அபூர்வ சகோதரர்கள் என்ற மெகா ஹிட்டான படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால், முழுக்க முழுக்க காமெடியாக இந்த படம் 1991-ல் வெளியானது.

விபத்தாக நடக்கும் சில சம்பவங்கள் சினிமாவில் வரலாறாக மாறும் என்பது போல, மைக்கேல் மதன காமராஜன் காமெடிப் படமாக அமைந்ததும் ஒரு விபத்துதான். இதனை கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். ஆனால் விபத்து தானே என்று தனிச்சையாக இருந்துவிடாமல், அதற்காக போட்ட உழைப்பு இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது.

படத்தை தயாரித்ததோடு மட்டும் அல்லாமல், கதையின் போக்கு மாறாமல் நகைச்சுவையாகவே இதன் திரைக்கதை முழுவதையும் கமல் எழுதினார். பின்னர் தனது வலது கரமான கிரேஸி மோகனுடன் இணைந்து மிச்சத்தை வசனங்களால் நிரப்பினார். திரைக்கதையை சிதைக்காமல் வசனங்களை எழுதுவதும், நகைச்சுவை கதாபாத்திரங்களை நுழைப்பதும் கமல் - கிரேஸி மோகன் கூட்டணிக்கு கைவந்த கலையாக மாறியிருந்தது.

மைக்கேல், மதன், காமேஸ்வரன், ராஜா என நான்கு வேடங்களில் நடித்திருப்பார். நான்கு கதாபாத்திரங்களும் நான்கு பின்புலங்களைக் கொண்டது. நடிப்புக்கு இடமளித்து வெவ்வேறு வட்டார வழக்குடன் நான்கு பாத்திரங்களும் காமெடிக்கும் பஞ்சமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும். பணத்திற்காக ஆள்மாறாட்டம் செய்து ஒவ்வொரு முறையும் ''பீம்பாய் பீம்பாய்'' என்றழைக்கும்போது கமலின் பலமே கண்முன் தெரிகிறது.

அவ்வை சண்முகி:

சதிலீலாவதியின் வெற்றியைத் தொடர்ந்து அதற்கு அடுத்த ஆண்டே வெளியான படம் அவ்வை சண்முகி. வயதான பெண்மணியாலும் படம் முழுக்க நகைச்சுவை செய்ய இயலும் என்பதை கமலின் நடிப்பு நிரூபித்த மற்றொரு திரைப்படம். மிசஸ் டவுட்ஃபையர் என்ற ஆங்கில திரைப்படக் கதையை தமிழ் கலாசாரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து எடுக்கப்பட்டது.

மனைவியை பிரிய விருப்பம் இல்லாமல் விவாகரத்து கொடுக்கும் கணவன் தனது மகளை நாள்தோறும் பார்ப்பதற்காக பெண் வேடமிட்டு சென்று மீண்டும் எப்படி தன் மனைவியோடு சேருகிறார் என்ற சுவாரஸ்யமான கதையை தனது திரைக்கதை நடிப்பால் பலமாக்கியிருப்பார் கமல்.

பாண்டியன் கதாபாத்திரத்தில் நடன இயக்குநராக நடிக்கும் கமலை ''ஆடுறதுதான் டான்ஸ், விட்றது எல்லாம் உடான்ஸ்'' என்று மீனா திட்டுவது, ''மானகி ஜம்மா வீட்டுக்கு...ச்சீ, ஜானகி அம்மா வீட்டுக்கு போன் போட்டு வரேன்'' என்று நாகேஷிடம் கமல் உளருவது போன்றவை கமல் படங்களுக்கே உண்டான வார்த்தை ஜால விளையாட்டு. படத்திற்கு கிரேஸி மோகன் வசனங்களை எழுதியிருந்தாலும், அதனை சரியான நடிப்பில் வெளிப்படுத்தி பலம் சேர்த்தது கமலில் பங்கு.  

மாறுவேடம் போட்டுக்கொண்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பி மாறுவேடம் கலைப்பதற்குள் மணிவண்ணன், ஹீராவிடம் படும் பாடு தனிச் சிறப்புடையது. ''பாண்டியனுக்கு சமைக்கிறதுக்காக வந்தேன். அப்போ பாண்டியாக்கு நீங்கதான் குக்கர்னு சொல்லுங்கோ'' என்று மணிவண்ணன் சொல்ல அதற்கு ''குக்கர் இல்ல குக்கி'' என்று கமல் கொடுக்கும் பதில் கிரேஸி மோகன் டச்.

டெல்லி கணேஷிடம் இருந்து தப்பிப்பதற்கு மடிசார் புடவையில் ஓடும் ஆட்டோவில் ஏறுவது, சுவர் ஏறிக் குதிப்பது போன்றவற்றை செய்யும் மாமி வேடத்தை ரசிக்காதவர்களும் இல்லை, ஒட்டு மீசை வைத்துக்கொண்டு சமாளிக்கத் திணறும் கமலுக்கு சிரிக்காதவர்களும் இல்லை.

தெனாலி:

அவ்வை சண்முகி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் – கிரேஸி மோகன் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த படம் தெனாலி. அவ்வை சண்முகிக்கு பிறகு மீண்டும் வித்யாசமான கதாபாத்திரத்திற்காக காத்திருந்து கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்தார். இதற்கு இடையில் ஹேராம் என்ற சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியிலான திரைக்கதையை எழுதி இயக்கியிருந்தார் கமல்.

அப்படியொரு கலைப்படைப்பைத் தொடர்ந்து மாறுபட்ட தேடலுடன் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் நடித்து நகைச்சுவைக்கு முயற்சித்திருப்பார்.

எதையும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதே ஒரு கலைஞன் தனது தேடலுக்கு போட்டுக்கொள்ளும் தீனி. சாதாரணமாக பேசி நகைச்சுவைக்காட்சிகளில் தோன்றியதை விட கலைரீதியான சவாலுடன் அவர் நகைச்சுவைக் காட்சிகளை ஏற்று நடித்ததே அதிகம்.

‘’எனக்கு எதிலும் பயம்….’’ என்பதை சந்திக்கும் மனிதர்களிடமெல்லாம் சொல்லும் காட்சிகள் ஒவ்வொரு முறையும் ரசிக்க வைக்கத் தவறவில்லை. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தில் கையாளப்பட்டிருக்கும் ஒரே வசனத்தை திரும்ப திரும்ப சொல்லி மக்களை சிரிக்க வைக்கும் முறையை கமல் அன்றே இதில் முயற்சித்திருப்பார்.

இந்த காலகட்டத்தில்தான் கமலின் கனவு படைப்பான மருதநாயகம் தொடங்கப்பட்டது. ஆனால் அதனை பாதியில் நிறுத்தியே இடைப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டது. கமலின் கலைத் திறனுக்கு அவர் பயணிக்கும் மாறுபட்ட தளங்களே பறைசாற்றும் சாட்சி.

பம்மல் கே.சம்மந்தம்:

அவ்வை சண்முகியைத் தொடர்ந்து கிரேஸி மோகனின் கதை – திரைக்கதையில் கமல் மீண்டும் இணைந்த படம். திருமணத்தின் மீது நாட்டமில்லாத நாயகனான கமலும், திருமணத்தை வெறுக்க்கும் நாயகியான சிம்ரனும் எப்படி இணைகிறார்கள் என்பது தான் கதை.

திருமணம், கணவன் மனைவி, நண்பர்கள் என்ற வட்டத்திற்குள் காமெடிக்காட்சிகளை அமைப்பதில் வல்லவர்கள் என்ற பெயரை கமல்ஹாசனும் - கிரேஸி மோகனும் பெற்ற படம் இது எனலாம்.

ஏனெனில் இந்த படத்தைத் தொடர்ந்து அதே ஆண்டு 5 மாதங்களில் பஞ்ச தந்திரம் என்ற நகைச்சுவை வெற்றிப் படத்தை அவர்கள் கொடுத்தனர். இத்திரைப்படமும் திருமண உறவு, கணவன்-மனைவி சிக்கல், நண்பர்களால் எழும் பிரச்னை என்ற வட்டத்திற்குள் கதையமைத்து எடுக்கப்பட்ட படம். இதற்கு கமல் கதை எழுத கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதினார். கிரேஸி மோகன் தன் வசனங்களால் பலம் சேர்த்தார்.

பம்மல் கே.சம்மந்தம் படத்தில் கந்தசாமியோ, ராமசாமியோ… எல்லாரும் கல்யாணம் கட்டிகினாங்கோ என்ற நகைச்சுவைப் பாடலை சென்னைமொழியில் தனக்கே உரித்தான பாணியில் கமல் எழுதி பாடியிருப்பார்.

ஸ்டண்ட் மேன் சம்மந்தம் காளை பிரெளன் மணியை துரத்திக்கொண்டு ஓடுவது, நீதிமன்றத்தில் சாணியை மிதித்து சிவனாக காட்சியளிப்பது, வாட்ச் வைத்து தைத்த வயிற்றுக்குள் ‘மணியடிக்குதுடா..’ என்று கமல் வலியால் துடிப்பது என்று ஒவ்வொரு காட்சிகளும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும். இதுவே பம்மல் கே.சம்மந்தம், பஞ்ச தந்திரம் படங்களுக்கான வெற்றியும் கூட.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.:

அன்பே சிவம், விருமாண்டி என்ற இருவேறு வகை படங்களைத் தொடர்ந்து மீண்டும் நகைச்சுவைக்காக கையில் எடுத்த படம் தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.. இதிலும் தனது வலது கையான கிரேஸி மோகன் முழு பலமாக இருந்தார் எனலாம்.

கமலுடன் அவ்வபோது சில காட்சிகளில் தோன்றும் கிரேஸி மோகன் இத்திரைப்படத்தில், கமல் படிப்பதற்கு சேரும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக படம் முழுக்க நடித்திருப்பார். ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் என்பதே தெரியாத வகையில் படம் முழுக்க நகைச்சுவைக் காட்சிகள் புரையோடியிருக்கும். முதல் முறை இயக்குநர் சரண் உடன் கைக்கோர்த்திருப்பார்.

படத்தில் கல்லூரியில் சேருவது, மாணவர்களை ரேகிங் செய்துகொண்டு ‘’இதுலாம் ஒருத்தருக்கொருத்தர் பன்னிக்கிறதுதானே மாமே’’, என்ற வசனத்தைப் பேசாத கல்லூரி மாணவர்களே இல்லை. பரீட்சைக்கு முன்பு பாதிக்கு மேல் எல்லோரும் தயிரில் சர்க்கரை கலந்து உண்பதை முயற்சித்திருப்பார்கள்.

‘’மார்க்க பந்து, மொத சந்து, கவிதை மாறி கீதுல’’

எச்சக்கலனா நாய் மட்டும் தானா?.. எச்சக்கல சிங்கம், எச்சக்கல புலி இப்டி இருக்கக் கூடாதா?

போன்ற கிரேஸியான வசனங்கள்… கோபத்தின்போது சிரிக்கும் பிரகாஷ் ராஜ், நீங்கள் தேடும் பாப்பு நான் தான் என்பதை மறைத்து கமலுடம் சமரசமாடும் சினேகா, வசூலுக்கு உதவும் ’வட்டி’ கதாபாத்திரத்தில் பிரபு, உயரத்திற்கு அஞ்சும் கருணாஸ், கேரம் ஆடம் கம்பெனி கேட்கும் தாத்தா, கோமாவிலிருந்து குணமாகி ஆச்சர்யப்படுத்தும் ஆனந்த், மருத்துவமனை கதாபாத்திரங்கள் என ஒரு படத்தில் வரும் பல்வேறு பாத்திரங்கள் மனதில் நின்ற படமாக மாறியது வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.

அதுவரை சிரிக்க வைத்திருந்த கமல் இறுதியில் ஒரு குளோசப் காட்சியில் ஐந்தே நிமிடங்களில் அழ வைத்திருப்பார். ஒரே படத்தில் சிரிக்கவும், உடனே அழவும் வைக்க முடிந்த அளவுக்கு கைதேர்ந்த கலைஞனை காட்டிநிற்கிறது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.

 ரகசிய கலைஞன்:

வெறும் கலைப்படங்களில் மட்டும் நடித்து வந்த கமல், வணிகப் படங்களையும் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தது, அவர் வாழ்வில் எடுத்த நல்ல முடிவுகளில் ஒன்று.

அதனால்தான் புஷ்பக் (ஹிந்தி), சிங்கார வேலன், அபூர்வ சகோதர்கள், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற நகைச்சுவை நிறைந்த படங்களைக் கொடுக்க முடிந்தது.

கலைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நடிப்பில் உச்சத்தைத் கமல்ஹாசன் தொட்டிருப்பார். ஆனால் வணிகப் படங்களையும் ஒருகை பார்த்ததால், எல்லா விதங்களிலும் உலக நாயகனாக மிளிர்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com