Enable Javscript for better performance
Achievements of Writer Saavi in Dinamani Kathir | Dinamani 85 years Special- Dinamani

சுடச்சுட

  
  saavi

  சாவி

   

  காந்திஜியுடன் இரண்டு நாள் பயணமாகச் சென்று, "நவகாளி யாத்திரை' என்று "கல்கி'யில் எழுதி முன்னணி எழுத்தாளராகத் தன்னை அடையாளம் காட்டினார் ஆசிரியர் சாவி. கல்கியிலிருந்து விலகி அவரும் சின்ன அண்ணாமலையும் "வெள்ளி மணி' என்கிற இதழைத் தொடங்கி சிறிது காலம் நடத்தினார்கள்.

  ஆசிரியர் சாவி, விகடனில் "வாஷிங்டன் திருமணம்', "கேரக்டர்', "திருக்குறள் கதைகள்', "ஆத்திக்சூடிக் கதைகள்', "கோமகனின் காதல்' எழுதி மிகவும் பிரபலமானார். 1950-ஆம் ஆண்டில் தினமணி கதிருக்கு நல்ல நகைச்சுவை எழுத்தாளர் தேவை என்று கேள்விப்பட்டு கதிரில் சேர்ந்தார். சில மாதங்களே பணியில் இருந்தார். சம்பளம் போதவில்லை என்று போய்விட்டார். (ஒரு கட்டுரையில்: கதிர் ஆசிரியர் துமிலன்). பின்னர் அதே தினமணி கதிருக்கு 1967-இல் பொறுப்பாசிரியரானார். பின்னர் ஆசிரியராகவுமானார்.

  "அந்த வெள்ளெழுத்துப் பத்திரிகைக்கா போகிறாய்?' என்று கேலி செய்தவர்கள் பலர். காரணம், அந்தக் காலத்தில் "தினமணி கதிர்' ரோட்டரியில் அச்சானதால் எழுத்து மங்கலாகத் தான் தெரியுமாம்.

  அதே பத்திரிகையை ஜொலிக்கும் பத்திரிகையாக மாற்றிக் காட்ட சாவி பற்பல அற்புதங்கள் செய்தார். தோற்றத்தில், வடிவமைப்பில், புதுப்புது பகுதிகளில், தலைப்புகளில் புதுமைகளைப் புகுத்தினார். தினமணி கதிருக்கு என்று இருந்த பழைய டைட்டில் அமைப்பை சதுர வடிவு எழுத்துக்களாக மாற்றினார். எம்பளமாக "தும்பி'யை உருவாக்கினார். புதிய தோற்றம் வந்துவிட்டது. சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன், சிவசங்கரி, அகஸ்தியன் எனப் பல புதியவர்களை அழைத்து நவீன கதைகளுக்கு கதவைத் திறந்துவிட்டார்.

  ஸ்ரீவேணுகோபாலன் பெயரில் "திருவரங்கன் உலா', "நந்தா என் நிலா', "நீ நான் நிலா' எழுத வைத்தார். அவரையே "புஷ்பா தங்கதுரை' எனப் பெயர் சூட்டி "சிவப்புவிளக்குக் கதைகளையும்', "என் பெயர் கமலா'வையும், "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறதை'யும் எழுத வைத்தார்.

  சிவசங்கரி அமெரிக்கா சென்று வந்த அனுபவத்தை "புதுமையான அனுபவங்கள்' என்று எழுத வைத்தார். தொடர்ந்து அவரை "திரிவேணி சங்கமம்', "நண்டு', "இந்திராவின் கதை' (வாழ்க்கை வரலாறு), "ஏன்?' மற்றும் "சாமா' குறுநாவலை எழுத வைத்தார்.

  விகடன் கால நண்பர்களான ஓவியர் கோபுலு, ஜெயராஜ், எஸ்.பாலு, மாருதி, தாமெரியோ, செல்லம், உமாபதி போன்றோரையும் பயன்படுத்திக் கொண்டார். சவீதா, அழகாபுரி அழகப்பன், கெளசல்யா ரங்கநாதன், ஜெயபாரதி, அமுதவன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களை கதிரில் புதுமுக எழுத்தாளர்களாக அறிமுகம் செய்தார்.

  தி.ஜானகிராமன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் கதிர் அலுவலகத்துக்கு வந்தே எழுதுவார்கள். அவர் எழுதிய தொடர் "செம்பருத்தி'. ஜெயகாந்தன் "சில நேரங்களில் சில மனிதர்கள்' எழுதி சாகித்ய அகாதெமி விருதும் பெற்றார். கவிஞர் கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்துமதம்' எழுதினார். வாசகர் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். பதில் அளித்தார். கற்பனைப் பேட்டிகள் என்பதை உடைத்து அப்போதைய மத்திய நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியத்துடன் ஒருநாள் முழுவதும் இருந்து பேட்டிக் கட்டுரையை தானே எழுதினார். காமராஜரோடு எண்ணிலடங்கா பயணங்கள். உருவாயிற்று "சிவகாமியின் செல்வன்' தொடர். காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளைப் பேட்டி கண்டார்.

  பிரதமர் மொரார்ஜி தேசாய், வங்கதேச அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், அமெரிக்காவிலிருந்து உடல்நலம் தேறி திரும்பிய அறிஞர் அண்ணா ஆகியோரைத் தானே பேட்டி கண்டு எழுதினார். முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து சேலம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட சுற்றுப்பயணங்களில் கலந்துகொண்டு பேட்டிக் கட்டுரை எழுதினார்.

  எழுத்தாளர்களின் படங்கள் பத்திரிகையில் இடம்பெறுவது வெகு அபூர்வம். அதை மாற்றிக் காட்டி எழுத்தாளர் படங்களை இடம்பெறச் செய்தார். "இவர்களைச் சந்தியுங்கள்' என்று வாசகர்களை அழைத்து, அப்போது சென்னை மந்தைவெளியில் இருந்த நட்சத்திர ஓட்டல் "ஓஷியானிக்'கில் சுஜாதா, சிவசங்கரி, புஷ்பா தங்கதுரை, ஓவியர் ஜெயராஜ் உள்ளிட்டோரைச் சந்திக்க வைத்து, அந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியை படங்களுடன் வெளியிட்டு புதுமை செய்தார்.

  "சுப்புடு' என்கிற இசை விமர்சகர் விமர்சனம் எழுதுவார் என்றில்லாமல் அவரை அழைத்து பாராட்டி, விழா எடுத்து பொன்னாடை அணிவித்தார்.

  தனது அலுவலக சகாக்களாக விந்தன், சினிமாவுக்கு நவீனன், இதயன், சி.ஆர்.கண்ணன் (அபர்ணா நாயுடு), ஓவியர் தாமரை, வை.சுப்பிரமணியன் (ஏற்கெனவே கதிரில் இருந்தவர்கள்) போன்றோரையும் அவரவர் திறமைக்கு ஏற்ப பயன்படுத்தினார். விந்தனை வைத்து, "தியாகராஜ பாகவதர்', "எம்.கே.ராதா', "எம்.ஆர்.ராதா' ஆகியோரின் கதைகளையும், "பாட்டினில் பாரதம்', "ஓ மனிதா!' தொடர்களையும் எழுத வைத்தார். நவீனன் "அண்ணாவின் கதை'யை எழுதினார்.

  மிகப்பெரிய திருப்பமாக கலைஞர் மு.கருணாநிதியின் "நெஞ்சுக்கு நீதி' முதல் பாகம் தொடர் ஆரம்பமாயிற்று. தொடர் நிறைவுற்றதும், அதை தினமணி வெளியீடாக நூலாக்கி, வெளியீட்டு விழாவையும் நடத்தினார். தொடர்ச்சியாக கலைஞரின் "குறளோவியம்' வந்தது. சாவி "தெப்போ-76' எழுதி அதில் ஜப்பானில் தேரோட்டம் நடத்தினார்.

  இதுபோன்ற அனைத்தும் "தினமணி கதிர்' விற்பனையை அன்றைய முன்னணி வார இதழ்களான ஆனந்தவிகடன், குமுதம், கல்கி மூன்றுக்கும் நிகராகக் கொண்டு நிறுத்தியது. தினமணி கதிரில் எழுதினால்தான் கெளரவம் என்று எழுத்தாளர்கள் கருதும் அளவுக்கு அதன் மரியாதை உயர்ந்தது. திரைப்பட நட்சத்திரங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நிகராக எழுத்தாளர்களுக்கும் வாசகர் வட்டத்தை நடத்தி ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தித் தந்த பெருமை ஆசிரியர் சாவிக்கு உண்டு. அதை அவர் "தினமணி கதிர்' இதழ் மூலம்தான் சாதித்துக் காட்டினார்.

  ஏனைய தமிவ் வார இதழ்களிலிருந்து அளவிலும், வாசிப்பிலும், வடிவமைப்பிலும் வேறுபட்டு நின்றது "தினமணி கதிர்'. அந்த பாணியைத்தான் அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஆனந்தவிகடனும், கல்கியும் பின்பற்றுகின்றன என்பதிலிருந்து காலத்தைக் கடந்து சிந்தித்த ஆசிரியர் சாவியின் இதழியல் தொலைநோக்கை நாம் உணர முடிகிறது. தமிழ் இதழியல் வரலாற்றில் "மணிக்கொடி' காலம் எப்படி முக்கியத்துவம் பெறுகிறதோ, அதைபோல ஆசிரியர் சாவி வெளிக்கொணர்ந்த, "தினமணி கதிர்' காலமும் முக்கியத்துவம் பெறுகிறது.

  - பாவை சந்திரன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai