கிரிக்கெட்டில் இந்திய சாதனை - தலையங்கம்

ஒருநாள் உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியர்கள் புரிந்துள்ள சாதனை மிகவும் மகத்தானது. இந்தப் பந்தயத்தில் மிகச்சிறந்த அணி, தோற்கடிக்கவே முடியாது என்று கருதப்பட்ட மேற்கிந்தீஸ் அணியை வென்று

கிரிக்கெட்டில் இந்திய சாதனை

ஒருநாள் உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியர்கள் புரிந்துள்ள சாதனை மிகவும் மகத்தானது. இந்தப் பந்தயத்தில் மிகச்சிறந்த அணி, தோற்கடிக்கவே முடியாது என்று கருதப்பட்ட மேற்கிந்தீஸ் அணியை வென்று இந்திய அணி ஒரு புதிய வரலாற்றை படைத்திருப்பது பெருமைக்குரியது.

இந்தப் போட்டியில் இந்தியர்களை மற்ற நாடுகள் அலட்சியமாகவே ஒதுக்கியது. மேற்கிந்தீஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஏதாவது ஒன்றுதான்சாம்பியனாகும் வாய்ப்பு உள்ளது என்று கருதப்பட்டு வந்தது. மற்றவர்களின் கணிப்பு தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இங்கிலாந்தில் நடந்த இந்த ஒருநாள் போட்டிகளில் படிப்படியாக முன்னேறி இந்தியா பைனலில் ஆடத் தகுதி பெற்றது. பைனலில் இந்தியா வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஏனெனில், ஸ்ரீகாந்த், மொகிந்தர், பாட்டீல் ஆகிய பாட்ஸ்மென்கள் அடித்து ஆடி ரன்களைக் குவிக்கத் தவறினர். இந்தியா 183 ரன்களில் அவுட்டாகிவிட்டது. 60 ஓவர்களில் இந்த ரன்களை எடுப்பது மேற்கிந்தீஸுக்கு ஒன்றும் சிரமமாக இராது, சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது. மேற்கிந்தீஸின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட்ஸ் ஆடிக்கொண்டிருந்த வரை நிலைமை அதுதான். ஆனால், அவர் அவுட்டானதும் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. நம்முடைய பந்து வீச்சாளர்கள் குறிப்பாக மதன்லால், அமர்நாத், பின்னி, சாந்து, கபில்தேவ் அற்புதமாக பந்து வீசி இந்தியா வெற்றி பெற வழிவகுத்தனர்.

இப்போதைய வெற்றிக்கு எந்த ஒரு குறிப்பிட்ட நபரின் சாதனையும் காரணமல்ல. இந்தியர்கள் ஒன்றுபட்டு ஒரேயணியாகச் செயல்பட்டதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இதற்கு வேண்டிய உத்வேகத்தை வழங்கியது கபில்தேவின் தலைமையாகும். ஒவ்வொரு ஆட்டக்காரரையும் அரவணைத்துக்கொண்டு அவர்களுடைய திறமையைப் பயன்படுத்திக் கொண்டார். பாட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலுமே நன்கு கவனம் செலுத்தினர்.

சமீப காலமாக 5 நாள் டெஸ்ட் பந்தயங்களில் குறிப்பாக வெளிநாடுகளில் நடந்த பந்தயங்களில் இந்தியா தோல்வியையே தழுவி வந்திருக்கிறது. இது ஒரு சோர்வு மனப்பான்மையை உண்டு பண்ணியிருக்கும். இப்போது கிடைத்த வெற்றி காரணமாக புதிய தெம்பு ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் அடுத்த சில மாதங்களில் பாகிஸ்தான் அணியும், மேற்கிந்தீஸ் அணியும் நம் நாட்டுக்கு வரவிருக்கின்றன. ஒருநாள் போட்டி வேறு. 5 நாள் போட்டி என்பது வேறு. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு நன்கு ஆடக்கூடிய அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

கபில்தேவ் தலைமையில் இந்திய அணி ஒருநாள் உலக கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று சாதனை படைத்ததை பாராட்டி எழுதப்பட்ட தலையங்கம். (28.6.1983)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com