Enable Javscript for better performance
world tourism day contest 2 nd winner|உலக சுற்றுலா தினப்போட்டியில் இரண்டாம் பரிசு பெறும் கட்டுரை...- Dinamani


உலக சுற்றுலா தினப்போட்டியில் இரண்டாம் பரிசு பெறும் கட்டுரை... தினமணி வாசகர் ஆத்மநாதனின் ஐரோப்பிய பயண அனுபவங்கள்!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 11th October 2018 02:40 PM  |   அ+அ அ-   |    |  

athma_7

 

நான் சிறுவனாக இருந்தபோதே, என் மாமா சொல்வார்! "டேய்! ஒலகம் பரந்து விரிஞ்சி கெடக்குடா! சும்மா தஞ்சாவூர்ல அல்லது திருச்சியில படிச்சோம்! அதுக்குள்ளயே வேலை செஞ்சோம்! கடலைப் பார்க்க நாகப்பட்டிணம் போனோமுன்னு வாழ்க்கையை முடிச்சுக்கிடாதீங்கடா! கடல் கடந்து போங்க!பல எடத்தையும் ஊரையும் பாருங்க! 'திரை கடலோடித் திரவியம் தேடணும்னு பெரியவங்க சொன்னதை ஞாபகத்தில வெச்சுக்குங்க!" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்! அவர் வார்த்தைகள் மனதில் பசு மரத்தாணியாகப் பதிந்துவிட்டன! மனித வாழ்வில் சுற்றுலா எவ்வளவு அவசியமென்பது அந்த வயதில் சரியாக விளங்காவிட்டாலும்,அதன் முக்கியத்துவத்தை இப்பொழுது நன்றாகவே உணர முடிகிறது! என்ன சிறு வருத்தமென்றால், சுற்றுலாவுக்குத் தூண்டிய அவர், இன்று நான் உலகைச் சுற்றி வருவதைப் பார்த்து மகிழ, உயிருடன் இல்லை! புதிய இடங்களைப் பார்க்கும் போதெல்லாம் மாமாதான் ஞாபகத்திற்கு வருகிறார்!
           
நாம் போவது இன்பச் சுற்றுலா தான் என்றாலும், அதுவே கல்விச் சுற்றுலாவாகவும், சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சுற்றுலாவாகவும், ஆன்மீக மற்றும் அட்வெஞ்சர் சுற்றுலாவாகவும், ஏன்? கல்சுரல் மற்றும் கல்லினரி சுற்றுலாவாகவும் கூட அமைந்து விடுவதுண்டு! ஏனெனில், இன்பமாகப் பொழுதைக் கழிக்கச் செல்கையில், மியூசியம் மற்றும் மிருகக் காட்சி சாலை செல்கிறோம்! அங்கு நாம் அறிந்திராத பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்போது அது கல்விச் சுற்றுலாவாகி விடுகிறது! கல்வி கற்க வயது ஒரு பொருட்டல்லவே! ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளிலுள்ள மிகப்பெரிய சர்ச்கள் மற்றும் கோயில்களுக்குச் செல்கையில் அது ஆன்மீகச் சுற்றுலாவாகிறது! அங்குள்ள பொழுது போக்கும், உயர்வேகச் சாதனங்களில் பயணிக்கும் போது அட்வெஞ்சர் சுற்றுலாவாகி விடுகிறது! சுற்றுப்புறத் தூய்மையை அவர்கள் பேணும் பாங்கினை அறிகையில், அது சுற்றுச் சூழல் சுற்றுலாவாகி விடுகிறது! அவர்களின் பண்பாட்டையும்,பழக்க வழக்கங்களையும் அங்கேயே தங்கிப் பார்க்கையில், கல்சுரல் சுற்றுலாவாகவும், உணவுகளின் வகைகளை ஆவலுடன் தெரிந்து கொள்ளும்போது, கல்லினரி
சுற்றுலாவாகவும் நம் இன்பச் சுற்றுலா மாறிப் போகிறது!
            
நான் இடும்பவனத்தில் ஏழாம் வகுப்பில் படிக்கையில் தஞ்சாவூரையும், அப்பொழுது புதிதாக வந்திருந்த தஞ்சை மருத்துவக்கல்லூரியையும் காண்பதற்காகப் பள்ளி மூலம் கல்விச்சுற்றுலா சென்றேன்! அதன்பிறகு சென்னை, பெங்களூர், மைசூர், ஊட்டி, கொடைக்கானல், புவனேஷ்வர், ஐதராபாத், டெல்லி, என்று உள் நாட்டிலும், சிங்கப்பூர், மலேசியா, என்று வெளிநாடுகளிலும், சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்! பின்னர், ரோம், இத்தாலி, வாட்டிகன், வெனிஸ், பிசா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அலக்சாண்ட்ரியா, வாஷிங்டன், நியூயார்க் என்று அமெரிக்க
நாடுகளிலும் பயணம் செய்துள்ளேன்! தஞ்சை மற்றும் சென்னை பயணங்களைத் தனியாகவும், மற்றும் நண்பர்களுடனும் மேற்கொண்டேன்! மற்ற அனைத்துச் சுற்றுலாக்களுமே குடும்பத்தாருடன்
தான்!
           
இதுவரை நான் மேற்கொண்ட அனைத்துச் சுற்றுலாக்களுமே மனதுக்கு இதமளித்தவைதான்! இருப்பினும், சமீபத்தில் மேற்கொண்ட சுற்றுலா சற்று வித்தியாசமானதால், மனதை நிறைத்துள்ளது! முன்பெல்லாம் விமானத்தில் தலைமையிடம் சென்று, பல இடங்களுக்கும் செல்ல, அங்குள்ள மெட்ரோ மற்றும் டாக்சிகளில் பயணம் செய்வோம்! அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுலாக்களின் போது, எந்த நாட்டிலும் நாங்கள் ஹோட்டல்களில் தங்கியதில்லை! தனியாக வீடு எடுத்து, அவ்வீட்டில் தங்கியே பல இடங்களுக்கும் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்!

பொன்னொளியில் மின்னும் ஹங்கேரியின் பார்லிமெண்ட் ஹவுஸ்!

வாடிகன் சென்ற போது, என் மகன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்! கடைசி நேரத்தில், அலுவலகப் பணி காரணமாக அவரால் எங்களுடன் பயணம் மேற்கொள்ள முடியவில்லை! விமானப் பயணத்திற்குப் பிறகு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, முன்னிரவில்  நாங்கள் தங்கும் வீட்டை அடைந்தோம்! நாங்கள் வீட்டை அடைந்ததும், அவரிடம் போனில் பேசினேன்! என் மகனோ, 'உங்கள் வலது புறமுள்ள ஜன்னலைத் திறந்துபாருங்கள்!' என்க, நானும் போய்த் திறந்தேன்! மிக அருகில் வாடிகன் சர்ச்சின் டோம் மின்னொளியில் மின்னியது! வாடிகனை அருகில் பார்க்க வேண்டுமென்ற எனது விருப்பத்திற்காக, ஆன் லைனில் தேடி, அந்த வீட்டை செலக்ட் செய்துள்ளார்! இதை விட ஒரு தந்தைக்கு மன மகிழ்ச்சி ஏற்படுத்தக் கூடியது வேறேது?! அது போலவே, பாரீசில் எடுத்திருந்த வீட்டு வாசலைத் தாண்டி நின்று பார்த்தால், உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் தெரியும்! பகலின் சூரிய வெளிச்சத்திலும், இரவில் மின்னொளியிலும் அதனைப் பலமுறை கண்டு ரசித்தோம்!

எங்களுடைய சமீபத்திய வித்தியாசமான சுற்றுலா, கார்ப் பயணத்தை மையமாகக் கொண்டது! சுவிட்சர்லாந்தின் ஜூரிக் நகரில் தொடங்கி, ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகர் சென்று திரும்புவதாக ஏற்பாடு! ஒரு வழி பயண தூரம் மட்டுமே 1023 கி.மீ. சென்று திரும்ப சுமார் 2050 கி.மீ. ஜூரிக்கில் கிளம்பி, ஜெர்மனியின் மூனிக் நகரில் தங்கி, ஆஸ்ட்ரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் 3,4 நாட்கள் தங்கிச் சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கிருந்து ஹங்கேரி நாட்டின் புடா பெஸ்ட் நகரில் 3, 4 நாட்கள் தங்கி சுற்றிப்பார்த்து விட்டுத் திரும்புவதாக ஏற்பாடு! அந்தந்த ஊரில் வசதியாகத் தங்குவதற்கான வீடுகளை ஏற்கெனவே எனது மகன் ரிசர்வ் செய்து விட்டார்!

