Enable Javscript for better performance
During the anti-Hindi agitation of advising the government | Editorial Articles- Dinamani

சுடச்சுட

  

   

  மொழியா, ஒருமைப்பாடா?

  சென்ற இரண்டு, மூன்று நாட்களாக சென்னை நகரிலும், ராஜ்யத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ள துர்ப்பாக்கியமான சம்பவங்களைப் பற்றி யாரும் மகிழ்ச்சியடைவதற்கோ பெருமைப்படுவதற்கோ இடமில்லை. இந்த சம்பவங்களைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தேசத்தின் ஒருமைப்பாடு முக்கியமா அல்லது இந்தியர்களாகிய எங்களுக்கு ஒரு பொது மொழி இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் பெருமை முக்கியமா என்பதை யூனியன் சர்க்கார் உடனடியாக முடிவு செய்தாக வேண்டும். இதில் தாமதம் காட்டுவதோ அல்லது அந்தந்தப் பிரதேசங்களில் உள்ளவர்களைத் திருப்திபடுத்துவதற்காக, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாகப் பேசி, செப்பிடுவித்தைகள் செய்வதோ ஆபத்தானதாகும் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறோம். இன்றுள்ள நிலைமையில் ஹிந்திதான் ஆட்சி மொழி என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் தவறானதாகும். அதற்கு சென்னை ராஜ்யம் தயாராயில்லை. பொது மொழி என்ற கானல் நீரை விரட்டிக் கொண்டு ஹிந்தியைப் பற்றி இப்ப்டியே பேசிக் கொண்டிருந்தால், தமிழ்நாட்டில் ஹிந்திக்கு உள்ள எதிர்ப்பு வளருமே ஒழிய குறையாது. ஹிந்தியை ஆட்சி மொழியாக்கினால், தமிழ்நாட்டின் நலன்கள் பாதிக்கப்படும் என்ற அபிப்பிராயம் சரியா, இல்லையா என்று சர்ச்சை செய்தால் போதாது. இப்படி ஒரு அபிப்பிராயம இருக்கிறது என்ற உண்மையை டில்லி உணரவேண்டும். இந்தியாவில் தமிழ்நாட்டினருக்குச் சம அந்தஸ்து இருக்காது என்ற கவலை வளருமானால் அது பிரிவினை சக்திகள் வளருவதற்கே இடம் தருவதாகும். இதை டில்லி சர்க்காரும், ஹிந்தி பேசும் பகுதியினரும் உணர வேண்டும். தேச ஒருமை முக்கியமா, ஹிந்தியின் அந்தஸ்து உயருவது முக்கியமா என்று ஹிந்தி பகுதியினர் சிந்தனை செய்ய வேண்டும்.

  இந்த ராஜ்யத்திலுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வரையில், உணர்ச்சி பூர்வமான ஹிந்தி எதிர்ப்பு அநேகமாக ஏகமனதாக இருக்கிறதென்று சொல்லுவது மிகையாகாது. பொது மொழி வேண்டியதுதான் என்று நினைப்பவர்கள் கூட, இப்போது உள்ள நிலைமையில் ஹிந்தியை இங்கு சுமத்துவதென்பது சாத்தியமில்லை என்பதை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே, மத்திய சர்க்கார் இந்த விஷயத்தில் காலதாமதமின்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அவர்கள் அவ்வித முடிவுக்கு வருவதற்கு ராஜ்ய சர்க்காரும் உதவி செய்ய வேண்டும். யாரோ பொறுப்பற்ற ஒரு சிறு மைனாரிட்டி கூட்டத்தினர்தான் ஹிந்தி எதிர்ப்பு நாடகம் நடிக்கிறார்கள் என்பது மேடைப் பிரசங்களுக்கு ஏற்றதாயிருக்கலாம். ஆனால், அப்படிக் கூறுவது உண்மைக்கு மாறனதாகும்.

  ஹிந்தியை அகில இந்திய சர்க்கார் மொழியாக ஏற்பதற்கு வேண்டிய சூழ்நிலை இங்கு ஏற்பட்டிருக்கிறதா என்பதை சென்னை சர்க்கார் நெஞ்சில் கை வைத்துப் பார்க்கட்டும். பள்ளிக்கூடங்களில் ஹிந்தி போதனை விஷயமாக சென்ற 10, 15 ஆண்டுகளில் சர்க்கார் செய்த காரியங்கள் ஹிந்தி படிக்கத்தான் வேண்டும் என்று மாணவர்கள் உண்மையாக நம்புவதற்கு இடந் தரவில்லை. ஏனெனில் ஹிந்தி ஒரு பாடமாயிருந்தாலும், அதில் இவ்வளவு "மார்க்கு''கள் வாங்கவேண்டுமென்று விதிக்கவில்லை. மற்ற பாடங்களில தேர்ச்சி பெற்றவர்கள், ஹிந்தியில் பூஜ்யம் வாங்கினால்கூட மேல் வகுப்புக்குப் போக முடியும் என்று ராஜ்ய மந்திரிகள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள. ஆகையால், ஹிந்தியை முக்கியமான ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளுவதற்கான மனோபாவமே மாணவர்களுக்கு ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணைகளுக்குப் பணிந்து ராஜ்ய சர்க்கார் இப்படிச் செய்ய நேர்ந்தது. ஆனால், அதே சமயத்தில் இங்குள்ள தர்மசங்கடமான நிலைமையை சென்னை காங்கிரஸ் மந்திரிகள் டில்லி சர்க்காருக்கு எடுத்துச் சொல்லி, மொழிப் பிரச்னையை ஒத்திப் போடும்படி வற்புறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, ஹிந்தியின் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் ஜனவரி 26-ந் தேதி முதல் ஹிந்தி ஆட்சிமொழியாகும் என்ற அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.

  ஜனவரி 26உ ஆட்சி மொழி ஷரத்து அமலுக்கு வருவதை தி.மு.க. எதிர்த்தது. அந்த நாளை துக்க தினமாகக் கொண்டாட வேண்டுமென்றும், அன்று கருப்புக் கொடிகளை உயர்த்த வேண்டுமென்றும் தி.மு.க. முடிவு செய்தது. ஜனவரி 26உ குடியரசு தினமாகையால், அந்த நாளின் புனிதத்தை பாதிக்கக் கூடிய எதையும் செய்யக்கூடாதென்று சர்க்கார் கூறினார்கள். ஹிந்தி திணிப்பை எதிர்ப்பவர்கள்கூட 26உ குடியரசு தினமாகையால் , அந்த நாளின் புனிதத்தை பாதிக்கக் கூடிய எதையும் செய்யக்கூடாதென்று சர்க்கார் கூறினார்கள். ஹிந்தி திணிப்பை எதிர்ப்பவர்கள்கூட 26உயன்று கலாட்டா வேண்டாம் என்ற மனப்பான்மையில் அனுதாபம் காட்டினார்கள். 25உயோ அல்லது 27உயோ துக்க தினம் கொண்டாடுவதைப் பற்றித் தமக்கு ஆட்சேபணையில்லை என்றும் சர்க்கார் தெரிவித்தார்கள். 25உ நள்ளிரவிலேயே ராஜ்யம் பூராவிலும் தி.மு.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். தாம் கைது செய்யப்பட்டு விட்டதால் 26உயன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டனக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாமென்று தி.மு.க. பொதுக்காரியதரிசி ஸ்ரீ அண்ணாதுரை அறிவித்தார். 26உயன்று தி.மு.க. கண்டனக் கூட்டங்கள் நடைபெறவில்லை.

  ஆனால், 25உ யன்றும், 27உ யன்றும் ராஜ்யத்தின் பல பாகங்களில் வருந்தத்தக்க சம்பவங்கள் நடைபற்றன. இதற்குக் காரணம் என்ன? குடியரசு தினம் தவிர மற்ற தினங்களில், கறுப்புக் கொடி ஏற்றுவதற்கோ துக்க தினம் கொண்டாடுவதற்கோ தமக்கு ஆட்சேபணையில்லையென்று சர்க்கார் சொல்லியிருந்துங்கூட, 25, 27 தேதிகளில் போலீஸார் இவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளும்படியான நிலைமை எப்படி ஏற்பட்டது? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும்போது தான் சில சந்தேகங்கள் எழுகின்றன.

