
பேராசிரியர் எஸ். செல்வராஜ்
1945-ஆம் ஆண்டு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும்போதே பள்ளி நூலகத்துக்கு வரும் தினமணியை தவறாமல் படிப்பேன். தொடர்ந்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போதும் நூலகத்தில் தவறாமல் படிப்பேன்.
அதன்பிறகு 1957ஆவது ஆண்டில் நான் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் கணிதத் துறை விரைவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது கல்லூரி விடுதியில் தினமணி பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்ததால் அங்கும் தொடர்ந்து படிக்கும் நிலையை தொடர்ந்தேன்.
தொடர்ந்து 1960ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற பிறகு வீட்டில் தினமணி வாங்கி படிக்கத் தொடங்கினேன். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு வீட்டிலும், கல்லூரியிலும் தவறாமல் தினமணியை வாங்கிவிடுவேன்.
தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் அவர்கள் "கணக்கன்' என்ற பெயரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளை தவறாமல் படித்தேன். தற்போது தினமும் காலையில் தினமணியை படித்துவிட்டுதான் மற்ற பணியைத் தொடருவேன்.
இளைஞர்மணி, மகளிர்மணி போன்ற இணைப்புகளில் வரும் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். தினமணியில் வரும் எனக்குப் பிடித்த கட்டுரைகளை பிரதி எடுத்துப் பாதுகாத்து வருகிறேன்.
2000ஆம் ஆண்டு தொடங்கிய காலகட்டத்தில் புதிய நூற்றாண்டில் மாணவர்களால் பெற்றோர்களுக்கு வரக்கூடிய சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற கட்டுரையை தினமணியில் எழுதி உள்ளேன்.
தினமணியை படிப்பதால் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தினமணியில் வெளியான கட்டுரைகளை குறிப்பிட்டுப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
நாள்தோறும் தவறாமல் தினமணியை படித்தால் உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். எனக்குத் தெரிந்த வரையில் தினமணி அளவுக்கு மற்ற பத்திரிகைகள் தரம் உயர்த்திக் கொள்ளவில்லை என்பதே எனது கருத்து.