இலக்கணம் தழுவியும், நல்ல தமிழிலும் வெளிவரும் ஒரே நாளிதழ்! 

எண்பதிலிருந்து எண்பத்தோராம் அகவையில் அடியெடுத்து வைக்கும் நான் அறுபதாண்டுக்கும் மேலாக "தினமணி' வாசகனாக இருப்பதில் பெருமையடைகிறேன்.
கவிக்கோ ஞானச்செல்வன்
கவிக்கோ ஞானச்செல்வன்

எண்பதிலிருந்து எண்பத்தோராம் அகவையில் அடியெடுத்து வைக்கும் நான் அறுபதாண்டுக்கும் மேலாக "தினமணி' வாசகனாக இருப்பதில் பெருமையடைகிறேன்.

என் தந்தையார் விடுதலைப் போராட்ட வீரர் ஈகி பி.க.கோவிந்தசாமி தினமணி தொடக்க முதல் வீட்டில் போடுமாறு செய்திருந்தார். சுதேசமித்திரனும் வந்துகொண்டிருந்தது.1960-ஆம் ஆண்டு வரை பள்ளி, கல்லூரி விடுமுறை நாள்களில் வீட்டில் படிக்கும் வாய்ப்பு இருந்தது.1960-61-இல் ஆசிரியர் பணி ஏற்றது முதல் இன்று வரை தினமணியின் தொடர்ந்த வாசகனாக இருக்கிறேன்.

தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் பல்துறைச் செய்திகளையும் நாள்தோறும் எழுதி வந்தார். "கணக்கன்' என்ற பெயரில் அவர் எழுதிய தொடர்கள் பொருளாதாரம், உலக அரசியல், நாட்டுநடப்பு, இன்னும் பற்பலவும் அறிவுக்கு விருந்தாக அமைந்தன. ஒரே குறை வடசொல், கிரந்த எழுத்துகள், ஆங்கிலம் கலந்து வரும்.

"அன்றாடம் செய்திகளில் ஜல சப்ளை திட்டம் இதுதான் மும்மொழித்திட்டம்' என்று நானே பலசமயம் கிண்டல் செய்துள்ளேன்.

தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். அப்போதெல்லாம் படிப்பவர் (வாசகர் ) கடிதங்கள் சிறந்த இடம்பெற்றன. தமிழ்க்குடிமகன் பேரவைத் தலைவராக இருந்த சமயம் பெயர்ப் பலகைகளில் தமிழ் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை ஒட்டியும் வெட்டியும் பலர் எழுதிய கடிதங்கள் தலையங்கப் பக்கத்தில் அந்தப் பக்கம் முழுவதுமாக கடிதங்கள் வெளியிடப்பட்டன. நான் எழுதிய நீளமான கடிதமும் அதில் இடம்பெற்றது. தமிழ்க்குடிமகன் கருத்தை ஆதரித்தும் அதேநேரம் சிலவற்றை மறுத்தும் எழுதியிருந்தேன்.

பின்னர், தமிழில் சில சொற்களுக்கு தக்க எழுத்துகள் இல்லை. புதிய வரிவடிவங்களைச் சேர்க்க வேண்டுமென்று ஒருவர் எழுதியதற்கு மறுப்பு விரிவாக நான் எழுதியது அப்படியே வெளிவந்தது.

தினமணி முன்னாள் ஆசிரியர் மாலன் பெரிய மாற்றங்கள் இல்லாமல் முன்னோர் நெறியில் இதழை நடத்தி வந்தார். இராம.சம்பந்தம் நல்ல தமிழுக்கு இடம் தந்தார்.

பின்வந்த ஆசிரியர் கி.வைத்தியநாதன் இதழின் தோற்றமும் பொருளும் மாற்றமுறச் செய்து எடுப்பும் ஏற்றமும் கொண்டதாக மாற்றி வருகிறார். தமிழுக்குச் சிறப்பிடம் தந்து "தமிழ்மணி' எனும் புதிய பகுதியும் நடத்தி வருகிறார். ஒரு கதிர் மட்டும் இணைப்பாக வந்தது அப்போது. இப்போது "இளைஞர்மணி', "மகளிர்மணி' என்பனவும் சேர்ந்துவிட்டன.

செம்மொழி மாநாட்டில் எனக்கு ஊடகங்களில் தமிழ்மொழிச் சிதைவுகள் பற்றி ஆய்வுக் கட்டுரை வழங்கி உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வரங்கிற்குத் தலைவராக இருந்த வைத்தியநாதன் மகிழ்ந்து என்னிடம் இந்தப் பொருள் பற்றி விரிவாக தினமணியில் தொடர் எழுத வேண்டுமென்றும். அது பிற பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் பயனாகும் என்றும் சொல்லி எழுதச் செய்தார்கள். நான் 72 வாரங்கள் கதிரில் எழுதினேன். பின் நூலாகவும் வெளிவந்தது. வாழ்வில் ஒரு திருப்பத்தை அளித்த ஆசிரியரை என்றும் மறக்க முடியாது.

இயன்றவரை இலக்கணம் தழுவியும் கூடிய வரையில் நல்ல தமிழிலும் வெளிவரும் ஒரே நாளிதழ் தினமணி மட்டுமே. திருக்குறள் விளக்கமுறத் தலையங்கம் எழுதியும், அயல்நாட்டுச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் அனைத்தும் இடம்பெற்று செய்தித்தாள் படித்த நிறைவைத் தருவது தினமணி.

ஒன்று மட்டும் உறுதி. அன்று முதல் இன்று வரை தினமணி படிக்கவில்லையானால், செய்தித்தாளை படித்த நிறைவே ஏற்பட்டது இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com