தேசத் துரோகம் - தலையங்கம்

ஞாயிறன்று அயோத்தியில் நடந்த அட்டூழியம் நமது தேசத்தின் கவுரத்துக்கே இழுக்காகும். ஒரு மதச் சார்பான இலக்கை அடைவதற்கு ஏமாற்று வேலை

தேசத் துரோகம்

ஞாயிறன்று அயோத்தியில் நடந்த அட்டூழியம் நமது தேசத்தின் கவுரத்துக்கே இழுக்காகும். ஒரு மதச் சார்பான இலக்கை அடைவதற்கு ஏமாற்று வேலை. மிருக வெறிச் செயல்கள் ஆகியவற்றில் இறங்கக் கூட தயாரான நிலையில் இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சி இருக்கிறது என்பது நாட்டுக்கு அம்பலமாகியிருக்கிறது. இந்தியாவின் ஆளும்கட்சியோ முதுகெலும்பு இல்லாமல் செயல்படுவதில் புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறது. தன்னுடைய கையாலாகாத் தனத்தை வெட்கப்படத்தக்க, செயலற்ற, கையைக் கட்டிக் கொண்டிருக்கும் உத்தியாக காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டிருக்காவிட்டால், மதில்மேல் பூனையாக நடந்துகொள்ளுதல், நாசவேலை இவற்றின்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்று பாரதீய ஜனதா கட்சி நம்பியிராவிட்டால் கடந்த சில வருஷங்களாக மசூதி, கோவில் என்ற பெயரில் நீடித்து வந்த பிரச்சினை இந்த அளவுக்கு பூதாகாரமாக உருப் பெற்றிருக்காது. ஞாயிறன்று நடந்த அறிவுக்கு ஒத்துவராத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களால் ஏற்கெனவே வகுப்புவாத, தீவிரவாத போக்கால் நலிந்த நிலையில் உள்ள நமது சகோதரத்துவ உணர்வு இன்னும் பாதிபபுக்குள்ளாகும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை.

ஹிந்து சாம்ராஜ்யம் இங்கு நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறவர்களின் உள்ளங்களில் நீண்ட நாளாக ஊறிக் கிடக்கின்ற பத்தாம்பசலி கோஷங்களின் விளைவாகவே சரச்சைக்குரிய கட்டடம் பங்கப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கோவில் இருந்த இடத்தில், கோவிலை இடித்துவிட்டு பாபர் பெயரால் மசூதி ஒன்று கட்டப்பட்டது என்ற சரித்திரக் கால முறைகேட்டை சரி செய்ய வேண்டும் என்ற தங்களது வெறி உணர்வை, ஹிந்து சாம்ராஜ்யம் கோருவோர் மத்தியில் உள்ள தீவிரவாதிகள் ஒருபோதும் மறைத்ததில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இஸ்லாமின் பெயரால் ஹிந்துக் கோவில்களுக்கு என்ன நடந்ததோ அதற்கு பதிலளிக்கும் வகையில் "ஹிந்து மனோவிரதம்' நடைமுறைப்படுத்தப்படும் சகாப்தம் துவங்கிவிட்டது என்று தங்களுடைய சாதனை குறித்து அவர்கள் மார்தட்டிக் கொள்ளலாம். சரித்திரம் மாறக் கூடியது என்ற உண்மையை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிட்டார்கள் என்பது துரதிருஷ்டமானது. அதைவிட மோசமானது என்னவென்றால், இந்த "பங்காளி சண்டை'யில் இந்தியா பெரும் நஷ்டத்தைச் சந்திக்கிறது என்ற உண்மையை அவர்களுடைய தலைவர்கள் உணரவில்லை. தங்களுடைய குறுகிய நோக்கங்களுக்காக அவர்கள் மக்களில் ஒரு பகுதியினருடைய நசிந்து போன அச்சங்களையும், சந்தேகங்களையும் வலுப்படுத்தியிருக்கிறார்கள்.

அயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பெரும்பாலான பாஜக தலைவர்கள் கையை விரிக்கலாம். ஆனால் அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பும் அளவுக்கு யாரும் அறிவில்லாதவர்கள் அல்ல. அயோத்தியில் நடந்த அட்டூழியங்களும் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகியவற்றின் தலைவர்களின் சொல்படி நடப்பதற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை கடைசி நாள்களில் நடந்த சம்பவங்களும் உறுதி செய்கின்றன.

முதலில் எம்.பி.க்கள் யாரும் கரசேவையில் பங்கு கொள்ளக் கூடாது என்று பாஜக முடிவு செய்தது. ஆனால் அந்த முடிவு பின்னர் தலைகீழாக மாற்றப்பட்டது. இதற்கு யாரும் விளக்கம் தர முடியாது. முதலில் எடுத்த முடிவின் எதிரொலி மறைவதற்கு முன்னாலேயே கரசேவையில் பங்குகொள்ள பாஜகவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் "நானே செல்கிறேன்' என்று எல்,கே. அத்வானியே அறிவித்தார். அவர்கள் தங்களது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை தீவிரவாதிகளிடம் விட்டுவிட்டார்கள் என்பதை அதற்கடுத்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள், உறுதி செய்கின்றன.

உச்ச நீதிமன்ற ஆணை மீறப்படாது என்று உ.பி. முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த உறுதி மீறப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் வெட்கமில்லாமல் கைகழுவி விடப்பட்டது. அதற்குப் பிறகு முதல்வர் பதவியில் இருந்து விலகுவதைத் தவிர கல்யாண் சிங்கிற்கு வேறு வழியில்லை. சங்கிலித் தொடர் போல இடம்பெற்ற சம்பவங்களுக்கு கல்யாண் சிங் பலியாகிவிட்டாரா அல்லது வெறுமனே ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரா அல்லது அவரே அயோத்தியில் நடைபெற்ற சம்பவங்களைத் தூண்டிவிட்டாரா என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

சங்கிலித் தொடர்போல நடந்த சம்பவங்கள் அவர்கள் கையை மீறி நடந்ததாகக் கூறும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உச்சநீதிமன்றம் கோரியபடி பிரமாண வாக்குமூலங்களைத் தாக்கல் செய்துவிட்டு இத்தகைய எதிர்பாராத சம்பவத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினால் அதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிகவும் அச்சம் தருவது என்னவென்றால், இந்த நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு மாநில முதல்வரும், அவரது கட்சியும் ஏமாற்றுவதையே தங்களுடைய, நடைமுறை உத்தியாகக் கொண்டிருப்பதும், தாங்கள் நிச்சயமாக அமல்படுத்த விரும்பாத நீதிமன்ற ஆணையை அமல்படுத்துவோம் என்று உறுதி அளிக்கும் ஆணவப் போக்கும்தான்.

ஞாயிறன்று நடந்த சம்பவங்கள் பிரதமர் நரசிம்மராவின் அரசியல் அறிவுக் கூர்மைக்கு பெரும்பாராட்டு என எடுத்துக்கொள்ள முடியாது. இச் சம்பவம் குறிப்பாக எடுத்துக்காட்டுவது, எப்போது தேவையோ அப்போது செயல்படுவதில் அவர் காட்டும் தயக்கம்தான். முடிவு எடுக்காமல் இழுத்துப் போடும் போக்கை அவர் புதிய நிர்வாகக் கலாசாரமாக உயர்த்தியிருக்கிறார். ஒரு முடிவு எடுக்க வேண்டிய சிரமத்தைத் தவிர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர் காலம் கடத்திவந்தார்.அவர் போட்ட கணக்குகள் பலவாக இருக்கலாம்.

அர்ஜுன் சிங்கைவிட இப் பிரச்சினையில் ஒருபடி முன்னேறிவிட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் தேசத்துக்கு ஏற்படும் பேரழிவைத் தவிர்க்க பிரதமர் ஒருவர் உறதியாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் தவறிவிட்டார் என்பதுதான் அவருக்கு இறுதியாகக் கிடைத்த லாபம். இந்த முதுகெலும்பில்லாத கோழைத்தனம் இந்தியாவால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பெரும் பளுவைத் தந்திருக்கிறது.

அரசியல் லாபத்துக்காக ஆசைப்படுகிறவர்கள், கொள்கைப் பிடிப்பற்ற கும்பலினால் வழி நடத்தப்படுகிற தலைவர்கள், ராவும், டாக்டர் ஜோஷியும் என்பதை இப்போது உலகுக்கு உணர்த்திவிட்டார்கள். இத்தகையவர்களை சரித்திரம் மன்னிக்காது. அயோத்தியில் நடந்த அட்டூழியத்தின் பாதிப்பை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கையில் இறங்குவதுதான் அவர்கள் இப்போது செய்யக்கூடிய வேலை.

நிலைகுலைந்து போயிருக்கிற இந்த நாட்டின் நம்பிக்கை மீண்டும் நிலைப்படுத்தப்பட வேண்டும். இதனை "புதிய கரசேவை' - ஆக்கப்பூர்வமான கரசேவை ஒன்றினால்தான் சாதிக்க முடியும். இந்தக் கரசேவைக்கு குடியரசுத் தலைவரே தலைமை தாங்க வேண்டும். தவறுகளைச் சீர்செய்யும் நடவடிக்கையாக தேசீய ஒற்றுமை, அயோத்தியில் சமரசத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். துரோகம் இழைக்கப்பட்ட இந்த நாட்டுக்கு ராவ்களும், ஜோஷிகளும், கல்யாண் சிங்குகளும் இதனை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தையும், அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸின் கையாலாகாத்தனத்தையும் வன்மையாக கண்டித்து எழுதப்பட்ட தலையங்கம். (7.12.1992)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com