ஜெயலலிதா வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய கடலூர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய நகரமாக கடலூர் திகழ்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள்
ஜெயலலிதா வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய கடலூர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய நகரமாக கடலூர் திகழ்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசியலில் உச்சம் தொட்ட ஜெயலலிதாவின் வாழ்வில் கடலூர் மாவட்டம் முக்கியப் பங்கு வகித்ததை கட்சியினர் நினைவுகூர்ந்தனர். ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின் போது கடலூர் மாவட்டம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது கடலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "எனது அரசியல் கடலூரில்தான் தொடங்கியது' என நினைவுகூர்ந்ததை இன்றைய தலைமுறையினரும் கேட்டிருக்கலாம்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், தற்போதைய சென்னை மாவட்ட கூடுதல் சிவில் நீதிபதியுமான எம்.ராஜலட்சுமி கூறியதாவது:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எனது தந்தை மாரிமுத்து கவுண்டர். அவர் அதிமுக விசுவாசி என்பதால் எனக்கும் அந்தக் கட்சியின் மீது ஈர்ப்பு இருந்தது. சட்டம் படித்து விட்டு வழக்குரைஞர் தொழில் செய்தபோது 1982-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர், விழுப்புரம் பகுதிகள் ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் அனைத்து மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது.
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத என்னை எம்ஜிஆர் அழைத்து, "முதல் நாள் மாநாட்டுக்கு நீ தான் தலைமை' என்றார். இதை என்னால் நம்பவே முடியவில்லை.
திருவந்திபுரத்திலிருந்து தொடங்கிய பேரணி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முடிந்து, அங்கு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அதிமுக உறுப்பினராக ஜெயலலிதா சேர்ந்தார். மாநாட்டில் பலரும் உரையாற்றினர். அப்போது அங்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா பேசிவிட்டாரா? எனக் கேட்டார். இல்லையென்றதும் அவர் பேச அழைக்கப்பட்டார்.
ஜெயலலிதா பேசுகையில், "ராமர் இலங்கை செல்வதற்கு பாலம் அமைக்கும் பணியில் அணில் எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோல எம்ஜிஆரின் பணிக்கு அணில் போல நான் செயல்படுவேன் என்று பேசினார். அன்று தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் மேடைப்பேச்சு, தமிழகத்தில் ஆட்சிபுரியும் அளவுக்கு அவரை உயர்த்தியது. அதில் நானும் பங்கெடுத்தேன் என்பதே மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
கடலூர் மாவட்ட அதிமுக துணைச் செயலரும், கட்சியின் மூத்தத் தலைவருமான கே.முருகுமணி கூறியது:
1986ஆம் ஆண்டு மதுரையில் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அப்போது, ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட மாணவரணிச் செயலராக இருந்த என்னை மாநாட்டுக்கு தலைமை வகிக்க எம்ஜிஆர் பணித்தார். மாநாட்டில் கொள்கை பரப்புச் செயலர் ஜெயலலிதா வழங்கிய வெள்ளி செங்கோலை பெற்றுக்கொண்ட எம்ஜிஆர், அதை திரும்ப அவரிடமே வழங்கினார். இது கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஜெயலலிதாவிடம் வழங்கியதற்கான சமிஞ்கையாக அப்போதே பார்க்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com