Enable Javscript for better performance
ஆபத்தான தயக்கம் - தலையங்கம் | Dinamani Editorial Special | Dinamani 85 Celebration- Dinamani

சுடச்சுட

  

   

  ஆபத்தான தயக்கம்

  1965-ம் ஆண்டுக்குப் பிறகும் கால வரம்பின்றி ஆங்கிலம் அரசாங்க மொழியாக நீடித்து இருந்து வருவதற்கு ஒரு மசோதாவை யூனியன் சர்க்கார் தயாரித்தார்கள். சென்ற வாரம் முடிவடைந்த பார்லிமெண்ட் கூட்டத் தொடரிலேயே இதைப் பிரேரித்திருக்க வேண்டும் . ஆனால், அப்படிச் செய்யவில்லை. சர்க்காரின் தயக்கத்துக்குக் காரணம் இந்தி அபிமானிகள் என்போர் கிளப்பியுள்ள பிராசார புழுதிப் புயல்தான் என்று கூறப்படுகிறது. இந்தச் சட்டம் நிறைவேறுவது தாமதப்படுமானால் பிரிவினைச் சக்திகளுக்கு கொத்தி எருவிட்ட மாதிரியாகிவிடும். தவிர நிச்சயமற்ற நிலைமை நீடிப்பதன் காரணமாக பலவிதமான புதிய நிர்ப்பந்தங்கள் வலுத்து, பிரச்சினை மேலும் சிக்கலாகிவிடும். மூன்றாவதாக, போதானா மொழிக் குழப்பமும் அதிகரித்து, தேசமெங்கும் படிப்பைக் குட்டிச் சுவராக்கிவிடக் கூடிய அபாயம் உண்மையானது. நான்காவதாக, விரைவில் இச்சட்டமியற்றாவிடில், தேசீய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளெல்லாம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும். எனவே, நேருஜி முதலில் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் தாமதமின்றி சட்டமியற்றுவதுதான் தேசபக்தர்களின் கடமை.

  நேருஜி முதலில் கொடுத்த வாக்குறுதியில், ஆங்கிலத்துக்குத் தரவிருப்பது துணை அரசாங்க மொழி அந்தஸ்து என்று கூறப்படவில்லை. காலவரம்பின்றி ஆங்கிலம் அரசாங்க மொழியாக நீடிப்பதற்கு வழிவகை செய்யப்படும். ஹிந்தி தாய்மொழியாக இல்லாதவர்கள், தாமாகவே இணங்கும் வரைஆங்கிலம் எவ்வித வில்லங்கமுமின்றி நீடிக்கும் என்று தான் சொன்னார். ஹிந்திதான் அரசாங்க மொழி, ஆங்கிலம் துணை மொழியாக நீடிக்கும் என்ற அடிப்படையில் சட்டமியற்ற யூனியன் சர்க்கார் முற்பட்டுள்ளனர். இந்த மிதமானபிரேரணைகூட ஹிந்தி அபிமானிகளுக்குப் பிடிக்கவில்லை. ஆங்கிலம் நீடிப்பதற்கு கெடு வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

  வாய்தா வைத்து எந்த மொழிக்கும் தகுதியை அளித்துவிட முடியாது. ஹிந்தி பேசப்படுவது நான்கு ராஜ்யங்களில்தான். அங்கேயே அதற்கு, ராஜ்ய அந்தஸ்திலேயே, முழுத் தகுதி இன்னும் ஏற்பாடாகவில்லை. ஹிந்தி பேசும் பகுதிகள் தாம் தேசத்தில் அதிக பிற்பட்ட நிலையல் இருப்பவை. அவசரப்பட்டு அத்தகைய ஹிந்தியை நாட்டின் பிற பகுதி மீது திணிக்க முற்பட்டால் நிச்சயமாக ஹிந்தி வளராது. அதன் தகுதியும் உயராது. பிற ராஜ்யங்களின் நிலவரம் ஹிந்தி ராஜ்யங்களின் நிலவரத்துக்கு தாழ்ந்து விடுவதுதான் கைமேல் கண்ட பலனாக இருக்கும். இதுதான் உண்மையில் ஹிந்தி அபிமானிகள் எதிர்பார்ப்பதோ என்று கூட பிற மொழியினர் சந்தேகிக்கக்கூடும்.

  ஹிந்தி பேசப்படாத ராஜ்யங்களிலேயே, தாய்மொழியில் போதனை நல்லபடி உருவாவதில் இருக்கும் சிரமங்களை உணர்ந்துள்ளனர். நல்லாட்சி அபிவிருத்தி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் தேவையை முன்னிட்டு, தாய்மொழியில் போதனை அளிப்பதன் வேகத்தைத் தளர்த்தியுள்ளனர். ஆங்கில போதனை மூன்றாவது வகுப்பில் தொடங்கவும், இஷ்டப்படுவோருக்கு ஆங்கிலத்திலேயே எல்லா கட்டங்களிலும் கல்வி போதனை அளிக்கவும் முற்பட்டுள்ளனர். தாய்மொழியைப் பற்றிய நிலவரமே இப்படி இருக்கையில், அகில இந்திய ஆட்சி மொழியாக ஹிந்தியை முடிக்கி விடுவதற்கு பிற மொழியினர் சம்மதிக்க மாட்டார்கள். நிர்பந்தித்தால் பிரிவினைச் சக்திகள் தாம் வளரும்.

  ஆங்கிலத்திற்கு துணை அரசாங்க மொழி அந்தஸ்தை அளித்துவிட்டால் மட்டும் போதாது. இதுவரை ஹிந்தியை யூனியன் அரசாங்கத்தில் கையாண்டதன் பலாபலன்களை பிற மொழியினரான அதிகாரிகளைக் கொண்டு மதிப்பிட்டு, உண்மை நிலவரத்தை முதலில் தெளிந்தறிய வேண்டும். இனி எந்தத் துறையிலும் எப்பணிக்காயினும் ஹிந்தியின் உபயோகத்தை விரிவாக்குவதாயின், பிறமொழி மாகாண அரசாங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு அதைப் பரிசீலித்து சிபாரிசு செய்வதாயிருக்க வேண்டும். பார்லிமெண்டும் இப் பிரச்சினையை இடையறாது கவனித்து வருவது கடமை. இத்தகைய நடைமுறையை சென்னை சர்க்காரும் மற்ற தென்னிந்திய சர்க்கார்களும வற்புறுத்துவர் என்றே எதிர்பார்க்கிறோம்.

  ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக நீட்டிப்பதற்கு அரசு தயக்கம் காட்டியதைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட தலையங்கம். (13.9.1962)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai