தமிழ்ச் சமுதாயத்தின் கண்மணி!

மகாகவி பாரதியின் மூச்சுக்காற்றாய் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வலம் வரத் தொடங்கிய தினமணி இன்று தமிழ்ச் சமுதாயத்தின் கண்மணியாக விளங்குகிறது.
சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம்

மகாகவி பாரதியின் மூச்சுக்காற்றாய் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வலம் வரத் தொடங்கிய தினமணி இன்று தமிழ்ச் சமுதாயத்தின் கண்மணியாக விளங்குகிறது.

என்னைவிட இரண்டாண்டுகள் மூத்த சகோதரனாக முன்பு பிறந்ததென்றாலும் வயதுக்கேற்ற தோழனாக நான் அதனோடு வளர்ந்தேன். கேரளத்தில் பள்ளிக்கல்வி பயிலும்போதே தினமணி என்னை ஈர்த்துக்கொண்டது. அதனோடு எழுபதாண்டுத் தோழமை எனக்கு.

தினமணி என்ற பெயரின் பொருள் தெரியா வயது. ஆனால் சித்திர வேலைப்பாடமைந்த பெயரின் நடுவே இராட்டைச் சின்னம் பொறித்த கொடிகள் அசைந்து கொண்டிருந்ததால் அந்த மணிக்கொடிகளால் தினமணி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று அப்போது நான் நினைத்துக் கொண்டேன்.

சுதந்திர வேள்வியின் சுடரேந்திய தேசிய இதழென்பதால் அந்த நாட்களில் தினமணி என் ஆன்மாவில் கலந்து போனது. வானொலி இல்லாத, போக்குவரத்து வசதிகள் இல்லாத தனித் தீவு போன்ற என் கிராமத்தில் இரண்டாம் உலகப் போர் செய்திகள், சுதந்திர விடியல், மகாத்மா காந்தி கொலை வழக்கு முதலிய செய்திகளை எழுத்தறிந்த ஒருவர் படிக்க என் தந்தை உள்பட பலர் கேட்டுக் கொண்டிருந்த காட்சிகள் எ'னக்குள் பதிந்து போய்க் கிடக்கின்றன. அன்று கேட்ட துருப்பு (Troop), டன்கர்க் போன்ற சொற்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

அந்த நாள் நினைவுகளில் தினமணி என்றால் ஏ.என்.சிவராமன் பெயரும் இணைந்தே ஞாபகத்துக்கு வரும். இந்திய அரசியல் சட்டம் (Constitution) அறிமுகமான போது ஏ.என்.எஸ். அதனைத் தமிழாக்கம் செய்து தினமணி வெளியீடாகத் தந்தார். இந்திய மொழிகளில் அது முதல் முயற்சி என்று நினைக்கிறேன். தமிழில் அரசியல் நுட்பங்களைச் சொல்ல முடியும் என்பதற்கு அது சான்றானது. தினமணி நாளிதழின் தரமும் தகுதியும் இன்று வரை நீடிப்பதற்கு அடித்தளமிட்டவர் ஏ.என்.சிவராமன் என்பது சூரியனைப் போல சுடர் வீசும் உண்மை.

தேசியத்தில் நிலை கொண்ட இதழைத் தமிழின் திருவடித் தாமரை ஆக்கியவர் ஐராவதம் மகாதேவன். தினமணியைத் தமிழ்மணியாக்கிய ஆய்வுச் சித்தர் அவர். புதிய தமிழ்ச் சொல்லாக்கங்கள், வரலாற்றாய்வுகள் என்ற திசை நோக்கி அழைத்துச் சென்றதால் தினமணி புதிய பரிணாமம் பூண்டது. சிந்துவெளித் தமிழை ஆராய்ந்த அவர் சந்தைவெளித் தமிழையும் விண்வெளித் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்கியதை வியப்போடு பார்த்திருந்தேன்.

தினமணியின் இணைப்பு இதழாக வெளிவரும் தினமணி கதிர் சில காலம் தனி ஆசிரியரையும் பெற்றிருந்ததுண்டு. பி.எஸ்.ராமையா ஆசிரியராக இருந்த காலத்தில் சி.சு.செல்லப்பாவும் இணைந்து ஒரு சிறுகதை பொற்காலத்தையே உருவாக்கினார்கள். தமிழ் வாசகர்களாகிய என் போன்றோருக்குப் பெருவிருந்து தந்தது தினமணி கதிர். சாவி, கே.ஆர்.வாசுதேவன் போன்ற பலரது பொறுப்பில் கதிர் சுடர் வீசியது.

தினமணி கதிரில் பலருடைய எழுத்தால் நான் வசீகரிக்கப்பட்டிருந்தாலும் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்', "இந்த நேரத்தில் இவள்', "சிலர் வெளியே இருக்கிறார்கள்', "அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்' ஆகிய படைப்புகள் எல்லையற்ற ஆனந்தமும் நெகிழ்ச்சியும் அளித்தன. ஆனால் அதே எழுத்தாளரின் "ரிஷிமூலம்' என்ற குறுநாவல் மூன்றே வாரத்தில் நிறுத்தப்பட்ட வரலாறு இலக்கியச் சுவைஞர்களுக்கு ஏமாற்றமும் தந்தது. எனினும் தமிழ் வாசகர்களின் நெஞ்சை அள்ளியதும், சாகித்ய அகாதெமி விருது பெற்றதுமான "சில நேரங்களில் சில மனிதர்கள்', லா.சா.ரா.வின் "சிந்தா நதி' இரண்டும் தினமணி கதிர் வைத்த சீதனங்களே ஆகும்.

தினமணியோடு என் நேசமும் நெருக்கமும் மேலோங்கிய காலம் இராம.சம்பந்தம் ஆசிரியராக இருந்த காலம். அவருடைய அழைப்பின்பேரில் நான் நடுப்பக்க கட்டுரைகள் பல எழுதிய காலம். "கல்வியில் படியும் கருநிழல்கள்' முதல் "சாலைப் போக்குவரத்து' வரை "அண்ணா' முதல் "எம்.டி.வாசுதேவன் நாயர்' வரை பல தலைப்புகளில் பயணம் சென்ற வாய்ப்பு அது.

இன்னொரு முக்கிய நிகழ்வும் அப்போது ஏற்பட்டது. திராவிட இயக்கம் தமிழுக்குச் செய்தது என்ன என்ற எனது ஆதங்கம் நிறைந்த உரையை அன்றைய ஆசிரியர் இராம.சம்பந்தம் அதனை வலது நடுப்பக்கத்தில் பாதியளவு பிரசுரித்தார். அதனைப் படித்த அப்போதைய முதல்வர் கலைஞர், தமிழ்வழிக் கல்வியை படிப்படியாகக் கொண்டு வரும் திட்டத்தை அடுத்த நாளே அறிவித்தார். அதைப் பாராட்டி தினமணி தலையங்கம் தீட்டியது. தினமணியின் வீச்சுக்கு அந்நிகழ்வு அடையாளம் ஆனது. அரசியல் தலைமையின் பொறுப்புணர்ச்சியையும் அது புலப்படுத்தியது. 

இன்று தினமணி ஓர் உலகக் குடும்பமாக ஓங்கி நிற்பதற்குக் காரணம் நம் அன்புக்குரிய ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆவார். "நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்ற உன்னத இலக்கை நோக்கி ஓயாது இயங்குகின்றார்.

தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்கள், படைப்பாளிகளோடு நெருங்கிய உறவைப் பேணி வரும் அவர் தமிழ் சார்ந்த செய்திகளுக்கு முதன்மை தருகின்றார். இன்று மகளிர்மணி, இளைஞர்மணி, வெள்ளிமணி, சிறுவர்மணி என குலுங்கும் மணியோசை நம்மைக் குதூகலத்தில் ஆழ்த்துகின்றது. முன்பு ஒரு முறை பல்கேரிய நாட்டிலுள்ள ஓர் அமைதி ஆலயத்தில் நூற்றுக்கணக்கான மணிகளைப் பார்த்தேன். பல நாடுகளைச் சேர்ந்த பல வடிவங்களிலான மணிகள். அவற்றைப் போல தினமணி புதிய இளம் படைப்பாளர்கள், பெண் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என எழுத்துக் கலைஞர்களை நாள்தோறும் மணிமணியாய் அறிமுகம் செய்து வருகிறது.

தீபாவளி மலர்களை வெறும் வாண வேடிக்கையாக நிகழ்த்தாமல் கச்சிதமான பொருண்மைகளை (தத்துவம், புது எழுத்து, பழைய எழுத்து) திறமை மிக்க படைப்பாளிகளைக் கொண்டு முன்வைக்கும் ஆசிரியரின் புது நோக்கு பாராட்டுக்குரியது. 

தினமணி கதிர் மறைந்த பெருமக்களின் புகழ்க் கலசங்களாக (வாலி, விக்கிரமன், அசோகமித்திரன், சிலம்பொலி) வெளிவரும்போது இதுவரை அறியப்படாதவைகளை அறிகிறோம். 

பேரறிஞர்களைக் கொண்டு அகராதிகளில் காண முடியாத அரும் பொருள் காண வைத்தது ஒரு பெருஞ்செயல். நீதியரசர் இராமசுப்பிரமணியன் நடத்திய சொல் வேட்டை, தெ.ஞானசுந்தரனாரின் சொல் தேடல், ம.இராசேந்திரனின் புதுச்சொல் தேர்வு -இவையெல்லாம் அறிவுப் பயணத்தில் கிடைத்த அறுசுவை விருந்துகள் அல்லவா?

ஆசிரியர் கி.வைத்தியநாதன் தமிழுக்குச் செய்த பெருமிதத் தொண்டு 2014 சூன் 21, 22 இரு நாள்கள் நடத்திய தமிழ் இலக்கியத் திருவிழா. முன்னெப்போதும் கண்டிராத உவகையும் உற்சாகமும் ஊற்றெடுத்த உன்னதப் பெருவிழா அது. அரசியல் தலைவர்களை இலக்கிய உரைகள் நிகழ்த்த வைத்த அதிசயம்! எட்டு அரிய தலைப்புகளில் தமிழின் வேர்களைத் தேடியும் விழுதுகளைத் தேடியும் நடத்திய தமிழ்ச் சுற்றுலா! அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்கள் அன்னையை நாடிய குழந்தைகள் போல் அரவணைப்புக்காக ஓடோடி வந்த அன்புப் பெருவிழா!

"தமிழை மீண்டும் தமிழர்களின் மன அரியணைகளில் ஏற்றி அமர்த்தும் முயற்சி'' என ஆசிரியர் பெருமிதம் கொண்டது தினமணி தமிழுக்கு எடுத்த ஆர்த்தி. 

தமிழின் புகழ்மிகு புதல்வர் கலாம் தொடங்கி வைத்த ஞானப் பெருவிழா. இந்த விழாவைக் காணவும் கலந்து கொள்ளவும் வாய்ப்புப் பெற்றேன்.

எழுபதாண்டு தோழமை பூண்ட தினமணி நூற்றாண்டைக் கொண்டாடும்போது அதற்கு ம.இரா. கண்டறிந்தது போல் "எதிர்ச் சீர்' (Return Gift) செய்யவும் நான் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com