சுடச்சுட

  
  jeya10

  கடந்த 1984-1989-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, தமிழகத்தின் சார்பில் பல முக்கியப் பிரச்னைகளை அவையில் எழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்தக் காலகட்டத்தில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் அவர் செயல்பட்டார்.
  மாநிலங்களவையில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினாலும், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்தும் அவர் சரளமாக மேற்கோள்காட்டிப் பேசுவதை வழக்கமாககக் கொண்டிருந்ததாக நாடாளுமன்றச் செயலக அதிகாரிகள் நினைவுகூர்ந்தனர்.
  அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து, 1984-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினரானார். அந்த ஆண்டில், ஏப்ரல் 23-ஆம் தேதி மாநிலங்களவையில் ஜெயலலிதா முதன்முதலாக உரையாற்றினார். அவரது அந்தக் கன்னிப் பேச்சும் தமிழகத்தின் நலன் சார்ந்ததாகவே இருந்தது. மாநிலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய மின்சாரத் திட்டங்கள் குறித்து அவர் வலியுறுத்திப் பேசினார்.
  5 ஆண்டுகளும் பிரதான பிரச்னைகள்:

  மாநிலங்களவை உறுப்பினராக அவர் பொறுப்பு வகித்த 5 ஆண்டுகளிலும் தமிழகத்தின் பிரதான பிரச்னைகள் உள்பட தேச நலன் சார்ந்த அனைத்து விஷயங்களையும் எதிரொலித்தார். சமஷ்டி அடிப்படையில் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான திட்டங்கள், கங்கை- காவிரி இணைப்புத் திட்டம், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து, இலங்கைப் பிரச்னை, ஜம்மு-காஷ்மீருக்கு அரசியல் சட்ட அந்தஸ்து, தமிழகத்தை தொழில்மயமாக்குவது, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னை, வரதட்சிணை துன்புறுத்தல், நிலம் கையகப்படுத்தும் சட்டம் என தமிழகத்திலும், நாட்டிலும் நிலவிய 19 முக்கிய பிரச்னைகள் குறித்துப் பேசினார்.
  பேச்சில் எப்போதும் அண்ணா:

  ஜெயலலிதா தனது பேச்சைத் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் அண்ணாவின் கூற்றுகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். அண்ணா 1963 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் பேசிய கருத்தையே ஜெயலலிதா தனது மாநிலங்களவை கன்னிப் பேச்சிலும் எதிரொலித்தார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அண்ணா கூறிய கருத்தை மேற்கோள் காட்டிப் பேசிய ஜெயலலிதா, தனது பேச்சை மிக அழகாக முடித்தார்.
  "தமிழகமானது பொதுவாக 2 விஷயங்களில் அதிக அதிகாரம் (பவர்) வேண்டும் என நினைக்கிறது. அதாவது, முதலாவது, அண்ணா குறிப்பிட்டது போல மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். மற்றொன்று கல்பாக்கம், நெய்வேலி போன்ற தமிழகத்தில் செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மாநிலத்துக்கு அதிக பவர் (மின்சாரம்) வேண்டும்' என அவர் வலியுறுத்தினார்.
  அதாவது, அதிகாரத்தையும், மின்சாரத்தையும் ஒன்றாக இணைத்து அவர் தனது கன்னிப்பேச்சை மிக அழகாக முடித்தார்.
  1989-ஆம் ஆண்டு வரை பல்வேறு முக்கியப் பிரச்னைகளை மாநிலங்களவையில் எதிரொலித்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai