நிகழ்கால நூற்றாண்டின் சரித்திரம்!

1934 ஆம் ஆண்டு செப். 11-ஆம் தேதி (பாரதியின் 13-ஆவது நினைவு நாளில்) உதயமான "தினமணி'க்கு வயது 85 நிறைவு;
ஊரன் அடிகள்
ஊரன் அடிகள்

1934-ஆம் ஆண்டு செப். 11-ஆம் தேதி (பாரதியின் 13-ஆவது நினைவு நாளில்) உதயமான "தினமணி'க்கு வயது 85 நிறைவு; 86 தொடக்கம். 1933 மே 22-இல் பிறந்த எனக்கு வயது 86 நிறைந்து 87 நடைபெறுகிறது. தினமணிக்கு நான் ஓர் ஆண்டு மூத்தவன்.

எனது 22-ஆம் வயது முதல் 64 ஆண்டுகளாக "தினமணி' வாசகனாக உள்ளேன். இந்த நாளிதழை எழுத்தெழுத்தாக, அங்குலம், அங்குலமாகப் படித்து மகிழ்பவன். தினமணியின் தொடக்க கால ஆசிரியர் "பேனா மன்னர்' டி.எஸ்.சொக்கலிங்கத்தை நான் நேரில் அறியேன்.
 

அடுத்து வந்த ஏ.என்.சிவராமன் (ஏ.என்.எஸ்.) 43 ஆண்டு காலம் ஆசிரியர் பணி ஆற்றியவர். "கணக்கன் அரைகுறைப் பாமரன்' என்ற பெயரில் அரிய, பெரிய, திட்ப, நுட்பமான விஷயங்களில் எளிய, இனிய நடையில் கட்டுரைகளை எழுதுவார். ஏ.என்.சிவராமனின் எழுத்துகள் எமக்கு மிகவும் பிடிக்கும்.

தினமணியின் தலையங்கம், ஆசிரியர் உரை மிகவும் தரமானவை. நடுப்பக்கக் கட்டுரைகள் எல்லாம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. தமிழண்ணல், இந்திரா பார்த்தசாரதி, வா.செ.குழந்தைசாமி, க.ப.அறவாணன் முதலிய பேரறிஞர்கள் ஆய்வுக் கட்டுரை மன்னர்களாக விளங்கினர். பிரேமா நந்தகுமார், சிற்பி பாலசுப்பிரமணியம், திருக்கோவிலூர் டி.எஸ்.தியாகராசன், பேராசிரியர் தி.இராசகோபாலன் முதலானோர் இன்றும் நடுப்பக்கக் கட்டுரை மன்னர்கள்.

1980-90-ஆண்டுகளில் தினமணியின் பாதி அளவில் "தினமணி சுடர்' என்றும், "தமிழ்மணி' என்றும் நான்கு பக்க இணைப்புகள் வாரந்தோறும் வெளிவந்தன. உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் தமிழண்ணல் (மதுரைப் பல்கலைப் பேராசிரியர் பெரியகருப்பன்) தொடர்ந்து பல வாரங்கள் எழுதினார். வாசகர் பலர் எழுதிய பாராட்டுகள், திருத்தங்கள், கருத்துகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட்டன.

தமிழ்மணியின் மொழியியல் பகுதியில் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா எழுதிய பிராகிருத இலக்கியம், தமிழும் தெலுங்கு இலக்கியமும், தமிழும் கன்னடமும் என்ற கட்டுரைகள்(1988) வெளிவந்தன. பிறமொழி அறியாத தமிழ் அன்பர்களுக்கு இவை ஒப்பாய்வு அறிவைத் தந்தன. எழுத்துச் சீர்திருத்தம், கலைச் சொல்லாக்கம், மதமாற்றத் தடைச் சட்டம், தமிழில் பெயர்ப் பலகை எழுதுதல் என்ற பொருள்களில் அந்தக் காலத்தில் விவாதக் கட்டுரைகள் பல வெளிவந்தன. இவற்றை வா.செ.குழந்தைசாமி, வ.சுப.மாணிக்கம் போன்றோர் எழுதினர்.

1957 முதல் 2002-ஆம் ஆண்டு வரை நடுப்பக்கக் கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, தொல்லியல், பல்வேறு துறைச் செய்திகள் அனைத்தையும் கொண்ட "பேப்பர் கட்டிங்' ஆல்பம் எமது ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு சிறப்பு. சுமார் ஒரு லட்சம் நறுக்குகள் தினமணி அளவில் அமைக்கப்பட்ட பெரிய பெரிய ஆல்பங்களில் ஒட்டி வைத்திருக்கிறோம். செய்தித்தாள் நறுக்குகள், தொகுதி 1, 2, 3, 4 என்று எண்கள் இடப்பட்டவை. இந்து சமயம், கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம், காந்தி, வள்ளலார் என்று தனித்தனி ஆல்பங்கள் உண்டு. சங்கராச்சாரியார், குன்றக்குடி அடிகளார், கிருபானந்தவாரியார், கி.ஆ.பெ.விசுவநாதம் பெயர்களில் தனி ஆல்பங்களும் உண்டு.

தினமணி ஆசிரியராக இருந்த ஐராவதம் மகாதேவன் எமக்குப் பழக்கமானவர். தற்போது ஆசிரியராக உள்ள கி.வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர் பணி ஏற்ற காலத்தில் இருந்தே எமக்குப் பழக்கமானவர். அவருடைய தலைமையில் நாமும், எம்முடைய தலைமையில் அவரும் பல நிகழ்ச்சிகளில் பங்குகொண்டுள்ளோம்.

85 ஆண்டு காலப் பணியில் தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் இசை, கலை, பண்பாடு, சமூகம், சமயம் ஆகியவற்றுக்கும் பெரிய சேவையை தினமணி செய்திருக்கிறது. 85 ஆண்டுகால தினமணியைப் புரட்டினால், ஒரு நிகழ்கால நூற்றாண்டின் சரித்திரம், வரலாறை அறிய வாய்ப்பாகும். 100 டாக்டர் பட்டங்களுக்கு ஆராய்ச்சி செய்ய இடமுண்டு.

வருகிற 2023-ஆம் ஆண்டில் வள்ளலாரின் 200-ஆவது பிறந்த நாள் விழா வருகிறது (1823-2023). அருள்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் 100-ஆம் ஆண்டு, எமது 90-ஆம் ஆண்டு அதனோடு சேர்ந்து வரும். அத்தகைய பெரிய விழாவில் தினமணிக்குப் பாராட்டு விழாவும் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம். வாழ்க தினமணி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com