அறிமுகம் - முதல் தலையங்கம்

பல மாதங்களுக்கு முன்னரே இப் பத்திரிகை வெளிவந்திருக்க வேண்டும். பல இடையூறுகளால் தாமதமாயிற்று.

அறிமுகம்

பல மாதங்களுக்கு முன்னரே இப் பத்திரிகை வெளிவந்திருக்க வேண்டும். பல இடையூறுகளால் தாமதமாயிற்று.

தமிழில் பல தினசரிப் பத்திரிகைகள் இருக்கின்றன. மற்றுமோர் பத்திரிகை தோன்றுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியென்று சிலர் நினைப்பர். பெரும்பாலோர் தினமணியின் போக்கைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று நடுநிலைமை வகிப்பர்.

போர்க்காலத்தில் யுத்த வீரர்களுக்கு பக்க பலமான சேவகர்கள் பலர் வேண்டும். தொற்று நோய் பரவும் பொழுது நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் ஊழியர்கள் வேண்டும். பஞ்ச காலத்தில் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கும் தொண்டர்கள் வேண்டும்.

நமது நாட்டில் சென்ற பதினைந்து வருஷங்களாக ஓர் அபூர்வ சுதந்திரப் போர் நடந்து வருகின்றது. அதன் நடுவில் ஏற்படும் அற்ப வெற்றிகளால் மயங்காமலும் சிறிய தோல்விகளால் தளராமலும் பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் தினமணி துணை புரியும்.

எல்லா வியாதிகளிலும் மனோ வியாதியே மிகக் கொடியது. நமது மக்களின் மனத்தில் அடிமைத்தனம் குடி கொண்டிருக்கின்றது. காந்தியடிகளின் பெரு முயற்சியால் சிறிது காலமாக பாரத மக்கள் மற்ற நாட்டினரைத் தலையெடுத்துப் பார்க்கவாரம்பித்திருக்கின்றனர். ஆயினும் நமது பெரியாரிடத்தும் சிறியாரிடத்தும் அடிமைப் புத்தி அகன்றபாடில்லை. அதை அடியோடி அழித்து தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்குத் தினமணி ஓயாது பாடுபடும்.

இந்திய ஜனங்களில் பெரும்பாலோர் அழியாப் பஞ்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்களுண்டு. அவற்றுள் முதன்மையானது முதலாளிகளும் ஜமீந்தார்களும் நமது தொழிலாளர்களின் உழைப்பினால் உண்டாகும் செல்வத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு தாங்கள் ஆடம்பரங்களுக்காக அழிப்பதுதான். இம்முறை மாறி நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதி தொழிலாளர்களுக்குச் சேரக்கூடிய புதியதோர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும்..

தேச.. சேவையும் தமிழ்நாட்டிற்கு இன்றியமையாதனவென்று கருதியே தினமணி இன்று உதயமாகின்றது. மேற்கூறிய கொள்கைகளைச் சிறிதும் நழுவவிடாமல், பாதுகாப்பதற்கு தேச சேவையில் தேர்ந்த ஒரு இளைஞர் கூட்டம் அதிக ஊதியத்தை எதிர்பாராமல் இவ்வேலையை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் தினமணியை தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்பது எமது பூர்ண நம்பிக்கை.

 11.09.1934 அன்று தினமணியில் வெளியான முதல் தலையங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com