கடவுளை வேண்டிக் கொண்டு புது அமைச்சை வாழ்த்துகிறோம் - தலையங்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட 1885 ஆண்டிலிருந்து இந்த 90 ஆண்டுகளில் சிறுகச் சிறுக போற்றி வளர்க்கப்பட்ட ஜனநாயகத்தின் அடிப்படைகள் 19 மாதங்களில் சிதைக்கப்பட்டன

கடவுளை வேண்டிக்கொண்டு புது அமைச்சை வாழ்த்துகிறோம்

இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட 1885 ஆண்டிலிருந்து இந்த 90 ஆண்டுகளில் சிறுகச் சிறுக போற்றி வளர்க்கப்பட்ட ஜனநாயகத்தின் அடிப்படைகள் 19 மாதங்களில் சிதைக்கப்பட்டன. தவறுகள் பொங்கி வழிந்ததன் விளைவாக சென்ற வாரத்து தேர்தல்கள் ஒரு அஹிம்சைப் புரட்சியாக உருவாகி, கடவுள் அருளால் ஜனநாயகம் உயிர் பெற்றுள்ளது.

1920-க்கும் 1945-க்குமிடையே சுதந்திரத்துக்காக ஒரு சமயத்தில் எத்தனை பேர் சிறையில் இருந்தார்கள் என்பதுடன் ஒப்பிட்டால் 1975 ஜூன் மாதத்துக்கும் 1977 ஜனவரிக்குமிடையே சிறையில் இருந்த அரசியல்வாதிகள் தொகை அதிகம் என்றே சிறிது கணக்கிடப்பட்டுள்ளது. ஜனதா கட்சி என்பது சிறையில் பிறந்த கட்சி. ("புராண புருஷனான'' கண்ணனைப் போல).

தனித்தனியாக அரிசி, கடலை, துவரை, கோதுமை என்று முழு தானியமாக இருந்த பொருள்கள் ""மாவாக'' அரைக்கப்பட்டு ஒரே பொருளாக ஆவது போல, சிறை வாழ்வு என்ற "அரவை மில்லில்'' பல கட்சிகள் ஒரே கட்சியாக உருவாகியுள்ளன. கடைசி கட்டத்தில் இந்திரா அமைச்சிலிருந்து ஜகஜீவன்ராம் விலகியிராவிட்டாலும், வடதிசை மாநிலங்களில் ஜனதா இதே வெற்றியைப் பெற்றிருக்கும் என்றே தோன்றுகிறது. அமைச்சரவையிலிருந்து ஜகஜீவன்ராம் வெளியே வந்தது ஏற்கனவே தயாராயிருந்த பணியார மாவுக்கு புதிய "நிறம்'' ஊட்டியது, அவ்வளவுதான்.

ஜனதா சார்பில் திரு. தேசாய் பிரதம மந்திரியாக வருவதால் நாம் அந்த அமைச்சு நல்ல கோட்பாடுகளின்படி நடக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆனாலும் யார் பிரதமராக வந்தாலும் பொருந்தக் கூடிய சில அடிப்படை விஷயங்களைச் சொல்ல விரும்புகிறோம்.

புதிதாக பதவி ஏற்கும் அமைச்சு எது செய்தாலும் எது செய்யாவிட்டாலும் பார்லிமெண்டரி ஜனநாயகத்தின் ஜீவாதாரத் தேவையான இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது பற்றி திரு. க. சந்தானம் அவர்களின் கருத்துக்கள் கவனத்துக்குரியவை.

(1) "தேசிய முக்கியத்துவம் கொண்ட எல்லா விஷயங்களிலும் பார்லிமெண்டில் உள்ள காங்கிரஸ் கட்சியுடனும் இதர கட்சிகளுடனும் நேச முறையில் ஆலோசனை கலத்தல் அவசியம்.''

(2) "கட்சி''யும் "அரசும்'' ஒன்றே என்று கருதும் போக்கு ஆட்சியாளரிடையே சிறிது காலமாக உருவான ஒரு பெரும் "கேடான போக்கு''. இந்தப் போக்குக்கு முடிவு கட்ட வேண்டும்.

மேலே உள்ளதில் முதல் விஷயம் எதிர்க்கட்சியின் மனப்பான்மையைப் பொறுத்ததாக இருக்கும். தோற்ற கட்சியிலுள்ளவர்கள் மனதில் சிறிது கோபமும் தாபமும் இருப்பது இயல்பு. இது மனக்கசப்பாக உருவாகாமல், காங்கிரஸ் கட்சியானது உரிமையும் கண்ணியமுமுள்ள எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும்.

இரண்டாவதாக குறிப்பிட்ட விஷயம் மற்றெதையும்விட முக்கியமானது. "ஆளும் கட்சி'' என்பது வேறு; "அரசு'' என்பது வேறு. சர்க்கார் ஊழியர்கள் ஆளும் கட்சியின் "சேவகர்கள்'' அல்ல; அரசின் "சேவகர்கள்'' என்பது உணரப்பட்டாலொழிய ஜனநாயகம் ஜனநாயகமாக நீடிக்காது.

இந்தக் கொள்கைகள் 1975 ஜூனுக்கும் 1977 ஜனவரிக்குமிடையே அறவே புறக்கணிக்கப்பட்டன. ஜன சமுதாயத்திலுள்ள மக்களில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஸிடிஜன் (Citizen) அரசுரிமையுள்ளவர்கள்; மற்றவர்கள் (Subjects) அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டும் என்ற அநாகரிகமான நிலைமை கூடாது. "ஆளுவோர்'', "ஆளப்படுவோர்'' என்ற பாகுபாடு கூடாது. இதுதான் நாம் "எல்லோரும்'' இந்நாட்டு மன்னர் - என்ற பாரதி வாக்கியத்தின் கருத்து. "எல்லோரும்'' என்ற சொல் முக்கியமானது.

இந்தக் குறிக்கோளை நன்கு மதித்து ஜனதா கட்சி ஆட்சி புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஓரளவு எதேச்சாதிகாரத்தில் சென்ற பல மாதங்களாக பழக்கப்பட்டு வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மனப்பான்மை மாறி எதிர்காலத்தில் அந்தக் கட்சி பதவிக்கு வரும்போது சரியாக நடந்து கொள்ளும் என்றும் நம்புவோமாக. இந்த விஷயத்தில் ஜனதா ஒரு சீரிய உதாரணமாக விளங்க ஆண்டவன் அருள்வானாக!

மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு அமைந்ததைத் தொடர்ந்து, புதிய அரசு எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தும் தலையங்கம்.  (25.3.1977)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com