  இந்த நாட்களில் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள்தான் நடைபெற்றன. இது இயற்கையே. ஏனெனில் ஹிந்திக்கு அளிக்கப்படும் புது அந்தஸ்தினால் எதிர்காலத்தில் பாதிக்கப்படப் போகிறவர்கள் அவர்கள்தாம். நாம் முதலில் சொன்னதுபோல, ஹிந்தி எதிர்ப்பு சம்பந்தப்பட்ட வரையில், மாணவர்களிடையே அநேகமாக கருத்துவேற்றுமையே இல்லை. இந்த நிலைமையில், இந்த விஷயத்தில் ஏதோ பெரிய வித்தியாசங்கள் இருப்பது போன்ற ஒரு நிலைமையைத் தோற்றுவிப்பதற்கு யார் காரணம்? அரசியலை ஜீவனமாக வைத்துக்கொண்டிருப்பவர்கள்தான் இதற்குக் காரணம் என்று நாம் சொன்னால் அதில் அதிக தவறு இருக்க முடியாது.

  மாணவர்கள் எப்போதுமே உணர்ச்சி வசப்பட்டவர்கள். சில சமயங்களில் இந்த வேகத்தில் அவர்கள் விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்க்காமல் பொறுப்பர்ற விதத்தில்கூட நடந்து கொள்ளக்கூடும். ஆனால் அவர்களைக் கையாளும் விதத்தில் அதிகாரிகள் இன்னும் சாதுரியமாக நடந்து கொண்டிருக்கலாம். சில கல்லூரிகளின் பிரின்ஸிபால்களும், ஹாஸ்டல் வார்டன்களும் கூறும் விவரங்களைப் பார்க்கும்போது உண்மையாகவே வேதனையாகத்தானிருக்கிறது.

  ஹிந்தி வேண்டுமா, வேண்டாமாவென்பதைப் பற்றி மாணவர்களிடையே பிளவிருப்பதாக நாம் நினைக்கவில்லை. ஹிந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் வெற்றி, தி.மு.க.வின் வெற்றியாகக் கருதப்படலாம் என்ற ஒரு கருத்தில்தான் மாணவர்களிடையே வேற்றுமை ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், பள்ளி வாழ்க்கையில் இத்தகைய மாச்சரியங்கள் வளரும்படி விடுவது நல்லதல்ல.

  ஹிந்தி விஷயமாக பிரதம மந்திரியும், மற்ற யூனியன் மந்திரிகளும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்கள். குடியரசு தினத்தன்று பிரதமர் சாஸ்திரி டில்லியில் பேசுகையில், ஹிந்தியின் அபிவிருத்திக்கு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார். அதே மூச்சில் ஹிந்தி பேசாதவர்களுக்கு பாதகமாக எதையும் செய்யக்கூடாதென்கிறார். ஹிந்தி பிரியர்கள், ஹிந்தி எதிர்ப்பாளர்கள் இருவரையுமே திருப்தி செய்யப் பார்க்கிறார். ஸ்ரீ குல்ஜாரிலால் நந்தா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அளித்த ஒரு பேட்டியில் ஹிந்தி பேசாதவர்களின் நலன்களுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய மாட்டோமென்றார். அதே மூச்சில் மத்ய சர்வீஸுக்கு வர விரும்புபவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வரென்றார். இம்மாதிரி செப்பிடு வித்தைகள் நிலைமையை மேலும் குட்டை குழப்பத்தான் செய்யும். ஹிந்திக்கோ, பொதுமொழிக்கோ இப்போது ஒன்றும் அவசரம் வந்து விடவில்லை. இதைக் காலவரையறையின்றி ஒத்திவைப்பதுதான் நாட்டுக்கு நல்லது. இந்த உண்மையை ராஜ்ய சர்க்காரும் யூனியன் சர்க்காரிடம் வற்புறுத்த வேண்டும்.

  அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதையே சர்க்கார் செய்வதாக பிரதமர் சாஸ்திரி பேசியிருக்கிறார். டில்லி சர்க்கார் பின்பற்றும் கொள்கை அரசியலமைப்புப்படி சரியா, இல்லையாவென்பதல்ல இன்றைய பிரச்னை. தேசிய ஐக்கியத்தைக் காப்பாற்றுவதோ அல்லது மொழிப் பிரச்னையில் தேசிய ஐக்கியத்தைப் பலியிடுவதா என்பதே கேள்வியாகும்.

  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு அறிவுரை கூறுகிறது இந்த தலையங்கம். (29.1.1965)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai