Enable Javscript for better performance
Dinamani Editorial Article based on China boarder Problems- Dinamani

சுடச்சுட

  

   

  சரியான சூழ்நிலை தேவை

  நிபந்தனை எதுவுமில்லாமல், எல்லை விவகாரங்களைப் பற்றி பீகிங்கில் அடுத்த திங்கட்கிழமையன்று இந்தியா, சீன பிரதிநிதிகள் கூடிப் பேச முற்படலாமென்று அந்நாட்டு சர்க்கார் அழைத்திருக்கிறார்கள். இது நல்லெண்ணத்துடன் கூட, விவகாரப் பைசலை நாடும் அழைப்பு என்று கருதுவதற்கில்லை; அழைப்புக் கடிதத்திலுள்ள பல பிரஸ்தாபங்கள் பேச்சைப் பற்றி போதிய நம்பிக்கை தருவனவாக இல்லை; உண்மையுணர்வுடன் பேசி பைசல் காண இந்தியா எப்போதும் தயார்; ஆனால் பேச்சு பயனளிக்கக்கூடியபடி உருபெறுவது தக்கதோர் சூழ்நிலையில்தான் சாத்தியமாகும்; அத்தகைய சூழ்நிலை இன்று இல்லை. பேச்சை நடத்துமாறு அழைக்கையிலேயே, நேபா பகுதியில் புதிய ஆக்கிரமிப்பில் சீனா ஈடுபட்ட வண்ணம் இருந்து வருகிறது; எனவே ஆக்கிரமிப்பேனும் காலியானால் தான், கண்ணியத்துடன் இந்தியா சர்க்கார் பேச முற்படலாம்; இது தெளிவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

  புதிய ஆக்கிரமிப்பு காலியானதும் பேசத் தொடங்கலாம். ஆனால் எடுத்த எடுப்பில், சீனாவின் நிலவுரிமைக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது நடைமுறையில் சிறிதும் சாத்தியமே அல்ல; ஆனால் இரு சர்க்கார்களின் பிரதிநிதிகளும் கூடி, எல்லைப் பகுதிகளில் இருந்து வரும் "நெருக்கடி'ச் சூழ்நிலை தணிவதற்கு முதல்படியாக வழிவகை செய்ய வேண்டுமென நமது சர்க்கார் தமது பதிலில் கூறியிருக்கிறார்கள். அதாவது லடாக் பகுதியில் புதிய காவல் நிலையங்களை முன்னும் பின்னுமாக அமைத்து வரும் நிலவரம் முதலில் மாற வேண்டும். எப்படி அது கைகூடச் செய்வது என்பதைப் பற்றி முதலில் பேசி உடன்பாடு காணலாம் என்பதுதான் நமது சர்க்காரின் பிரேரணை; இந்த உடன்பாட்டை அமல் நடத்தி வைக்கும் சூழ்நிலையில் தாகம் தணிந்து விடலாம், விரோதப்பான்மை குறையக்கூடும்; அந்த நிலவரந்தான் எல்லைக் கோரிக்கைகளைப் பற்றிய பேச்சுக்கு உகந்தது என்பது நமது சர்க்காரின் கருத்து. ஏற்கனவே இரண்டு சர்க்கார்களின் அதிகாரிகள் கூடிப் பேசி, கோரிக்கைகளை ஆராய்ந்து, விரிவான யாதாஸ்துக்களை தயாரித்திருக்கிறார்கள். அந்த யாதாஸ்துக்களின் அடிப்படையில் பரிசீலனை நடத்தத் தயார் என்று நமது சர்க்கார் கூறுகிறார்கள். ஆனால் சீனாவின் சிந்தனை முற்றிலும் வேறு திசையில் உருவாகிறது.

  புதிதாக ஆக்கிரமித்த "நேபா'ப் பகுதியிலிருந்து வாபஸாவதற்கு சீன சர்க்கார் தயாரில்லை. மக்-மகான் எல்லைக் கோட்டை இதுவரை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது அது செல்லத்தக்கது அல்ல என்று கூறுகிறார்கள். அது மட்டும் அல்ல. தாம் ஆக்கிரமித்துப் பிடித்துக் கொண்ட இடம் மக்-மகான் கோட்டுக்கு வடபுறம் திபெத்துக்குள் இருப்பதாக துணிந்து புளுகுகிறார்கள்.

  எல்லை விவகாரத்தை விவரமாகப் பரிசீலிப்பதற்கு முன்னர், தான் பிடித்த இடத்திலிருந்து சீனா வாபஸாகி விட வேண்டும் என்பது நமது சர்க்கார் முதலில் வற்புறுத்தி வந்த நிலைமை. பின்னர் இதை ஓரளவு நிதானப்படுத்திக் கொண்டார்கள். இரு தரப்பினரும் உரிமை கொண்டாடும் எல்லைக் கோடுகளுக்கு இந்தியப் படைகளும், சீனப் படைகளும் முதலில் வாபஸாகி விட்டு, நடுவிலேயே ராணுவ சூனிய மண்டலமொன்றை உருவாக்கலாம்; அது ஏற்படுமாயின், தாபம் தணிந்து, பயனுள்ள வகையில் பேச்சை துவக்குவது சுலபமாக இருக்கும் என்று நமது சர்க்கார் அடுத்தபடியாகக் கூறினர். அதற்கும் சீனா சம்மதிக்கவில்லை. பேச்சுக்கு நிபந்தனை போடலாகாது என்று பிடிவாதம் செய்கிறார்கள். அதாவது தாங்கள் பிடித்துக் கொண்டதை விட மாட்டார்களாம். ஆனால் பேச்சு மாத்திரம் நடக்க வேண்டுமாம். இது ஒப்புக்கொள்ளக்கூடிய நிலவரமே அல்ல.

  இந்திய பொது ஜன அபிப்ராயம் கிளர்ந்தெழுந்ததன் விளைவாக, நமது துருப்புகள் சிறிது முன்னேறி, சீனா ஆக்கிரமித்திருந்த சில பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை ஏற்படுத்தின. இதைக் கண்டு சீனா சிலுசிலுக்கிறது. சீன மண் மீது இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக கெடுபிடிச் செய்கிறது. லடாக்கில் முன்னேறி காவல் நிலையங்களை அமைத்தால், "நேபா'வில் ஆக்கிரமிப்பு செய்து, ஸர்வதேச உடன்பாடுகளின் மூலம் உறுதிப்பட்ட மக்-மகான் எல்லை பூராவையுமே விவகார விஷயமாக்கப் பார்க்கிறது. இந்தியா ஆக்கிரமிப்புச் செய்வதாக குற்றம்சாட்டி வருகிறது.

  இச்சூழ்நிலையில் எப்படி பேச முடியும். எந்த அடிப்படையில் சம்பாஷணையை நடத்த முடியும்? "நேபா' ஆக்கிரமிப்பாவது நீங்கட்டும், பேசலாமென்று, பாண்டவர்களைப்போல, தமது கோரிக்கைகளைக் குறைத்துக் கொண்டே வந்து அடையாள பூர்வமான சமிக்ஞையாவது கிடைத்தால் போதும் என்கின்றனர் நமது சர்க்கார். ஆனால் அதற்கும் சீனா தயாராயில்லை; இந்தியாவை உலகின் முன் அவமானப்படுத்த சீன சர்க்கார் விரும்புகிறார்கள் என்பது தெளிவு.

  நமது எல்லைப் பகுதியில் சீன நடத்தியிருப்பது அப்பட்டமான ஆக்கிரமிப்புதான் என்று பிரிட்டீஷ் அயல்நாட்டு மந்திரி லார்ட் ஹோம் கூறினாரல்லவா? இதைக் கேட்டு, "பிரிட்டீஷ் ஏகாதிபத்தியமும் இந்திய பிற்போக்காளரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே?'' என்று சீன சர்க்கார் பரிகாசம் செய்கிறார்கள்.

  நமது கண்ணியத்துக்குப் பாதகமில்லாத வகையில் பேச்சு நடப்பதாயின் பேசிப் பார்க்க வேண்டியதுதான். ஆனால், நமது பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் பெரு முயற்சி நடைபெற்ற பிறகு தான் சீனாவின் மனநிலை மாறக்கூடும்; ஆக்கிரமிப்பு நீடிக்கையிலேயே, பேசி குட்டையைக் குழப்பி, பலவிதமான தப்பபிப்ராயங்களைப் பரப்பி, இந்தியாவின் மீது பழியைச் சுமத்தி, மேல் நடவடிக்கைக்கு தயாராவது தான் சீனாவின் நோக்கம் என்பது தெளிவாகிவிட்டது. போதிய முன்னேற்பாடுகளின்றி அவசரப்பட்டு பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளில் நமது சர்க்கார் இறங்க மாட்டார்கள். அது விரும்பத்தக்கதல்ல.

  ஆனால் லடாக்கில் தொடங்கிய பணி நீடிக்க வேண்டியதே. மேலும் "நேபா' ஆக்கிரமிப்பு விரிவாகாதபடி தடுத்து நிறுத்தி சீனா வாபஸாக வேண்டிய நிர்ப்பந்தங்களை பலப்படுத்தத்தான் வேண்டும். அதே சமயத்தில், நேபாளத்துடன் சீர்கெட்டுள்ள உறவு நிலைமையை செப்பனிட வேண்டும். இத்தருணத்தில் உருவாகியுள்ள பாகிஸ்தானின் கெடுபிடிகள் அலட்சியம் செய்யக்கூடாதவை. 

  எல்லைப் பிரச்னை குறித்து சீனாவுடன் பேச்சு நடத்த சுமுக சூழ்நிலை தேவை என்பதை சுட்டிக்காட்டும் தலையங்கம். (10.10.1962)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai