Enable Javscript for better performance
Na. Avutaiyappan on the occasion of Dinamani 85 years celebration- Dinamani

சுடச்சுட

  

  சமரசமில்லா சம்பந்தம்

  By DIN  |   Published on : 25th September 2019 03:46 PM  |   அ+அ அ-   |    |  

  RMT

  இராம. திரு. சம்பந்தம்

  "செய்யும் தொழிலே தெய்வம்' என்று இருப்பவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுவாதிகளாக இருப்பார்கள் என்பதற்கு பலர் உதாரணமாக இருந்து வரலாற்றில் தனியிடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்தான் இராம. திருஞான சம்பந்தம் என்கிற இராம. திரு. சம்பந்தம்.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நெற்குப்பை. பல தமிழ் அறிஞர்களை ஈன்ற புகழ் கொண்ட இவ்வூர், பேராசிரியர் முனைவர் தமிழண்ணல், உலகம் சுற்றிய தமிழன் எனப் பேர் பெற்ற சோமலெ, பத்திரிகைத் துறையில் தனியிடம் பெற்ற இராம. திரு. சம்பந்தம் உள்ளிட்டவர்களை தமிழகத்திற்கு வழங்கிய ஊராகும். மூவரும் சமகாலத்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.

  நெற்குப்பையில் 1934-ல் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளியில் பயின்றவர். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். தனது 22-வது வயதில் மதுரையிலிருந்து வெளிவந்த "தமிழ்நாடு' நாளிதழில் மதுரையிலும், பின்னர் சென்னையிலும் நான்கு ஆண்டுகள் நிருபராகப் பணியாற்றினார்.

  1960-இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீஸ்'-ல் சேர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு அக்குழுமத்தின் அதிபர் ராம்நாத் கோயங்கா அவர்களின் அன்பைப் பெற்றவர். இவரின் ஆங்கிலப் புலமையை அறிந்த கோயங்கா அவர்கள் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டின் நிருபராகப் பணியமர்த்தினார்.

  தனது கடின உழைப்பாலும், தொழில் மீது கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வாலும், தனது திறமையாலும் தொடர்ந்து முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர் மற்றும் செய்திப் பிரிவுத் தலைவர் எனப் படிப்படியாக உயர்நிலைகளை எட்டிப் பிடித்தார்.

  பத்திரிகைத் துறையில் தனக்கு பக்க பலமாக இருந்து வளரத் துணை நின்ற எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் ராம்நாத் கோயங்கா அவர்களின் மறைவிற்குப் பின் தினமணி நாளிதழின் துணை ஆசிரியராக பொறுப்பேற்று பின்னர் 1995-இல் அதன் ஆசிரியர் ஆனார். 2004 வரை அந்தப் பொறுப்பில் திறம்பட பணியாற்றி தமிழின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாகப் பரவலான வாசகர்களைக் கொண்டதாக உயர்த்தினார்.

  நவீன தமிழ் பத்திரிகை உலகின் முன்னோடி இராம. திரு. சம்பந்தம் என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு அவர் செய்தி சேகரிப்பது, வழங்குவது என தன் பணியை மட்டுப்படுத்திக் கொள்ளாது, பத்திரிகைத் துறையின் அனைத்துப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

  பத்திரிகைத் துறையின் நிர்வாகத்தையும் திறம்பட நடத்திச் சென்ற பெருமகன் இவர். எதையும் உளமார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், கடின உழைப்பை நல்கி, கவனமாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு இளம் வயதிலேயே இவரிடம் குடிகொண்டு விட்டது. அதனால்தான் ஆன்மிகமும் வர்த்தகப் பின்னணியும் கொண்ட பாரம்பரியம் மிக்க தன வணிகர் சமூகத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே பகுத்தறிவு கொள்கையை ஏற்று தந்தை பெரியார் வழியில் பயணிக்க முடிவு செய்துள்ளார்.

  ஆரம்பத்தில் ஏற்ற கொள்கையை கடைசி வரை கடைப்பிடிப்பதென்பது அரிது. கொள்கைப் பிடிப்புடன் கண்டிப்புக்கு பெயர் பெற்ற பத்திரிகையாளராக கடைசி வரை அவர் இருந்துள்ளார். இவர் பத்திரிகைப் பணியில் எந்த சமரசத்திற்கும் உட்படாதவராகத் திகழ்ந்துள்ளார் என்பதைச் சில நிகழ்வுகள் வாயிலாக நாம் அறியலாம்.

  சம்பந்தம் அவர்கள் எவ்வளவு கோபக்காரரோ அதே அளவு இளகிய மனம் கொண்டவர். அந்த இளகிய மனம்தான் தினமணியில் பல புதிய யுக்திகளைப் புகுத்தி பத்திரிகை செய்தியை முந்தித் தருவது மட்டுமல்ல. எளியவர்களுக்கு உதவக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியவர். தினமணியில் வெளியிட்ட செய்திகள் மூலம் பல நூறு ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பெற நிதி உள்ளிட்ட உதவிகள் பெற்றனர்.

  அதேபோல் ஈழத் தமிழ் அகதிகளின் பரிதாப நிலை கண்டு இவர் வெளியிட்ட செய்தி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வு மலர பல லட்சங்களை நிதி உதவியாகத் திரட்ட துணைபுரிந்தது.

  பொங்கல் மலர், மருத்துவ மலர், மாணவ மலர், தீபாவளி மலர், ரமலான் மலர், கிறிஸ்துமஸ் மலர் என ஆண்டுதோறும் அறிவார்ந்த, பயனுள்ள கட்டுரைகள் கொண்ட சிறப்பு மலர்களை தினமணி மூலம் வெளியிட்டு மலர்களின் முன்னோடியாகத் தினமணியை மிளிரச் செய்தார்.

  சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவ செய்திகள் வெளியிட்ட சம்பந்தம் அவர்கள், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களில் உதவி பெறத் தகுதியான, அதே நேரம் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உபரியாக வருவாய் பெறச் செய்யும் உயர்ந்த உள்ளம் அவரிடம் இருந்தது.

  அது மட்டுமன்றி தகுதி வாய்ந்தவர்களின் வாரிசுகள் உயர்கல்வி பெற கலாசாலைகளில் இடம் பெற்றுத் தந்த நிகழ்வுகளும் உண்டு. கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். அதற்கு சாட்சியாக இருந்தவர் சம்பந்தம் அவர்கள். ஆனால், அந்த குணத்தை தகுதியானவர்களுக்கு மட்டும் காட்டுவது அவரின் இயல்பு. இதனால் பலரின் வெறுப்புக்கு ஆளானாலும் அதுபற்றி கவலைப்பட மாட்டார்.

  ஒரு செய்தியை முழுமையாகவும், அதே சமயம் தெளிவாகவும், சுருக்கமாவும் எப்படித் தரவேண்டும் என செய்தியாளர்களுக்கு கற்றுத் தந்தவர். செய்தி சேகரிப்பதிலும், வழங்குவதிலும் சிறப்பாகச் செயல்பட்டால் நேரடியாக வெகுவாகப் பாராட்டுவார். அதே சமயம் சரியாகச் செயல்படவில்லை எனில் சிறிதும் தயவு தாட்சண்யமின்றி கடுமையாக திட்டி விடுவார். ஆனாலும் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பி விடுவது இவரின் இயல்பாகும்.

  ஆரம்ப காலத்தில் தினமணியின் இணைப்பாக தினமணி கதிர் மட்டுமே வந்த நிலையில், இவர் ஆசிரியராக இருந்த போது முதல் முதலாக தமிழ் நாளிதழ்களிலேயே சிறப்பு இணைப்பாக வெளியிட்ட சிறுவர்மணி, கலைமணி ஆகியவை வாசகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றன. தற்போது எல்லா முன்னணி தமிழ் நாளிதழ்களும் தினசரி ஒரு இணைப்பை வெளியிடுகின்றன என்றால் இதற்கு தினமணியே முன்னோடியாகும்.

  தினமணியிலிருந்து 2004-ல் ஓய்வு பெற்ற இவர், சில காலம் நோய் தாக்குதலில் சிரமப்பட்டு 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ஆம் நாள் இயற்கை எய்தினார். மறைந்த பின் தன் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்க உயில் எழுதியதின்படி இவரது உடல் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டு, மறைவுக்குப் பின்னரும் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயன்பட்டார்.

  - ந. ஆவுடையப்பன் 
   

  kattana sevai