தினமணிக்கு யாரும் எட்ட முடியாத ஓர் இடம்!

85 வருடங்களைக் கடந்து தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமைமிகு தொண்டாற்றி வரும் தினமணி நாளிதழுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
சுவாமி சத்யஞானானந்தர்
சுவாமி சத்யஞானானந்தர்

85 வருடங்களைக் கடந்து தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமைமிகு தொண்டாற்றி வரும் தினமணி நாளிதழுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம். தமிழ் பேசும் நல்லுலகம் இன்று பல தினசரி பத்திரிகைகளைத் தம்மிடத்தே கொண்டுள்ளது. இவை அத்தனைக்கும் மத்தியில் நமது தினமணி நாளிதழுக்கு யாரும் எட்ட முடியாத ஒரு இடம் உள்ளது என்பதை தமிழ் அறிஞர்கள் அறிவர்.

பொறுப்பான தலையங்கங்கள், அறநெறிகளை முன்னிறுத்தும் நடுப்பக்க கட்டுரைகள், நிதர்சனமான உண்மைகளின் அடிப்படையில் தரமான மொழியில் செய்திகள், நாட்டுநடப்பை நயமான முறையில் நகைச்சுவையாக வெளிப்படுத்தும் கார்ட்டூன்கள் - என்று சமுதாய முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் ஒரு களமாக, நல்ல இயக்கமாக நமது தினமணி நாளிதழ் விளங்கி வருகிறது.

சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து இன்றுவரை தேசபக்தியை இளைஞர்கள் மனதில் வளர்க்கும் பணியை செவ்வனே தினமணி செய்து வருகிறது. நடுநிலை நாளிதழாக இருந்து அரசாங்கம் செய்யும் நல்லவற்றைப் பாராட்டவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ தினமணி என்றுமே தவறியதில்லை.

நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற கொள்கைப்படி, சமுதாய சீர்கேடுகளைக் களைய முனையும்

அறிஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து அறத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ஒரு நாளிதழ் நமது தினமணி.

வாரம் ஒருமுறை வெளியாகும் "தினமணி கதிர்' மூலமாக இலக்கியம், வரலாறு, கலைகள் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் நம் நாட்டின் பெருமைகளை சிறப்பாக வெளியிட்டு வருகிறது தினமணி.

எல்லோர்க்கும் நல்ல நெறிகளைக் காண்பித்து ஆரோக்கியமான ஒரு சமுதாயம் உருவாக தம்மாலான அனைத்து வழிகாட்டுதல்களையும் தினமணி நமக்கு வழங்கி வருகிறது. ஐயத்திற்கு இடமின்றி தமிழ் கூறும் நல்லுலகம் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை - சான்றோர்கள் விரும்பி வாசிக்கும் ஒரே தினசரி பத்திரிகை தினமணி - என்பதாகும்.

1992-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் வந்து நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இருக்க இடமின்றி மக்கள் தவித்த நேரத்தில் தினமணி நாளிதழ் குழுமத்தின் முயற்சியால் தமிழகமெங்கும் நன்கொடைகள் பெறப்பட்டன. அப்படி பெறப்பட்ட நன்கொடைகளை தினமணி குழுமம், கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷனுக்கு அளித்து வீடிழந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள நிவாரண மீட்புப் பணிகள் மற்றும் புனரமைப்புப் பணிகளை ராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்தது.

2015 சென்னை மழைவெள்ளத்தின்போது ராமகிருஷ்ண மிஷன் செய்த நிவாரணப் பணிகள், அதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் கிராமங்களில் மிஷன் மேற்கொண்ட புனரமைப்புப் பணிகளான வீடுகள் கட்டுதல் - போன்ற செய்திகளை மிக விரிவாக வெளியிட்டு மிஷன் பணிகளைக் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள தினமணி உதவியது.

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகளால் கவரப்பட்ட தற்போதைய தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் விவேகானந்தர் ரதவிழாவின்போதும், அவ்வப்போது நமது மிஷன் கிளைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரைப் பற்றிய எழுச்சியுரை ஆற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12- அன்று தவறாமல் சுவாமி விவேகானந்தரைப் பற்றிய கட்டுரை நமது தினமணியில் வெளிவருகிறது.

இப்படி தினமணிக்கும் நமது மிஷனுக்குமான பந்தம் அருமையானது. தரமான செய்திகளை மக்களுக்கு அளிப்பதன் மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்வதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது தினமணி நாளிதழ். தொண்டுகள் செய்வதன் மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்துவருவதை நடைமுறையாக செயல்படுத்தி வருகிறது ராமகிருஷ்ண மிஷன். இப்படி நல்லாரோடு நல்லார் இணங்கியிருந்து அதன் மூலமாக கிடைக்கும் உயரிய செய்திகளை, சான்றோர் பெருமக்கள் வாசித்து மகிழ்ந்து பயன் பெற்று வருகின்றனர்.

தினமணியின் நல்லோர் இணக்கமாகிய இந்த தொடர்பு என்றும் நிலைபெற்றிருக்கவும், அதன் மூலம் நமது பாரத சமுதாயம் பெரும்பயன் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

- சுவாமி சத்யஞானானந்தர், செயலாளர், ராமகிருஷ்ண மிஷன்,  மாணவர் இல்லம், மயிலாப்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com