தினமணியும் வாசகரும்..

தினமணியும் வாசகரும்..

நான் 50 ஆண்டு கால தினமணி வாசகன். 1969ஆம் ஆண்டு ஆற்காடு அரசு-ஆதார (ஆசிரியர்) பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த நாளிலிருந்து பொது நூலகம் மூலம் என்னுடைய தினமணி வாசிப்பு தொடங்கியது. தினமணியின் தலையங்கங்களும் நடுப்பக்கக் கட்டுரைகளும்தான் நாட்டு நடப்புகளில் எனக்கு ஒரு தெளிவு ஏற்படக் காரணம். தினமணி மென்மேலும் மெருகு கூடியே வருகிறது. முக்கியமாக தற்போது தனித் தமிழ்ச் சொற்கள் இடம்பெறுவது பாராட்டுக்குரியது. தமிழால் ஒன்றிணைத்து, தமிழரின் உயர்வுக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் பெரும் பணியாற்றி பெருமை சேர்க்கிறது தினமணி.

கோவி.ராதாகிருஷ்ணன்,  அரக்கோணம், வேலூர் மாவட்டம்.

**

என் கணவர் க.ப.அறவாணன் 1957 முதல் 2017 வரை 60 ஆண்டுகள் தொடர்ந்து படித்து வந்தார். பேரா. வ.ஐ.சுப்பிரமணியம் தம் மாணவரான என் கணவரை அழைத்துக் கொண்டு அப்போதைய தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனை சந்தித்தார். அப்போதிருந்தே தினமணியில் கட்டுரை எழுத ஆரம்பித்தார். நானும் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை தினமணியில் எழுதினேன். தமிழ்மணியில் அறியப்பெறாத பெண் கவிஞர்களைப் பற்றி அடிக்கடி எழுதுகிறேன். தலையங்கம், தமிழ்மணி, கலா ரசிகன் பகுதி, நடுப்பக்க கட்டுரைகள் எனக்கு பிடித்தமானவை.

தாயம்மாள் அறவாணன், சென்னை.

**

நான் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், சின்னக்குயிலி என்ற சிற்றூரில் வசித்து வருகிறேன். 1985-87-ஆம் ஆண்டுகளில் கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்காக சேர்ந்தேன். அப்போது எங்கள் தலைமையாசிரியர் கே.ஏ.ராயப்பன்தான் என்னை தினமணி வாசிக்கத் தூண்டினார். தினமும் நாளிதழைப் படித்து வகுப்பில் மாணவர்களிடம் சொல்ல வேண்டும். நூலகத்தில் மற்ற நாளிதழ்கள் வந்தாலும் அவர் ஏன் தினமணியைப் படிக்கச் சொன்னார் என்பதை புரிந்து கொண்டேன். தற்போது அதே பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறேன். தினமணியை பக்கம்விடாமல் படித்தால்தான் எனக்கு திருப்தி ஏற்படும். நூறாண்டு கண்டு, இன்னும் பல்லாண்டுகள் தமிழ் மக்கள் கைகளில் தினமணி தவழட்டும்.

ப.பாக்கியலட்சுமி, சின்னக்குயிலி, கோவை.

**

அரை நூற்றாண்டுக்கும் மேலான தினமணி வாசகர். தினமணியில் வெளியாகும் கட்டுரைகள் இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் தேவையானவை. வெள்ளிமணியின் கட்டுரைகளும், படங்களும் பார்ப்பதற்கு பரவசமூட்டுவதுடன் ஆன்மிகத்தை வளர்க்கிறது. தினமணி மேலும் 100 வருடங்கள் வளர்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும்.

சி.சண்முகசுந்தரம், திருப்பூர்.

**

உலக இருளைப் போக்கும் கதிரவனைக் குறிக்கின்ற பல பெயர்களுள் "தினமணி' என்பதும் ஒன்று. நான் பிறந்து வளர்ந்த சிற்றூரில் அந்தக் காலத்தில், நாளிதழ் எதனையும் பார்த்தது இல்லை. 1954-1958 ஆகிய நான்கு ஆண்டுகள் அண்ணாமலை நகரில் நான் மாணவனாக இருந்த காலத்தில், அன்றாடம் காலையில் வீட்டுக்கு வந்த தினமணியைப் படிக்கத் தொடங்கினேன். செய்திகளைப் படித்து அறிவதுடன் தினமணி ஆசிரியர் உரையையும் நடுப்பக்கத்தில் நாள்தோறும் இடம்பெறும் பயன்தரும் கட்டுரைகளையும் தவறாமல் படிப்பேன்.

தினமணி இணைப்பாக அன்று வந்து கொண்டிருந்த ஞாயிறுமலரில் - நடுப்பக்கத்தில், "நாட்டுக்குச் சேவை செய்த நாகரிகக் கோமாளி மறைந்தார்" எனத் தலைப்பிட்டு அரிய புகைப்படங்களுடனும் தகவல்களுடனும் கலைவாணர் மறைவுச் செய்தி தினமணியில் வெளியிடப்பட்டது. சிறுவர்மணியும் தினமணி கதிரும் பயனுள்ள வகையில் பல்சுவை நிறைந்ததாக தினமணிக்குப் பெருமை சேர்க்கின்றன.

பேராசிரியர் மு.செ.குமாரசாமி , கடையம்.

**

50 ஆண்டு கால தினமணி வாசகர். தினமணியை தொடர்ந்து படித்ததால் அரசுப் போட்டித் தேர்வு எழுதுவது எனக்கு கடினமாகத் தெரியவில்லை. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு 1973ஆம் ஆண்டில் தமிழ்நாடு தேர்வாணையக் குழுவால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றிபெற முடிந்ததென்றால் அதற்கு முழு முதற் காரணம் தினமணி நாளிதழே. 1979இல் காஞ்சி அத்திவரதர் பற்றிய செய்தியை தினமணியில் படித்து, காஞ்சிபுரத்துக்கு சென்று தரிசனம் செய்தது மறக்க இயலாத நிகழ்வாகும்.

கி.தேவராஜ், மதுரை.

**

1952-இல் ஆசிரியர் பணிக்கு வந்ததுமுதல் இன்றுவரை 69 ஆண்டுகளுக்கு மேலாக நாள்தோறும் தினமணியை படித்து வருகிறேன். பல ஆண்டுகளாக அன்புள்ள ஆசிரியருக்கு... பகுதியில் நான் எழுதிய பல கடிதங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிறந்தவற்றை தொகுத்து என் பவள விழாவின்போது "மணியில் ஒளிர்ந்த மணிகள்' என்னும் தலைப்பில் நான் எழுதிய பிற 5 நூல்களுடன் வெளியிடப்பட்டது. தினணியின் நடுப்பக்கத்தில் வெளிவரும் ஆசிரியர் உரையும், கட்டுரைகளும் தினமணிக்கு சிறப்பு சேர்ப்பன. ஞாயிறுதோறும் வெளிவரும் தமிழ்மணி தமிழை வளர்த்து மேலும் சிறப்பைச் சேர்க்கிறது.

ச.மு.விமலானந்தன், திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.
 

**

எனது 5ஆவது வயதில் வாசிக்கத் தெரிந்த நாளிலிருந்தே தினமணியை படிக்கச் சொல்லி பழக்கப்படுத்தினார் என் தந்தை. தினமணி என்றாலே மணிமணியான விஷயங்களை உண்மைக்கு மாறாமல் தரும் நாளிதழ். தலையங்கத்தையும், கட்டுரைகளையும் படித்தால்தான் செய்தித்தாளை முழுமையாகப் படித்த திருப்தி வருகிறது. தினமணி கதிர், மகளிர்மணி, சிறுவர்மணி, வெள்ளிமணி ஆகியவற்றில் எனது படைப்புகளை அளித்து பங்குபெற்றுள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி நகரம்.

**

தினமணியின் நீண்டகால வாசகர் நான். தினமணியில் வரக்கூடிய பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா-விடைகள் போன்றவற்றிலிருந்து- தேர்வு செய்து, திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலும், நான் பணி செய்யும் இலால்குடி அரசுக் கல்லூரியிலும் தகவல் பலகையில் எழுதி வருகிறேன். இரண்டாயிரம் தினமணி தலையங்கங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். தினமணி கதிர்- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் பகுதிகள், சிறுவர்மணி-நினைவுச் சுடர் பகுதிகள் உள்ளிட்டவற்றையும் சேகரித்து வைத்திருக்கிறேன்.

முனைவர் ம.இராஜா, இலால்குடி, திருச்சி
 
**

50 ஆண்டு கால தினமணி வாசகன். எனது தாத்தா தான் எனக்கு தினமணியை அறிமுகம் செய்துவைத்தார். தினமும் தினமணியை படித்துவிட்டு பள்ளியில் சக மாணவர்களிடம் நாட்டு நடப்பைப் பற்றி பேசுவேன். இதை கவனித்த எங்கள் ஆசிரியர், இறைவணக்கம் நேரத்தில், தினமணியில் அன்றைய முக்கிய நிகழ்வுகளைப் பற்றி என்னை பேசவைத்தார். அன்றுமுதல் நான்தான் எங்கள் பள்ளிக் கதாநாயகன். தமிழ் உள்ளவரை தமிழர்களுடன் தினமணி இரண்டறக் கலந்திருக்கும். அவர்களின் அறிவுத் தேடல்களுக்கு உதவும்.

ஆர்.சேதுராமலிங்கம், மதுராந்தகம்.

**

தினமணியுடனான எனது தொடர்பு 1968-ஆம் ஆண்டு நான் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே தொடங்கிவிட்டது. இன்று வரை தொடர்கிறது. எனது தாய்மொழியான சௌராஷ்டிரா மொழிக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட வேண்டும் என நான் எழுதிய கடிதம் தினமணியில் பிரசுரமானது. பின்னர், அந்தக் கடிதத்தை விரிவுபடுத்தி அகாதெமிக்கு பலமுறை அனுப்பினேன். 2007-இல் ஒருநாள் சௌராஷ்டிரா மொழிக்கு அகாதெமி பாஷா ஸம்மான் விருது வழங்கப்படும் என கடிதம் வந்தது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன் ஆதரவுடன் இது நிகழ்ந்ததை பின்னர் அறிந்தேன். ஆக, ஒரு சிறிய மொழியும் அகாதெமி விருது பெற தினமணியில் வெளியான கடிதம் ஒரு மூலகாரணம் ஆகும். சௌராஸ்டிரா மொழி தேசிய மரியாதை பெற தினமணி உதவியது.

கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி, மதுரை.

**

என் தந்தை டி.ஆர்.வைத்தீஸ்வர ஐயர் தினமணி வாசகர். அதில் உள்ள செய்திகளை எங்களை எழுதிப் பார்க்கச் சொல்வார். எழுத்துகளின் வடிவம், நுட்பம் ஆகியவற்றை எடுத்துச் சொல்லி எங்களை வாசிப்பதற்கு ஆர்வமூட்டுவார். தினமணி நாளிதழை பார்க்கும்போதும் படிக்கும்போதும் எம் தந்தையாக, தாயாக, இந்திய சுதந்திர தேவியாகப் பார்க்கிறேன்.

வை.கல்யாணமுரளி ஐயர், பாடி, சென்னை.
 

**

நாகப்பட்டினத்தில் 1970-இல் நான் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது, காலையில் இறைவணக்கம் பகுதியில் இன்றைய செய்திகளை வாசிப்பதற்காக தினமணியை அறிமுகப்படுத்தினார் எனது தமிழாசிரியர் அரங்க ராமானுஜம். அன்று தொடங்கிய தினமணியுடனான நட்பு இன்று வரை தொடர்கிறது. கல்லூரியில் படித்த காலத்தில் தினமணி கதிர் வாசகர் குரல் பகுதிக்கு நான் அனுப்பிய சமூக விழிப்புணர்வு கடிதமொன்று ரூ.10 பரிசு பெற்றது. பின்னர், சிறுவர்மணி, கதிரில் புனைபெயரில் எனது படைப்புகள் வெளியாயின. வடிவத்தில் பெரிதாக மாற்றம் இல்லாமல், நடுநிலை குணத்தையும் இழக்காமல் 85 அகவைகளை தினமணி கடப்பது பெருமிதமானது.

அண்ணா அன்பழகன்,  கே.கே.நகர் கிழக்கு, சென்னை-78.
 

**

60 ஆண்டுகளாக தினமணி வாசகர். எனது 12-ஆவது வயதில் இருந்தே தினமணியை வாசித்து வருகிறேன். அந்தக் காலங்களில் அரசு நூலகங்களுக்குச் சென்றுதான் தினமணியை வாசிக்க வேண்டும். அதற்காகவே நூலகங்களுக்குச் சென்ற நாள்களும் உண்டு. பின்னர் வேலைக்காக 23 -ஆவது வயதில் மும்பை சென்றாலும் தினமணி வாசிப்பைக் கைவிடவில்லை. மும்பையிலும் எனக்கு தினமணி எளிதாகவே கிடைத்து வந்தது.

செய்தியை எந்தவித புனைவும் இல்லாமல் செய்தியாகவே கொடுப்பதில் தினமணிக்கு நிகர் வேறில்லை. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மட்டுமே செய்திகளாகப் பிரசுரிக்கப்படும். தினமணியின் ஆழமான எழுத்து நடையால் கவரப்பட்டேன். தலையங்கம், தமிழ்மணி பகுதிகள் போற்றுதலுக்குரியது. தினமணியைப் போன்றே அதன் இணைப்புகளும் தகவல்களை அள்ளித் தருகின்றன.

பெ.சு.பர்வதநாதன், வடவள்ளி, கோவை.

**

60 ஆண்டுகால தினமணி வாசகர். 1959ஆம் ஆண்டு முதல் தினமணி வாசித்து வருகிறேன். தலையங்கமும், தலையங்கப் பக்க கட்டுரைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. விவசாயியான நான் இளமைப் பருவம் முதல் தினமணி வாசித்து வருவதால் உண்மையுடனும் நேர்மையுடனும் இருக்கிறேன். அந்தப் பண்பை எனக்குள் ஆழமாக விதைத்திருக்கிறது தினமணி.

க.ஜெம்பநாதன்,  திண்ணணூர், திருச்சி.

**
நான் என்னுடைய 13-ஆவது வயதிலிருந்து (1960) தினமணியை வாசிக்கிறேன். 1944-களில் தினமணி வெளியீடாக வந்த பல மலிவு விலை நூல்களில், மகாத்மா காந்தி நினைவு மாலை, அன்னை கஸ்தூரிபா, தற்காலப் போர்க் கருவிகள் ஆகிய மூன்று நூல்களை 1966-இல் சென்னையில் நடைபாதைக் கடையில் ஒவ்வொன்றையும் பத்து பைசாவுக்கு வாங்கினேன். இவற்றின் வெளியீட்டு விலை 12 அணா. இவற்றை பொக்கிஷங்களாக பாதுகாக்கிறேன்.

தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் எழுதிய ரூபாய் மதிப்பு வீழ்ந்ததேன், வேட்பாளரை யார் பொறுக்குவது? ஆகிய தினமணி மலிவு விலை வெளியீடுகளை பாதுகாத்து வைத்துள்ளேன்.

க.ரவீந்திரன், ஈரோடு.

**

78 வயதாகும் நான் 50 ஆண்டுகளுக்கும் மேல் தினமணி வாசகராக இருந்து வருகிறேன். அன்புள்ள ஆசிரியருக்கு, வாசகர் அரங்கம், கதிர்வீச்சு, அஞ்சல் பெட்டி ஆகிய தலைப்புகளில் எழுத வாய்ப்பினை நல்கி, தினமணி தன் வாசகர்களை எழுத்தாளர்களாக உருவாக்கும் பணி பெரிது. இத்தலைப்புகளில் 2011-15 வரை அமைந்த எனது தொகுப்பினை இப்போது தேடி எடுத்து படித்து மகிழ்கிறேன். சிறுவர்மணியில் "வீர்சக்ரா' விருதாளர் அபிநந்தனின் வீரத்துக்காக நான் எழுதிய "பா' பாமாலையில் இடம்பெற்றதை எண்ணி உவக்கிறேன். 1962 முதல் இன்று வரை தினமணியுடனான எனது உறவு உயிர்ப்பானது.

செ.சத்தியசீலன், கிழவன்ஏரி,  திருநெல்வேலி மாவட்டம்.

**

தினமணியின் தமிழ்மணி பகுதி தொடங்கிய நாள்முதல் (1989) இன்று வரையிலான அனைத்துப் பகுதிகளையும் தொகுத்து எனது வீட்டு நூலகத்தில் தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையில் பராமரித்து வருகிறேன். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் 2014, ஜூன் மாதம் நடைபெற்ற தினமணி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மறக்க முடியாத நிகழ்வு.

வை.கோபாலகிருஷ்ணன், கொட்டாரம்,  கன்னியாகுமரி மாவட்டம்.

**

86ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமணி, இத்தருணத்தில் வாசகர்களையும் கௌரவிப்பதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறது. 1965இல் இருந்து தினமணி வாசித்து வருகிறேன். வாசகராக மட்டுமன்றி, அன்புள்ள ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதன் வாயிலாகவும், சிறுவர்மணியில் குழந்தைகளுக்கான பாடலையும் எழுதி வருவதால் தினமணி எனக்கு நெருங்கிய சொந்தமாகிவிட்டது. 1975இல் அவசரநிலை அமலில் இருந்த காலங்களில் தினமணி மிகச்சிறந்த ஜனநாயக கடமையாற்றியது. அக்காலங்களில் தினமணிக்காக காத்திருந்து வாசித்ததை என்னாள் மறக்க இயலாது.

தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ.என்.எஸ். கணக்கன், குமாஸ்தா என்ற புனைபெயர்களில் எழுதிய கட்டுரைகளை கருத்தூன்றி வாசித்திருக்கிறேன். விகிதாசார பிரதிநிதித்துவ முறை, 42ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் பாதிப்புகள் குறித்து ஷரத்து வாரியாக அவர் விளக்கிய விதம் என்னுள் தெளிவை ஏற்படுத்தியது. பல நாளேடுகளை வாசித்தாலும் தினமணி வாசிப்பு என்பது "தாய் ஊட்டிய நிலாச் சோறு' எனலாம்.

ஆர்.தியாகராஜன், மணலூர்பேட்டை.

**

தலைமைச் செயலக நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக தினமணியை வாசித்து பயன்பெற்று வருகிறேன். தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் விரும்பிப் படிக்கும் நாளேடு தினமணி. தமிழ்மணியில் வெளியான நீதியரசர் இராமசுப்பிரமணியன், தமிழறிஞர் ஞானசுந்தரம் முதலியோரின் சொல்வேட்டை தமிழுக்கு வளம் சேர்த்தது. தினமணி மனஒளி அளிக்கிறது. பனைமரம் தரும் பயன்படு பொருள்போல, அது பலவிதங்களிலும் நன்னயம் புரிகிறது.

நா.இராசகோபாலன் (மலையமான்), பீமண்ணன்பேட்டை, சென்னை-18.

**


1953இல் எனது 10ஆவது வயதில் இருந்து தினமணி வாசித்து வருகிறேன். என் தந்தைதான் எனக்கு தினமணியை அறிமுகம் செய்துவைத்தார். தினமணி செய்திகளைப் படிக்கச் சொல்லி அதிலிருந்து என் தந்தை கேள்விகள் கேட்பார். பள்ளியில் மாணவர் மன்றக் கூட்டத்தில் நான் பேசிய பேச்சுக்கு அது கைகொடுத்தது. பின்னர், நான் அஞ்சல் துறையில் பணியாற்றியபோது தொழிற்சங்கக் கூட்டங்களில் உணர்ச்சிமிகு உரையாற்றவும் உதவியது தினமணி வாசிப்பு.

தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் கணக்கன் கட்டுரைகளே என்னை இளங்கலை பட்டப் படிப்பில் பொருளாதாரம் படிக்க வைத்தது. தற்போது தினமணி வெள்ளிமணியில் எனது கட்டுரைகள் வெளியாவது எனக்கு கூடுதல் பெருமை.

மு.அ.அபுல் அமீன், நாகூர்.

**

அரை நூற்றாண்டுக்கு மேல் தினமணி நாளிதழை படித்து வரும் வாசகன் நான். முதலில் வாசிப்பது தலையங்கம்தான். மக்கள் பிரச்னையானாலும், அரசியல் பிரச்னையானாலும், சர்வதேச பிரச்னையானாலும் அவற்றின் சாதக, பாதகங்களைத் தெளிவாக விவாதித்து சரியான தீர்வையும் வழங்குகிறது. இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான ஏராளமான கருத்துகளைத் தாங்கி இளைஞர்மணி, மகளிர்மணி வெளியாகிறது.

அக்ரி கே.நித்தியானந்தம், புதுச்சேரி.

**

1965-இல் எனக்கு 10 வயது இருக்கும்போதே தினமணி அறிமுகம். 1985-இல் ஆசிரியர் பணியில் சேர்ந்ததுமுதல் தினமணியை முழுமையாக சேகரிக்கும் பணியும் தொடங்கியது. ஆசிரியர் ஏ.என். சிவராமன் காலத்தில் இலங்கை தொடர்பாகவும், சீனா தொடர்பாகவும் அத்தனை விரிவாக வேறெந்த நாளிதழ்களிலும் கட்டுரைகள் வெளியாகவில்லை. அந்த கட்டுரைகள் அனைத்தையும் பாதுகாப்பாக ஒட்டி வைத்துள்ளேன். அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகள் அவை.

பேராசிரியர் சா. விஸ்வநாதன், புதுக்கோட்டை.

**

கம்பன் அடிப்பொடி சா.கணேசனால் தோற்றுவிக்கப்பட்ட காரைக்குடி கம்பன் கழக விழாவில் தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமனும், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம்.இஸ்மாயிலும் கலந்துகொள்வது வழக்கம். ராஜபாளையத்திலிருந்து நானும், குன்றக்குடி பெரியபெருமாளும் ஒவ்வோர் ஆண்டும் காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்துகொள்வோம்.

எங்களைக் கவனித்துவந்த ஏ.என்.சிவராமன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் ஆகிய மூவரும் எங்களை அழைத்து ராஜபாளையத்தில் கம்பன் கழகத்தைத் தொடங்குங்கள் என ஆசிர்வதித்தார்கள். அவர்கள் வாக்கை சிரமேற்கொண்டு ராஜபாளையத்தில் நானும், குன்றக்குடி பெரியபெருமாளும், பி.ஆர்.விஜயராகவராஜாவும், எஸ்.என்.ஆர்.டி. ராமசுப்பிரமணியராஜாவும் ராஜபாளையத்தில் கம்பன் கழகத்தை நிறுவினோம். இவ்வாண்டு 40-ஆவது கம்பன் விழா கொண்டாடப்படவுள்ளது.

உலக அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் சராசரி மனிதனை உலகச் சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும் நாளிதழ் தினமணி ஒன்றுதான். அதேபோல், சிக்கலான விஷயங்களில் தெளிவை ஏற்படுத்துவதும் தினமணி தலையங்கம்தான்.

தேர்தல் சீர்திருத்தம் பற்றி பரவலாக இப்போது பேசப்படுகிறது. இதில் விகிதாசார முறையை அமல்படுத்த வேண்டும் என 50 ஆண்டுகளுக்கு முன்பே அன்றைய தினமணியின் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் பக்கம் பக்கமாக எழுதினார். அக்கட்டுரையில் உள்ள கருத்துகள் இன்றைக்கு தேவையான ஒன்று.
 

என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா, பொதுச் செயலர், கம்பன் கழகம், ராஜபாளையம்.

**

நான் கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து தினமணி வாசகர். எந்த ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நடுநிலையுடன் செய்திகளை வெளியிடும் நாளிதழ் தினமணி. நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், ஹிந்தி திணிப்பு போராட்டத்திலும் தினமணியின் பங்கு மிகப்பெரியது. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, நான் சமூக சேவையில் ஈடுபடக் காரணமே தினமணிதான். பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்திகள் மூலம் பூர்த்தி செய்து வரும் நாளிதழ் தினமணி மட்டுமே.

சீனி.பாலகிருஷ்ணன், அரியலூர்.

**

எனக்கு இப்போது 77 வயது ஆகிறது. நினைவு தெரிந்த நாள் முதல் தினமணி வாசித்து வருகிறேன். தினமணி என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் தலையங்கம். தலையங்கமும், நடுப்பக்கக் கட்டுரைகளிலும் பலவிதமான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தினமணி-தமிழ்மணியில் இடம்பெறும் கலா ரசிகன் பகுதி, அடுத்த தலைமுறைக்கு அறிவுபூர்வமான தகவல்களைக் கொண்டு சேர்க்கிறது. சில செய்திகள், கட்டுரைகள் தினமணியில் மட்டுமே படிக்க முடியும். அது இன்று வரை தொடருகிறது. அதனால்தான் பிறநாளிதழ்களில் இருந்து தினமணி தனித்து நிற்கிறது.

புலவர் கி.வேலாயுதன், மதுரை.

**

நற்றமிழ் நாளிதழான தினமணியை அறுபது ஆண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன். தினமணியின் ஆசிரியவுரை புள்ளிவிவரங்களோடும், திருக்குறள் பாவும் உரையும் பொருத்தமாக இணைந்தும் வெளிவருவது புத்தொளி தருவதாகும். அரசியல், பொருளியல், அறிவியல், அருளியல் பற்றிய கட்டுரைகள் விழுமிய வகையில் இடம்பெறுகின்றன. தலையங்கப் பக்கம் பேணிக் காக்க வேண்டிய பெட்டகமாகத் துலங்குகிறது. புதிய தமிழ்ச் சொற்களைப் புலப்படுத்தும் பாங்கு பாராட்டத்தக்கது. மேடையில் பேசுவதற்கும் நூல்கள் எழுதுவதற்கும் தகுந்த புள்ளிவிவரச் செய்திகள் குறிப்பிடத்தக்க சிறப்பு மிக்கவை. நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, தினமணியை மேற்கோள்காட்டி முழங்குவர். தமிழ்மணி என்னும் பகுதி இலக்கிய ஆர்வலர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு ஆகும். கலாரசிகன் என்னும் புனைபெயரில் ஆசிரியர் வைத்தியநாதன் புதிய நூலாசிரியர் பெருமக்களை அறிமுகம் செய்துவருவது போற்றி மகிழத்தக்கது.

முனைவர் பா.வளன் அரசு, பாளையங்கோட்டை.
 

**

1952-ஆம் ஆண்டு முதல் தினமணி வாசித்து வருகிறேன். 90 வயதாகும் நான் 1952-ஆம் ஆண்டிலிருந்து சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில் பகுதியில் நூலகம் நடத்தி வருகிறேன். 21 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. தினமும் நூலகத்தை திறந்தவுடன் படிப்பது தினமணி நாளிதழைத்தான். தினமணி நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்.

கு.மகாலிங்கம்,  சைதாப்பேட்டை, சென்னை -15
 

**

தினமணி நாளிதழை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த காலத்திலிருந்து படித்து வருகிறேன். தற்போது, எனக்கு 77 வயதாகிறது. தினமணியில் தலையங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவிலேயே துணிச்சலாகத் தலையங்கம் எழுதுவது தினமணிதான்.

அவசரநிலை அமலில் இருந்த காலத்திலிருந்தே தினமணி வாங்குகிறேன் என்றவுடன் காவல் துறையினர் என்னைக் கண்காணித்து வந்தனர். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. நாட்டுக்கு எது தேவையோ, அதை மட்டுமே செய்தியாகக் கொடுக்கின்றனர். விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையுடன் செய்திகள் வரும் பத்திரிகை தினமணிதான்.

ஆர்.ராஜாமணி,  ஓய்வு பெற்ற ஆசிரியர்,  அம்மாபேட்டை.

**

83 வயதாகும் நான் 70 ஆண்டுகளாக தினமணி வாசித்து வருகிறேன். இதழியலில் நடுநிலை வகிக்கிறது தினமணி. தமிழ்மணியில் கலாரசிகன் என்கிற பெயரில் ஆசிரியர் எழுதுவது படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் எழுதி புத்தகமாக வந்த தினமணி வெளியீடான "அப்போலோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்', ஸ்புட்னிக் முதல் நிலவுப் பயணம் வரை- ஓர் ஆராய்ச்சி' என்ற புத்தகம் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். 208 பக்கங்களில் 2 ரூபாய்க்கு வெளியான அந்தப் புத்தகத்தை இன்றும் வைத்திருக்கிறேன். தினமணி நூற்றாண்டு கொண்டாட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கே.சந்தானம், காலடிபேட்டை, சென்னை-19.

**

1954-ஆம் ஆண்டு பிறந்த நான் தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது, என் முன்னோர்களின் நான்காம் தலைமுறையை சேர்ந்த எனது பாட்டனார் க.பழனியப்பகவுண்டர் தினமணி நாளிதழ் படிப்பார். அவரைத் தொடர்ந்து என் தந்தை, தாய், சகோதரி ஆகியோர் தினமணி வாசகர்களாக இருந்தனர். அந்த வாசிப்புப் பழக்கம் என்னையும் தொற்றிக் கொண்டதால் விவரம் அறிந்த நாளிலிருந்து தினமணி வாசகராக உள்ளேன். அதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். வரும் சந்ததியருக்காக முக்கிய தலையங்கம், கட்டுரைகளை சேகரித்து வைக்கும் பழக்கம் உண்டு.

எஸ்.பி.வி.நவலடி,  மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

**

பணி ஓய்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான நான், 1968-ஆம் ஆண்டிலிருந்து தினமணி நாளிதழின் வாசகராக இருந்து வருகிறேன். தினமணியின் முதல்பக்க தலைப்புச் செய்தியே அதன் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது. தலையங்கம், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் இவையெல்லாம் தினமணியின் பெருமைகள் என்று கருதுகிறேன். தினமணியின் சேவைக்கு பாராட்டுகள்.

இரா.ஆறுமுகம், ராதாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

**

1965இல் இருந்து தினமணி நாளிதழை வாசித்து வருகிறேன். கலை, இலக்கியம், செய்திகள் அனைத்தும் சுருக்கமாகவும், அதே சமயத்தில் மிகத் தெளிவாகவும் வெளியிடும் ஒரே நாளிதழ் தினமணி என்பது திண்ணம். குயிலி ராஜேஸ்வரி, நீலம் போன்ற இசை விமர்சகர்கள் சங்கீத கச்சேரி இசை விழா விமர்சனங்கள் எழுதி வந்த காலத்தில் நான் கற்பித்து மேடை அரங்கேற்றம் செய்ததை பாராட்டி எழுதியது நினைவில் நீங்கா இடம் பெற்றது.

எம்.கபாலீஸ்வர ஸர்மா, சென்னை-85

**

தினமணி முன்னாள் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் காலத்திலிருந்து தினமணி வாசிக்கிறேன். புதுமைப்பித்தன், ரஸமட்டம் என்ற புனைபெயரில் எழுதிய "இல்லையென்றால் திருடு இல்லையாகுமோ' கட்டுரை நினைவில் நிற்கிறது. எனது மூன்று கட்டுரைகள் தினமணியில் வெளியாயின. சுதேசமித்திரன் மட்டுமே மாற்று நாளேடாய்த் திகழ்ந்த காலத்தைப் போலவே, பற்பல பத்திரிகைகள் போட்டியிடும் இன்றும் தினமணி தனி முத்திரை பதிக்கிறது.
 

சொ.ஞானசம்பந்தன், புதுச்சேரி.
 

**

எனக்கும் தினமணிக்கும் 53 ஆண்டுகால நட்பு இருக்கிறது. எனது மூத்த சகோதரி மூலம் மூன்று வயதிலேயே எழுதப் படிக்கக் கற்றேன். அப்போதிலிருந்து இன்று வரை தொடர்ந்து தினமணியை (சு)வாசித்து வருகிறேன். என் தந்தை வா.இலட்சுமணன் சிறந்த தேச பக்தர். தினமணியின் செய்திகள் குறித்தும், கணக்கன் கட்டுரைகள் குறித்தும், அதை வாசிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சிறு பிரசுரங்கள் அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்வார் என் தந்தை. தந்தை முகவரென்பதால் தினமணியுடன்தான் எங்கள் காலைப் பொழுது விடியும். எனது எழுத்துத் திறனை மேம்படுத்தியதில் தினமணிக்கு பெரும்பங்குண்டு. 1979இல் தொடங்கி எனது வாசகர் கடிதங்கள், ஆய்வுக் கட்டுரைகள் தினமணியில் வந்துள்ளன. தினமணியை தொடர்ந்து வாசிப்பவர்கள் நேர்மை, தேசபக்தி, சமூக உணர்வுடன் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இல.ஜவஹர் (உடுமலை அமிர்தநேயன்), உடுமலைப்பேட்டை.

