தினமணியின் நீண்டநாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன்
தினமணியின் நீண்டநாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன்

என் உணர்ச்சியும் வளர்ச்சியும்!

தினமணியின் 1997 சுதந்திரப் பொன்விழா மலரில் பத்திரிகை உலகப் பிதாமகராக விளங்கிய அமரர் ஏ.என்.சிவராமன் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கு மறுபிரசுரம் செய்கிறோம்.

தினமணியின் 1997 சுதந்திரப் பொன்விழா மலரில் பத்திரிகை உலகப் பிதாமகராக விளங்கிய அமரர் ஏ.என்.சிவராமன் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். தற்போதைய இளம் தலைமுறையினர் தான் பார்த்தறியாத சுதந்திர இயக்கக் காலத்தின் இளந்தலைமுறையை, அதன் இலட்சிய தாகத்தை இந்த எழுத்தினூடே தரிசிக்கலாம்.

1917-ல் நான் அம்பாசமுத்திரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அன்னிபெசன்ட் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட செய்தியும் படமும் ஒரு நாள் (நியூ இந்தியா) பத்திரிகையில் வந்திருந்தது. ஏன் கைது செய்யப்பட்டார் என்று நான் ஆசிரியரிடம் கேட்டேன். "அவர் ஹோம் ரூல் இயக்கத்தைச் சேர்ந்தவர்' என்று அந்த ஆசிரியர் பதிலளித்தார். தேசிய இயக்கம் பற்றிய உணர்வு எனக்குள் புகுந்தது அன்றுதான்.

அந்தக் காலத்திலெல்லாம், எனக்கு முதலில் தெரிந்த தலைவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி இடைவிடாமல் காங்கிரஸ் பிரசாரம் செய்வது வழக்கம். சுமார் ஆறு மாத காலம் இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் பலரைச் சந்தித்து, பல இடங்களில் பேசினார். 60 பொதுக்கூட்டங்களிலாவது பேசியிருப்பார். 

மாண்டேகு-செம்ஸ் போர்டு, 1919-அரசியல் சட்டம் சொல்வது என்ன என்பதையெல்லாம் விளக்கி, "ஆரிய, திராவிட, ஹிந்து-முஸ்லிம், சகோதர சகோதரிகளே' என்று தொடங்கி சுமார் ஒன்று, ஒன்றரை மணி நேரம் வெண்கல ஓசையில் இனிமையாக கேட்போர் ரசிக்கும்படியான பாணியில் பிரசங்கம் செய்வார். அவரது சொற்பொழிவுகள் சுதந்திர உணர்ச்சிகளை உருவாக்கின.

1920 ஜூன் மாதம் நான் நெல்லை ஹிந்து காலேஜில் (இன்டர்மீடியேட் வகுப்பில்) சேர்ந்தேன். ஏற்கெனவே சொல்லியுள்ளபடி 1920 செப்டம்பரில் கல்கத்தாவில் ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேறியது. என் மனதும் இயக்கத்தில் சேரத் தயாராகிவிட்டது. டிசம்பரில் தீர்மானம் உறுதி செய்யப்பட்டது. என் மனதிலும் தேசிய இயக்கத்தில் சேரும் விருப்பம் செயலாக மாறியது. ஜனவரி 8-ஆம் தேதியன்று காலேஜுக்குச் சென்று, கல்லூரி முதல்வரிடம் (பிரின்ஸ்பலிடம்) விடைபெற்றுக் கொண்டேன். என் அறையிலிருந்த பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு ஊருக்குப் போவதற்குத் தயாரானேன். ரூமிலிருந்த என் தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு நண்பர், நேற்று மாலையில் டாக்டர் சங்கர ஐயர் என்பவரும் சில வருஷங்களுக்கு முன் ஹிந்து காலேஜில் பேராசிரியராக இருந்த யக்ஞேசுவர சர்மாவும் வந்து, ஒரு பொதுக்கூட்டத்தில் "காந்தி, ஒத்துழையாமை இயக்கம்' பற்றி பேசினர் என்று சொன்னார்கள். அவர்களுக்கு எந்த ஊர் என்று என்று கேட்டேன். கல்லிடைக்குறிச்சி என்றார்கள். அடுத்த நாள், பெட்டி, படுக்கையுடன் ஊருக்குப் போவதற்குப் பதிலாக, கல்லிடைக்குறிச்சிக்குப் போனேன்.

டாக்டர் சங்கர ஐயர் வீடு எங்கே என்று ஸ்டேஷனில் கேட்டேன். "அதோ எதிரே தெரிகிறதே ஒரு பெரிய வீடு... அதுதான்' என்று பதில் வந்தது. டாக்டரின் வீட்டுக்குப் போனேன். "நீ யார்? என்ன செய்தி?' என்று கேட்டவுடன், பெயரையும் காரணத்தையும் சொன்னேன். "காலேஜிலிருந்து வீட்டுக்குப் போகவே இல்லையா?' என்று கேட்டார்.

சிறிது நேரத்துக்கெல்லாம் யக்ஞேசுவர சர்மா வந்து சேர்ந்தார். பத்து நிமிஷத்துக்குப் பிறகு கோமதி சங்கர தீட்சிதர் என்பவர் வந்தார். டாக்டர் சங்கர ஐயர் தமது மனைவி லட்சுமி அம்மாவை அழைத்து "அம்மா நம் வலைக்குள் இன்னொரு பட்சியும் விழுந்திருக்கு' என்றார். டாக்டர் சங்கர ஐயர் வீட்டில் இரண்டு மூன்று நாள் தங்கி விட்டு என் சொந்த ஊரான கீழாம்பூருக்கு பெட்டி படுக்கையுடன் போனேன். 

அந்த ஊரில் எல்லா பிராமண குடும்பங்களும் பரஸ்பரம் தாயாதிகள் (சொந்தக்காரர்கள்) அல்லது சம்பந்திகள். நான் வீட்டுக்குப் போய் என் தாயாரிடம் செய்தியைச் சொன்னேன். அவர் மூலமாக எல்லா வீடுகளிலும் செய்தி பரவியது. நான் செத்துப் போயிருந்தால் கூட அவ்வளவு கூட்டம் வந்திருக்காது. ஏன், ஏன்? என்று கேட்டுக்கொண்டு அப்போது வீட்டுக்கு வந்த பல உறவினர்கள், என் கையைப் பிடித்து மற்றொரு பெரிய வீட்டுத் திண்ணைக்கு அழைத்துக்கொண்டுபோய் கோபமாகச் சிலபேர், நல்ல வார்த்தை சொல்லிச் சிலபேர், மூன்று நாட்கள் மன்றாடினார்கள்.

அப்போது எங்கள் ஊரிலிருந்து காலேஜில் படித்துக் கொண்டிருந்தவன் நான் மட்டும்தான். மூன்று நாள் நிர்பந்தித்துப் பார்த்தார்கள். செய்தி கேட்டு என் மாமியார், மாமனார் எல்லோரும் வந்தனர். (மனைவி வரவில்லை) அவர்களது முயற்சியும் பலிக்கவில்லை. இரண்டு, மூன்று நாள் தங்கி விட்டு அவரவர் ஊருக்கோ வீட்டுக்கோ திரும்பி விட்டனர். எனக்கு அப்போது வயது 17 நிரம்பவில்லை.

நாலைந்து நாளுக்குப் பின் தென்காசியிலிருந்த என் மாமனார் வீட்டுக்குப் போனேன். (என் மனைவி அப்போது அங்குதான் இருந்தாள்). என் மாமனார் சீதாராமையர் வக்கீலாக இருந்தார். தேசிய இயக்கத்தில் ஈடுபாடுள்ளவர். அங்கு தங்கியிருந்தபொழுது, பொழுது போகாமல் நான் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் என் மாமனார் என்னைப் பார்த்து ""ராமையா, உன்னை ஒரு காங்கிரஸ்காரரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்'' என்று சொல்லிக்கொண்டு பக்கத்திலிருந்த பஜார் தெருவில் "ஸ்டார் அன் கோ' என்ற பெயருள்ள ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அந்தக் கடையை நடத்திக் கொண்டிருந்தவர் டி.எஸ்.சொக்கலிங்கம்.

எனக்கு அவர் 4 வயது பெரியவர். கண்ணாடிப் பொருட்கள், பென்சில், விளக்கு, நோட்புக் முதலிய பொருள்கள் விற்கும் கடைக்கு அந்தக் காலத்தில் "ஷாப் கடை' என்று பெயர். என் மாமனார் அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தவுடன் சொக்கலிங்கத்துக்கு ஒரே மகிழ்ச்சி.

தென்காசியில் தங்கி சொக்கலிங்கம் பிள்ளையுடன் பழகி வந்த காலத்தில் ஒரு நாள் தூத்துக்குடியிலிருந்து என் மாமனாருக்கு ஒரு கடிதம் வந்தது. ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மகாதேவ ஐயர் தமக்கு ஒரு "எழுத்தர்' வேண்டும் என்றும் என்னை அனுப்பும்படியும் அதில் எழுதியிருந்தார். நானும் சம்மதித்து, தூத்துக்குடி சென்று பணியை ஏற்றுக்கொண்டேன்.

மகாதேவ ஐயர் பல ஊர்களுக்குச் சென்று காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் பேசுவது வழக்கம். அப்போது உடன் என்னையும் அழைத்துச் செல்வார். சில கூட்டங்களில் என்னையும் பேசச் சொல்வார். நானும் பேசுவதுண்டு. இரண்டு மாத காலம் அவருடன் இருந்துவிட்டு நான் தென்காசி திரும்பினேன். மாமனார் வீட்டில் தங்கியிருந்தேன்.

ஜார்ஜ் மன்னர் நடுநிலைப் பள்ளி திலகர் வித்யாலயமாகக் கைமாறியதும், அதில் பணிபுரிந்த பல ஆசிரியர்கள் தமது Teacher Certificate பறிபோய்விடும் எனப் பயந்து வேலையை ராஜிநாமா செய்துவிட்டனர். அதனால் அங்கு நான் ஆசிரியராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று டாக்டர் சங்கர ஐயர் விரும்பினார். மகாதேவ ஐயர், டாக்டர் சங்கர ஐயரின் தூதுவராகத் தென்காசிக்கு வந்தார்.

"ஒரு மாதம் வேலை செய்து பார்; பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு' என்று உத்தரவாதம் அளித்துப் பணியில் சேரச் சொன்னார்கள். பணியில் சேர்ந்தேன். மாணவர்களுக்கு என்மேல் அபிமானம் வந்துகூடிவிட்டது. பணியில் எனக்கு உற்சாகம் பிறந்தது.

எனக்கு கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி என்ற இரண்டுமே சொந்த ஊர் மாதிரி. ஆம்பூர் என் தாய், தந்தையர் வாழ்ந்த ஊர். ஆழ்வார்குறிச்சி (மேலக் கிராமம்) என்னைத் தத்தெடுத்த தாத்தாவின் ஊர். ஆழ்வார்குறிச்சியில் ஒரு நாள் ஒரு பெரியவரை அணுகி அவரைக் காங்கிரஸ் உறுப்பினராக்குவதற்குப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன வார்த்தையை அப்படியே சொல்கிறேன். 

"ஏண்டாப்பா, வெள்ளைக்காரன் நன்றாகத் தானே ஆள்கிறான். கட்ட வேண்டிய வரியை 4 தவணையாகப் பெற்றுக்கொள்கிறான். வேறு நமது சமாசாரங்களில் தலையிடுவதில்லை. அந்த ஆட்சியை ஏன் எதிர்க்கிறீர்கள்? காந்தி, பூந்தி என்று என்னத்தையோ சொல்ல ஆரம்பித்து வந்தே மாதரம் என்று கோஷிக்க ஆரம்பித்ததால்தான் நாட்டில் சர்க்கார் வேலை பிராமணர்களுக்குக் கிடைக்காமல் போகிறது. காங்கிரஸும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம்; ஆளை விடு'' என்றார். அப்போதிருந்த சூழ்நிலைக்கு இது ஓர் உதாரணம்.

அவருக்கு நான் சொன்ன பதில் 

சர்க்கார் வேலை இல்லை என்றால் பிழைக்க முடியாதா? இந்தத் தெருவில் உள்ள 30 வீட்டில் யாராவது சர்க்கார் வேலையில் இருக்கிறார்களா? மனு செய்துள்ளார்களா? இல்லையே! கீழாம்பூரில் உள்ள 220 வீடுகளில் சர்க்கார் வேலைக்குப் போக வேண்டும் எனப் பிரியப்படுபவர்கள் இருக்கிறார்களா? இல்லையே! என்று சொல்லிவிட்டு வந்தேன்.

மற்றொரு ருசிகரமான அனுபவத்தையும் சொல்கிறேன்.

நான், சொக்கலிங்கம், கோமதி சங்கர தீட்சிதர், அம்பாசமுத்திரத்தில் அச்சகம் வைத்திருந்த சிதம்பரம் பிள்ளை ஆகியவர்கள் காங்கிரஸ் பிரசாரத்துக்காக, பிராமணர் வீடுகளும் பிள்ளைமார் வீடுகளும் உள்ள அத்தாள நல்லூர் என்ற ஊருக்குப் போயிருந்தோம். 

அங்கு 50 வீடுகள் உள்ள பிராமணத்தெருவில், நாலைந்து பேரைக் காங்கிரஸ் உறுப்பினர்களாக்க முடிந்தது. பிறகு பிள்ளைமார் வீடுகளுக்குச் சென்றோம். அந்தத் தெருவில் ஒரு வீடு சிதம்பரம் பிள்ளைக்கு அறிமுகமான வீடு. அந்த வீட்டின் நுழைவு வாயிலில் என் நண்பர் டி.எஸ்.சொக்கலிங்கம் பிள்ளையை, "தென்காசி மடத்துக்கடை சங்கரலிங்கம் பிள்ளை குமாரர்' என சிதம்பரம் பிள்ளை அறிமுகம் செய்து வைத்தார்.

"சரி, இந்த ரெண்டு பாப்பானையும் அழைத்துக் கொண்டு எங்கே வந்தீங்க நீங்க?' என்று அந்த வீட்டுக்காரர் கேட்டார்.

சொக்கலிங்கத்துக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. எனக்குச் சிரிப்பு வந்தது. சிதம்பரம் பிள்ளையையும் என்னையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, "இவனோடு என்ன பேச்சு? வாப்பா போவோம்' என்று கிளம்பி விட்டார் சொக்கலிங்கம்.

அந்தக் காலத்தில் சமூகத்தில் அரசியல் விவரம் தெரிந்தவர்களுக்கும் அரசியல் நிலவரம் புரியாத நடுத்தர வகுப்பினருக்குமிடையே நிறைய இடைவெளி இருந்தது. இந்த நடுத்தர வகுப்பினரை நோக்கித்தான் என் பிரசாரம் முழுவதும். கூட்டம் சேர்ப்பதற்கும் ஊர்வலம் போவதற்கும் மிகவும் பயன்பட்டவை பாரதி நூல்கள்.

"தினமணிக்குச் சொக்கலிங்கம் ஆசிரியராக இருப்பது, காங்கிரஸ் வெற்றிக்கு அவசியம் என்று நான் கருதினேன். "நீ வராவிட்டால் நான் போக மாட்டேன்' என்று சொக்கலிங்கம் பிடிவாதம் பிடித்தார். ஆகவே அவரும் நானும் தினமணிக்கு வந்து சேர்ந்தோம்.

சாப்பாட்டுக்கு என்ன வழி? பிராமணர் வீட்டில் போய்ச் சாப்பிடப் போனால், என்னையும் சொக்கலிங்கத்தையும் ஒரே பந்தியில் வைத்துச் சாப்பாடு போடுவார்களா என்று ஒரு சந்தேகம். பிராமணர் அல்லாதார் வீட்டில் போய்ச் சாப்பிட்டால், "இவன் யாரப்பா ஒரு சாதி கெட்ட பாப்பான்?' என்று பிராமணர் அல்லாதவரே சொல்வார்கள்.

ஆகையால், வெளியூருக்குப் போகும்போது கேப்பை மாவு அல்லது சத்து மாவு (நெல்லை வறுத்துக் குத்தி மாவாக எடுப்பது) தண்ணீர் விடாமல்; உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து இடித்த (ஈரம் இல்லாத) ஒரு கலவைத் துவையல் பொட்டலம் தனியாக; தயிர் வாங்க ஒரு கிண்ணம். இவற்றைப் பையில் போட்டுக்கொண்டுதான் போவோம். வாய்க்கால் கரையிலோ ஆற்றங்கரையிலோ உட்கார்ந்து அதைச் சாப்பிடுவோம்.

நெல்லை ஜில்லாவின் தனித்தன்மை

அதற்குக் காரணம் உண்டு. வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டபோது, திருநெல்வேலி ஜில்லாவில் ஜனங்கள் பல இடங்களில் கலகம் செய்ததுண்டு. நெல்லை டவுனில் ஒரு நாடகக் கொட்டகைக்குத் தீ வைக்கப்பட்டது. அந்தக் கலவரத்துக்கு "வந்தே மாதரம் கலவரம்'' என்றே பெயர். திருநெல்வேலிக்கு எந்த கலெக்டர் வந்தாலும், "இங்கு யாரையும் கைது செய்து கலகத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது'' என்ற மனப்பான்மையில் இருந்தனர். வெளி ஜில்லாக்களிலிருந்து யாராவது வந்து சற்றுக் கடுமையாகப் பேசினால் அவர்கள் தம்மூர் போய்ச் சேர்ந்த பின்தான் கைது செய்யப்படுவார்கள். திருநெல்வேலியில் கைது செய்யப்படுவதில்லை. 

திருநெல்வேலி ஜில்லாவில் அந்தக் காலத்தில் வந்தே மாதரம் என்று கோஷித்தாலே, வ.உ.சி. பெயர்தான் ஞாபகத்துக்கு வரும். "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. BISN என்ற பிரிட்டீஷ் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக இந்தியாவுக்கும், பர்மாவுக்கும் இடையே கப்பல் வாங்கப் பணம் திரட்ட முயன்றபோது, சேலத்திலிருந்து ராஜகோபாலாச்சாரி உட்பட பலர் பணம் அனுப்பினர். அந்தக் காலத்தில் 1,000 ரூபாய்க்கு இருந்த Purchasing Power- பொருள் வாங்கும் சக்தி - இந்தக் காலத்தில் சுமார் லட்சம் ரூபாய்க்குச் சமம்.

மீண்டும் சிறை

1932 நவம்பரில் விலிங்டன் ஆட்சி. அவரசச் சட்ட ஆட்சி.

1932 தொடங்கின பிறகு ஒரு கிராமத்தில் தடையுத்தரவை மீறிச் சிறை சென்றேன். முதலில் மதுரைச் சிறை. பிறகு கேரளத்திலுள்ள கண்ணணூர் சிறைக்கு அனுப்பினர்.

கண்ணணூர் சிறையைவிட்டு வெளியே வரும்போது பிளாட்பாரத்தில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயருடன் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவை ஆசிரியராகக் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையைப் பார்த்தேன். சில மாதங்களுக்குள் அந்தப் பத்திரிகையை பம்பாயில் உப்பு சத்தியாகிரக காலத்தில் Free Press Journal  என்ற பத்திரிகையைத் தொடங்கினபோது, சதானந்த் 1933-இல் விலைக்கு வாங்கி முழுக்க முழுக்க காங்கிரஸ் பத்திரிகையாக நடத்தி வந்தார். அதற்கு ஆசிரியர் கே.சந்தானம்.

1931 இறுதியில் டி.எஸ்.சொக்கலிங்கம் "காந்தி' என்ற காலணா பத்திரிகையைச் சென்னையில் நடத்திக் கொண்டிருந்தார். நான் 1932 செப்டம்பரில் விடுதலையான பிறகு இடையிடையே கார்மைல் என்ற பிரிட்டீஷ் ஆசிரியரின் Past and Present, எமர்சன் என்ற அமெரிக்க ஆசிரியர் எழுதிய Self Reliance போன்ற நூல்களிலிருந்து ஏதேனும் ஒரு பாராவை மொழிபெயர்ந்தது "காந்தி' பத்திரிகைக்கு அனுப்புவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று ஒரு கடிதம் வந்தது. "சிவராம், இங்கே எனக்குத் துணை யாருமில்லை. நீங்கள் இங்கே வந்துவிடுங்கள்' என்று சொக்கலிங்கம் எழுதியிருந்தார். உடனே போனேன். அவருடன், துணை ஆசிரியராகவும் மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 

நானும் தினமணியும்

1934-ஆம் ஆண்டு என்பது இந்திய விடுதலைப் போரில் ஒரு முக்கியமான ஆண்டு. மத்திய சட்டசபைக்குத் தேர்தல் நடந்த ஆண்டு அது. சென்னை நகரில் திரு. சத்தியமூர்த்தி - திரு. ஏ.ராமசாமி முதலியார் போட்டி வேட்பாளர்கள்.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குப் பிரசாரம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு திரு. சதானந்த் "தினமணி'யை ஆரம்பித்தார்.

1934-இல் "தினமணி' ஆரம்பிக்க வேண்டிய ஏற்பாடுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்தானம் செய்து கொண்டிருந்தார். சிறை சென்றவர்களாக நாலைந்து பேரைத் துணையாசிரியர்களாகவும், ஒருவரை எடிட்டராகவும் பொறுக்கி எடுத்திருந்தார்.

அந்தச் சமயம் சதானந்த், சந்தானத்துக்குக் கடிதம் எழுதி டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை அணுகி எப்படியாவது அவரைத் தினமணிக்கு எடிட்டராகும்படி செய்யுங்கள் என்று கூறினார்.

சதானந்த்துக்கு யோசனை கூறியது யார் என்பது எனக்குத் தெரியும். அதை இப்போது சொல்ல வேண்டியதில்லை. சந்தானம் சொக்கலிங்கத்தைச் சந்தித்துப் பேசினார். பேச்சின் முடிவில் சிவராமனையும் சேர்த்து அழைத்தால் வருகிறேன் என்று சொல்லிவிட்டார் சொக்கலிங்கம்.

"சிவராமன் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்; (சந்தானமும் அடியேனும் சிறையில் உடனிருந்தவர்கள்) நான் உதவி ஆசிரியர்களைப் பொறுக்கினபோது, சிவராமனையும் அழைக்கலாம் என்றுதான் கருதியிருந்தேன். சிவராமனையும் உங்களையும் பிரிக்க முடியாது என்பதால் அவரை அழைக்கவில்லை. ஒரு எடிட்டரை அணுகி "உன் பத்திரிகையை நிறுத்திவிட்டு என் பத்திரிகைக்கு வா' என்பது உசிதமாகாது என்றுதான் நான் உங்களை இதுவரையில் அழைக்க விரும்பவில்லை. தாராளமாக இருவரும் வாருங்கள்'' என்று சந்தானம் கூறினார்.

"சிவராமன் வரத் தயாராக இருந்தால் நானும் வருகிறேன்' என்று சொல்லிவிட்டார் சொக்கலிங்கம். இதைச் சொக்கலிங்கமே எனக்குத் தெரிவித்தார்.

அன்றிருந்த சூழ்நிலையில் "1934-இல் வரப்போகும் தேர்தலில் பிரசாரம் தீவிரமாவதற்கு உங்களை ஆசிரியராகக் கொண்ட ஒரு பத்திரிகை தேவை. நீங்கள் போங்கள். நான் ஊருக்குப் போகிறேன்' என்று திரு. சொக்கலிங்கத்துக்குச் சொன்னேன். 

தினமணிக்குச் சொக்கலிங்கம் ஆசிரியராக இருப்பது, காங்கிரஸ் வெற்றிக்கு அவசியம் என்று நான் கருதினேன். "நீ வராவிட்டால் நான் போக மாட்டேன்' என்று சொக்கலிங்கம் பிடிவாதம் பிடித்தார். ஆகவே அவரும் நானும் தினமணிக்கு வந்து சேர்ந்தோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com