முழுமையான தமிழ்ப் பத்திரிகை

தனி மனிதருக்கு அறுபதாண்டுகள், பற்று நீக்கிய வானப் பிரஸ்த நிலையின் துவக்கம். ஆனால், "தினமணி' போன்ற நிறுவனத்துக்கோ, அது யௌவனத்தின் பொலிவு.
ரா.அ. பத்மநாபன்
ரா.அ. பத்மநாபன்

தனி மனிதருக்கு அறுபதாண்டுகள், பற்று நீக்கிய வானப் பிரஸ்த நிலையின் துவக்கம். ஆனால், "தினமணி' போன்ற நிறுவனத்துக்கோ, அது யௌவனத்தின் பொலிவு.

இத் தருணத்தில், "தினமணி'யை அதன் முதல் இதழிலிருந்தே அறிந்தவன் என்ற முறையில், "தினமணி' "இன்னுமொரு நூறாண்டு வாழ்க!'' என்று வாழ்த்துகிறேன்.

"தினமணி' மட்டுமல்ல, அதன் முன்னோடியான "இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸையும் அதன் முதல் இதழ் முதலாகவே அறிந்தவன் நான்.

1932-ம் ஆண்டு, மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை எழுதிவிட்டு, ஏப்ரலில் பொள்ளாச்சி நகரில் உறவினர் இல்லத்தில் இருந்த சமயம், "இந்தியன் எக்ஸ்பிரஸ்''ஸின் முதல் இதழ் வந்தது, பார்த்தேன்.

"தமிழ்நாடு'' நாளிதழ் ஆசிரியரும் "தென்னாட்டுத் திலகர்'' என்று பெயர் பெற்றவருமான டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு "எக்ஸ்பிரஸ்'ஸை துவக்கினார். ஆனால் இரண்டு மாதமே தாக்குப் பிடிக்க முடிந்தது. முடிவில் "எக்ஸ்பிரஸ்'ஸுக்காக தமக்கு அச்சு யந்திரம் ஒன்றைத் தவணையில் கொடுத்திருந்த எஸ். ஸதானந்து என்ற பம்பாய் இளைஞருக்கே புதுப் பத்திரிகையைத் தந்துவிட்டார், நாயுடு.

ஸதானந்தும் தமிழர்தான். அவரது தந்தையார் சி.வி. ஸ்வாமிநாத ஐயரும் புகழ் பெற்ற பத்திரிகையாளர். "சுதேசமித்திரன்' நாளிதழில், அதன் நிறுவன ஆசிரியர் ஜீ. சுப்பிரமணிய ஐயருக்கு வலது கையாக விளங்கியவர். தவிரவும் சிறந்ததொரு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி, அதில் பி.ஆர். ராஜம் ஐயரின் "கமலாம்பாள் சரித்திரத்'தை வெளியிட்டவர்.

இளைஞர் ஸதானந்தின் ஆர்வமெல்லாம் செய்தித் துறையில் இருந்தது. அக்காலத்தில் முற்றும் அந்நியர் வசமே இந்தியாவிலுள்ள செய்தி நிறுவனங்கள் இருந்தன. இந்தியாவுக்கு சுயாட்சி வழங்குவது பற்றி பிரிட்டிஷ் அரசு நினைத்த காலம் அது. அது பற்றி லண்டனில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் விவாதம் நடக்கும். இந்திய விடுதலைக்கு ஆதரவாக ஒரு சிலர், முக்கியமாக பிரிட்டிஷ் தொழிற் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அதைச் செய்தியாக இந்தியாவுக்கு அனுப்பும்போது, பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ராய்ட்டர் (Reuter), செய்திகளை விவரமாகத் தராது; இருட்டடிப்புச் செய்தோ, திரித்தோ, இஷ்டத்துக்கு மாற்றித் தரும். இந்திய விடுதலைப் போர் மீது அவ்வளவு கருணை!!

இதனால் வெறுப்புற்ற ஸதானந்து, சுதந்திரமாக, இந்திய தேசியத்தைக் கருத்தில்கொண்டு நடக்கும் ஓர் இந்திய செய்தி ஸ்தாபனம் நிறுவ விரும்பினார். பம்பாயிலுள்ள தொழில் வல்லுநர்களான பல கோடீசுவரர்களின் ஆதரவு ஸதானந்துக்கு இருந்தது.

முக்கியமாக, இந்தியாவில் விமானம் கட்டும் தொழிலையும், கப்பல் கட்டும் தொழிலையும் தமது தனிப்பட்ட சொந்த முயற்சியால் உருவாக்கியவரான வால்சந்து ஹீராசந்து என்ற கோடீசுவரரின் ஆதரவு ஸதானந்துக்கு இருந்தது.
இதன்பயனாக, ஸதானந்து "ஃப்ரீ ப்ரஸ் நியூஸ் ஸர்விஸ்'' என்ற சுதேசி செய்தி நிறுவனத்தைத் துவக்கினார். லண்டனிலிருந்து உலகச் செய்திகளையும் பிரிட்டிஷ் செய்திகளையும் தமக்கு அனுப்ப "மணிக்கொடி ஸ்ரீநிவாஸன்' என்ற சிறந்த பத்திரிகையாளரை லண்டனுக்கு அனுப்பினார்.

அவரும், செலவைப் பாராமல், பல அரிய செய்திகளை, ராய்ட்டர் தராத செய்திகளை, பம்பாய்க்கு அனுப்பி வந்தார். இந்தியாவின் வெவ்வேறு நகரங்களிலும் செய்தி சேகரித்து அனுப்பவும் ஸதானந்து தனி ஏற்பாடு செய்தார். இந்தியச் செய்திகளைச் சேகரித்து வழங்குவதில் ராய்ட்டரின் கிளையாக விளங்கிய அúஸாஸியேட்டட் பிரஸ்ஸும் ஆட்டம் கண்டது.

விரைவில் "ஃப்ரீ ப்ரஸ்'' செய்தி நிறுவனம் நல்ல வளர்ச்சியுற்றது. ஆனால், பிரிட்டிஷ் போட்டியும் கடுமையாகவே இருந்தது.

ராய்ட்டர் தராத பல இந்திய ஆதரவுச் செய்திகளை ஸதானந்தின் செய்தி நிறுவனம் பாரத நாடெங்குமுள்ள எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வந்தது. ஆனால் பெரும்பாலோருக்கு அவரை ஆதரிக்க வேண்டுமென்ற தேசிய உணர்ச்சி இல்லை. இதனால், "ஃப்ரீ பிரஸ் பத்திரிகைகள்'' என்ற பெயரில், நாட்டின் பல ஊர்களில் பல மொழிகளில் நாளிதழ்கள் துவக்கவும், அவைகளை மலிவான விலையில் விற்கவும் ஸதானந்து துணிந்தார். இவ்வாறு, அவரது விருப்பத்துக்கு ஒத்தபடி, சென்னை "இந்தியன் எக்ஸ்பிரஸ்' வலிய அவர் கைக்கு வந்துவிட்டது!

சென்னை "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் கே. சந்தானத்தாலும், நிர்வாகி எஸ்.வி. ஸ்வாமியாலும், கிட்டத்தட்ட சுதந்திரமாக நடத்தப்பட்டு வந்தது. சென்னை நகரின் முதல் காலை இதழான "எக்ஸ்பிரஸ்' ஆரம்ப முதலே மகாத்மா காந்தியையும், இந்திய தேசிய காங்கிஸையும் தீவிரமாக ஆதரித்தது. ஏற்கெனவே இருந்த "ஹிந்து'' நாளிதழ் நிதானப்போக்குடன் இருந்தது. வெள்ளையர் நாளிதழான "மெட்ராஸ் மெயில்' தேசியத்துக்கு எதிரி! ஆக, தென்னாட்டில் தேசியத்தை வளர்த்ததில் பெரும் பங்கும் "எக்ஸ்பிரஸ்'ஸைச் சேர்ந்ததாயிற்று.

"எக்ஸ்பிரஸ்'' ஓரளவு வெற்றிகரமாக இயங்கவே, தமிழிலும் ஒரு நாளிதழ் வெளியிட "எக்ஸ்பிரஸ்' நிறுவனம் தீர்மானித்தது. அதுவே "தினமணி'.1934-ம் ஆண்டு, பாரதி நினைவு தினமான செப்டம்பர் 11-ஆம் தேதி இதன் முதல் இதழ் வெளிவந்தது.

"தினமணி'' என்ற பெயர் ஒரு போட்டியின் மூலம் கிடைத்த பெயராகும். தாங்கள் விரைவில் துவங்கவுள்ள ஒரு தேசிய நாளிதழுக்கு சுருக்கமான, பொருள் பொதிந்த பெயர் தெரிவிக்குமாறு "எக்ஸ்பிரஸ்'' வாசகர்களைக் கேட்டுக் கொண்டார்கள். தக்க பெயர் தெரிவிப்பவருக்கு ரூ.10 (ஆம், ரூபாய் பத்துதான்!) பரிசாக அறிவிக்கப்பட்டது. டி.என். அட்சயலிங்கம் என்ற மயிலாப்பூர்வாசியும், எஸ். ஸ்வாமிநாதன் என்ற தியாகராயநகர்வாசியும் ஒரே பெயரைத் தெரிவித்தார்கள்; அவர்கள் இருவருமே தெரிவித்த "தினமணி'' என்ற பெயர் ஏற்கப்பட்டு, பரிசுத் தொகை தலைக்கு ரூ.5 எனப் பங்கிடப்பட்டு அளிக்கப்பட்டது! 

"தினமணி'' என்ற சொல் சூரியனைக் குறிக்கும்; தினமும் ஒலிக்கும் மணி எனவும் பொருள்படும். தியாகராஜ ஸ்வாமிகள் "தினமணி வம்ச'' என்று பாடியிருப்பதும், இலங்கையில் "தினமினா'' என்ற பெயர் கொண்ட சிங்கள நாளிதழ் இருந்ததும், இப்பெயரைத் தெரிவிக்கத் தூண்டியிருக்க வேண்டும். தெருவில் கூவி விற்கும் பத்திரிகைப் பையன்கள் எளிதில் உச்சரிக்கத் தக்க பெயர் என்ற காரணமும் கவனிக்கப் பெற்றது.

"தினமணி'' பாரதி நினைவு தினத்தன்று வெளிவரத் தொடங்கியது. அதில், சம்பந்தப்பட்ட அனைவருமே மகாகவி பாரதியிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர்கள்.

நாளுக்கு நாள், "தினமணி'' புதுப்புது பயனுள்ள அம்சங்களுடன் புதுப் பொலிவு பெற்று, சிறந்த ஆங்கில மொழிப் பத்திரிகைகளுக்கு இணையாக விளங்குகிறது. தமிழ் மொழியிலுள்ள ஒரே முழுமையான பத்திரிகை "தினமணி'' என்பதில் ஐயமில்லை.

முதன் முதலாக ஆசிரியர் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரபல "சுதந்திர சங்கு'' தேசிய வார மும்முறை ஆசிரியராக ஏற்கெனவே இருந்த "சங்கு'' சுப்பிரமணியம். "சங்கு'' சுப்பிரமணியமும் பிறகு ஆசிரியரென அறிவிக்கப்பட்ட தெ.ச. சொக்கலிங்கம், அவருடைய சகா அ.ந. சிவராமன், அவர்களுக்கு உறுதுணையாகப் பின்னணியில் இருந்த வ.ரா. (வ. ராமஸ்வாமி), ஸதானந்தின் வலக்கை கே. ஸ்ரீநிவாஸன் அனைவருமே தேர்ந்த பாரதி பக்தர்கள், மகாத்மாகாந்தியையும் தேசிய காங்கிரஸ் மகாசபையையும் தீவிரமாக ஆதரித்த பத்திரிகையாளர்கள்.

பத்திரிகை தோன்றுவதற்கு மூன்று தினங்கள் முன்னதாக, "இந்தியன் எக்ஸ்பிரஸ்''ஸில் வெளியான முழுப் பக்க விளம்பரம், "தினமணி'' கட்சி சார்பற்றதாக விளங்குமென்றும், எனினும் அன்றைய சூழ்நிலையில் தேசிய காங்கிரஸை வலுவாக ஆதரிக்குமென்றும் தெரிவித்தது. மேலும், மற்ற பிரபல நாளிதழ்கள் சந்தா கட்டிப் பெறும் ராய்ட்டர் முதலிய செய்தி ஸ்தாபனச் செய்திகளுடன், ஃப்ரீ ப்ரெஸ் நிறுனங்களின் பிரத்தியேகமான செய்திகளையும் வெளியிட்டு, முழுமையான செய்திச் சுரங்கமாக விளங்குமென்றும் எடுத்துக் காட்டப்பட்டது. வேறெங்கும் கிடைக்காத செய்திகள் "எக்ஸ்பிரஸ்'' போலவே "தினமணி''யிலும் பிரசுரமாயின.

ஆசிரியர் குழுவில் ஏற்கெனவே தெரிந்திருந்த அனுபவமிக்க பத்திரிகையாளர்களுடன் ஏ.ஜி. வெங்கடாச்சாரி, ந. ராமரத்தினம், வி. சந்தானம் போன்ற திறமைசாலிகளும் சேர்க்கப்பட்டுள்ளதை விளம்பரம் குறிப்பிட்டது.

"தினமணி''யின் முதல் இதழில் முதல் தலையங்கம், பத்திரிகை மூன்று குறிக்கோள்கள் கொண்டதெனத் தெரிவித்தது. முதலாவதாக, பாரத மக்கள் நாட்டு விடுதலைக்காக நடத்தும் போராட்டத்துக்குத் தங்குதடையற்ற ஆதரவு தருவது; இரண்டாவதாக, தமிழ் மக்கள் மனதிலிருந்து அடிமை உணர்ச்சியை அறவே நீக்குவது; மூன்றாவதாக, நாட்டு மக்களிடையே நிலவும் பலவித ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து, சமூகத்தில் சமநீதி வழங்குவது.

இன்றளவும், இந்தக் குறிக்கோள்கள் பின்பற்றப்பட்டு வருவது கண்கூடு. சுதந்திரத்துப் பின், காங்கிரஸ் - ஆதரவென்பது, சிறந்த ஆட்சிக்கு ஆதரவு என மாறியதும் இயல்பே.

முதல் நாள் இரண்டாவது தலையங்கம், விடுதலை வீரரான பாரதிக்குப் புகழாரம் சூட்டியது.

இவை தவிர, வ.ரா. பெயருடன் வெளிவந்த ஆசிச் செய்தியில், "பாரதியின் பாதையே வழிகாட்டி என்று சிறப்பித்து, "தினமணி'' அவ்வழியில் பீடுநடை போட்டு தமிழ் இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இணையற்ற சேவை செய்யுமென்று' நம்பிக்கை தெரிவித்தார் அவர்.

"தினமணி'' நாளிதழ் 1934-இல் தோன்றிய சமயம், "சுதேசமித்திரன்'' என்ற பழைய நாளிதழும், டாக்டர் நாயுடுவின் "தமிழ்நாடு'' இதழும் இருந்தன. "மித்திரன்'' நடை பழைமை வாய்ந்ததாக இருந்தது. நீண்ட வாக்கியங்கள். நன்கு படித்தவர்களே புரிந்து கொள்ளக்கூடிய "பாங்கு''. "கிழடு தட்டிய பத்திரிகை'' என்ற புகழ்.

"தமிழ் நாடோ'' செல்வாக்கிழந்து நலிந்து வந்தது.

இந் நிலையில், விறுவிறுப்பான புது நடையில், பாமரருக்கும் எளிதில் விளங்கும் வாக்கியங்களில், உலக நடப்புச் செய்திகளும் இந்திய அரசியல் விவரங்களும் தந்தது "தினமணி''. தெரியாத ஊர், பேர் செய்தியில் வந்தால், விளக்கம் தந்தது. பத்திரிகைப் பத்திகள் "மொத்தையாக' இராமலிருக்க, பாராக்கள் நிறைய இருந்தன. செய்தித் தலைப்புகள் ரத்தினச் சுருக்கமாக, மனதைக் கவரும் வகையிலும் இருந்தன.

"மித்திரன்'' புதிய பத்திரிகையின் போட்டியைத் தவிர்க்கும் நோக்கில், "காங்கிரஸ் தோன்றுமுன் தோன்றிய பத்திரிகை'' என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு சுவரொட்டிகள் ஒட்டியது. "கிழடு தட்டாத பத்திரிகை'' என்று பதில் சுவரொட்டிகளை "தினமணி' ஒட்டிற்று!

விரைவில், "தினமணி'', தமிழ் நாளிதழ்களில் முதன்மை பெற்றுவிட்டது. விளம்பரங்களும் வந்து குவியலாயின.

வெளியூர்களுக்கு ரயில் மூலமே பத்திரிகைப் பிரதிகள் அனுப்பப்பட்டு வந்தன.
சந்தா பெருகிய போதும் கடைகளில் விற்பனை நிறைய இருந்தும் செலவும் கூடியதால் "எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகள் நிதிப் பற்றாக்குறையால் தவித்தன. 50,000 ரூபாய் கடன் வாங்கவும் நேர்ந்தது.

இதற்கிடையில், பம்பாயிலிருந்து சென்னை வந்த ஸதானந்துக்கும் சென்னை நிர்வாகிகளுக்கும் சில கருத்து வேற்றுமைகள் உருவாயின. ஒரு நாள், ஸதானந்து தமது அதிகாரத்தை நிலைநாட்ட, காலையில் பத்திரிகை அலுவலகக் கதவுகளைப் பூட்டிவிட்டார். இரவு நேரம் வேலை பார்த்துவிட்டு, அலுவலகத்தில் தூங்கிய சில ஆசிரியர்கள் உள்ளே இருந்தார்கள். அச்சகம் மட்டும் பூட்டப்படவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, இரவில் வந்து பாக்கி நின்ற பல செய்திகளை அந்த ஆசிரியர்கள் மொழிபெயர்த்து, மாடி ஜன்னல் வழியே கயிறு கட்டிக் கீழே விட்டார்கள். புதிதாக வந்த செய்தித் தந்திகள் கயிறு வழியே மேலே அனுப்பப்பட்டன. அவையும் மொழி பெயர்த்துக் கீழே கயிறு மூலம் வந்தன. மொழி பெயர்க்கப்பட்ட செய்திகள் அச்சகத்தில் விரைவாக அச்சுக் கோக்கப்பட்டன. திருத்தப்படிகள் கயிறு வழியே மேலே சென்று, திருத்தப்பட்டுக் கீழே வந்தன.

பத்திரிகைகளின் சென்னை நிர்வாகிகள், கோர்ட்டை அணுகி, பூட்டை உடைத்து உள்ள செல்ல பிற்பகலாகி விட்டது. இருந்த போதிலும், சரியான நேரத்தில் பத்திரிகை அச்சு வேலைகள் யாவும் முடிந்து உரியபடி வெளிவந்தது!
1936-ஆம் ஆண்டு, கடனைத் தீர்க்க முடியாத நிலையில், "எக்ஸ்பிரஸ்'', "தினமணி'' இரண்டும் ராம்நாத் கோயங்கா கைக்கு மாறின. தேசப்பற்று நிறைந்த அவர்தான் "டிபெஞ்சர் கடனாக'' பெருந்தொகை தந்திருந்தார்.

ராம்நாத் கோயங்கா பத்திரிகை உலகிற்குப் புதியவரென்றாலும், நிர்வாகத் திறமை கொண்டவர். ரயில் மூலம் பத்திரிகைப் பிரதிகளை வெளியூருக்கு அனுப்புவதில் ஏற்பட்ட காலதாமதத்தைத் தவிர்க்க, தமது சொந்த மோட்டார் வண்டிகள் மூலம் பத்திரிகைப் பிரதிகளை வெளியூர்களுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார்.

பத்திரிகைகளெல்லாம் "தினமணி'' உட்பட - காலைப் பத்திரிகைகள் என இருந்ததால், இரவு 11 மணிக்குள் ஆசிரியர்கள் முடிவாக அச்சுக்கு அனுப்பும் பத்திரிகைப் பக்கங்கள், இரவு இரண்டு மணிக்குள் அச்சிடப்பட்டு, காலை ஆறு மணி அளவில் எல்லா வெளியூர்களிலும் கிடைக்கலாயின. இதனால், முன்னிரவு வரை வந்த செய்திகளை வெளியூர் வாசகர்களும் காலையில் படிக்க வசதி உண்டாயிற்று.

1943-இல் சொக்கலிங்கம் "தினமணி'யிலிருந்து வெளியேறி, "தினசரி' என்ற புதிய பத்திரிகை துவக்கினார். ஏ.என். சிவராமன் "தினமணி' ஆசிரியர் ஆனார். அது முதல், சில ஆண்டுகளுக்கு முன் அவர் ஓய்வுப் பெற்றது வரை, அவரது மேற்பார்வையில் "தினமணி'' ஆங்கில நாளேடுகளுக்கு இணையாக விருத்திவாயிற்று.

சிவராமன் பலதரப்பட்ட புலமை கொண்டவர். நாட்டு அரசியல், உலக அரசியல், பொருளாதார செலாவணி விஷயங்கள், விவசாயம் - என்று அவர் கட்டுரைத் தொடர்கள் எழுதித் தமிழ் வாசகர்களின் அறிவு நிலையை மேம்படுத்தினார்.

அவருக்கு இணையாக அதிபர் கோயங்காவும், நிர்வாகத்திலும், வெளியூர்களின் பதிப்புத் துவங்குவதிலும், புதிய வார வெளியீடுகளைத் தோற்றுவிப்பதிலும் செயற்கரிய சாதனை செய்தார் அவருடைய நிர்வாகத்தில். "துமிலன்'' (என். ராமஸ்வாமி) ஆசிரியப் பொறுப்பில் "தினமணி கதிர்' தமிழில் 1 லட்சம் பிரதிகள் விற்ற முதல் பத்திரிகையாயிற்று. இன்றும் "கதிர்'' தனித்தன்மையோடு விளங்குவதைக் காணலாம்.

சென்ற இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் காகித நெருக்கடியால் "தினமணி'' நான்கே பக்கத்துக்குச் சுருங்க வேண்டியதாயிற்று வார இறுதி இதழ்கள். கட்டுரை, கதைகளுடன் இரண்டு பக்கம் அதிகம் கொண்டு வந்தன.

"தினமணி''யும் "எக்ஸ்பிரஸ்''ஸும் துவங்கிய காலத்தில் செய்திகள் தந்தி மூலமே பெறப்பட்டு கிடைத்து வந்தன. ஆதலால் சென்னையில் தலைமைத் தபால் தந்தி அலுவலகத்துக்கும், ராய்ட்டர் - அúஸாஸியேட்டட் பிரஸ் அலுவலகத்துக்கும் அருகே மூக்கர் நல்லமுத்து செட்டி தெருவில் அவை இருந்து வந்தன. யுத்த காலமான 1940-ஆம் ஆண்டு, பெப்ருவரி 10-ஆம் தேதி, "தினமணி'', "இந்தியன் எக்ஸ்பிரஸ்'', "ஆந்திர பிரபா'' (தெலுங்கு நாளிதழ்) அலுவலகத்தில் பெரியதொரு தீவிபத்து நேர்ந்தது. நல்ல வேளையாக உயிர்ச் சேதம் ஏதுமில்லை. ஒரு சில அச்சுயந்திரங்களும் காகிதமும் தீக்கிரையாயின.

இந்தப் பெரும் நெருக்கடியில் சென்னையிலிருந்து பிற நாளிதழ்கள் உதவிக்கரம் நீட்டின. "எக்ஸ்பிரஸ்'', "தினமணி'' இரண்டும் "மெயில்'', "சுதேசமித்திரன்'' அச்சகங்களில் அச்சிடப் பெற்று வெளிவந்தன "எக்ஸ்பிரஸ்'' 3 நாட்களும், "தினமணி'' ஒரே நாளும் வரவில்லை.

இச்சமயத்தில் மவுண்ட் ரோட்டில் "ஹிந்து'' அலுவலகம் இருந்து வந்த பழைய கட்டடம் காலியாக இருக்கவே, "ஹிந்து'' அதிபர் கே. ஸ்ரீநிவாஸன் அவ்விடத்தை "எக்ஸ்பிரஸ்' குழுவின் பத்திரிகைகள் நடத்த அளித்தார். புது இடத்தில் புதுப்பொலிவு பெற்றன "எக்ஸ்பிரஸ்'' இதழ்கள்.

இதற்குச் சில ஆண்டுகளில், ராம்நாத் கோயங்கா, மவுண்ட் ரோடு ஸ்பென்ஸர் கம்பெனி மூலையில், உள்ளடங்கியிருந்து 32.4 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அருமையான இடத்தை அங்கு முன்பு இருந்த இங்கிலீஷ் கிளப்பிடமிருந்து வாங்கினார். புது இடத்தில், தினப் பத்திரிகை அலுவலகத் தேவைக்கேற்ப ஒரு பெரிய மாடிக் கட்டடம் எழுந்தது. புதிய உயர்தர, படுவேக அச்சு யந்திரமும் அமைக்கப்பட்டது. விற்பனை பெருகியதற்கொப்ப இந்த யந்திரம், மிக வேகமாக இயங்கி, பல்லாயிரக்கணக்கான பிரதிகளை அழகாக அச்சிட்டு மடித்து, பக்கம் வாரி அமைத்து, எண்ணிக்கை தெரிவித்து, மோட்டார்களில் ஏற்றியனுப்பத் தயாரான நிலையில் தந்தது. சென்னையிலுள்ள மிகப் பெரிய, மிக வேகமான அச்சு யந்திரம் என்ற பெயரும் பெற்றது.

தேசபக்தி நிறைந்த ராம்நாத் கோயங்கா 1942-இல், மகாத்மா காந்தி விரும்பியபடி, பிரிட்டிஷ் அரசின் செய்தித் தணிக்கையைக் கண்டிக்கும் வண்ணம் தமது பத்திரிகைகள் அனைத்தையும் சில வாரங்கள் மூடிவிட்டார். ஆனால், ஓடாது நின்ற அச்சு யந்திரத்தில், 1942 அடக்கு முறை பற்றிய செய்திகளைத் திரட்டி "பாழடிக்கப்படும் இந்தியா'' (India Ravaged) என்ற நூலாக ரகசியமாக அச்சடித்து, ரகசியமாகவே உலகெங்குமுள்ள பலதேச பார்லிமெண்ட்களின் அங்கத்தினர்களுக்கு அனுப்பி வைத்தார்! இந்தியாவில் 1942-இல் பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த கொடுமைகளை உலக மக்கள் உணர்ந்தனர். இந்த நூலின் பிரதியை இந்தியாவில் தேடு தேடென்று தேடினர் அதிகாரிகள்! கிடைக்கவில்லை! இன்று இந்நூலின் பிரதி ஒன்று "தினமணி'' ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக உள்ளது.

ராம்நாத்ஜி கோயங்காவின் எல்லாப் பத்திரிகைகளுமே துணிவுக்கும், தீமையைத் தோண்டியெடுத்து அம்பலப்படுத்துவதற்கும், பட்சபாதமற்ற போக்குக்கும் பெயர் பெற்றவை. இதனால், சுதந்திரத்துக்குப் பின்னரும் "தினமணி'' முதலிய பத்திரிகைகள் பல அதிகார பீடக் கட்சிகளின் கோபத்துக்கு இலக்கானதுண்டு. ஆனால், இன்றளவும், "தினமணி''யோ, பிற எக்ஸ்பிரஸ் குழுப் பத்திரிகைகளோ, பத்திரிகா தர்மத்தை விட்டுக் கொடுத்ததில்லை. அத்துடன், நாளுக்கு நாள், "தினமணி'' புதுப்புது பயனுள்ள அம்சங்களுடன் புதுப் பொலிவு பெற்று, சிறந்த ஆங்கில மொழிப் பத்திரிகைகளுக்கு இணையாக விளங்குகிறது. தமிழ் மொழியிலுள்ள ஒரே முழுமையான பத்திரிகை  "தினமணி'' என்பதில் ஐயமில்லை.

தினமணி கதிர், செப்டம்பர் 11, 1994

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com