**

1964இல் திருச்சியில் நான் 8ஆவது படிக்கும்போது அறிமுகமானது தினமணி. பள்ளியில் காலை வழிபாட்டின்போது செய்தித்தாள் படிக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் என்னிடம் வழங்கினர். அதற்காகவே முக்கியச் செய்திகளை தனி நோட்டில் எடுத்து எழுதுவதற்காக தினமும் சீக்கிரமாகவே பள்ளிக்குச் சென்றுவிடுவேன். ஆசிரியர் பயிற்சி முடித்து புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கியதும் நான் செய்த முதல் வேலை தினமணியை வாங்கி மாணவர்களைப் படிக்கச் செய்ததுதான். இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் கவிஞனாக, பட்டிமன்ற பேச்சாளனாக வளர்ந்துள்ளேன். தினமணி கதிர், சிறுவர்மணி ஆகியவற்றில் என் பாடல்களும், கவிதைகளும் வெளியாகியுள்ளன. எனது வளர்ச்சியில் தினமணி உடன்வந்து உதவி இருக்கிறது.

வீ.கே.கஸ்தூரிநாதன், குழிபிறை, புதுக்கோட்டை மாவட்டம்.

**


பள்ளிக்குச் செல்லும் போதே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் அரும்பத் தொடங்கியதற்குக் காரணம் என் தந்தை. தீவிர வாசிப்பாளரான அவரது வழியில் அரை நூற்றாண்டுக்கு முன்பே நாளிதழ் வாசிப்பில் தீவிர ஈடுபாடு கொண்டேன். ஒன்பதாம் வகுப்பு (1967-68) படிக்கும்போது பள்ளியில் வாரந்தோறும் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெறும். அவ்வேளையில் வரவேற்பு உரைக்கு நான் தேடிச் சென்றது தினமணி நாளேடுதான் என்பதில் உவகை கொள்கிறேன். அன்று வடமொழிச் சொற்கள் அதிகம் கலந்து வந்த நாளேடு, இன்று தனித் தமிழ் நாளேடாக மிளிர்கிறது.

அன்று தொட்டு இன்று வரை தலையங்கத்துக்கு தினமணி எனில் மிகையன்று. நனிசிறந்த ஆளுமையாளர்களின் கட்டுரை எக்காலமும் அழியவிடாது பாதுகாக்க வேண்டிய காலப் பெட்டகம். இன்றைய வாசகர்களுக்காக நடையின் தரத்தினை விட்டுக் கொடுக்காது நித்தம் நித்தம் புதுப்புது விதைகளை விதைத்து வரும் தினமணி நாளேடு மென்மேலும் புத்தொளி வீசிட நல்வாழ்த்துகள்.

மகா.பால்துரை (70), ஓய்வு பெற்ற ஆசிரியர், சாத்தான்குளம்.

**

நான் 1958 ஆம் ஆண்டு முதல் தினமணி நாளிதழை தொடர்ந்து படித்து வருகிறேன்.சமுதாயத்துக்குத் தேவையான பொதுவான கருத்துகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. அதிலும் குறிப்பாக தலையங்கம், நடுப்பக்க கட்டுரைகளில் நிறைய விஷயங்கள் இருப்பதால் அதை விரும்பிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

சு.துரைசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர், திருப்பூர்.

**
 
1935-இல் பிறந்த நான் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட தினமணி வாசகன். உண்மையை உரைப்பதில் தினமணிக்கு ஈடில்லை. என்றென்றும் தரமான செய்தி, தெளிவான நடை என தினமணியின் சேவை போற்றத்தக்கது.

எஸ்.ஆரோக்கியதாஸ்,  ரிஷிவந்தியம்.

**

அண்மையில்தான் எனது அகவை எண்பது நிறைவுற்றது. தினமணியோ அகவை எண்பத்தைந்தை நிறைவு செய்யவிருக்கிறது. எனக்கு முன் பிறந்த இதழ், எனக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது. காலை எழுந்தவுடன் படிப்பு- எனக்கு தினமணியே. தலையங்கத்தையும், தலையங்கப் பக்க கட்டுரைகளையும் விரும்பிப் படிப்பேன். அரசியல், ஆன்மிகம், பல்துறைச் செய்திகளைத் தாங்கி வரும் தினமணி தொடர்ந்து பயணிக்க எனது வாழ்த்துகள்.

வ.சிவசங்கரன்,  திருக்கழுக்குன்றம்.

**

ஆழ்ந்த, விசாலமான அறிவுக்கு தினமணி வாசித்தல் எனக்கு உதவியது. அப்போது புதுச்சேரி அரசுப் பள்ளியில் நான் பணியாற்றியதால் தினமணி வாசிப்பு என் சுய முன்னேற்றத்துக்கும், மாணவர்களுடன் கலந்துரையாடவும் உதவியது. தினமணி வாசகி என்பது நான் பழகும் ஆசிரிய சமூகத்தில் எனக்கு மரியாதையையும் பெற்றுத் தந்தது. என்னைச் சுற்றியுள்ளவர்கள் கருத்து பலவகையாய் இருந்தாலும் தினமணி தலையங்கம், கட்டுரைகள் படிப்பதால் எனக்கென்று தெளிவான கருத்து, சிந்தனை பெறவும், அது தொடர்பாக விவாதிக்கவும் தன்னம்பிக்கையை தருகிறது.

எம்.கலா, முதலியார்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com