ரோட் ட்ரிப் மாதிரி இது கார் ட்ரிப்புங்க...

சரி! கிளம்புவோமா? அதோ நிற்கிறதே ஆஷ் கலர் ஆடி ஸ்போர்ட்ஸ் மாடல்! அதுதான் நம் பயண நண்பன்! பயணத்திற்கான பொருட்களை ஏற்கெனவே காரினுள்ளும், டிக்கியிலும் வைத்தாயிற்று! குடிநீர், பயணத்தின் போதே கொறிக்கத் தக்க உணவுப் பொருட்கள் காரின் உள்ளே! சுவிட்சர்லாந்துக்குச் செல்ல நாம் வாங்கும் விசாவைச்  'செங்கன் விசா' என்றழைக்கிறார்கள்! அந்த விசாவை வைத்துக்கொண்டு, ஐரோப்பாவின் 29 நாடுகளில் நாம் பயணம் மேற்கொள்ளலாம்! அனைவரின் பாஸ்போர்ட், காரின் தஸ்தாவேஜூகள் அனைத்தையும் பத்திரமாக வைத்துக் கொண்டோம்! ஆடைகள் போன்ற பிற, டிக்கியில்! ஓட்டுநராக என் மகன்! அருகே முன் இருக்கையில் நான்! வசதியாக இயற்கை அழகை ரசிக்க ஏதுவாக! பின் இருக்கைகளில் மனைவியும், மருமகளும் பத்து மாதப் பேத்தியுடன்! அங்குள்ள சட்டப்படி, பேத்திக்கு தனி இருக்கை, பின்னோக்கிப் பார்த்து! தாய் மடியில்அமர முடியாததால் பேத்தி அடிக்கடி அடம் பிடிக்கும்! குழந்தை நம்முடையது என்றாலும், பயணத்தின்போது குழந்தை அழுவதை அந்நாட்டுச் சட்டம் அனுமதிப்பதில்லை! எனவே, குழந்தை தூங்கும் நேரத்தில் பயணம் மேற்கொண்டு, அது விழித்திருக்கும் நேரத்தில் ஆங்காங்கே நிறுத்திச் செல்ல வேண்டியதாயிற்று!

டனூப் நதி...


10.08.18 வெள்ளியன்று மாலை 5.45 மணிக்கு ஜூரிக்கை விட்டுக் கிளம்பி, இரவு 10 மணியளவில் ஜெர்மனியின் மூனிக் நகரில் உள்ள நண்பர் வீட்டையடைந்தோம்! சுமார் 350 கி.மீ. மூன்றரை மணி நேரத்தில் சென்றடைய வேண்டிய நாங்கள், குழந்தையின் வசதி கருதி ஆங்காங்கே நிறுத்திச் சென்றோம்! சுவிஸ் நாட்டு ஆல்ப்ஸ் மலைகளின் அழகையும், பச்சைக் கம்பளமாக விரிந்து கிடக்கும் புல் வெளிகளையும், ஆங்காங்கே காணப்படும் ஏரிகளில் படகு சவாரி செய்வதையும் நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுப்புத் தட்டாது! நடுவில் ஓடும் ரைன் நதி மனதுக்கு இதமளித்துக் கொண்டேயிருந்தது! நண்பர் சோறு, சாம்பார் என்று அமர்க்களப்படுத்த, உணவையுண்டு உறங்கினோம்!
           
நன்கு தூங்கியெழுந்து, அடுத்த நாள் 11.15 மணிக்கு மூனிக்கிலிருந்து, ஆஸ்ட்ரியாவின் வியன்னாவுக்குப் பயணமானோம்! நாலரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய 435 கி.மீ தூரத்தை, ஆங்காங்கே நிறுத்திச் சென்றதன் காரணமாக ஆறே முக்கால் மணி நேரத்தில் அடைந்தோம்! சாலையின் இரு பக்கமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாயம் செய்யும் ஆஸ்ட்ரிய நாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும்! நெடுஞ்சாலைகளை அவர்கள் பராமரிக்கும் விதமே தனி! எந்த இடத்திலும்  மேடு, பள்ளங்களைக் காண முடியாது! அதிகமான சிக்னல்களும் கிடையாது! மணிக்கு 100 அல்லது 120 கி.மீ வேகம் என்று குறிக்கப்பட்டுள்ள இடங்களில் அனைவரும் அதே வேகத்தில் செல்கிறார்கள்! யாரும் சட்டத்தை மீறுவதில்லை! இடது கைப் பக்கம் மட்டுமே ஓவர்டேக் செய்கிறார்கள்! அதிகமாகக் காவல் துறையினரையும் காணமுடியாது! ஆனால்,எல்லா இடங்களிலும் காமிராக்கள் உண்டு! மாலை 6 மணிக்கு தங்குவதற்குத் தயாராக இருந்த வீட்டையடைந்து ஓய்வெடுத்தோம்!


            
அடுத்த நாள் காலையிலெழுந்து, அருகிலுள்ள மெட்ரோ ஸ்டேஷன் சென்று, எதிரேயிருந்த மக்டொனால்டில் க்ரசான்ட் சாப்பிட்டுவிட்டு, ரயிலேறினோம்! அரண்மனைக்கு முன்பாகவுள்ள ரயில் நிலையத்தில் இறங்கி அரண்மனையை அடைந்தோம்! உள்ளே செல்ல வாங்கிய டிக்கட்டில் மதியம் 2.15 மணிக்கு உள்ளே வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது! அது வரை சுற்றிப்பார்க்க, மிகப்பெரிய தோட்டம் அரண்மனையை ஒட்டி இருந்தது! தோட்டம் என்றால் சாதாரணத் தோட்டமல்ல! சில கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்டது! பல வகை மரங்களுடன் பசுமையாக இருக்கும் அது,நம் உள்ளங்களுக்கு இனிமை தருகிறது! கால்கள் அலுக்கும் வரை நடந்தோம்! ஆங்காங்கே புகைப்படம் எடுத்துக் கொண்டோம்! பின்னர் அரண்மனைக்குள் நுழைந்தோம்!


             
பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம் அந்த அரண்மனை! 1901 ல் தான், அரண்மனைக்கு மின்சாரம் வழங்கப்பட்டதாம்! 1961ல் அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எப்.கென்னடியும், ரஷ்ய அதிபர் குருசேவும் இங்கு சந்தித்தார்களாம்! அரண்மனையின் உள்ளே உள்ள தங்க வேலைப்பாடுகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன! அரண்மனைக்குப் பின்னே, உயரத்தில் பவுண்டனும், அதற்கு மேலே நல்ல உயரத்தில் சிறு குளமும், அதன் கரையில் நீண்ட மண்டபமும் காணப்படுகின்றன! அங்கிருந்து பார்த்தால், முழு சிட்டியும் தெரிகிறது! பகலில் அரண்மனையைப் பார்த்துத் திரும்பிய நாங்கள், மீண்டும் இரவில் சென்று, மின்னொளியில் அரண்மனையையும், அங்கிருந்து, மின் விளக்குகளில் ஜொலிக்கும் நகரையும் கண்டு ரசித்தோம்!


                    
அடுத்த இரண்டு நாட்களும், சிட்டி சென்டர் சர்ச் மற்றும் மியூசியம் ஆகியவற்றைக் கண்டு ரசித்தோம்! இரண்டாம் நாள் முன்னிரவில், 'டொனாடர்ம் '(Donauterm) என்ற 170 மீட்டர் உயரமுள்ள டவருக்குச் சென்று, லிஃப்டில் மேலேறி, நகரையும், அருகில் ஓடும் டனூப் ஆற்றையும் கண்டு மகிழ்ந்தோம்! 170 மீட்டர் உயரத்தில், சுழலும் உணவகத்தில் 'கேக்' சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம்!
                       
மூன்றாம் நாள் காலை மற்றொரு அரண்மனை சென்று, அங்குள்ள பவுண்டன் மற்றும் குளக்கரையில் நின்று புகைப்படங்கள் எடுத்த பிறகு, புடாபெஸ்டுக்குப் பயணமானோம்! 243 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடந்து, அங்குள்ள 'சிட்டடெல்லா' மலைப்பகுதியில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தோம்! டனூப் ஆற்றின் ஒரு புறம் புடா நகரும்,மறு புறம்  பெஸ்ட் நகரும் உள்ளன! ஆற்றைப் போக்குவரத்துக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர்! நமது ஆறுகள் சாக்கடைகளாக மாறிப் போனதை எண்ணி மனது மௌனமாக அழுதது!
                        
