Enable Javscript for better performance
dinamani.com's world|உலக சுற்றுலா தினப்போட்டியில் 5 ஆம் பரிசு பெற்ற வாசகி மீனாள் தேவராஜனின் கட்டுரை!- Dinamani


உலக சுற்றுலா தினப்போட்டியில் 5 ஆம் பரிசு பெற்ற வாசகி மீனாள் தேவராஜனின் சுற்றுலா அனுபவங்கள்!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 23rd October 2018 02:47 PM  |   அ+அ அ-   |    |  

3

 

சுற்றுலா என்ற சொல்லே உல்லாசமாக உலவி உள்ளம் மகிழ்வது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. நாம் தினமும் பார்த்தவற்றையே பார்த்து மகிழ்வதைவிடப் புதிதாகப் பார்ப்பபதை மனம் விரும்புகிறது. மாற்றங்களையே மனித மனம் விரும்பும் என்பது நாமறிந்த ஒரு வாசகம். நான் சிறு வயதில் வளர்ந்த வீடு பெரியதோட்டத்துடன் பல மரங்களை உடையது. எனவே, எனக்குச் சிறுவயது முதலே செடி மரங்களிடம் அலாதியான ஆர்வம். ஒரு சிறு செடியை நட்டுவிட்டு அடுத்த நாளே அது முளைத்த விட்டதா என்று பார்ப்பேன். முளைத்து விட்டால் அது இலைவிடுவதையும் கிளை விடுவதையும் பிறகு மொட்டு விடுவதையும் அதிகாலையே எழுந்து சென்று பார்த்து பரவசப்படுவேன். அது இன்று வரை தொற்றிக்கொண்டுள்ளது. பல் தேய்த்து காஃபி குடித்தும் தோட்டத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்து விடுவேன்.

இப்படித்தான் எனக்கு இயற்கையை ரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

திருமணமானாவுடன் என் கணவருக்கும் ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசை இருக்கவே நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை.

பணம் வேண்டுமே! கவலையே படவில்லை நாங்கள். மாதச்சம்பளத்தில் 10% அதற்காகச் சேமித்தோம். தேவையில்லாச் செலவுகளுக்கு முக்கியம் கொடுக்கவில்லை. அக்காலத்தில் அவரின் சம்பளம் கைக்கும் வாய்க்கும்தான். நான் வேலைக்குப் போகவில்லைக் காரணம் எங்கள் பிள்ளைகளைப் பொறுப்புடன் அன்புடன் வளர்க்க வேண்டும் என்றுதான். பிள்ளைகள் சிறுவர்களாக வளர்ந்தபிறகு இருவரையும் அழைத்துக்கொண்டு பள்ளி விடுமுறையில் பல இடங்களுக்குச் செல்வதுண்டு.

 

எனக்கு நீர் வளமும் காட்டு வளமும் கண்டு களிக்க ஆசை. குற்றாலத்திற்கு ஒரு முறை சென்ற போதுதான் முதல் முதல் நீர்வீழ்ச்சியில் குளித்த அனுபவம். அங்கு நீண்ட நேரம் குளித்தையும் நண்பர்களுடன் நாளைக் களித்ததையும் இன்றும் எங்களால் மறக்க முடியவில்லை. பாலாடை போல தண்ணீர் விழும்போது எழும் நீராவியைக் காணும் காட்சியைக்கண்டோம். முதுமலைக்காட்டில் யானையின்மீது அம்பாரியில் உட்கார்ந்து அரசர் போல் காட்டில் வலம் வந்ததை எண்ணிப் பார்த்து மகிழ்வதுண்டு. அரசர் போல் என்றால் வீரத்துடன் என்று எண்ணிக்க கொள்ளாதீர்கள். காட்டு விலங்குகளான சிங்கம், புலி, கரடி , காட்டு எருமை கண்ட நேரத்தில் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சம் கலந்த சவாரிதான் என்றாலும் கடவுள் மனிர்களுக்காக எவ்வளவு இயற்கையை வாரிவழங்கியுள்ளார் என்பதைக் கண்டு வியந்து போனோம். சுற்றுலாச் சென்று திரும்பி வந்த நாளில் சில தினங்கள் அந்த அழகைப் பற்றிப் பேசிப்பேசி மாய்ந்து போனோம். இந்தப் பயணம் தற்போது இல்லை. நாங்கள் சென்றது 1980களில். கொடைக்கானல் சென்றால் இப்போதுபோல் மக்கள் கூட்டமில்லை. ஏரியில் நாங்களே படகு விட்டு மகிழ்ந்தோம். தேயிலைத் தோட்டங்களை காலாற நடந்து போய் குளிரில் கண்டு மகிழ்ந்தோம். நடிகர் ஜெமினிக் கணேஷ் அவர்களின் மாளிகைப் போன்ற வீட்டைக்கண்டு மகிழ்ந்தோம். அங்கு தங்கிருந்த விடுதியிலிருந்து கோடைக்கானலின் பச்சைப்பசேலென்ற இயற்கை எழிலையும் பள்தாக்குகளையும் மேகங்கள் சூழ் உயர்மலைகளையும் கண்ணாடிச் சுவரின் வழி கண்டு மகிழ்ந்தோம். அது டி,வி,எஸ் நிறுவனத்தின் ரிசார்ட். அப்போதுமுதல் என் கணவரின் எதிர்காலக் கனவு, வயதாகி ஓய்வு பெற்ற பிறகு மலையோரம் தோட்டங்கள் சூழ உள்ள ஒரு வீட்டில் வாழ வேண்டும்.” என்பதாகும். மேலும் அவர் விவசாயத்துறையில் பட்டம் பெற்றவர்.(B.sc Agri) காணும் காட்சிகள் மன நிறைவு பெற்று விட்டால் எதிர்காலக் கனவுகளாக மாறி நம்மை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும்.

அடுத்து வெள்ளிப் பனி மலைமீது உலவி வந்தோம், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு பனியைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை உருவானதாலும் என் மகன் நிலநூல் படிக்கும்போது இமயத்தைப் பார்க்க வேஃடும் என்று ஆசைப்பட்டதாலும் அங்குச் சென்றோம். அங்குச் சென்று வந்த பிறகு மனித சக்தியை விட இயற்கைச்சக்தி மிகப் பெரியது என்ற உணர்வைப் பெற்றோம். தமிழகத்தில் அவ்வப்போது எழுந்து ஆயிரக்கணக்கான உயிர்களை உடைமைகளையும் அழிக்கும் புயல் வெள்ளம் ஆகியவற்றைப் பார்த்திருந்தாலும் உலகில் மிகப்பெரிய இமயத்தைக் கண்டபோது மீண்டு இயற்கையைப் போற்றாது இருக்க முடியவில்லை. மலையில் ஏறும் போய் மணல் போன்ற பனியை எம் பிள்ளைகள் அள்ளி விளையாடி மகிழ்ந்தனர்.

அழகுமிகு சிம்லா, நைனிடால் டேராடூன் ஜம்மு போன்ற இடங்களில் மக்களின் வாழ்க்கை எவ்வளவு சிரமத்திற்குரியது என்பது தெரிய வந்தது. சிம்லாவில் ஒரு பெட்ரால் உருளையை எவ்ளவு சிரமப்பட்டுத் தூக்கி வந்தனர் தெரியுமா? இப்போது இயந்திரங்கள் மிகுந்துவிட்டன. அத்தொல்லை அவர்களுக்கு இப்போது இராது.

ஊசியிலை காடுகள் கனமான இலை உடைய மரங்கள் கொண்ட காடுகள் குளிர்காற்றிடையே காணமுடிந்தது. வெள்ளி பனி மலை மீது உலவி பாரதியாரைப் போல மகிழ்வு கொண்டோம். இவற்றின் இடையே நம்மூர் செடிகளான கறிவேப்பிலை, பிரம்ம கமலம் போன்றவற்றைப் பார்க்கும் போது எங்கும் செடிகள் வளரும் என்பது தெளிவாயிற்று.

அங்குள்ள நதிகளைக் கண்டபோதுதான் நான் இயற்கையின் சக்தியைக் கண்டு மீண்டும் பிரமித்துப்போனேன். சீலம் நதியின் தோற்றம் ஒரு மீன் குளம் போன்ற சிறு இடம்தான். பின் அது சற்று தெற்கே ஆர்ப்பாரிக்கும் ஒலியுடன் அடங்காத வேகத்துடன் ஜில் என்ற குளிர் தண்ணீருடன் ஓடி வரும் வேகத்தைப் பார்க்கும் போது மனித சக்தி ஒன்றுமற்றது. இயற்கையை அடக்கி செயற்கையாய் மாற்றும் போது அது கட்டுக்கு அடங்காது நம்மைஅழிக்கும் என்பது என் மனதில் தெளிவானது. இயற்கையை இயற்கையாக இரசிக்க வேண்டும். அதனால்தான் இமயமலை என்றதும் இயல்பாய் “ஆன்மீகம்” இந்தியர்களுக்குத் தோன்றுகிறதோ?.

பிறகு என் நண்பர்களுடன் இத்தாலி ரோம் சென்று வந்தது என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. அங்கு, முதல் உலகப்போருக்கு முன்னால் இத்தாலி எங்கெல்லாம் ஆட்சி செய்தது, பிறகு அது வீழ்ச்சியடைந்தது எல்லாம் ஒரு சுவரில் விளக்கத்துடன் நில வரைபடமும் இருந்தது. எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் அழிந்தது அறிந்து அவ்விடத்தில் நின்றிருந்த மக்களின் முகத்தில் அமைதியான சோகத்தைக் காணமுடிந்தது..

சாலைகளில் அலங்காரச் செடிகளாய் அரளிச்செடிகள் இருந்ததைக்கண்டேன். பிறகு தமிழகத்தில் அதே போன்று நீண்ட நெடுஞ்சாலைகள் போடப்பட்ட பின்னர் அரளிச்செடிகள் அலங்காரச்செடிகளாய் மாறியதைக் கண்டேன். வீடுகளைச்சுற்றி காகிதப்பூக்களுடன் மற்ற வண்ணப்பூக்களும் நிறைந்திருந்தன.

ரோமில் முசோலி மன்னர் எவ்வளவு திறனுடன் ஆட்சி செய்தார் எப்படி வீழ்ச்சியடைந்தார்? ஏன் அது நடந்தது? என்று தெரிந்து கொண்டால் நாம் அமைதியான வாழ்வையே வாழ விரும்புவோம்.

அங்கிருந்த ஒரு நினைவு இடத்தின் பெயர் கோலேசியம். எப்படி அவர்கள் பெயரிட்டனர் என்று அதிசயமடைந்தேன். தமிழர்கள் அங்கு வாழ்ந்தனரா என்று நினைத்தேன் ஏனென்றால் அவ்விடத்தின் பெயருக்கேற்றது போல் அங்கு கொலைகள் நடந்துள்ளது, ஆம் அங்கு அடிமைகளை, குற்றவாளிகளை, எதிரி மன்னர்களைப் பிடித்து வந்து வீரர்களை சிங்கத்தோடு சண்டையிட வைத்து கொலை செய்துள்ளனர். அதனை மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனராம். எவ்வளவு கொடூரமான தண்டனை. அந்தத் தண்டனை கொடுக்கப்பட்ட இடம்தான் கோலேசியம். .

இயற்கை எழிலும் செயற்கை எழிலும் இந்நகரங்களில் ஜொலித்தாலும் அங்கு ஒரு சோகம் இழைந்திருப்பதை எங்களால் உணர முடிந்தது. தம். இத்தாலி இழந்த இழப்புகளினால் அங்கு சோகம் உணர்வு பல இடங்களில் இழைந்தோடுகிறது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இப்பயணம் 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனால் போரில்லா உலகமே இனிவருங்காலத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

வாடிக்கன் சிட்டியில் போப்பின் உரையைக்கேட்டோம். அங்கிருந்த தேவாலயங்களில் இறந்த குருமார்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்ணாடிப்பேழைகளிலிருந்தன. அவற்றைப் பார்க்க சற்று அச்சமாகயிருந்தது.

மிலன் ரோம் நகர்களைச் சுற்றி வந்தபோது சரித்திரம் பேசியது. கட்டடக்கலை கண்ணைக் கவர்ந்தது. தேவாலயங்கள் கம்பீரமாகக் காட்சியளித்தன. பழையபொருள்கள் விற்கும் கடைகள் காட்சிப் பொருள்களாய்த் திகழ்ந்தன. .

அடுத்து காதலைப் போற்றும் பிரான்ஸ் நாட்டில் கவின் மிகு நிதிகளில் படகுச் சுற்றுலா மேற்கொண்டோம். இங்குள்ள நதிகள் அதிக ஆர்பாட்டமில்லாது செல்வது போல் தோன்றியது. அதனால் படகுப் பயணங்களும் சுகமாக இருந்தன. காதலர்களும் இன்புற்று மகிழ்கின்றனர்.

இங்கும் கட்டடக்கலை சிறப்பாய் இருக்கிறது. வசந்த காலத்தில் சென்றதால் வீதியெங்கும் வகை வகையான ரோஜாப்பூக்கள் பூத்துக் குலுங்கின. நம்மூர் என்றால் பூக்களைப் பறித்து கொண்டையில் செருகிவிடுவர். இங்கு தெருதோறும் கலைகளே பேசுகின்றன, சாலையோரங்களில் ஓவியர் ஓவியத் தீட்டியவண்ணம் இருக்கின்றனர். நம்மையும் வரைகின்றனர், சுற்றுலாத் தலங்களையும் வருகின்றனர், இசைக்கருவிகளை வாசிப்போரும் வாசித்து மகிழ்விக்கின்றனர். அருங்காட்சியகமும் ஓவிய சிற்பக்கலைகளைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. கலைகளின் தாயகம். விதவிதமான தேவலாயங்கள். கட்டடக்கலைக்குச் சான்றுகளாய்ச் செம்மாந்து நிற்கின்றன. எடுத்துக்காட்டாக நோட்ரி உஎம் டி பாரிஸ், ரெமிஸ் இவ்வாலாயங்களில் கண்ணாடி ஓவியங்கள் கதைகள் சொல்லகின்றன. கண்ணைக் கவர்கின்றன. இந்த கிறிஸ்துவக் கோயில்களின் கூரைகளும் தூண்களும் கூரையில் அமைக்கப்பட்டிருந்த கூடல்வாய் அமைப்புகளும் தமிழ்நாட்டு செட்டிநாட்டு வீடுகளை நினைவில் நிறுத்தின.

காரசாரமாகச் சாப்பிட்டுப் பழகிய எங்களுக்கு மிளகாயே இல்லாத சாப்பாடு சற்று தவிப்பையே தந்தது. இப்போது எல்லாநாடுகளிலும் நம்மூர் மிளகாய் பொடியும் சாப்பாடும் கிடைக்கின்றன. அதனால் இப்போது பிரச்சனை இல்லை. இங்கு அறிந்தது எங்கும் தெய்வ வழிபாடும் அழகும் ஆராதிக்கப்படுகின்றன. தேவாலயங்களில் கிடார், பியனோ போன்ற பல வகை இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு இறைவழிபாடு நடைபெறுகின்றன.

இங்கு நான் வாழ்வில் மறக்க முடியாத ஓர் அனுபவம் பெற்றேன். தேவலாய வாசலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் வேளையில் பிக்பாக்கெட் திருடர்கள் குழுவாகத் திருடுவதை நாங்கள் நேரடியாகக் கண்டோம். மக்கள் எங்கும் ஒன்று போல்தான் இருக்கிறார்கள், இங்கும் பிச்சைக்காரர்கள் தேவலாயவாசலில் பிச்சை எடுக்கிறார்கள்.இங்கு சென்றபோதுதான் அறிந்தேன் உலக அதிசயங்களில் ஒன்றான ஐபில் கோபுரத்தில் ஏறிச் செல்லலாம் என்று. இங்கு பலவிதமான கடைகள் இருக்கின்றன. நாங்கள் நினைவுப்பொருள்கள் கலைப்பொருள்கள் வாங்கினோம். சாப்பாட்டுக்கடைகளும் இங்குள்ளன. நான்கு தளங்கள் வரை ஏறிச்சென்று பார்த்து மகிழ அனுமதியுண்டு.

தென்கிழக்கு நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா. சிங்கப்பூர் போன்ற நாடுகள், மோரீஷியஸ் இலங்கை பேன்ற நாடுகளிலும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட போதும். இரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்ற இலங்கைப்பயணத்தை மறக்கவே முடியாது. ஈழ புலிகள் சண்டைக்குப் பின்னர் போனேன். அதுவும் குறிப்பாக அங்குள்ள தமிழ் வட்டார ஆன்மீகப்பயணமாக அது அமைந்தது. அங்குள்ள திருகேதீஷ்வரம், திரிகோணமலை, பொன்னம்பலம், கண்டி கதிர்காமம், நல்லூர் போன்ற ஆலங்களைத் தரிசம் செய்தோம்.

மானிப்பாய் பிள்ளையார் கோவில்

அங்கு கிராமங்களில் தங்கிப் பயணம் செய்ததால் இப்போது அங்குள்ள மக்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்துகொண்டோம். பல வீடுகளுக்குச் சென்றோம். புகழ் பெற்ற இடங்களைத் தவிர்த்து பல உள்ளூர் இடங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைத் தோழியுடன் சென்றதால் இவ்வரிய வாய்ப்புகள் கிடைத்தன. மட்டக்களப்பு, வவுனியா, மானிப்பா யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு, காரை ,மன்னார், ஈழத்துச்சிதம்பரம், கிண்ணபுரம், நெல்லிப்பாளை, கீரிமலை, இடங்களுக்குச் சென்றோம். ஓர் அநாதை விடுதியில் அன்னதானம் செய்தோம். முதியோர் இல்லத்தில் நிதி நன்கொடை வழங்கிவிட்டு அவர்களுடன் சில மணி நேரதத்தைக் கழித்தோம். பல கதைகளை அங்கிருந்தோரின் மூலம் அறிந்தோம். நான் சொல்வது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அன்பு, பாசம், காதல், எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு திருப்பி அவற்றை எதிர்பார்த்து வாழ்வோர் அங்கு ஏராளம்.புதிய உறவுகளை அவர்கள் புதிய முறைகளில் உருவாக்கியிள்ளனர் என்றுதான் எனக்குத் தோன்றியது. தமிழர் பகுதிகளில் பல பெரிய பெரிய வீடுகளில் வயதானவர்களே வாழ்நாளைக் கழிக்கின்றனர், இப்படி வாழ்வோர் எதையும் எதிர்பார்க்காது எதோ வாழ்கின்றனர், ஆங்காங்கே ஓற்றைப் பனைமரங்கள் ஓலமிடுகின்றன.

பரந்து விரிந்த புல்வெளிகள் ஆள் நடமின்றி

வெறுச்சோடிக் கிடக்கின்றன. பல வீடுகள்

பூட்டப்பட்டு செடிகொடிகள் மண்டிப்

புழக்கமின்றிக் கிடக்கின்றன. சில

வீடுகள் மேற்கூரைகளும் கதவுகளும்

சன்னல்களும் இன்றி அம்மணமாய்

ஆகாயத்தைப் பார்த்து நிற்கின்றன

இவற்றைப் பார்த்த எனக்கு சிறுவயதில் டெசெர்ட்வீடு வில்லேஜ் (Deserted Village by Goldsmith) நான் படித்த நீண்ட ஆங்கிலப்பாடல் மனதில் ஒலித்தது. சண்டையில் வீழ்ந்து கிடந்த வாட்டர் டாங்க் ஒன்று வருத்ததை அள்ளி இறைத்துக்ககொண்டு கிடக்கிறது. ஆட்களைக் கொல்லும் சண்டையும் சச்சரவும் தேவையா? உலகெங்கும் அன்பே ஒலித்தால் ஆகாததும் ஆகுமே?

இங்கு சென்று வந்த கையுடன் நான் கண்ட வெறிச்சோடிய கட்டிடங்களையும் தன் வீட்டை இழந்தவர் அதை மீண்டும் காண முடியாத நிலையையும் வைத்து ஒரு கதை எழுதி வெளியிட்டேன். உலகில் பார்க்க வேண்டிய இடங்களை வெறும் அழகிய காட்சிகளாய் காணமுடியவில்லை. மனிதர்களின் தரக்கெட்ட செயல்களால் இயற்கை மாசு இழந்த கன்னியாய்த் திகழ்கிறது.

புதிய செல்வச் செழிப்பில் புதுமைகளும் பொலிவுடன் திகழ்கின்றன. இப்படிப்பட்ட ஓரிடம்தான் சிங்கப்பூர். இங்கு விண்ணைத்தொடும் கட்டடங்களும் என்றும் இளமையாய்க் காட்சி தரும் தோற்றமுமே நாம் கண் முன் நிழலாடும். தினம் ஒரு கோலம்.புத்தம் புதிய வடிவம் பொங்கி வழியும் அழகு. ஒரு வளமுமில்லை என்றாலும் காணவேண்டிய ஒரு பூங்கா நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரில் காண வேண்டியவற்றை விட அனுபவிக்க வேண்டியவை எத்தனை எத்தனையோ! தூங்கா நகரம் 24 மணி நேரமும் எங்கும் செல்லமுடியும் கடைத்தொகுதிகளுக்கும் சுற்றுலாத்தலங்களும் விழித்தே இருக்கின்றன. வேண்டியதை வாங்கி, கண்டு மகிழ்ந்து உண்டு மகிழ்ந்திட ஒவியமாய்த் திகழும். எதிலும் எங்கும் ஒரு கட்டொழுங்கு. சுத்தம் சுகாதாரம், பசுமை பொங்கி வழியும். பயணம் செய்ய தரமிகு போக்குவரத்து வசதிகள், 24 மணி நேரமும் வாடகை உந்து வண்டிகள்பறந்த வண்ணமிருக்கின்றன.

சாலைகளில் ஹாரன் சத்தமில்லை, முந்திச் செல்லும் பழக்கமில்லை ஒழுங்கு முறை வரிசையாய் காத்திருக்கும் முறை இவற்றைக் கண்டு அந்த நாட்டு மக்களின் பொறுமை வியக்கவைக்கிறது. மேலும் இந்நாட்டில் கலகம் குழப்பம் இல்லை. திருட்டு பயமில்லை. ஒரு நாள் நான் பேருந்தில் பயணம் செய்த பெண்ணைக்கண்டு வியப்பு அடைந்தேன். நம்மூர் சொற்படி கழுத்து நிறைய சங்கிலி கை நிறைய வளையல்கள் அணிந்த பெண் பேருந்தில் தன்னை மறந்து அயர்ந்து தூங்கியபடி பயணம் செய்தார், சற்று நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்?.

சாப்பாடு தரமிகுந்தது, பல வகைப்பட்ட உலகத்தில் எத்தனை வகைப்பட்ட உணவுகள் கிடைக்குமோ அத்தனையும் சுடச்சுட சுத்தாமாய் கிடைக்கும். ஆடா மாடா குதிரையா நத்தையா மீனா பாம்பா பன்றியா காய்கறியா பழங்களா எது வேண்டுமானாலும் சாப்பிட பக்குவமாய்க்கிடைத்திடும். உலக நாடுகளின் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும். அனுபவித்து மகிழ ஓர் அற்புதமான நாடு.

இந்தியாவில் இல்லாத காட்சிகளோ இடங்களோ இல்லை.சுற்றுலாச் செல்ல சற்று அச்சமாகத்தான் இருக்கிறது என்று பல நாடுகளில் பலரும் கூறுகின்றனர். இந்த வாசகத்தை மாற்றி எழுதி இந்தியாவை உலகத்தின் கூரையாய் விளங்கும் புண்ணிய தேசத்தை மாற்ற வழி காண உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்து அவற்றின் சிறப்புகளை தன்னகத்தே கொள்ளச் செய்யவேண்டும், இதற்கு ஆவன் செய்வன ஆண்டவன் கையில் இல்லை, இந்தியர்கள் இழுத்தடித்து நல்லாட்சி கண்டு மாற்றங்கள் செய்ய சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.