Enable Javscript for better performance
Editorial Article published on the completion of 60 years | Dinamani 85 Editorial Articles- Dinamani

சுடச்சுட

  

   

  அர்த்தமுள்ள அறுபது

  தினமணி அறுபது ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

  அர்த்தமுள்ள அறுபது ஆண்டுகள். கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது எழுத்தில் விவரிக்க இயலாத பெருமிதமும், மனநிறைவும் ஏற்படுகிறது. எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கும்போதோ பொறுப்புணர்வும், கடமை உணர்ச்சியும் மேலிடுகின்றன. 

  தினமணியின் அறுபது ஆண்டுகாலச் சரித்திரம் ஒரு தனி நாளிதழின் சரித்திரம் மட்டுமல்ல. அது தமிழ் மக்களின் சரித்திரம்.

  மகாகவியின் நினைவு நாளில், மகாகவி விட்டுச் சென்ற பணிகளைத் தொடரும் வேட்கையோடு துவங்கிய தினமணி, மூன்று லட்சியங்களை அறிவித்தது. நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தருவது; தமிழ் மக்கள் மனத்தில் இருந்துவரும் அடிமைத்தனத்தை அடியோடு ஒழிக்க ஓயாது பாடுபடுவது; சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவது.

  இன்றளவும் இந்த லட்சியங்களில் இருந்து விலகாமல் செயல்பட்டு வருகிறது தினமணி. இந்த அறுபது ஆண்டுகளில் தினமணி எத்தனையோ அருஞ்செயல்களை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் விட அரசியல் நெருக்கடி, வணிக நிர்பந்தங்கள், தொழில்நுட்ப முன்னேற்றம் உருவாக்கி உள்ள சூழ்நிலைகள், இவற்றுக்குத் தனது ஆரம்ப கால லட்சியங்களை பலியிட்டு விடாமல், தொடர்ந்து மக்கள் பணியில் இடையறாது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதுதான் தினமணியின் சாதனைகளிலேயே மிகப் பெரியது. இந்தச் சாதனைகளுக்கு அடித்தளமாக இருப்பது பெருமைக்குரிய எங்கள் மூதாதையரின் ஆன்ம பலமும், வாசகர்களின் ஆதரவு பலமும்தான்.

  பெரியவர் ராம்நாத் கோயங்காவின் மன உறுதியையும், சமூக நோக்கையும் நாடறியும். தினமணியின் ஆரம்ப கால ஆசிரியர் சொக்கலிங்கம் அவர்கள், "களம் பல கண்டவர், வெற்றி பல கொண்டவர்'. தினமணியின் ஆணிவேராக இருந்துவரும் ஏ.என்.சிவராமன் அவர்கள், விளம்பரத்தை விரும்பாமல், "உருப்படியான வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கைள் கொண்டவர்'. தினமணியோடு தொடர்பு கொண்ட சுதந்திரம் சங்கு சுப்பிரமணியம், ஏ.ஜி.வெங்கடாச்சாரி, ந.ராமரத்தினம், வி.சந்தானம், புதுமைப்பித்தன், இளங்கோவன், துமிலன், நா.பார்த்தசாரதி, சாவி, ஐராவதம் மகாதேவன், கஸ்தூரிரங்கன் போன்றவர்கள் தத்தம் திறமைக்காகவும், தமிழ் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றியுள்ள பணிகளுக்காகவும் புகழ் பெற்றவர்கள். தினமணியில் எழுதியவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால், அது, தமிழ்நாட்டின் அறிஞர்கள், தரமான படைப்பாளிகள் யார் - எவர் (Who's Who) என்ற பட்டியலாக இருக்கும். இந்தப் பிறந்த நாளில் இந்தப் பெருமக்கள் அனைவரின் ஆசியையும் மானசிகமாக வேண்டுகிறோம்.

  தரமான பொருள் தமிழகத்தில் வெற்றி பெறாது என்ற சாபக்கேட்டைப் பொய் என்று நிரூபித்து வருபவர்கள் தினமணியின் வாசகர்கள். உலகில் வெளியாகும் எந்தத் தரமான தினசரிக்கும் நிகராகத் தமிழிலும் வெளியிட முடியும் என உலகிற்கு உணர்த்தி வருபவர்கள் அவர்கள். தினமணியின் வாசகர்கள். குடும்பத்தினருடனான உறவைப் போல பரஸ்பரம் நம்பிக்கை, அன்பின் அடிப்படையில் எழுந்த உறவு இது. இந்த நாளில் அவர்களது வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்.

  முன்னோடிகளின் ஆசியோடும், அன்பு நெஞ்சங்களின் அரவணைப்போடும், மகாகவி கற்றுத் தந்த தமிழோடும், நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற வைர வரிகளின் வெளிச்சத்தில் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்.

  தினமணியின் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி 11.9.1994 அன்று வெளியான தலையங்கம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai