Enable Javscript for better performance
தினமணியின் சமுதாய மணியோசை! | So Sathiyaseelan on Dinamai 85 years Celebration- Dinamani

சுடச்சுட

  
  so. sathiyaseelan

  சோ. சத்தியசீலன்

   

  இறைவன் கோயில் மணியோசை ஆன்மாக்களையெல்லாம் எழுப்ப வல்லது. மனிதர்களின் அறியாமையை போக்கி படைத்தவனையும், படைத்ததற்கான காரணத்தையும் மனிதனுக்கு புரிய வைப்பது இறைவனின் கோயில் மணியோசைதான். அதைப்போல மக்களுடைய மனதை தட்டி எழுப்பி, அவர்களுடைய உணர்வுகளை செயல்படுத்தி தான் ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம் என்ற உணர்வை மனிதனுக்கு தருகின்ற ஆற்றல் தினமணிக்கு உண்டு.

  காலைப்பொழுதில் தட்டி எழுப்பி நீ எங்கு இருக்கிறாய்? உன்னைச் சுற்றிலும் நடப்பது என்ன? சமுதாயத்தில் உன்னுடைய பங்கு என்ன? இன்றைக்கு நடந்த நிகழ்வு, நிகழப்போகும் நிகழ்வுகள், நேற்று நடந்தது ஆகியவற்றை அறியச் செய்வதிலும், இவற்றில் எல்லாம் உனக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதை உணர்த்துவதும் பத்திரிகையின் கடமை. அந்த சீரிய கடமையை சிறப்புடன் செய்து வருவது தினமணி மட்டுமே.

  இன்னும் சொல்லப்போனால் எனக்கு வயது 88. இந்த வயதில் இந்தியத் திருநாட்டை முற்றிலும் புரிந்து கொள்வதற்கு பெரிதும் துணையாக இருப்பது தினமணிதான். அந்த காலத்தில் கணக்கன் கட்டுரை என்ற பெயரில் அருமையான கட்டுரைகளை எழுதி என் அறிவை தட்டி எழுப்பியது அப்போதைய தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன்தான். அவருடன் நெருங்கிய பழக்கம் எனக்குண்டு.

  எவ்வளவு கடுமையான சூழலிலும் கூட, அதை நகைச்சுவையாக மாற்றி நல்லவற்றை பாராட்டி அல்லனவற்றையெல்லாம் அடித்து, திருத்துகின்ற ஆற்றல் அவரிடத்திலே இருந்தது. நான் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர். அவர் தினமணியின் ஆசிரியர். எனக்கு ஆண்டுக்கு ஒருமுறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

  காரைக்குடி கம்பன் கழகத்துக்கு தவறாமல் வருவார். மேடையிலே நான் பேசியதில் ஏதேனும் புதிய செய்தி, ஏதேனும் அருமையான செய்தி இருந்தால் "இங்கே வாடா' என உரிமையோடு அழைப்பார். "இங்கே உட்கார்" என அமரச் செய்வார். இந்த செய்தியை "எங்கே பிடித்தாய்' என கேட்டு அந்த செய்தியை தினமணியில் வெளியிட்டு அனைத்து மக்களுக்கும் சென்றடையச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

  அந்த காலத்தில் இருந்ததைப் போன்றே தினமணியில் இப்போது அருமையான கட்டுரைகள் வெளி வருகின்றன. அறிஞர் பெருமக்களின் கட்டுரைகள் எல்லாம் கூர்மையான செய்திகளை தாங்கி வருவதை படிக்க முடிகிறது.

  காலை எழுந்தவுடன் நான் முதலில் விழிப்பது எனது மனைவி முகத்தில்தான். என்னை படுக்கையில் எழுப்பி முதலில் அளிப்பது தினமணி நாளிதழைதான். அன்றைய இதழை படிக்காவிட்டால் ஏதோ குறையாகவே இருக்கும்.

  பாரதிதாசன் குறிப்பிடுவதைப் போன்று பாராய் பத்திரிகை பணி என்பதற்கு இலக்காக இருப்பது தினமணி. நேர்மையான, நல்ல அருமையான கட்டுரைகளை தருவது தினமணி மட்டுமே. தினமணி வாசகர்களில் நானும் பல்லாண்டு காலமாக இருக்கிறேன். ஒரு பள்ளிக்கூட ஆசிரியரின் கடமை எழுத்தறிவித்தல். அதேபோல, நாட்டின் தலையெழுத்தை அறிவித்தல் பத்திரிகையின் கடமை. அந்த பணியை அருமையாக செய்கின்ற ஆற்றல் தினமணிக்கு உண்டு.

  ஒரு நிருபர் எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் தனி கவனம் செலுத்தியவர் ஏ.என். சிவராமன். ஒருமுறை கம்பன் கழக நிகழ்வுக்கு வந்தபோது, அங்கிருந்த தினமணி நிருபரை அழைத்து ஒரு குறிப்பிட்ட செய்தியை நிகழ்வுக்கு செல்லாமலேயே அழைப்பிதழை பார்த்தே அளித்ததாகக் கூறி கடிந்துகொண்டார்.

  அந்த செய்தில் குறிப்பிட்ட மனிதர் அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. உண்மைக்கு மாறான செய்தியை தருவது நிருபருக்கான தகுதியல்ல. எனவே, தினமணியில் பணியாற்ற தேவையில்லை எனக் கூறி அந்த நிமிடத்திலேயே பணியிலிருந்து நீக்கினார்.

  தினமணியில் உண்மையான செய்தி மட்டுமே வர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததை உணர முடிந்தது. பத்திரிகை தர்மத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். இதைப்போன்ற எண்ணற்ற நிகழ்வுகள், அனுபவங்கள் எனக்கு உண்டு.

  அவர் காலத்தில் இருந்ததைப் போன்றே இன்றும் துணைவேந்தர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் எழுதும் கட்டுரைகள் தினமணியில் வெளியிடுவது சமுதாயத்துக்கு பெரும் பாடத்தை தருவதாக அமைகின்றன. விழாக்களை பற்றிய செய்திகளை, விழாவுக்கு செல்ல முடியாத என்போன்ற வயதானவர்கள் இல்லத்தில் இருந்தே அதனை அறிந்து கொள்வதற்கு பெரிதும் துணையாக இருப்பது தினமணி மட்டுமே.

  தினமணியுடன் இணைப்புகளாக வெளி வரும் சிறுவர்மணி, மகளிர் மணி, தமிழ் மணி, வேளாண்மணி, தினமணி கதிர், கொண்டாட்டம் என அனைத்துமே அனைத்து தரப்பு மக்களையும் சமுதாய கண்ணோட்டத்துடன் செயலாற்ற தூண்டுகின்றன. அர்த்தமுள்ள, ஆழமான விருப்பு, வெறுப்பு இல்லாத கட்டுரைகள் தரும் அருமையான இதழாக தமிழகததுக்கு தினமணி கிடைத்திருக்கிறது.

  கோயில்மணி ஓசை போன்று தினமணியின் சமுதாய மணி ஓசை அனைத்து மக்களும் கேட்பதற்கு துணையாக இருக்கிறது. இது, பல்லாண்டு, பல்லாண்டு தனது பணியை செய்யவேண்டும். இதழ்களில் ஆயுள் சந்தா என்றும், ஆண்டு சந்தா என்றும், தனி இதழ் என குறிப்பிடுவது உண்டு. ஆயுள் சந்தா என்றால் வாசகர்களின் ஆயுளா? பத்திரிகையின் ஆயுளா என சிலர் கேலியாக கூறுவதுண்டு. ஆனால், உண்மையான ஆயுள் சந்தா என்றால் நாடு உள்ளவரை, நாட்டின் ஆயுள் உள்ளவரை தினமணி அந்த செய்திகளை தருவதற்கான சந்தா என பொருள் கொள்ள வேண்டும்.

  அந்த அடிப்படையில் 88 வயதான எனக்கு, எனது தந்தையின் காலத்திலிருந்து வாசிக்கிற பத்திரிகையாக உள்ளது. நாடு உள்ளவரை தொடர்ந்து நடுநிலை பிறழாமல் இந்தப் பணியை செவ்வனே செய்ய வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai