Enable Javscript for better performance
Politician & Cinema Celebralities About Dinamani on Occasion of Dinamani 85- Dinamani

சுடச்சுட

  

   

  தமிழ் இதழியல் துறையில் தனி வரலாற்றைக் கொண்டது தினமணி நாளிதழ். தேசபக்தியையும், தெய்வ பக்தியையும் வளர்த்து தாய்த் தமிழை முன்னிறுத்திய இதழ். தமிழ் மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பிய இதழ். மகான் காந்தியை சிரம்தாழ்த்தி வணங்கிய இதழ், மகாகவி பாரதியின் வழித்தடத்தில் நடக்கும் இதழ், உரிமைக்குரல் கொடுப்பதில் முதலில் ஒலிக்கும் ஓசை தினமணியின் ஓசையே.

  பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைந்த 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் உயிர்த்தெழுந்தது தினமணி. தொடங்கியவர் புகழ்பெற்ற இதழாளர் எஸ்.சந்தானம். அதை வாரியணைத்து, வளம் பெறச் செய்து, வற்றாத அருவியாக்கியவர் அறிவாற்றல் மிக்க ராம்நாத் கோயங்கா. இவ்விரு பெருமக்களும் தமிழ் மக்களின் வணக்கத்துக்குரியவர்கள்.

  தினமணியின் புகழுக்குப் புகழ் சேர்த்த பெருமக்கள் டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன், இராம.சம்பந்தம் ஆகியோர் ஆவர். அவர்களின் பெரும் பணியை நெஞ்சில் நிறுத்த வேண்டிய நேரமிது.

  தமிழக, தேசிய நலன் காக்கும் தரமான தலையங்கம், நடுநிலையான கருத்துகளைத் தாங்கிவரும் நடுப்பக்க கட்டுரைகள், நம்பகத்தன்மை கொண்ட செய்திகள், ஞாயிறுதோறும் வெளிவரும் தமிழ்த்தாகம் தீர்க்கும் தமிழ்மணி, கலாரசிகன், கருத்துச் சிதறல்கள் ஆகியவை தமிழ் வாசகர்களின் மனம் கவரும் வண்ண மலர்கள் ஆகும்.

  85 ஆண்டுகள் தேசப்பணியை, தமிழ்ப் பணியை தெய்வீகக் கடமையாக ஏற்று தனிவரலாறு படைத்துள்ள தினமணியின் பயணம் தொடரட்டும். அதன் பயனைத் தமிழ் மக்கள் பழுதில்லாமல் நுகரட்டும்.

  அப்புகழ்மிக்க தினமணியை அதன் வரலாற்றுப் புகழை மேலும் உயர்த்த ஓயாது உழைத்து வரும் ஆசிரியர் கி.வைத்தியநாதனுக்கும், ஆசிரியர் குழுவுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என் இனிய நல்வாழ்த்துகள்.

  - ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்

  **

  "தினமணி' எனது மனதுக்கு நெருக்கமானது அவசரநிலை காலத்தில்தான். நான் ராமானுஜன் என்ற பெயரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி தமிழகத்தின் தென்பகுதிகளில் தீவிரமாகப் பணி செய்தவன். தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அவர்களது கட்டுரைகள் கிளப்பிய உணர்வு, எழுச்சி மறக்க இயலாதவை. தினமணி படித்த பிறகு நான் மட்டும்தான் அப்படி இருக்கிறேனோ என ஒரு சந்தேகம். அதனால், எவரைப் பார்த்தாலும், இன்று தினமணி படித்தீர்களா என விரும்பி ஒரு கேள்வி கேட்பேன்.

  விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள், "ஏ.என்.எஸ். கட்டுரை தானே....! பிரமாதம், படித்தவுடன் நெஞ்சு கொதித்தது. ஆனால், என் செய்ய!' என்ற பதில்கள் வந்தன. அதனால், "வாசகர்களை ஒருங்கிணைத்துப் போராட ஒரு செயல்வடிவம் தரக் கூடாதா?' எனக் கேட்டு, ஏ.என்.சிவராமன் அவர்களுக்கு ராகவன் என்ற பெயரில் கடிதம் எழுதினேன். அதற்கு அவர் தந்த பதில், "நான் ஒருங்கிணைப்பாளர் அல்ல' என்பது.

  செய்திகளுக்குச் சமமாக தலையங்கம், கட்டுரைகளுக்கும் வாசகர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்றால் அது தினமணி பத்திரிகைக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. மத்திய அரசின் நற்செயல்களைத் துணிவுடன் பாராட்டித் தனது தனித்தன்மையை நிரூபிக்கும் அதே நேரத்தில். அரசு செய்ய வேண்டிய மற்றும் செய்யத் தவறிய விஷயங்களையும் சுட்டிக்காட்டும் நடுநிலை தினமணிக்கு உண்டு.

  தினமணியின் தற்போதைய ஆசிரியரான கி.வைத்தியநாதன் பொறுப்பேற்ற பிறகு தினமணிக்குப் பழைய மெருகு திரும்பி இருக்கிறது என்றே சொல்லலாம். தேசிய உணர்வுள்ள தமிழ், தமிழர் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருகிறது என்ற சிறப்புத் தன்மையை தினமணி பெறுகிறது. தொடரட்டும் நற்பணி! வளரட்டும் நற்பெயர்!.

  - இல.கணேசன், பாஜக மூத்த தலைவர்

  **

  ஏறத்தாழ 50 ஆண்டுகளாக தினமணி படித்து வருகிறேன். குறிப்பாக தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கியது முதல் தினமணி வாசிப்பு எனக்குப் பயன் அளித்து வருகிறது. காலத்திற்கு ஏற்ற சில மாறுதல்கள் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் படிக்கும் நாளிதழாக தினமணி உள்ளது. தலையங்கம், நடுப்பக்க கட்டுரைகளைத் தவறாமல் படித்துவிடுவேன் என்றார்.

  - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ்
   

  **

  உண்மையை மட்டும் எழுதும் கெளரவமான என்னுடைய அபிமான நாளிதழான "தினமணி' பத்திரிகையின் 86-ஆவது ஆண்டு விழாவான இந்நாளில் பத்திரிகையின் ஆசிரியர் கி.வைத்தியநாதன் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

  உங்கள் பணி பல்லாண்டு தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  - நடிகர் ரஜினிகாந்த்
   

  **

  மாறிக்கொண்டிருக்கும் காலத்தில், தன் தன்மை மாறாமல் 85 ஆண்டுகளைக் கடந்து, இன்றும் சிறப்புடன் வெளிவரும் "தினமணி' இதழுக்கு எனது வாழ்த்துகள்.

  எப்போதும் கற்றோர்களின் கைகளில் அவர்களின் கெளரவமாக "தினமணி' இருந்திருக்கின்றது. இனியும் இருக்கும் என்று நம்புகின்றேன். அனுபவமிக்க படைப்பாளிகளின் பங்கேற்புடன், கம்பீர நடைபோடும் "தினமணி' இதழுக்கும், அதன் நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  - கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

  **

  பழைமையான நாளிதழான "தினமணி' தனது 85-ஆவது ஆண்டை கொண்டாடுவதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நான் தினமணி நாளிதழினை பல ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். இந்த நாளிதழானது தனித்தன்மையுடன் நடுநிலை தவறாமல் செந்தமிழில், படிப்பவர்களை பெரிதும் கவரும்விதமாக வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, இந்த நாளிதழில் வரும் தலையங்கம், அரசியல், மற்றும் ஆன்மிகச் செய்திகளை விரும்பிப் படித்து வருகிறேன்.

  இச்சமயத்தில் இந்நாளிதழ் மென்மேலும் அதிகப்படியான வாசகர்களை சென்றடைய வேண்டும் என்ற விருப்பத்தினை தெரிவித்துக் கொண்டு என்னுடைய வாழ்த்துகளை இதன் பதிப்பகத்தாருக்கும், ஆசிரியருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  - ஏ.சி. முத்தையா, தொழிலதிபர்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai