தமிழனின் வாசிப்புத் தரத்தை மேம்படுத்திய நாளிதழ்!

தினமணி எனும் சொல்லுக்கு முன்னால் 'நான்' எனும் சொல் பொருட்டே இல்லை. சூரியனுக்கு ஞாயிறு, பரிதி, பகலவன், கதிரவன், அருணன், வெய்யோன், பகலோன் எனப் பல பெயர்கள் உள்ளன.
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்

தினமணி எனும் சொல்லுக்கு முன்னால் 'நான்' எனும் சொல் பொருட்டே இல்லை. சூரியனுக்கு ஞாயிறு, பரிதி, பகலவன், கதிரவன், அருணன், வெய்யோன், பகலோன் எனப் பல பெயர்கள் உள்ளன. தினமணி என்ற சொல்லுக்கு பொருளும்கூட சூரியன் என்பதுதான். தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் சூரியனைக் குறிக்க தினமணி என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. எனவே, தினமணி நாளிதழுக்கு 'தினமணி' எனப் பெயர் சூட்டியவரைப் பாராட்ட வேண்டும்.

இன்றைக்குத் தினமணிக்கு வயது 85 என்றால் எனக்கு அதனுடனான தொடர்பு 60 ஆண்டுகள். 1967ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு தினமணிக்குப் பெரும் பங்கு இருந்தது. 1967-க்கு முந்தைய, ஆட்சி மாற்றத்துக்கும் பிந்தைய அரசியல் நடப்புகளைப் பேசும்போது, என்னிடம் பலரும் 'தினமணி படிச்சுகிட்டு தர்க்கம் செய்யாத டே' என்பார்கள்.

இன்று என்னால் ஐயம் திரிபு அறப் பேச இயலும். ஓர் எழுத்தாளனாக நான் உருவானதில் தினமணிக்கும் பங்கு உண்டு. அன்று அதன் ஆசிரியராக இருந்தவர் ஏ.என். சிவராமன். எல்லாவிதத்திலும் அவர் ஒரு மேதை. அன்று லீடர் என்று வழங்கப்பெற்ற அவரது தலையங்கங்கள், அரசியல், பொருளாதார கட்டுரைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தன. "கணக்கன்' என்ற பெயரிலும் "பாமரன்' என்ற பெயரிலும் அவர் எழுதிய கட்டுரைகள் வெளியான நாள்களில் எல்லாம் என்னால் இருமுறை வாசிக்கப்பெற்றன.

பின்னர், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தினமணி, தீபாவளி மலர் அளவில் நூலாக்கின. அன்றெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கவில்லை, தினமணி கதிரில் என் கதைகள் வெளியாகும் என்றும், தீபாவளி மலர்களில் என் கட்டுரைகள் வரும் என்றும். என்னுடைய ஒரு சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு "பேய்க்கொட்டு', அந்தக் கதை தினமணி கதிரில் வெளியானது.

1972-இல் நான் பம்பாய்க்குச் சென்றுவிட்டேன். நான் பம்பாய் சென்று சேர்ந்த காலகட்டத்தில் தினமணி பம்பாய்க்கு வர மத்தியானம் இரண்டு மணி ஆகிவிடும். அதிகாலையில் ஆங்கில நாளேடுகள் வாசித்துவிட்டிருந்தாலும் தினமணி வாசிப்பதற்காகவே என் அலுவல் முடிந்து மாலையில் பம்பாய்த் தமிழ்ச் சங்கம் போவேன்.

கோவைக்கு 1989-இல் மாற்றலாகி வந்தபோது ராமநாதபுரம் பங்கஜா மில் சாலையில் குடியிருந்தேன். நான்கு கட்டடங்கள் தாண்டி தினமணி அச்சகமும் அலுவலகமும். கோவையில் நான் வாழும் முப்பதாண்டு காலத்தில் எங்கு குடியிருந்தாலும் வாசல் திறந்ததும் கையில் எடுப்பது தினமணி.

ஏ.என்.சிவராமனைத் தொடர்ந்து திருவாளர்கள் சம்பந்தம், ஐராவதம் மகாதேவன், வைத்தியநாதன் என்று பொறுப்புடன் நாளிதழை நடத்திச் செல்கிறார்கள். தினமணி கதிருக்குப் பொறுப்பாக இருந்த திரு.நா.பார்த்தசாரதி, சிவகுமார், பாவை சந்திரன் ஆகியோர் தனிப்பட்ட முறையில் நம்மிடம் அன்புடையவர்கள்.

"பரதேசி' திரைப்படத்துக்கு வசனம் எழுதி, முப்பதுக்கும் மேற்பட்ட விமர்சனக் கட்டுரைகளில் என் மீது வசவு வாரித் தூற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் காலையில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் என் வீட்டுக்கு வந்தார். முந்தைய நாள் பரதேசி பார்த்துவிட்டு என்னைப் பாராட்டுவதற்காக.

சற்று எண்ணிப் பாருங்கள்! பன்னிரண்டு வயதில் ஒரு எளிய கிராமத்தின் ஏழைச் சிறுவன் தினமணி வாசகன். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் வீட்டுக்கு தினமணி ஆசிரியர் வந்து வாழ்த்துகிறார். தினமணி நாளிதழின் பண்பாட்டுச் செல்வம் அது.

தினமணியில் வெளியாகும் அனைத்துக் கட்டுரைகளும், தலையங்கங்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்பதல்ல. யாவற்றையும் மீறி கடந்த எண்பத்தைந்து ஆண்டு காலம் தமிழனின் வாசிப்புத் தரத்தை மேம்படுத்தியதில் தினமணிக்குப் பெரும் பங்கு உண்டு என்பதில் எனக்கு உறுதியுண்டு. அதன் நூற்றாண்டுச் சம்பவத்திலும் இதுபோல் ஒரு கட்டுரை எழுத ஆசை கிடந்து அடித்துக் கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com