Enable Javscript for better performance
சரித்திரம் மறைத்தாலும், சத்தியம் மறக்காது!- Dinamani

சுடச்சுட

  

  சரித்திரம் மறைத்தாலும், சத்தியம் மறக்காது!

  By  ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி  |   Published on : 25th September 2019 04:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  GoenkaRN

  ராம்நாத் கோயங்கா

   

  காந்தியார் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின்- தமிழர்களின் உரிமைக்காகப் போராடிய வரலாற்றை (1893-1914) அறிய உதவும் ஒரே மூலம்- ஆதாரம் சுதேசமித்திரன் மட்டுமே. கோகலே, திலகர் மறைவுக்குப் பின் 1814-இல் இந்தியா திரும்பிய காந்தி, 1920-இல் விடுதலைப்போரின் தலைமையை ஏற்று நடத்தத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தையும், அந்நிய துணி பகிஷ்காரத்தையும் கள்ளுக்கடை மறியலையும் நடத்துகிறார். இப்போராட்டத்தில் ஒரு புதிய முறை உருவானது.

  அகிம்சை, சத்தியாகிரகம் என்று காந்தியார் கற்றுத்தந்த இரண்டு பெரிய போர் முறைகளும், உலகமே கண்டு ஆச்சரியப்பட்ட ஓர் அதிசயப் போர் முறையாக இருந்தது.

  இந்நிலையில், விடுதலைப் போரின் இரண்டாவது கட்டமாக அவர் நடத்திய உப்புசத்தியாக்கிரகம் இந்திய நாட்டின் விடுதலைப் போரின் திருப்புமுனையாக இருந்தது. உலகமே கண்டு வியக்கும் வண்ணம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அப்போராட்டம் எதிரொலித்தது. 34 ஆயிரம் பேர் கைதானார்கள். அதில் பெண்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது. இக்காலக்கட்டத்தில் சுதந்திரப் போராட்டச் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லவும், அவர்களின் விடுதலை உணர்வையும் வளர்க்கவும் தோன்றிய சிற்றிதழ்கள்தான் "சுதந்திரச் சங்கு'ம், "காந்தி'யும் ஆகும்.

  சுதந்திரச்சங்கு சிற்றிதழை சங்குகணேசன், சங்கு சுப்பிரமணியன் ஆகிய இருவரும் நடத்தினார்கள். "காலணா' பத்திரிகை 1930 முதல் ஜூன் 1934 வரை விட்டுவிட்டு நடந்து நின்றுவிட்டது. அதேகாலகட்டத்தில் 1931-இல் காலணா விலையில் "காந்தி'' என்ற இதழைத் தென்காசி சங்கரலிங்கம் பிள்ளை சொக்கலிங்கம் தொடங்கினர். காந்தியும், சுதந்திரச் சங்கும் அளவில் சிறியதானாலும் அவை ஆற்றிய பணி அளவிடற்கரியது. ஆனால் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை.

  இச்சூழ்நிலையில் மக்களின் காந்தியப் போராட்டச் செய்திகளைக் கொண்டு செல்லவும் மக்களிடம் மொழி உணர்வை வளர்க்கவும் சமூக மாற்றங்களைத் தோற்றுவிக்கவும் தோன்றியதுதான் "தினமணி'' நாளிதழ். காந்தி தலைமை ஏற்ற விடுதலைப் போராட்டக் காலத்தில் தோன்றிய இதழ்களில் இன்று வரை (2019) நடந்து கொண்டிருக்கும் ஒரே தமிழ் நாளிதழ் தினமணிதான்.

  1934 செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி நினைவு நாளன்று "தினமணி'' நாளிதழ் வெளிவந்தது. "தினமணி'' சொக்கலிங்கம் என்றே அழைக்கப்படக் காரணம் அப்பத்திரிகையின் முதல் ஆசிரியர். அவர் 1934 முதல் 1943 வரை ஆசிரியராக இருந்தார். சொக்கலிங்கம் எழுதும் தலையங்கமும் நடுப்பக்கக் கட்டுரையும் "வெட்டு ஒன்று துண்டு இரண்டு'' என்ற விதத்தில் இருக்கும். அவரது நடை எளிமையானது. ஆனால் வித்தியாசமானது. உணர்ச்சி ஊட்டக்கூடியது.

  "எழுச்சியுண்டாக்கும் அவரது எழுத்து வன்மையினால் தேசிய இயக்கம் தமிழ்நாட்டில் ஆக்கம் பெற்றது என்றால் அது மிகையாகாது. தேச விரோத சக்திகள் அவரது பேனாவைக் கண்டு குலைநடுக்கமுறும் என்பதை நாம் யாவரும் அறிவோம்'' எனப் பெருந்தலைவர் காமராஜர் சொல்வதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அக்காலத்தில் வந்த ஆங்கில, தமிழ் நாளிதழ்களில் முதல் பக்கம் விளம்பரம் இருக்கும். முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு பத்திரிகை உலகில் மாற்றத்தை ஏற்படுத்தியது "தினமணி''.

  "தினமணி'' என்றால் சூரியனைக் குறிக்கும். "தினமணி'' என்ற பெயரே தமிழ்ப் பத்திரிகை உலகிற்குப் புதுமையானது. நாளிதழைத் தொடங்குவதற்கு நல்ல சிறந்த பெயரைக் கூறுவோருக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்து அதன்படி வாசகர்களிடமிருந்து வந்த பெயர்களில் "தினமணி'' என்ற பெயரை எழுதிய இருவருக்கும் பரிசுத்தொகை ரூ. 10-ஐப் பகிர்ந்து கொடுத்தார்கள்.

  "தினமணி''யின் முதல் இதழின் முதல் பக்கத்தில் பாரதியின் "ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா'' என்ற எழுச்சிக் கவிதை இடம்பெற்றது. உள்பக்கத்தில் "கொட்டு முரசே'' என்ற பாடல். பாரதியின் நினைவுநாளில் முதல் இதழ் வெளிவந்ததால் "வாழ்க பாரதி'' என்ற துணைத் தலையங்கம். இப்படி முதல் இதழிலேயே "நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்'' என்ற பாரதியின் கொள்கை முழக்கத்தை தனது லட்சியமாக வெளியிட்டது.

  தினமணியின் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம், உதவி ஆசிரியர் ஏ.என். சிவராமன் இருவருமே சுதந்திரப் போராட்ட வீரர்கள். நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றவர்கள். முதல் தலையங்கமே பாரதியின் கனவை நனவாக்குவதே எனப் பிரகடனம் செய்தார் ஆசிரியர் டிஎஸ்சி.

  1934-இல் காங்கிரஸ் மகாசபை தில்லி மத்திய சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட தீர்மானித்தது. "தினமணி'' இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற முழுமூச்சுடன் பாடுபட்டது. கேலிச்சித்திரங்கள், தலையங்கங்கள், செய்தித் தலைப்புகள் எல்லாவற்றையும் தினமணி இப்பணிக்கு உபயோகித்தது.

  சென்னையில் எஸ். சத்தியமூர்த்தி நீதிக்கட்சி வேட்பாளர் சர். ராமசாமி முதலியாரை எதிர்த்தும் பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த ஆர்.கே. சண்முகம் செட்டியாரை எதிர்த்து கோவை அவினாசிலிங்கம் செட்டியாரும் போட்டியிட்டனர்.

  அத்தேர்தலில் நீதிக்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து நின்ற எஸ். சத்தியமூர்த்தியும் அவிநாசிலிங்கம் செட்டியாரும் அமோக வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் நீதிக்கட்சியின் படுதோல்வியும் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றியும் தினமணிக்கு விடுதலைப் போரில் கிடைத்த முதல் வெற்றியாகும்.

  அதையடுத்து 1937-இல் காந்தியின் ஆசியுடன் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. சென்னை ராஜதானியின் பிரதமராக மூதறிஞர் ராஜாஜி பதவி ஏற்றார். தினமணி ஆசிரியர் சொக்கலிங்கம் தென்காசித் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

  1940-இல் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார். அவருக்கு 9 மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 300 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் சிறைக்குச் சென்ற காலத்தில் 25-11-1940 இருந்து 18-06-1941 வரை ஏ.என். சிவராமன் ஆசிரியராக இருந்தார். தினமணி பத்திரிகை ஆசிரியர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் சிறை சென்றதும் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும்.

  இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் காந்தியின் தலைமையில் நடந்த முதல் நாடுதழுவிய போராட்டம் ஒத்துழையாமை இயக்கமும் அந்நியத் துணி பகிஷ்காரமும், இரண்டாவது பெரிய போராட்டம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டமும் தீண்டாமை ஒழிப்பும் கோயில் நுழைவுப் போராட்டமும் ஆகும். மூன்றாவது தனிநபர் சத்தியாக்கிரகம். இதில் தினமணி ஆசிரியர் பங்கு கொண்டு "எழுதுவது மட்டும் என் வேலை இல்லை போராட்டத்தில் பங்கு பெற்று சிறை செல்வதும்தான் உண்மையான தேசத் தொண்டு'' என நிரூபித்தார்.

  காந்தியார் அறிவித்த இறுதிக்கட்டப் போர் 1942-இல் வெள்ளையனே வெளியேறு என்ற மாபெரும் போராட்டமாகும். காந்திஜி உள்பட எல்லாத் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அக்காலக் கட்டத்தில் தினமணி வெளிப்படையாக ஆகஸ்ட் போராட்டம் என்றழைக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு முழுமூச்சுடன் ஆதரவு தந்தது. 1943-இல் அதே ஆகஸ்ட் இயக்கத்துக்கு அதுதான் தலைமையகமாக விளங்கியது.

  தினமணி நிறுவனர் ராம்நாத் கோயங்கா ஆகஸ்ட் போராட்டத்தில் மற்றெல்லோரையும் விட தீவிரமாக இயக்கத்துக்கு உதவினார். நிதி உதவி செய்வது, தடைப்பட்ட செய்தித்தாள்களை அச்சிட்டு ரகசியமாக விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளைத் தவிர, ரயில் பாலங்கள் தகர்ப்பது போன்ற தீவிர இயக்கத்தினர் வேலைக்கும் உதவிகரமாக இருந்தார். உதவி ஆசிரியர் ஏ.என். சிவராமன் சிறிது காலம் தலைமறைவாகித் தமிழகம் நெடுக ஊர் ஊராகச் சென்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஊக்கமளித்து வந்தார்.

  1943-இல் ஆங்கில அரசின் தணிக்கை விதிகளுக்கு உள்பட்டு பத்திரிகையை நடத்துவது காந்தியின் அறிவுரைப்படி தமிழகத்தில் தினமணி- இந்தியன் எக்ஸ்பிரஸ் மூடப்பட்டது. மூடப்பட்ட 7 மாத காலமும் தினமணி ஊழியர்களுக்கு அரைச் சம்பளமும் தந்தார் தினமணி நிறுவனர் கோயங்கா. அத்தோடு ஊழியர்களும் மூடப்பட்டிருந்த காலத்தில் ரகசியமாக பல தேசத் தொண்டுகள் செய்தனர்.

  உலக யுத்தத்தின் உச்சகட்டப் போரின்போது ஆங்கிலேய அரசாங்கம் பல வழிகளிலும் தேசபக்தர்களையும் பத்திரிகை ஊழியர்களையும் கொடுமைப்படுத்தினர். ஆகையால் நாட்டின் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கும் வெளி உலகத்துக்கும் எடுத்துரைக்க ராம்நாத் கோயங்கா ஒரு திட்டமிட்டார்.

  நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் சேர்த்து சுமார் 150 பக்கம் கொண்ட "பாழ்படுத்தப்பட்ட பாரதம்'' என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரகசியமாக விநியோகிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆதரவான சூழ்நிலை உருவானது.

  இக்காலக்கட்டத்தில் காந்தியின் அகிம்சை சத்தியாக்கிரகப் போராட்டத்தைவிட ஆயுதங்தாங்கிய போரே நாட்டை விடுவிக்கும்; அதற்கு ஜெர்மன் இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியைப் பெற்று ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போரிடலாமென்று இந்திய தேசிய ராணுவத்தை புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பர்மாவில் தோற்றுவித்தார். இந்திய தேசிய ராணுவம் "டெல்லி சலோ'' என முழக்கமிட்டு வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போர் தொடுத்தது.

  ஆங்கில ஆட்சியில் இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி கல்கத்தாவில் இருந்து தப்பிச் சென்று ஐஎன்ஏவைத் தோற்றுவித்த வரலாற்றை தினமணியில் நாராயணன் என்ற உதவி ஆசிரியர் "சுபாஷ் சந்திரபோஸின் சுதந்திர யாத்திரை'' என்ற தலைப்பில் தொடராக வெளியிட்டார். இக்கட்டுரை 03-03-1946 முதல் தினமணியில் வந்துள்ளது.பின்னாளில் அது புத்தகமாகவும் வந்துள்ளது.

  சொக்கலிங்கம் தினமணியிலிருந்து விலகிய பின் உதவி ஆசிரியர் ஏ.என். சிவராமன் 1944 முதல் 1987 வரை ஏறத்தாழ 43 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து பல கட்டுரைகளை அதிகார சக்திக்கு எதிராக எழுதி மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தி வெற்றி கண்டுள்ளார்.

  1963-இல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கு. காமராஜர் பதவி ஏற்றார். ஒரு தமிழன் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானதுஅதுவே முதல் முறையாகும். ஆசிய ஜோதி நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி போட்டியின்றி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் அதிபரோடு ரஷியநாட்டின் தலைவர் பிரஷ்னேவ் முன்னிலையில் சாஸ்திரி சமாதானப் பேச்சுக்குப் போனபோது அகால மரணமடைந்தார்.

  மீண்டும் பிரதமர் தேர்தல். இம்முறை மொராஜி தேசாய் போட்டியிட்டார். காமராஜர் இந்திராகாந்தியை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தார். ஆட்சிக்கு வந்த இந்திரா பண மதிப்பு இழப்பை (டீவேலுவேஷன்) அறிவித்தார். அதனை காமராஜர் ஏற்க மறுத்தார். தினமணி ஆசிரியர் இதைப்பற்றி அப்போது எழுதிய கட்டுரை மிகவும் பிரசித்தம்.

  கணக்கன், வாத்தியார் என்ற புனைப்பெயர்களில் தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக எழுதிய தொடர் கட்டுரைகள் 1967-இல் ஆட்சி மாற்றத்துக்கே வித்திட்டு பெருந்தலைவர் காமராஜர் தன் தொகுதியில் தோற்கவும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கவும் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா தலைமையில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்ததும் வரலாறாகும்.

  இந்திய சுதந்திரம் பெற்று 24 ஆண்டுகளுக்கு பிறகு 1971-இல் பெரும்பான்மையோடு மத்தியில் இந்திராகாந்தி பிரதமராக அமர்ந்தார். இந்திரா ஆட்சியில் நடந்த முறைகேடுகளை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இரண்டாவது சுதந்திரப் போர் என்று அறிவித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் மிகப்பெரும் போராட்டத்தைத் தொடர்ந்தார். இந்தியா முழுவதும் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. பிரதமர் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். பத்திரிகைத் தடைச்சட்டத்தை அறிவித்தார்.

  எல்லாச் செய்திகளும் பத்திரிகைகளும் தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டன. ஆசிரியர் சிவராமன் "பேனா முனை வாளின் முனையைவிட வலிமையானது'' என்பதைத் தன் தலையங்கம் மற்றும் கட்டுரைகள் மூலம் நாட்டு மக்களிடையே நிலைநாட்டினார்.

  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஜனதா கட்சி என்ற ஒன்றை ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் உருவாக்கினார். நாட்டின் பெருந்தலைவர்கள் எல்லோரும் சிறையில் தள்ளப்பட்டனர். பிரதமர் இந்திராவின் கருத்தை ஏற்க மறுத்து ஜேபிக்கு ஆதரவாகவும் காமராஜரை கைது செய்யவும் மறுத்தார் அன்றைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி. அதனால், தமிழக அரசின் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

  தலைவர் சிறையில் வாடவும் தொண்டர்கள் பலவித இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளானார்கள். தினமணி ஆசிரியர் தலையங்கப் பகுதியில் உலக நாட்டில் உள்ள சுதந்திரம் பற்றியும் பத்திரிகைகளின் சுதந்திரம் பற்றியும் மறைமுகமாக எழுதி நாட்டில் விடுதலை உணர்வைத் தூண்டி நெருக்கடிக்கு எதிரான ஒரு சூழலை தமிழ்நாட்டில் உருவாக்கி 1977-இல் நெருக்கடி நீங்கவும் பொதுத்தேர்தல் நடக்கவும் உதவியதை சரித்திரம் மறைத்தாலும் சத்தியம் மறக்காது.

   வாழ்க தினமணி
   வளர்க அதன் தொண்டு
   வளர்ந்தோங்குக தினமணியின் புகழ்.

  - ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai