Enable Javscript for better performance
உலக சுற்றுலா தினப்போட்டியில் முதலிடம் பெற்ற சுற்றுலா அனுபவக் கட்டுரை! (திருக்கயிலாய யாத்திரை அனுபவங்- Dinamani


உலக சுற்றுலா தினப்போட்டியில் முதலிடம் பெற்ற சுற்றுலா அனுபவக் கட்டுரை! (திருக்கயிலாய யாத்திரை அனுபவங்கள்)

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 09th October 2018 04:17 PM  |   அ+அ அ-   |    |  

kailash_north_face

 

தினமணி இணையதளம் நடத்திய ‘உலக சுற்றுலா தினப்போட்டி’ யில் முதலிடம் பெற்ற வாசகர் முருகானந்தம் சுப்ரமண்யத்தின் சுற்றுலா அனுபவக்கட்டுரை. இவரது சுற்றுலா அனுபவங்களை வாசித்து விட்டு தினமணி வாசகர்களில் ஆன்மீகச் சுற்றுலா ஆர்வமுள்ளோர் தங்களது திருக்கயிலாய யாத்திரை அனுபவங்களையும் பகிரலாம். யாத்திரை சென்றால் தான் அது பயண அனுபவம் என்பதில்லை... யாத்திரை செல்ல வேண்டுமென்று முடிவெடுத்து விட்டாலே அதுவும் பயணத்தின் ஒரு பகுதி தான்.

சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏன் விருது பெற்ற மலையாளத் திரைப்படமான ‘ஆதமிண்டே மகன் அபு’ கதையாக வாழ்நாள் முழுதுமே ஒரு சிறப்பான ஆன்மீகப் பயணத்துக்கான திட்டமிடலில் இருப்பார்கள். சிலருக்கு அது சாத்தியமாகி விடும். சிலருக்கு சாத்தியமாகாது. அப்படியொரு வாழ்நாள் பயண அனுபவம் இது. வாசித்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள்.

முதலிடம் பெற்ற வாசகர்

முருகானந்தம் சுப்ரமண்யத்திற்கு

தினமணியின்  வாழ்த்துக்கள்!

இனி சுற்றுலா அனுபவக் கட்டுரைக்குச் செல்வோம்.

1. மனித வாழ்வில் சுற்றுலா அவசியமா?

ஆம், மிகவும் இன்றியமையாத ஒன்று. வெளியே கிளம்பாவிட்டால் கிணற்றுத் தவளையைப் போலவே  இருந்து விடுவோம்.  மற்ற இடங்களில் வாழும் மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பல புது பரிமாணங்களை அறிந்து கொள்ள சுற்றுலா உதவுகின்றது. நம்முடைய பொதுஅறிவு விரிவடைகின்றது. மற்றவர்களுக்கு அன்பு செலுத்தும் பண்பை வளர்க்கின்றது. தாங்கள் கூறுவது போல “வாழ்வின் புத்தம் புது தரிசனங்களுக்கானவை“ என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை.

பொன்னார் மேனியன் (வடக்கு முகம்)
பொன்னார் மேனியன் (வடக்கு முகம்)

2. உங்களுடையது எந்த வகை சுற்றுலா?

பொதுவாக ஆன்மீகச் சுற்றுலா என்றாலும் அருகே உள்ள இடங்களுக்கும் சென்று வருவோம்.  சில சமயம் குடும்பத்தினருடன் இன்பச்சுற்றுலா சென்றதும் உண்டு. குறிப்பாக இமயமலையில் நடைப்பயணம் மிகவும் பிடித்த ஒன்று வருடத்திற்கு ஒரு முறை இமயமலையின் ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று இயற்கையுடன் இயைந்து இருந்து தூய்மையான காற்றை சுவாசித்து புத்துணர்வுடன் திரும்பி வருவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளோம்.

தெற்கு முகம்

 

3. நீங்கள் இது வரை  தனியாகவும், குடும்பத்தினர்  அல்லது நண்பர்களுடனும்  எத்தனை முறை சுற்றுலா சென்றிருக்கிறீர்கள்?

எண்ணற்ற முறை. வருட ஆரம்பத்தில் அலுவலகத்தின் விடுமுறை நாட்கள் எவை என்ற தகவல் கிடைத்ததும் முதலில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கும் மேலாக விடுமுறை எப்போது வருகின்றது அப்போது எங்கு செல்லலாம் என்பதை முதலில் திட்டமிடுவோம்.

அடியேனுடன் சுற்றுலா வரும் நண்பர் குழாம் உள்ளது. எனவே அனைவருடன் கலந்தாலோசித்து சுற்றுலா செல்ல வேண்டிய தலங்களை முதலிலேயே முடிவு செய்து கொள்வோம்.

மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பணி புரிவதால் நமது பாரத தேசத்தின் பல் வேறு பிராந்தியத்தில் பணி புரிய வேண்டி வந்தது, அதனால் அருகில் உள்ள பல தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும் தானகவே கிட்டியது அவற்றை சரியாக பயன் படுத்திக் கொண்டேன்.

மேற்கு முகம்

இது வரை மூன்று முறை திருக்கயிலாய யாத்திரை, நேபாளத்தில் முக்திநாத் யாத்திரை, பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்கள், இமயமலையின் நான்கு புனிதத் தலங்கள் (யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரநாதம், பத்ரிநாதம்) யாத்திரை, பஞ்ச பத்ரி யாத்திரை, சீக்கியர்களின் புனிதத்தலமான   ஹேம் குண்ட சாஹிப் பூக்களின் சமவெளி யாத்திரை, மஹாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயகர் தரிசன யாத்திரை, குஜராத் மற்றும் இராஜஸ்தானத்தில் நவ துவாரகை யாத்திரை, கேரளத்தில் மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை, நாலம்பல யாத்திரை. ஆந்திராவில் அஹோபிலம் மற்றும் ஸ்ரீசைல யாத்திரை, மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கௌஹாத்தி, காஜிரங்கா விலங்குகள் சரணாலயம், ஷில்லாங், சிரபுஞ்சி, சிக்கிம், டார்ஜிலிங் சுற்றுலா என்று பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் பாக்கியக் கிட்டியது. ஒரு முறை மலேசியா, சிங்கப்பூர் யாத்திரையும் சென்று வந்துள்ளோம்.

கிழக்கு முகம்

 

4. இதுவரை தாங்கள் மேற்கொண்ட  சுற்றுலாக்களில் உங்களால் மறக்க முடியாத சுற்றுலா எது?

அனைத்து சுற்றுலாக்களிலுமே ஒரு அருமையான அனுபவம் கிட்டுகின்றது எனவே அனைத்தும் மனதில் நிற்கின்றன ஆயினும் இரண்டை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

கௌரி குண்டம்

 

ஒன்று அனுபவித்த எதிர்பாராத துன்பங்களுக்காக மற்றது ஒரு யாத்திரை என்றால் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்காக குறிப்பிடுகின்றேன். ஒரு வருடம் இமயமலையின் நான்கு புனித யாத்திரை செல்ல முடிவு செய்து சரியாகவே திட்டமிட்டு செப்டம்பர் மாதம் யாத்திரை சென்றோம். அவ்வருடம் நின்றிருக்க வேண்டிய பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததனால் வழி எங்கும் நிலச்சரிவுகள் திட்டமிட்டபடி நான்கு தலங்களையும் தரிசிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல எதிர்பாராத விதமாக ஒரு கிராமத்தில் மூன்று நாட்கள் மாட்டிக்கொண்டோம், உணவுக்காக திண்டாடினோம்.  மேலும் ஒரு நகரத்தில் இரண்டு நாட்களும் மாட்டிக்கொண்ட அனுபவமும் எவ்வழியில் செல்ல முயற்சி செய்தாலும் வழி அடைபட்டு திரும்பி வர வேண்டியதாகிவிட்டது. இரண்டு  குழுவினரில் ஒருவருக்கு உடல் நலம் வேறு சரியில்லமால் போனதால் எற்பட்ட சிரமங்கள் ஆகியவற்றையும் மீறி மூன்று தலங்களையும் ஹரித்வார், ரிஷிகேசம் தரிசித்து வந்த அனுபவம் மிகவும் மறக்க முடியாத ஒன்று.

இரண்டாவது அனுபவம் எந்த வித துன்பமும் இல்லாமல் திட்டமிட்டதை விட அருமையாக அமைந்த யாத்திரை நவதுவாரகை யாத்திரை. அகமதாபாத் வரை வானூர்தியில் பயணம் செய்து அங்கிருந்து பின்னர் ஒரு சீருந்து மூலம் அனைத்து தலங்களுக்கு சென்றோம். அடியேனுடன் பணி புரியும் ஒரு அன்பர்   சீருந்து ஏற்பாடு செய்து கொடுத்தார். வண்டி ஓட்டுநர் பல முறை இவ்வழியில் சென்று வந்தவர் என்பதால் சரியான சமயத்திற்கு அனைத்துத் தலங்களுக்கும் அழைத்து சென்றார் எனவே  தரிசிக்க நினைத்ததை விட அதிகமான தலங்களை தரிசித்தோம். எங்கும் எந்த சிரமமும் ஏற்படவில்லை.  ஒரு முழுமையான யாத்திரை அது என்றால் அது மிகையாகாது.

திருக்கேதாரம்

 

5. மறக்க முடியாத சுற்றுலா அனுபவங்களைப் பற்றி சுவாரஸ்யமாக  விவரியுங்கள்!

முதல் தடவை திருக்கயிலாய யாத்திரை சென்ற போது  இந்திய வழியில் நடைப்பயண யாத்திரையாகச் சென்றேன்.  பனி படர்ந்த  மலைச் சிகரங்களை இரசித்துக்கொண்டே பாய்ந்தோடும் காளி நதிக்கரையோரமாக  மலையேற்றம் ஒரு அருமையான அனுபவம். செல்லும் வழியில் ஒரு சமயம் அம்பாள் ஒரு வயதான பெண்மணி போல வந்து தரிசனம் தந்து விட்டு சென்றாள். நான்கு நாட்கள் மலையேறிச் சென்று லிபு கணவாய் அடைந்தோம் மிகவும் கடினமான அவ்விடத்தில் அவ்வருடம் தட்பவெட்பம் அருமையாக இருந்தது, எவ்வித சிரமும் இல்லாமல் லிபு கணவாயை கடந்து சீனாவுக்குள் நுழைந்து பேருந்து மூலம் திருக்கயிலாய மலை அடிவாரத்தை அடைந்தோம் செல்லும் வழியில் முதன் முறையாக மானசரோவரில் நீராடினோம், இராட்சச தால் என்னும் இராவணன் ஏரியை தரிசித்தோம். அன்றைய தினம்  மேகம் சூழ்ந்திருத்தால் சோதனையாக திருக்கயிலை நாதரின் தரிசனம் கிட்டவில்லை.

தேவப்பிரயாகை

 

மறு நாள் காலை எழுந்தவுடன் ஐயனின்  அருமையான தரிசனம் கிட்டியது அதற்குப்பிறகு ஒரு வாரம் அடியோங்கள் அப்பகுதியில் தங்கியிருந்தோம் அனைத்து நாட்களிலும் அருமையான தரிசனம் கிட்டியது. கிரி வலத்தின் போதும் ஐயனின் அனைத்து முகங்களின் தரிசனமும் பூர்ணமாக கிட்டியது. கிரிவலத்தின் முதல் ஆள் தெற்கு முகம், மேற்கு முகம் மற்றும் வடக்கு முகங்களின் முழுமையான தரிசனம் கிட்டியது.  கிரிவலத்தின் இரண்டாம் நாள் அதிகாலை பொன்னர் மேனியனாக எம்பெருமானை தரிசிக்கும் பாக்கியமும் கிட்டியது. அன்று யாத்திரையின்  மிகவும் கடினமான டோல்மா கணவாயில்  நன்றாக வெயில் காய்ந்து கொண்டிருந்தது, பொதுவாக ஐந்து நிமிடங்கள் அங்கிருந்து கீழே இறங்கி விடுவார்கள், அடியோங்கள் அரை மணி நேரம் தங்கி யாகம் வளர்த்து கௌரி அம்பாளுக்கு பூசை செய்து, லலிதா சகஸ்ரநாமமும் கூறி அம்மனை வணங்கினோம்.

துவாரகை

 

அவனருளால் கிரி வலத்தை  எந்த வித இடர்ப்பாடும் இல்லாமல்  நிறைவு செய்து திரும்பி வந்து, அஷ்டபத் சென்று ஐயனை மிக அருகில் இருந்து தரிசித்தோம், நந்தியெம்பெருமானின் தரிசனம் பெற்றோம்.  ஜைனர்களில் முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவரின் தரிசனம் பெற்றோம். அருகில் திருக்கயிலாய நாதரின் திருமுன்னர் ஒரு சிறு யாகம் செய்து அவரை வணங்கினோம். அடுத்து அலி ரோடு என்னும் இடம் சென்று  தொலைவில் இருந்து திருக்கயிலாய நாதரின் முழு தரிசனம் பெற்றோம்.

மானசரோவர் கரையில் மூன்று நாட்கள் தங்கினோம். மொத்தம் ஐந்து முறை மானசரோவரில் நீராடினோம். ஒரு தடவை நீராடும் போது அடியேனுக்கு மானசரோவரில் இருந்து சுயம்பு விநாயகர் கிடைத்தார் இன்றும் அவருக்கு  பூசை செய்து கொண்டிருக்கிறேன். மானசரோவர் கரையில் ஒரு தடவை  விஸ்தாரமாக யாகம் செய்தோம். யாத்திரை நிறைவாக ஒரு சிறு யாகம் செய்யும் பாக்கியமும் சித்தித்தது.

அதன் பின்னர் இரு முறை நேபாளம் வழியாக சென்ற போதும் இது போன்ற முழுமையான தரிசனமும் கிட்டவில்லை, கிரி வலத்தின் போது  பல சிரமங்கள் ஏற்பட்டன என்பதால் முதல் தடவை கிடைத்த அற்புத தரிசனமும், சிரமமே இல்லாத கிரி வலமும் மனதில் பசுமரத்தாணி போல உள்ளது. 

ஒரு வருடம் பத்ரிநாத் யாத்திரைக்காக செல்லும் வழியில் ஜோஷிர்மட் என்ற இடத்தில் அடியோங்கள் சென்ற பேருந்து பழுதாகியதால், பழுது நீக்குவதற்காக அங்கே நின்றது. அதற்கு எதிரே இரு மலைகளைக் கண்டோம் அவை குதிரை போன்றும், யானை போன்றும் காட்சி தருவதால் அவை அவ்வாறே அழைக்கப்படுகின்றன. அம்மலைகள் தான் வைகுண்டத்தில் காவல் புரியும் ஜெய விஜயர்கள் இம்மலைகள் என்றைக்கு கூடுகின்றனவோ அப்போது தற்போதைய பத்ரிநாத் செல்லும் பாதை அடைபட்டுவிடும், அதற்குப்பின் பவிஷ்ய பத்ரி என்றழைக்கப்படும் எதிர்கால பத்ரிநாதத்தில்தான் நாம் பத்ரி பெருமாளை தரிசிக்க வேண்டி இருக்கும் என்பது ஐதீகம் என்று பேசிக்கொண்டிருந்தோம் அப்போது ஒரு அன்பர் பஞ்ச பத்ரிகளுக்கும் சென்றால் என்ன என்று வினவினார். எனவே அங்கிருந்தவர்களிடம் ஒரு நாளில் ஐந்து பத்ரிநாதங்களையும் தரிசிக்க முடியுமா என்று வினவினோம். அவர்களும் சீருந்து மூலம் அதிகாலை புறப்பட்டால் சாத்தியம் என்று கூறினார்கள். எனவே இரண்டு நாட்கள் பத்ரிநாதத்தில் பெருமாளை தரிசனம் செய்வதாக இருந்த திட்டத்தை மாற்றிக்கொண்டு ஒரு நாள் மட்டும் சேவித்து விட்டு பஞ்சபத்ரி யாத்திரைக்காக புறப்பட்டோம்.

முதலில் யோக தியான் பத்ரியில் தரிசனம் செய்த பின் பவிஷ்யபத்ரிக்காக புறப்பட்டோம், அவ்வாலயத்தை அடைய சுமார் 6  கி.மீ மலையேற்றம் அவசியம் எனவே  மலையேறி செல்லும் போது நாங்கள் செல்ல வேண்டிய கிராமத்தை சார்ந்த இருவர் எங்களுடன் இணைந்து கொண்டனர் அவர்கள் துணையாக வர அவர்களுடன் அளவளாவிக்கொண்டே நடந்து சென்று ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த பவிஷ்ய பத்ரிநாதரை திவ்யமாக சேவித்தோம். அப்போதுதான் தெரிந்தது எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் அவ்வாலயத்தின் பட்டர் என்று, அவர் அருமையாக தரிசனம் செய்து  வைத்து பெருமாளுக்கு சார்த்திய வஸ்திரமும் சந்தனமும் அளித்தார். மேலும் மலை உச்சியில் ஒரு பத்ரிநாதர் ஆலயம் உள்ளது அங்கு வேண்டுமென்றாலும் சென்று தரிசியுங்கள் என்று வழிகாட்டினார்.

அக்கிராமத்தின் தலைவர் வீட்டில் மதிய உணவு அருந்த வசதி உள்ளது செல்லும் போது கூறிவிட்டு சென்றால் வரும்போது  உணவருந்தலாம் என்றார். அவ்வாறே அங்கு சென்றபோது அவர்களே ஒரு சிறுவனை வழித்திணையாக உடன் அனுப்பி வைத்தார்கள் மலை உச்சிக்கு செல்லும் போது ஆப்பிள் பழங்களை மரத்தில் இருந்து அப்படியே பறித்து சாப்பிட்டோம். அப்பத்ரிநாதரையும் தரிசனம் செய்து  திரும்பி வந்து தலைவர் இல்லத்தில் மதிய உணவு அருந்தினோம். ஆப்பிள் ஊறுகாய் சுவைத்தோம். பிறகு கீழிறங்கி வந்து  நாரதர் வழிபட்ட விருத்தபத்ரி தலத்தில் நான்காவது பத்ரிநாதரை சேவித்துவிட்டு இரவு    கர்ணபிரயாகை வந்து தங்கினோம் மறுநாள் காலை கர்ணபிரயாகையில் நீராடி ஆதிபத்ரிநாதரை சேவித்தோம். கர்ணபிரயாகையில் உள்ள உமாதேவி ஆலயத்தையும் சேவித்தோம். இவ்வாறு அவனருளால் ஐந்து பத்ரிநாதங்களையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.  இதுவும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.

முக்திநாத்

 

6. சுற்றுலாக்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய  முக்கியமான மாற்றங்கள் அல்லது தாக்கங்கள்?

சுற்றுலா செல்வதற்கு முன் நாம் செல்ல இருக்கின்ற தலத்தின் வரலாறு பற்றியும் அத்தலத்துடன் தொடர்புடைய புராண கதைகளையும் அறிந்து கொண்டு சென்றால் சுற்றுலா இன்னும் இனிமையானதாக இருக்கும் என்பதால் நிறைய படிக்கும் பழக்கம் பெருகியது. சென்று வந்த  பிறகு ’’யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்ற எண்ணத்தில் வலைப்பூவில் இவ்வனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன் பலர் இவற்றை படித்து பயன் பெற்றுள்ளார்கள். அது அப்படியே விரிந்து யாத்திரைகளைப் பற்றிய புத்தகங்களும் சில பதிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு சேவை செய்யும் பாக்கியம் சுற்றுலாவினால் அடியேனுக்கு கிட்டியுள்ளது.

7. சுற்றுலாக்களுக்கு திட்டமிடல் அவசியமா?

மிகவும் அவசியம்.  நாம் செல்ல வேண்டிய தலத்தின் சிறப்புகள் என்ன, என்ன பார்க்க வேண்டும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் எதையும் விடாமல் பார்த்து விட்டு திரும்பி வரலாம். இல்லையென்றால்,  ’’எம்புருசனும் கச்சேரிக்கு போனான்’’ என்ற மாதிரி ஏதோ சென்றோம் என்னவோ பார்த்தோம் என்றே திரும்பி வருவோம். அவ்வாறு செல்லும் யாத்திரை தாங்கள் கூறியுள்ளபடி காசுக்கு பிடித்த கேடாகத்தான் முடியும். அங்கு எவ்விதமான தட்பவெட்பம் நிலவும் என்பதைப் பொறுத்து அதற்கு தகுந்த உடைகளை கொண்டு செல்ல வேண்டும், குறிப்பாக குளிர் காலத்தில் சென்றால் கம்பளி உடைகள் அவசியம் கொண்டு செல்ல வேண்டும், மேலும் அங்கு எவ்விதமான உணவு கிட்டும் என்பதை அறிந்து கொண்டு செல்வது உத்தமம். எவ்வளவு நாட்கள் எவ்விடத்தில் தங்குகிறோம் என்று தங்குமிடங்களையும், பயண சீட்டுகளையும் மூன்று மாதம் முன்னதாகவே பதிவு செய்தால்  செலவும் குறையும் சிரமமும் இருக்காது. எனவே சுற்றுலா செல்வதற்கு முன் திட்டமிடல் மிகவும் அவசியம். 

8. சுற்றுலா மூலமாகத் தாங்கள் கற்றதும் பெற்றதும் என்ன?

ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் அவ்விடத்தின் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்கிறோம். இயற்கையின் அற்புதத்தை இரசிக்கும் வாய்ப்பு கிட்டுகின்றது. அதுவும் குறிப்பாக  இமயமலைப் பகுதியில் பயணம் செய்யும் போது மழைக் காலத்திலும், குளிர் காலத்திலும் அவர்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை பார்க்கும் பொழுது, நாம் எவ்வளவு சொகுசாக வாழ்கிறோம் என்று புரிகின்றது. அவர்கள் அனைத்து துன்பங்களுக்கு நடுவிலும் இனிமையாக, மகிழ்ச்சியான, போதும் என்ற மனத்துடன் வாழ்வதைப் பார்க்கும் பொழுது இறைவனுக்கு நன்றி கூறத்தோன்றுகிறது. நமது வாழ்விலும் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவற்றை தைரியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிட்டுகின்றது.

சுற்றுலா மூலம் பெற்றது அருமையான நட்புகள். சத்சங்கம் அமைகின்றது. பல்வேறு யாத்திரைகளின் போது பலர் நம்முடன் யாத்திரை மேற்கொள்கின்றனர் அவர்களில் வெகு சிலரே யாத்திரை முடிந்த பின்னரும் நம்முடன் நட்புடன் இருக்கின்றனர். அடியேனுக்கு அது போல பல நண்பர்கள் கிட்டியுள்ளனர். டெல்லி, நாசிக், மலேசியா, பரோடா என்று பல ஊர்களில் உள்ள அன்பர்கள் இன்றும் அன்புடன் நட்பாக உள்ளோம். பண்டிகை சமயத்தில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறோம், நாம் அங்கு செல்லும் போது அவர்கள் நம்மை அழித்து விருந்தளித்து மகிழ்கின்றனர், நாமும் அவர்கள் இவ்விடம் வரும் போது அவ்வாறே அவர்களை உபசரித்து மகிழ்கின்றோம். திருமணம் முதலிய சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றோம்.  “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை சுற்றுலாக்கள் உறுதிப்படுத்துகின்றன.

புகைப்படங்கள் மற்றும் கட்டுரை உரிமை கட்டுரையாளருக்கே.