செயின் பாலம் (Chain Bridge) முக்கியப் பாலமாக அமைந்துள்ளது! மேலும் பல பாலங்களும், இரண்டு நகர்களையும் இணைக்கின்றன! பாலத்தின் மீது நடந்து செல்வதே தனிச் சுகம்! பின்னர் அங்குள்ள பெரிய மிருகக் காட்சிச் சாலையைப் பார்த்தோம்! ஒவ்வொரு மிருகமும் 5,10,என்ற எண்ணிக்கையில் இருப்பது இம்மிருகக் காட்சி சாலையின் தனிச் சிறப்பு! பின்னர் பக்கத்திலுள்ள ஏரியில் படகுச் சவாரி செய்தோம்! வேளாண் மியூசியத்தைப்  பார்த்த பிறகு வீடு திரும்பினோம்!
                       
இரண்டாம் நாள் காலை, கோட்டைக்குச்(castle) சென்றோம்!நுழைவுச் சீட்டு வாங்கியதும்,அவர்களே சிறிய பாட்டரி கார்களில் அழைத்துச் சென்று,முக்கிய வாயில்களில் இறக்கி விடுகிறார்கள்! ஒவ்வொன்றாகப் பார்த்து வர ஏதுவாக! கோடை என்பதால், ஆங்காங்கே பனித்துளியாய் நீரைப் பீய்ச்சியடிக்கும் சாதனங்களை நிறுவி இருந்தார்கள்! உடலும் மனதும் ஒரு சேரக் குளிர! பிறகு, நகரைச் சுற்றிப்பார்க்கும் பேரூந்தில் ஏறி, முக்கிய இடங்களைப் பார்த்த பின், டனூப் ஆற்று பெர்ரியில் ஏறி ஒரு மணி நேரம் சுற்றி வந்தோம்! ஆற்றின் இரு புறமும் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பற்றிய வர்ணனைகளை ஒலி பரப்பிக் கொண்டே வருகிறார்கள்! இதனால் அனைத்தையும் பயணியரால் எளிதில் தெரிந்து கொள்ள முடிகிறது! இரவுச் சாப்பாட்டை ஓர் இந்தியன் ரெஸ்டாரண்டில் முடித்துக் கொண்டோம்! பிரியாணியும்,சிக்கனும், இதர வகைகளும் நல்ல சுவையுடன் தயாரிக்கப் பட்டிருந்தன! இரவில் மீண்டும் பெர்ரி ஏறி மின்னொளியில் நகரைப் பார்த்து வந்தோம்!
                        
மூன்றாம் நாள், அங்குள்ள பார்லிமெண்ட் ஹவுஸ் சென்றோம்! ஒவ்வொருவரையும் நன்கு பரிசோதித்த பிறகே உள்ளே விடுகிறார்கள்! சுமார் ஒண்ணேகால் மணி நேரம், ஒரு கைடு, அனைத்தையும் ஆங்கிலத்தில் விளக்கிக்கூற, அவரைப் பின் தொடர்ந்து அனைத்து இடங்களையும் பார்த்து வந்தோம்! அன்று மாலையும், இரவும் சிட்டடெல்லா மலையைச் சுற்றி, அங்குள்ள வரலாற்றில் இடம் பெற்றுள்ள சிலைகளையும், இயற்கையைக் கண்டுகளிக்க அவர்கள் குறிப்பிட்டுள்ள இடங்களையும் பார்த்து, ரசித்தோம்! உயரமான அந்த இடத்திலிருந்து, மின்னொளியில் மின்னும் நகரைக் கண்டு களிப்பதே தனிச் சுகம்! 

அடுத்த நாள் மதியம், புடா பெஸ்டிலிருந்து வியன்னா வழியாக மூனிக் வந்து இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை புறப்பட்டு மதியம் ஜூரிக் சென்றடைந்தோம்! அங்குள்ள சாலைகளின் நேர்த்தியும், வாகன ஓட்டிகளின் பொறுமையும் மனதைக் கவர்ந்தன! அவர்களைப் போலவே நாமும் நம்மூர் வாகன விதிகளை முழுதாக மதித்து நடந்தாலே பல விபத்துக்களையும் தடுத்திட இயலும்! ஜெர்மனியின் சாலைகளில் சில இடங்களில் வேகத்தடையே கிடையாது! நம்மால் முடிந்த அளவு வேகத்தில் சென்று கொள்ளலாம்! கடந்த முறை எனது மகன் மணிக்கு 230 கி.மீ வேகத்தில் சென்றதாகக் கூறினார்! இம்முறை, குழந்தை இருந்ததால் 170 கி.மீ வேகத்தோடு நிறுத்திக் கொண்டோம்! சாலையின் ஒரு லேனை,(lane) எமர்ஜென்சி நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனம் செல்லவென்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்! அதில் யாருமே போவதில்லை! விபத்து நேரத்தில் உயிர்களைக் காப்பாற்றவும், போக்குவரத்தை விரைவாக ஒழுங்கு படுத்தவும் அந்த லேனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்! நம் நாட்டிலும் இது போலச்செய்ய வேண்டுமென்ற தாக்கம் மனதில் அருவியது! இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் சாலைகளையொட்டி ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்! ஆயிரம் கி.மீ பயணம் செய்தாலும், ஓட்டுபவருக்கோ, பயணிப்பவர்களுக்கோ அலுப்புத் தட்டுவதே இல்லை! நம்மூரில் 5 கி.மீ பயணத்திற்குள்ளாகவே விழி பிதுங்கிவிடும் நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது!
                        
சுற்றுலா இன்பம் தருவதாக அமைய வேண்டுமானால் திட்டமிடலில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும்! ஒரு மாதம் முன்பாகவே திட்டமிடத் தொடங்கி, 15 நாட்கள் முன்பாகவே வீடுகளை ரிசர்வ் செய்து விட்டோம்! எங்கெங்கு எத்தனை நாட்கள் தங்குகிறோம் என்பதையும், பார்க்க வேண்டிய இடங்களில் எவ்வளவு நேரம் செலவிடலாம் என்பதையும் அப்பொழுதே, ஏறக்குறையத் தீர்மானித்து விட்டோம்! அந்தந்த ஊர் சென்றதும், எங்கு நமக்கு வேண்டிய உணவுகளைச் சாப்பிடச் செல்லலாம் என்பதையும், அங்கு சென்று வருவதற்கான வழிகளையும் அன்றன்று பார்த்துக் கொள்வோம்! விஞ்ஞான வளர்ச்சிதான் அதற்கு வழிவகுத்து விட்டதே!
                         
சுற்றுலாவின் மூலம் புதுப்புது இடங்களையும், புதுப்புது மனிதர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகிறது! நமது அரசர்கள் ஆலயங்களை நிர்மாணிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது போல், அந்நாட்டு மன்னர்கள் அரண்மனைகளைக் கட்டியுள்ளார்கள்! கடந்த முறை சுற்றுலாவின் போது, பிசா நகரின் சாய்ந்த கோபுரம், பாரிஸ் நகரின் ஈபிள் டவர், ரோமின் கலோசியம் ஆகிய மூன்று உலக அதிசயங்களைக் கண்டு களித்தது, மனதுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது!

ரோமானிய நாகரீகம், இந்திய நாகரீகத்தை ஒட்டியது என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது! ஐரோப்பிய நாட்டின் ஏனைய நகரங்களில், கழிவறைகளில் நம்மூரைப் போல் நீர் ஊற்றிக் கழுவிக்கொள்ள வசதி இருக்காது! ஆனால் ரோமில் மட்டும் அனைத்துக் கழிவறைகளிலும் அதற்கான சிறப்பு வசதி உண்டு! சுற்றுப்புறத் தூய்மைக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம், நாம் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று! தங்கள் வளர்ப்பு நாய்களின் கழிவைக்கூட காகிதப் பைகளில் சேகரித்து அதற்கான தொட்டிகளில் போடும் அவர்களின் பாங்கு அனைவரும் கற்றுப் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கமாகும்! கார்களில் ஹார்ன் இருக்கிறதாவென்றே தெரியாத அளவுக்கு, எங்குமே ஹார்ன் சத்தத்தைக் கேட்க முடியாது! அவ்வளவு பொறுமை! அவ்வளவு நிதானம்!

நம் இந்தியர்கள் எங்கும் வியாபித்துள்ளனர் என்பதில் நமக்குப் பெருமை! வியன்னாவில் ஓர் இரவில், வட இந்திய உணவகத்தில் தான் சாப்பிட்டோம்! அவர்கள் பல ஆண்டுகளாக அங்கு அதனை நடத்தி வருகிறார்களாம்! வெளி நாட்டினரின் கண்டிப்பான சட்ட திட்டங்கள், அமைதியான வாழ்வுக்கு வழி வகுக்கின்றன! நாமும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்தால், நம் வாழ்வு இன்னும் செழிக்கும்!

கட்டுரையாளர் - ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி.